அன்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களுக்கும் பரவிய கரோனா வைரஸ்
By | Published On : 27th February 2020 11:20 AM | Last Updated : 27th February 2020 11:28 AM | அ+அ அ- |

அன்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களுக்கும் பரவிவிட்டது ஆபத்தான கரோனா வைரஸ்!
தென்கொரியாவில் உள்ள அமெரிக்க வீரர் உட்பட ஆசிய நாடுகளில் நேற்று ஒரு நாளில் மட்டும் ஏராளமானோருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,744 ஆக உள்ளது.
பிரேசில் நாட்டின் லத்தீன்அமெரிக்காவில் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் ஐரோப்பிய கண்டத்துக்கும் கரோனா பரவியுள்ளது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
முதல் முறையாக, நேற்று சீனாவைத் தவிர்த்து, உலக நாடுகளில் அதிக அளவில் கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று உலக சுகாதாரத் துறை அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது சீனாவில் நேற்று ஒரே நாளில் 411 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அதேவேளையில், உலக நாடுகளைச் சேர்ந்த 427 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 80,980 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3,000 ஆகவும் உயர்ந்துள்ளது.
சீனாவில் நேற்று மட்டும் 29 பேர் கரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர். இது கடந்த வாரங்களில் மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.
திடீரென இத்தாலி, ஈரான், கொரிய நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவுதல் அதிகரித்திருப்பது மிகக் கவனத்துடன் கையாள வேண்டிய விஷயமாக உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் புதன்கிழமை கூறினார். தற்போது இந்த வைரஸ் அன்டார்டிகா கண்டத்தைத் தவிர பிற அனைத்துக் கண்டங்களுக்கும் பரவியுள்ளது. கடந்த செவ்வாயன்று ஆப்ரிக்கா மற்றும் அல்ஜீரியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு மருத்துவ பரிசோதனையின் மூலம் உறுதியாகியுள்ளது.
எகிப்திலும், ஆஸ்திரேலியாவில் 22 பேருக்கும் கடந்த சனிக்கிழமை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
சீனாவில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 78,497 ஆக உள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் நாடாக தென் கொரியா விளங்குகிறது. இங்கு மட்டும் 1,261 பேர் கரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதிதாக அமெரிக்க வீரர் உட்பட 284 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த 62 வயது நபர் இத்தாலி சென்று விட்டுத் திரும்பிய நிலையில் கரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார். பாகிஸ்தானிலும் இரண்டு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை சீனாவைத் தவிர்த்து உலக நாடுகளில் மட்டும் சுமார் 50 பேர் கரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதில் இத்தாலியில் 11 பேரும், ஈரானில் 19 பேரும் அடங்குவர்.
குவைத்திலும் புதிதாக கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளனது. அனைவருமே ஈரானுக்குச் சென்று வந்தவர்கள். இதனால் குவைத்தில் மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உள்ளது. பஹ்ரைனில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய கண்டத்தில் இத்தாலிதான் கரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இருக்கிறது. இங்கு 322 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அல்ஜீரியா, ஆஸ்திரியா, குரோஷியா, ரோமானியா, ஸ்பெயின், வடக்கு மெக்டோனியா, ஸ்விட்சர்லாந்து நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அனைவரும் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் அல்லது இத்தாலிக்குச் சென்று வந்தவர்கள். பிரான்ஸில் மட்டும் இதுவரை 17 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது. இரண்டு பேர் மரணம் அடைந்துள்ளனர்.
சீனாவில் தற்போது 2,358 பேருக்கு கரோனா அறிகுறி உள்ளது. கரோனா பாதித்து மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர்களில் 32,495 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G