ஓய்வுக்கு ஓய்வுகொடுத்துக் காளையுடன் சேர்ந்து உழைக்கும் முதியவர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 67 வயதிலும் மாட்டு வண்டி மூலம் தண்ணீர் விற்பனை செய்து வருகிறார் ஒருவர், ஓய்வுக்கே ஓய்வு.
தண்ணீீர் வண்டியில் சிவன் முருகன்.
தண்ணீீர் வண்டியில் சிவன் முருகன்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் முதன்முதலாக மாட்டு வண்டி மூலம் தண்ணீர் விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்கி இன்றும் செய்து வருகிறார் முதியவர் ஒருவர். 

தண்ணீரைத் தவிர அனைத்தையுமே காசு கொடுத்து வாங்க வேண்டியுள்ளது என்ற சொல்லை நம்மில் அனேகர் நம் பெற்றோரின் வாயிலிருந்து கேட்டிருக்கலாம். அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை நாம் இப்போது நாள்தோறும் தண்ணீருக்குதான் அதிகம் செலவு செய்கிறோம் என்று.

ஆலங்குளத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக உணவகங்கள், தேநீர்க் கடைகளுக்கு மாட்டு வண்டி மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார் சிவன் முருகன் (67).

35 ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குளம் பகுதியில் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளில் குடிநீர் இணைப்பு, ஆழ்துளைக் கிணறு வசதி ஆகிய எதுவும் கிடையாது. ஊருக்குப் பொதுவான ஊருணி மற்றும் ஆங்காங்கே இருக்கும் அடி குழாய்கள் மூலம் பொதுமக்கள் தங்கள் குடிநீர் மற்றும் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்து வந்தனர். அடி குழாய்களில் சுமார் 2 கி.மீ. தூரம் வரை குடங்கள் வரிசையில் காத்திருக்கும்.

சிவன் முருகன்
சிவன் முருகன்

காலையில் வரிசையில் வைத்தால் மறுநாள் காலைதான் 2 குடங்களும் வரிசைக்கு வரும். ஆண்கள் பொதுவாக விவசாயம் நடைபெறும் தோட்டத்திற்குச் சென்று, பயிர்களுக்குப் பாய்ச்சப்படும் தண்ணீரில் குளிப்பார்கள். அது யாருடைய தோட்டம் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பது இல்லை. தண்ணீருக்கு அவ்வளவு தட்டுப்பாடு இருந்த காலம் அது. அதிகத் தொழில்நுட்பம் இல்லாத நிலையில் மாற்றி யோசித்தார் அந்த இளைஞர்.

தண்ணீருக்காகக் காத்துக் கிடக்கும் பொது மக்களுக்கு அவர்கள் வீடுகள் அல்லது வியாபாரத் தலத்திற்குக் கொண்டு கொடுத்தால் அதன் மூலம் நாலு காசு பார்க்கலாமே என்று எண்ணியதன் விளைவு, ஊருணி பகுதியில் இருந்து மாட்டு வண்டி மூலம் உணவகங்கள், தேநீர்க் கடைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் தொழிலைத் தொடங்கினார் சிவன் முருகன் என்ற அவர்.

ஏற்கெனவே பார்த்து வந்த கூலி வேலை மூலம் கிடைத்த சில நூறு ரூபாய் முதலீட்டில் விவசாயத்துக்குப் பயன்படுத்தி வந்த பழைய மாட்டு வண்டி, நலிவடைந்த காளையைக் கொண்டு தனது தொழிலைத் தொடங்கினார் அவர். தொடங்கிய போது சுமார் 200 லிட்டர் தண்ணீரின் விலை ரூ. 6. அதன் பின்னர் டிராக்டர், லாரி போன்ற வாகனங்களில் தண்ணீர் கொண்டு செல்லும் வியாபாரிகள் பெருகினாலும் இந்த மாட்டு வண்டித் தண்ணீருக்கு எப்போதும் தேவை இருந்துகொண்டே இருந்தது. கடுமையான வறட்சிக் காலங்களில் அதிக தூரம் சென்று தண்ணீரை விலைக்கு வாங்கிக் குறைந்த லாபத்தில் விற்பனை செய்து மக்களின் தாகத்தைத் தணித்தவர் சிவன் முருகன்.

காலங்கள் உருண்டோடி வீடுகள், கடைகள்தோறும் குடிநீர் இணைப்புகள், வீட்டு வரவேற்பறை வரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில் வண்டித் தண்ணீரின் தேவை குறைந்து விட்டது. எனினும் சிவன்முருகனின் கனிவான வார்த்தைகளால் இவரின் வியாபாரம் ஓஹோ என நடக்காவிட்டாலும் 35 ஆண்டுகளைக் கடந்து சுமாராக நடைபெறுகிறது.

இதுதொடர்பாக சிவன் முருகன் கூறியது:

"நான் சிறுவனாக இருக்கும்போது, தண்ணீர் வியாபாரமாக மாறும் என கனவிலும் நினைக்கவில்லை. நான் முதலில் வியாபாரத்தைத் தொடங்கும் போது எனக்கே சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அனைத்து மக்களுக்கும் சொந்தமான நதி நீரைத் தனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து மிகவும் சொற்ப விலைக்கு வாங்கி, அதனை மக்களுக்கு அநியாய விலையில் விற்பது வருந்தத்தக்கது. மக்களுக்கான குடிநீரை அரசாங்கமே இலவசமாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்

"இந்த தண்ணீர் வண்டியின் சொற்ப வருமானத்தில் எனது இரு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கிவிட்டேன். ஆரம்பத்தில் ரூ. 6-க்கு ஒரு வண்டித் தண்ணீர் 200 லிட்டர் விற்பனை செய்தேன். கொஞ்சம்கொஞ்சமாக இது உயர்ந்து தற்போது ரூ. 60 என விற்பனை செய்கிறேன். நெகிழி கலன்களில் அடைத்து விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் லிட்டர் ஒன்றிற்கு ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்கப்படும் நிலையில் நான் விற்கும் தொகை மிகவும் சொற்பம்தான். எனினும் இது எனக்குக் கட்டுப்படியாகிறது.

"வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வருவதற்கு முன்பு காலை முதல் இரவு வரை கடைகள் மட்டுமின்றி வீடுகளுக்கும் குடிநீர் வழங்கி வந்தேன். அப்போது, தண்ணீர் வண்டியைப் பார்க்கும் குழந்தைகள் குதித்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

"மேலும் எனது தொழிலுக்குப் போட்டியாக டிராக்டர் மற்றும் லாரி மூலம் விற்பனை செய்கின்றனர். சொற்ப பணத்தையும் ஒருசில வியாபாரிகள் நாளை வாங்கிக் கொள் என கூறுவோரும் உண்டு. நாளொன்றுக்கு 6 முதல் 8 வண்டி தண்ணீர் விற்பனையாகிறது. இது எனது தேவைக்கும் எனது மாட்டின் தேவைக்கும் சரியாக உள்ளது.

"வயதான காலத்தில் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பாமல் உடலில் வலு இருக்கும் வரையிலும் உழைத்துக் கொண்டே இருப்பேன்" என்கிறார் சிவன்முருகன்.

உழைப்புக்கு ஏது மூப்பு?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com