காலநிலை மாற்றத்திற்கான தீர்வு யார் கையில்?

நாம் விரும்பாவிட்டாலும் நம் எதிர்காலத் தலைமுறை பருவநிலை பேரிடரை எதிர்நோக்கித் தான் தங்களது பயணத்தைத் தொடர்கின்றனர். 
காலநிலை மாற்றத்திற்கான தீர்வு யார் கையில்?
காலநிலை மாற்றத்திற்கான தீர்வு யார் கையில்?

அந்த நாள் எப்போதும் போல் இருக்கவில்லை. 17 வயது சிறுமி திடீரென ஸ்வீடன் பாராளுமன்றத்தின் முன் கைகளில் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை உணர்த்தும் வாசகங்களை ஏந்தி அமர்ந்திருக்கிறார். வரவிருக்கும் காலநிலைப் பிரச்னைகளுக்கு நீங்கள்தான் காரணம் என உலகத் தலைவர்களை சாடும் வாசகங்கள் அதில் பளிச்சிடுகின்றன.

“குழந்தைகளான எங்களுக்குத் தர வேண்டிய பூமியைத் திருப்பித் தாருங்கள்” என பின்னாளில் ஐக்கிய நாடுகள் அவையில் முழங்கிய கிரேட்டா தன்பெர்க்தான் அந்த சிறுமி. கிரேட்டா சொல்வது போல் நாம் அபாயத்தின் விளிம்பிலா நிற்கிறோம்? சந்தேகம் இல்லாமல் ஆம் என்பதுதான் பதில்.

திடீரென பெய்யும் மழை, அடிக்கடி நிகழும் புயல், சுட்டெரிக்கும் வெயில், கணிக்க முடியாத வானிலை மாற்றம், மூழ்கடிக்கும் வெள்ளம் எனத் தற்போது நாம் எளிதில் உணரும் வகையில் நம்மைச் சுற்றி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஏன் திடீரென நாம் இந்த கண்ணாமூச்சிக் கூண்டில் சிக்கினோம் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? இல்லையென்றால், ஏன் இப்படி காலநிலையில் நாம் சந்திக்கும் அபாயங்கள் நடைபெறுகிறது என்பதை அறிய அடிப்படையான சில விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.

உலக அளவில் காலநிலை மாற்றம் அல்லது பருவநிலை மாற்றம் என்ற சொல் தற்போது அதிகம் உச்சரிக்கப்படுகிறது. இந்தப் பருவநிலை மாற்றத்தால் நாம் வாழும் புவியில் பல்வேறு மாறுபாடுகள் நிகழ்கின்றன. அவற்றைக் கணிப்பதிலும், இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும் வேண்டிய அவசியம் உலக நாடுகளுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. கடந்த நூற்றாண்டின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட நீராவி இயந்திரங்கள் போன்றவற்றால் தொழில்துறையில் ஒரு பெரும் புரட்சி ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் தொழில்துறைகளின் வளர்ச்சி அதிகப்படியான மக்களைக் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கித் தள்ளியது. இதன் காரணமாக வேலைவாய்ப்பிற்காக மக்கள் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டனர். இது பின்னாளில் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. 

பெருகி வந்த தொழிற்சாலைகள் ஐரோப்பாவைத் தாண்டிப் பல்வேறு கண்டங்களிலும் மாற்றங்களை உண்டாக்கியது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டிற்கும் குறைவான காலத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளும் வாழ்க்கை முறைகளும் மாற்றம் கண்டன. பெருகிய தொழிற்சாலையின் புகைபோக்கிகள் வளிமண்டலத்தில் தங்களது பங்குக்கு கரியமில வாயுக்களை கட்டுப்பாடில்லாமல் உமிழ்ந்தன. 

வளர்ச்சி என்னும் பெயரில் தொழில் வளர்ச்சியில் ஓடிய நாடுகள் தங்களது நாட்டை முன்னேற்றுவதாகக் கூறிப் போட்டி போட்டுக்கொண்டு தொழிற்சாலைகளை நிறுவின. அதன் காரணமாக அதிகப்படியான கரியமில வாயுகளின் வெளியேற்றம் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடின் செறிவை அதிகப்படுத்தின. இதன் காரணமாக சூரியனிலிருந்து வரும் வெப்பம் புவியைவிட்டு வெளியேறாமல் புவியிலேயே தங்கி வெப்பநிலையை உயர்த்தின.

தற்போதைய நிலையில் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடின் செறிவு 2020 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் 414.38 ஆக உள்ளது. 2017 ஆம் ஆண்டின் செப்டம்பரில் இதன் அளவு 403.27 ஆகவும், 2018 ஆம் ஆண்டின் செப்டம்பரில் இதன் அளவு 405.59 ஆகவும் 2019 ஆம் ஆண்டின் செப்டம்பரில் இதன் அளவு 408.55 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் வெப்ப நிலையால் கடல் நீர்மட்டம் உயர்தல், வறட்சி, பெருகும் புயல்கள், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் என அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். சர்வதேச அளவில் கவனம் பெற்ற இந்தப் பிரச்னை 2015ஆம் ஆண்டு பாரீசில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. 190-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் அதிகரிக்கும் பசுமைக்குடில் வாயுகளின் அளவைக் குறைக்கும் வகையில் ஒவ்வொரு நாடுகளும் தாங்கள் வெளியேற்றும் கரியமில வாயுக்களின் அளவைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 2030 ஆம் ஆண்டிற்குள் உலக வெப்பநிலையில் 2 டிகிரி செல்சியஸ் அளவைக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் ஒப்புதலின் அடிப்படையில் பாரீஸ் மாநாடு வெற்றி பெற்றது. அதிக அளவு கார்பன் வெளியேற்றும் நாடுகளாக உள்ள சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் கார்பன் வெளியேற்ற அளவைக் குறைப்பது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் சதுரங்கம் விளையாடியது அமெரிக்கா. பருவநிலை மாற்றம் குறித்த விவாதத்தில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்பட்ட பாரீஸ் மாநாட்டின் இலக்கை குலைக்கும் வகையில் 2017 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்தார். ஒப்பந்தத்தில் தொடர்ந்தால் சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் தொழில் வளர்ச்சியில் போட்டி போட முடியாத நிலை ஏற்படும் என விளக்கமளித்தார். அதன்படியே 2019 ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த மைக்கேல் பாம்பேயோ அமெரிக்கா பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இது உலக நாடுகளிடையே விமர்சனத்தை எழுப்பின.

அதிகப்படியான கார்பனை வெளியிடும் அமெரிக்கா தொழில் வளர்ச்சி என்னும் காரணத்தைக் குறிப்பிட்டு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டது. தனது முடிவை மறுபரிசீலனை செய்யத் தயாராக இல்லாத டிரம்ப் அதற்கான எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறார்.

பருவநிலை மாற்றத்தில் தீவிரத்தை உணராத அமெரிக்க அதிபரின் நடவடிக்கை நவம்பரில் நடைபெற உள்ள தேர்தல் வரை எதிரொலிக்கிறது.

"இது ஒவ்வொரு அமெரிக்கரும் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் வாக்களிக்கும் போது சிந்திக்க வேண்டிய ஒன்று" என்ற மேற்கண்ட வாசகம் பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறிப்பிட்டு 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 520 விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்ட அமெரிக்க வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஒன்று.

“உலகின் வெப்பநிலை 1.5 செல்சியஸ் உயர்ந்தால், உணவுப் பற்றாக்குறை, உணவு பொருள்களின் விலை உயர்வு, வாழ்வாதாரம் பாதிப்பு, மோசமான சுகாதார தாக்கங்கள், மற்றும் மக்கள் இடம்பெயர்தல் போன்ற பல விளைவுகளை பின்தங்கிய மக்கள் மிக அதிகமாக சந்திக்கக் கூடும். பருவநிலை மாற்றம் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் ஏழை நாடுகளைத்தான் அதிகம் நாசம் செய்யும்" என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
 
அதன் காரணமாக 2030 ஆம் ஆண்டிற்குள் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் குறைக்க கார்பன் டை ஆக்ஸைடு அளவை 12 முதல் 14 கிகா டன் வெளியேற்றலாம் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவின் வெளியேற்றம் மேலும் பருவநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கையை பாதிக்கின்றன.

இதனால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துவது குறித்து பல்வேறு நாடுகளும் இலக்குகளை ஏற்படுத்துவது அவசியமாகிறது. அதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது, கூடுதல் நிதியை ஒதுக்குவது என அரசின் முன்னெடுப்பே பருவநிலை பாதிப்பைக் குறைக்க உதவும் என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சமீப காலங்களில் உலகெங்கிலும் பதிவாகி வரும் தரவுகள் விஞ்ஞானிகளையும், சூழலியலாளர்களையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளன. பசுமைக்குடில் வாயுகளின் அளவுகள் 2019 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த அளவை எட்டின. கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு உள்ளிட்ட புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான வாயுகளின் செறிவுகள் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கால அளவைக் காட்டிலும் அதிகமாக உள்ளன.

2019 ஆண்டானது ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக்கின் துருவப் பகுதிகளில் இரண்டாவது வெப்பமான ஆண்டாகப் பதிவானது. இதனால் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் கரைந்து கடல் நீர்மட்டம் உயரும் அபாயம் ஏற்படுகிறது.

காலநிலை நெருக்கடியின் விளைவுகள் உலகெங்கிலும் உணரப்படுகின்றன. அண்மையில் கிழக்கு ஆப்பிரிக்கா முழுவதும் பரவலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, அமேசான் மற்றும் சைபீரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அதிகப்படியான வனப்பகுதிகள், பல்லுயிர்கள் உயிரிழந்து சூழல் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

பருவநிலை மாற்ற பாதிப்பால் புதிய புதிய நோய்களும், தொற்று பாதிப்புகளும் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். உயரும் வெப்பநிலையால் கடலில் உள்ள பனிப்பாறைகள் கரைவது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளும் பாதிக்கப்படுகின்றன. கணிக்கமுடியாத பரவல் மற்றும் அதிகரித்த தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை காரணமாகப் பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகப் பள்ளிகள் கல்லூரிகள் தொடங்கித் தொழிற்சாலைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

கரியமில வாயுகளின் வெளியேற்றம் குறைந்ததால் உலக வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும் என பலரும் கருதி வந்தனர். பலரும் இந்தப் பொதுமுடக்கம் சூழலியலுக்கு சாதகமானது எனக் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில் சமீபத்திய ஆய்வு முடிவு கவலையைத் தருகிறது. சமீபத்திய லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் வெளியான தகவலின்படி பொதுமுடக்கத்தால் தடுக்கப்பட்ட கரியமில வாயுகளின் வெளியேற்றம் காலநிலை மாற்றத்தால் ஏற்பட இருக்கும் அபாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனத் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 2020 இல் உலகளாவிய கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு 25%-க்கும், நைட்ரஜன் ஆக்ஸைடுகள் உமிழ்வு 30%-க்கும் குறைந்துவிட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. எனினும் இவை எந்த அளவு பருவநிலை மாற்றத் தவிர்ப்பு நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனும் கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் தற்போது பொதுமுடக்க நடவடிக்கைகள், கணிக்கப்பட்ட 2030ஆம் ஆண்டின் உலக வெப்பநிலையில் 0.01 சதவிகிதம் மட்டுமே குறைக்க உதவும் என்னும் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. எனினும் தற்போதைய மாற்றத்தை தொடர்ச்சியாக கடைப்பிடிக்க முடியாது என்பதால் அரசுகள் ஆற்றல் மூல வளங்களில் மாற்றத்தை நோக்கி நகர்வதும், அவற்றுக்குக் கூடுதல் நிதியாதாரங்களை வழங்குவதுமே சரியான தீர்வாக இருக்கும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தைத் தடுக்கப் புதைபடிம எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துவமே தற்போதைய சிக்கலில் இருந்து மீள உதவும் எனவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

புதைபடிவ எரிபொருள் முதலீடுகளைக் குறைப்பதன் மூலம், 2050-க்குள் 0.3 செல்சியஸ் புவி வெப்பமடைவதைத் தவிர்க்க முடியும் என லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பியர்ஸ் ஃபோஸ்டர் தலைமையிலான ஆய்வாளர்கள் குழு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. சட்டப்பூர்வ நடவடிக்கைகளும், கட்டமைப்பு மாற்றங்களும், புதிய கொள்கைகளும் இல்லாமல் உயரும் வெப்பநிலையை கட்டுப்படுத்துவது முடியாத காரியம் என மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜெய்ஸ் குரியகோஸ் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகம் இல்லாமல் நாம் வளர்ச்சியின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறோம். அந்த வளர்ச்சியால் பயன் பெற்றவர்கள் ஏற்படுத்திய பெரும் பள்ளம், பயன்பெறாதவர்களை விழுங்கக் காத்திருக்கிறது. நாம் விரும்பாவிட்டாலும் நம் எதிர்காலத் தலைமுறை பருவநிலை பேரிடரை எதிர்நோக்கிதான் தங்களது பயணத்தைத் தொடர்கின்றனர். 

புதிய மாற்றங்கள் சமூகத்தில் எப்போதும் நிகழ்பவை. நாம் விரும்பும் சூழலுக்கு சாதகமான மாற்றங்களை அடைய தன்னிச்சையான நடவடிக்கைகளைத் தாண்டி ஒன்றுபட்ட நடவடிக்கைகளும், ஒத்திசைவான பார்வையும் அவசியம். அரசின் சரியான திட்டமிடலுடன் கூடிய செயல்பாடே வரவிருக்கும் அபாயத்திலிருந்து மக்களையும், இனிவரும் தலைமுறையையும் காக்க உதவும். பழைய பழக்கப்பட்ட வாசகமானாலும் “இந்த பூமி அடுத்த தலைமுறைக்கு பத்திரமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டிய சொத்து” என்பது பொருள் பொதிந்தது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com