Enable Javscript for better performance
jawaharlal nehru about rajaraja chozhan and big temple ! நேருவின் பார்வையில் ராஜராஜன்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    நேருவின் பார்வையில் ராஜராஜன்

    By முனைவர் பா.ஜம்புலிங்கம், உதவிப்பதிவாளர்பணி நிறைவு  |   Published On : 04th February 2020 08:22 PM  |   Last Updated : 04th February 2020 08:27 PM  |  அ+அ அ-  |  

    ta28raj4

     

    கல்கியின் “பொன்னியின் செல்வன்” வரலாற்றுப் புதினத்தைப் படிக்கும் வாசகர்கள் அக்காலகட்டத்துக்கே செல்லும் உணர்வைப் பெறுவர். ஒவ்வொரு கதாபாத்திரமும் வாசகர்களுக்கு மிகவும் நெருக்கமாவதோடு நிகழ்வு நடைபெறும் இடங்களுக்கே அழைத்துச் சென்றுவிடும். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, தனது மகள் இந்திரா பிரியதர்ஷினிக்கு எழுதிய கடிதங்களைப் படிக்கும்போதும் இவ்வுணர்வு ஏற்படும். இக்கடிதத் தொகுப்பைக் கொண்ட“உலக வரலாறு  (Glimpses of World History) என்ற நூலைப் படிக்கும் வாசகர்கள் அந்தந்த இடங்களுக்கே சென்ற உணர்வைத் தரும்படி அவர் எழுதியுள்ளார்.

     

    "பள்ளியிலோ, கல்லூரியிலோ நாம் அறிந்துகொள்ளும் வரலாறு போதுமானதல்ல. மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால், நான் பள்ளிக்காலத்தில் ஓரளவே கற்றுக்கொண்டுள்ளேன். சிறிதளவே இந்திய வரலாற்றையும், இங்கிலாந்து வரலாற்றையும் கற்றேன். இன்னும் சொல்லப்போனால் நான் படித்தவை அதிகமாக நம் நாட்டைப் பற்றிய தவறான மற்றும் திரித்துவிடப்பட்ட செய்திகளே. கல்லூரியை விட்டு வெளியே வந்த பின்னர்தான் சில உண்மையான வரலாற்றைப் படிக்க ஆரம்பித்தேன். அதிர்ஷ்டவசமாக என்னுடைய சிறைவாசம் என் அறிவைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்பளித்தது."

    ஒவ்வொரு கடிதத்தின் ஆரம்பத்திலோ முடிவிலோ இவ்வாறான கருத்துக்ளைத் தெரிவித்து மகளை தன் கடிதத்துடன் நேரு பிணைக்கிறார். உலக அரங்கில் அவர் தொடாத துறையே இல்லை என்று கூறுமளவு அனைத்துச் செய்திகளைப் பற்றிய கடிதங்களை எழுதியுள்ள நேரு, தன் நூலில் மாமன்னன் இராஜராஜனைப் பற்றியும், இராஜேந்திரனைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

    தென்னிந்தியா பல மன்னர்களையும், போராளிகளையும் ஒரு பெரும் மனிதனையும் உருவாக்கியுள்ளது என்ற தலைப்பில் 13.5.1932 அன்று எழுதியுள்ள கடிதத்தில் ஹர்ஷரின் மரணம் தொடங்கி பல செய்திகளைக் குறிப்பிடுகிறார். பல்லவர், பாண்டியர் பற்றி எழுதியபின் சோழர்களைப் பற்றி எழுதுகிறார்.

    தஞ்சாவூா் பெரியகோயிலில் நாளை குடமுழுக்கு

    "சோழராட்சி 9-ம் நூற்றாண்டின் நடுவில் தென்னகம் முழுதும் பரவ ஆரம்பித்தது. கடலிலும், அதன் ஆதிக்கம் இருந்தது. வங்காள விரிகுடாவிலும் அரபிக்கடலிலும் பெரிய கடற்படையைக் கொண்டிருந்தது. சோழர்களின் முக்கிய துறைமுகம் காவிரிப்பூம்பட்டினம். சோழராட்சிக்கு அடிகோலிய விஜயாலயன் மிகப்பெரிய மன்னன். சோழர்கள் வடக்கே தம் எல்லையை விரிவுப்படுத்தத் தொடங்கியபோது திடீரென ராஷ்ட்ர கூடர்களால் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால், மறுபடியும் இராஜராஜன் காலத்தில் எல்லை விரிவடைய ஆரம்பித்ததுடன் பழம்பெருமையும் தக்கவைக்கப்பட்டது. இது 10-ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டம்.

    அக்காலகட்டத்தில் வட இந்தியாவில் முகலாயர் படையெடுப்பு நடைபெற்றது. வடக்கே நடந்த நிகழ்வுகளால் ராஜராஜனுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. தொடர்ந்து, படையெடுப்புகளில் அவர் ஈடுபட்டார். இலங்கையை வென்றார். அங்கு சோழர்கள் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவரது மகன் இராஜேந்திரன் தந்தையைப் போலவே போர்க்குணம் மிக்கவன். தன் யானைகளை கப்பலில் எடுத்துச் சென்று தென் பர்மாவை வென்றான். வட இந்தியா சென்று வங்காள மன்னனைத் தோற்கடித்தான். குப்தர்களுக்குப்பின் இக்காலகட்டத்தில் சோழராட்சி விரிவடைய ஆரம்பித்தது.

    ஆனால், அது நெடுநாள் நீடிக்கவில்லை. தான் வென்ற நாடுகளைத் தக்க வைக்கும் முயற்சியில் இராஜேந்திரன் ஈடுபடவில்லை. கி.பி. 1013 முதல் 1044 வரை அவன் அரசாட்சி செய்தான். அவனது மரணத்திற்குப்பின் சோழராட்சி சரிய ஆரம்பித்தது.

    சோழர்கள் போர் வெற்றிகளில் மட்டும் சிறந்தவர்கள் அல்லர். கடல் வணிகத்திலும் பெயர் பெற்றவர்கள். காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகப் பொருள்களின் ஏற்றுமதியும், இறக்குமதியும் நடைபெற்றது. கடல் வழியாக வெகுதூரம் வரை வணிகப் பொருள்கள் அனுப்பப்பட்டன. யவனர்கள் அல்லது கிரேக்கர்களின் குடியிருப்பு அங்கு இருந்தது.”

    இதே கடிதத்தில் தொடர்ந்து இந்திரா பிரியதர்ஷினிக்கு ஒரு செய்தி கூறிவிட்டு மறுபடியும் சோழர்களைப் பற்றி எழுதுகிறார். மகளுக்கு அவர் எழுதும் குறிப்பு வாசகரையும் தெளிவுப்படுத்துகிறது.

    "பல நூற்றாண்டு கால தென்னிந்திய வரலாற்றை உனக்குச் சுருக்கமாகச் சொல்ல முயன்றுள்ளேன். என் இந்த முயற்சி உனக்குச் சிறிய குழப்பத்தைக்கூட உண்டாக்கலாம். அப்போது பல மன்னர்களைப் பற்றியும், வம்சங்களைப் பற்றியும் அறிய எண்ணும்போது குழப்பத்தில் ஆழ்ந்துவிடக்கூடாது.

    மன்னர்களையும் அவர்களுடைய வெற்றியையும்விட மிகவும் முக்கியமானது அந்நாளைய பண்பாடு மற்றும் கலை தொடர்பான பதிவே. கலையியல் நோக்கில் எடுத்துக் கொண்டால் அதில் வட இந்தியாவைவிட தென்னிந்தியாவின் பங்களிப்பே அதிகம். வட இந்தியாவில் பெரும்பாலான மரபுச் சின்னங்களும், கவின்மிகு கட்டடங்களும், சிற்பங்களும் போரின் காரணமாகவும், முகலாயர்களின் படையெடுப்புகளாலும் அதிக பாதிப்புக்குள்ளாயின.

    இக்காலகட்டத்தில் சோழமன்னன் இராஜராஜனால் ஓர் அழகான கோயில் தஞ்சாவூரில் கட்டப்பட்டது. பாதமியிலும், காஞ்சிபுரத்திலும் கூட அழகான கோயில்கள் இருந்தன. எட்டாம் நூற்றாண்டின் பிற்பாதி நிலை இதுவே. ராஜராஜன் காலத்தில் அழகான செப்புத்திருமேனிகளும் காணப்பட்டன. அவற்றுள் மிக முக்கியமானது நடராஜர் சிற்பமே.

    கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழமன்னன் முதலாம் இராஜேந்திரன் பல நீர்ப்பாசன வசதிகளைச் செய்தான். அவற்றுள் முக்கியமானது 16 மைல் நீளமுள்ள நீர்த்தேக்கமாகும். இது கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்குபின் அங்கு வந்த அரேபியப் பயணி அல்பெரூனி அதைக் கண்டு வியக்கிறார். தம் மக்கள் அதைக் கண்டால் வியந்து போவார்கள்" என்றும் கூறி இதுபோன்ற கட்டுமானத்தை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் புகழாரம் சூட்டுகிறார்.

    அங்கோர்வாட் (கம்போடியா) மற்றும் ஸ்ரீவிஜயம் (இந்தோனேசியா) என்னும் தலைப்பில் அமைந்த 17.5.1932-ம் நாளிட்ட கடிதத்தில் நேரு ஸ்ரீவிஜயத்துடன் சோழர்கள் கொண்ட தொடர்பு பற்றியும், தென்னிந்தியாவில் சோழப்பேரரசு 11-ம் நூற்றாண்டில் உச்சநிலையில் இருந்தபோது ஸ்ரீவிஜயமும் அத்தகு நிலையில் இருந்தது பற்றியும், இரு பேரரசுகளுக்கும் இடையே இருந்த நட்புறவு பற்றியும் குறிப்பிடுகிறார்.

    11-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர்களுக்கிடையே போர் மூண்டது பற்றியும், அக்காலகட்டத்தில் சோழமன்னன் முதலாம் இராஜேந்திரன் கடற்பயணம் மேற்கொண்டு ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற முயன்றதையும் விரைவில் அந்த அதிர்ச்சியில் இருந்து ஸ்ரீவிஜயம் மீண்டது பற்றியும் குறிப்பிடுகிறார்.

    சோழர்களைப் பற்றிய ஒரு பறவைப் பார்வையை தன் கடிதங்களில் நேரு குறிப்பிட்டுள்ளதன் மூலமாக அவர் உலக வரலாற்றில் சோழர்களுக்குத் தந்துள்ள முக்கியத்துவத்தை உணரமுடிகிறது.  


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp