தமிழ்நாட்டுச் சிற்பங்களில் பெண் சமத்துவம்

பெண் சமத்துவம் காலந்தோறும் தமிழ்நாட்டில் நடைமுறையிலிருந்தமையை சிற்பங்களின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள தமிழரின் சிந்தனை பாராட்டுதற்குரியதாகும்.
தமிழ்நாட்டுச் சிற்பங்களில் பெண் சமத்துவம்


பெண் சமத்துவம் காலந்தோறும் தமிழ்நாட்டில் நடைமுறையிலிருந்தமையை சிற்பங்களின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள தமிழரின் சிந்தனை பாராட்டுதற்குரியதாகும். ஆணுக்கு சரிநிகர் சமமானவர்களாகப் பெண்கள் வரலாற்றுக் காலம் முதற்கொண்டு இருந்துள்ளனர். சக்தியின் ஆதாரமாகப் பெண் போற்றப்படுகிறாள். சக்தியை முழு முதற் தெய்வமாகக் கொண்டு வழிபடப்படும் சமயப் பிரிவு சாக்தம் என அழைக்கப்படுகிறது. சக்தி  பல்வேறு திருவுருவங்களைக் கொண்டு திகழ்கிறது. 

சிவனைப் போல சாத்வீகம்,  இராசம்சம், தாமசம் ஆகிய மூன்று நிலைகளில் பெண் தெய்வங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சக்தியானவள் ஆண் இறையுருவங்களுக்கு இணையானவளாகத் துணையாக சித்தரிக்கப்பட்டுள்ளாள். 

இதில் ஆண், பெண் வேறுபாடு கருதப்படுவதில்லை. அவை ஆண், பெண் ஒருவரையொருவர் சார்ந்து சேர்ந்து  இயங்கினால்தான் உலகம் இயங்கும்  என்ற உண்மையின் அடிப்படையாக அமைந்துள்ளது. இந்த பாலின காரணி மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானதாகும்.
வரலாற்றுக் காலம் முதற்கொண்டு பெண் சமுதாயத்தில் பெற்றிருந்த அந்தஸ்தினை கல்வெட்டுகள், சிற்பங்கள், இலக்கியங்கள், நாணயங்கள் என பல்வேறு ஆதாரங்கள் வாயிலாக அறியலாம்.

சிந்து சமவெளி நாகரிகத்தில் தாய் வழிபாடு பிரதான வழிபாடாக இருந்துள்ளது. வேத காலத்தில் பெண்ணுக்குரிய மரியாதை, சமத்துவம் குறித்து கூறப்பட்டுள்ளது. பெண் முனிவர்கள் பலர் பல பாடல்களை பாடியுள்ளனர். நல்லொழுக்கம் மற்றும் அறிவின் உருவமாக பெண் போற்றப்படுகிறாள்.  இந்து சமயத்தில் ஆண் கடவுளர்கள் மட்டுமின்றி  அவர்களின் துணைவியார்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இது ஆண்,  பெண் பாலின சமத்துவத்தை இந்து சமயம் காலம்காலமாகப் போற்றி வருவதைக் காட்டுகிறது. அவற்றைக் கோயில்களின் வளர்ச்சிக் காலமாக கருதப்படும் குப்தர் காலம் முதற்கொண்டு (பொ.ஆ. 4 ஆம் நூற்றாண்டு) கோயில் சிற்பங்களில் பிரதிபலிப்பதைக் காணலாம்.

அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம் ஒரு பாதி ஆணாகவும் மறு பாதி பெண்ணாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளமை பாலின சமத்துவத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். ஒரே பீடத்தில் ஆண் கடவுளும், பெண் கடவுளும் அருகருகே அமைந்துள்ளமை இக்கருத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக உள்ளது. தமிழ்நாட்டிலும் பாலின சமத்துவம் காலம் தோறும் போற்றப்பட்டு வந்துள்ளமையை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதற்கொண்டு பல்வேறு தொல்பொருள் சான்றுகள், இலக்கியங்கள், கோயில் சிற்பங்கள், ஓவியங்கள் என ஆதாரங்கள் பகிர்கின்றன.

ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள பெண் தெய்வ சிற்பம், சங்ககால இலக்கியங்களில் கொற்றவை என பல பெண் தெய்வங்கள் ஆண்களுக்கு இணையாகவே போற்றப்பட்டு வந்துள்ளனர். சங்க கால சோழ பெருவேந்தன் கரிகாற்சோழன் காலத்திலேயே காஞ்சிபுரம் காமாட்சி புகழ்பெற்ற தெய்வமாகக் காணப்படுகிறார். சக்தி உறையும் தலம் காமக்கோட்டமாகப் போற்றப்படுவதை ஆகமங்கள், சிற்ப சாஸ்திரங்கள், தேவாரம், லலிதசஹஸ் நாமம் போன்ற இலக்கியங்கள் பேசுகின்றன.

சைவ சமயத்தில் சிவன், பார்வதி, வைணவத்தில் கிருஷ்ணன், ராதை, புத்த சமயத்தில் உபயா, பிரஜனா என்று ஆண், பெண் இணைப்பைக் காட்டும் திருவுருவங்களாகும். கோயில்களில் பாலின சிற்பங்கள் காட்டப்படுவதன் நோக்கம் அவை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் வாழ்வியல் நெறிகளில்  ஒரு அங்கம் என்பதை உணர்த்துவதற்காகும். இறைவனும் இறைவியும்  இரட்டைக் கடவுளர்களாக சமமானவர்களாகவே பாவிக்கப்பட்டுள்ளதை ஆதிசங்கரரின் ஸ்ரீசக்கரத்தால் அறியலாம். முக்கோணத்தின் இரண்டு பாகங்கள் மேற்கண்ட கருத்தை பிரதிபலிக்கின்றன. இச்சக்கரத்தின் மையப்புள்ளி பிந்துவாகவும் அதில் காமேஸ்வரன், லலிதா அபேத இணைவைக் குறிப்பதாகும்.
    
பாலினத்தின் தெய்வீகத் தன்மையை விளக்கும் வண்ணம் உள்ளது. சிற்றின்பத்தைக் கடந்தால் பேரின்பம் எனப்படும் தெய்வ நிலையை அடையலாம் என்பது அவை மறைமுகமாக உணர்த்துகின்றன. சாகத்  தாந்திரிகக் கோட்பாட்டில் இதன் முழு உண்மைப் புலப்படும். 

பல்லவர் கால சிற்பங்களில் சோமாஸ்கந்தர் சிற்பம் இல்லறத்திற்கு சிறந்த நல்லறத்தை போதிப்பதாகும். இதில் சோவாகிய இறைவன் ஒருபுறம்,  மாவாகிய சக்தி மறுபுறம் இருவரிடையே ஸ்கந்தரும் உள்ளனர். முற்கால சோழர் காலத்தில் கருவறையினுள் மூலவர் அருகே போக சக்தி அம்மனாக இறைவி  காணப்படுகிறார். 

இடைக்கால சோழர் காலம் முதற்கொண்டு கோயில்  திருச்சுற்றில் மூலவர் சன்னதிக்கு அருகாமையில் தனி சன்னதிப் பெற்றுத் திகழ்கிறார். பிற்கால சோழர் காலத்தில் இறை சன்னதிக்கு இணையான தனி சன்னதியாக திருமைகோட்டமுடைய நாச்சியார் சன்னதி திகழ்வதை சிதம்பரம் நடராஜர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் காணலாம்.

பிற்காலத்தில் பாண்டியர் காலம் முதற்கொண்டு விஜயநகர நாயக்கர் காலங்களில் அம்மன் சன்னதி பல்வேறு மண்டபங்களைக் கொண்டு விரிவுப்படுத்தப்பட்டுள்ளதை, தஞ்சை பெரிய கோயில், வேலூர் ஜலகண்டேசுவரர் கோயில்களில் காணலாம். நாயக்கர் காலத்தில் மேலும் அம்மன் வழிபாடு புகழடைந்து இறை சன்னதியைக் காட்டிலும் இறை சன்னதி முக்கியத்துவம் பெற்றதை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காணலாம். ஒரே கோயிலில் இரண்டு சன்னதிகளின் முக்கியத்துவத்தை அவை அழகாகக் குறிப்பாக ஆண், பெண் இரு பாலின சமத்துவத்தை பிரதிபலிக்கின்றன. இது அக்கால சிற்பிகள் சமூக நிகழ்வுகளை உள்வாங்கி தங்களது கலைகளில் பிரதிபலிப்பதைக் காணலாம்.

உலகமே வியந்து போற்றும் நடராஜர் சிற்பம் பிரபஞ்ச இயக்கத்தை பிரிதிபலிக்கும் மிகச் சிறந்த சிற்பமாகும். இது ஆக்கல், காத்தல், அழித்தல்,  மறைத்தல், அருளுதல் எனும் பஞ்சகிருத்யத்தை அழகே உணர்த்துகின்றன. ஒவ்வொரு அணுக்களின் செயல்பாட்டிலும் இதனை நாம் காணலாம். ஐந்தொழிலை சிவன் தனது ஆனந்த தாண்டவத்தின் மூலமாக நிகழ்த்தும்போது தேவியானவள் பஞ்ச பிரமஸ்வருபினியாக பஞ்சகிருத்தி பாராயணியாக விளங்குகிறாள். இது ஆண், பெண் ஒருங்கிணைப்பைக் காட்டுகிறது. எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்ற கேள்விக்கே இடமில்லை. இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே கலைஞன் தனது கை வண்ணத்தால் குறிப்பால் உணர்த்தியுள்ளமை பாராட்டுதற்குரியதாகும்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவன் தனது ஒரு காலை உயர்த்தியுள்ள ஊர்த்துவ நடராஜர் திருவுருவில் காணப்படுவது போன்றே, அக்கோயில் கோபுரச் சுவர்களில் இடம்பெற்றுள்ள 108 நாட்டிய கரணம் சிற்பங்களில் சக்தியானவள் ஒரு காலைத் தனது தலைக்குமேலே உயர்த்தும் சிற்பத்தைக் காணும்போது சிவன், பார்வதி போட்டி நடனம், அந்தகாசூரன் வதத்தில் தேவியானவள் சிவனுக்கு அடங்கியவளாக காட்டியதுபோல சிவனது பிணத்தின் மீது சக்தியானவள் நடனம் புரிவதும் ( குல்கத்தா காளி போல) சிற்ப வரலாற்றில் காணலாம். சக்தி உயர்வு சித்தாந்தம் என்பது சிவன் இல்லாத (சிவன் பிணமாகிய பிறகு) சக்தியைக் குறிப்பதாகும்.

இதற்கு வலுசேர்க்கும் வகையில் நாம் கல்வெட்டுகளைக் கொண்டு பார்க்கும்போது மத்திய காலத்தில் ஆண்களைப்போல பெண்களும் சுதந்திரத்தை அனுபவிப்பவர்களாகவும், சமூக அந்தஸ்தும் குடும்பத்திற்குள் மேலான அந்தஸ்தைப் பெற்றவர்களாகவும் இருந்துள்ளார்கள் என்பதை சோழர் கால அரசிகளான செம்பியன் மாதேவியார், குந்தவை பிராட்டியார் போன்றோர் இறைப்பணியின் மூலம் அறியலாம்.
  
சைவ, வைணவ சடங்கு, சம்பிரதாயங்களில் ஆண், பெண் தெய்வ திருவுருவங்கள் என பேதமின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்கள் சொத்துடையவர்களாக விளங்கியமையால் ஆண்களுக்கு இணையாக கோயில்களுக்கு பல தானதருமங்களைச் செய்துள்ளனர்.

சோழர் காலத்தில் பெண்கள் அதிகாரிச்சிகளாக அரசியல் அதிகாரத்திலும் இருந்துள்ளமை புலனாகிறது.பெண்கள் ஆண்களைப் போன்று குதிரையில் ஆயுதங்களை  ஏந்தி போர் வீரர்களாகக் காட்சியளிப்பதை தஞ்சை மராட்டியர் கால  ஒரத்தநாடு முத்தாம்பாள் சத்திரத்தில் காணலாம். நாயக்கர் கால சிற்பங்களில் குறத்தி ஒரு இளவரசனைத் தனது தோளில் தூக்கிக் கொண்டு செல்வதைப் போன்று காட்டப்பட்டுள்ளமை, பெண்களும் வலிமையுடையவர்களாக காணப்பட்டுள்ளமை நன்கு புலப்படுகிறது.

எனவே ஆணும் பெண்ணும் சமம், இதில் எந்தவொரு பாரபட்சமும் இல்லை. இதை உணராவிடில் அனைவருக்கும் தாழ்வே என்பதை சிற்பங்களின் வாயிலாக பாலின சமத்துவம் போற்றப்பட்டதைச் சிற்பிகள் வடிவமைத்துக் காட்டியுள்ளதோடு வலியுறுத்தவும் செய்துள்ளமைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

நடனத்தின் அரசராக நடராஜர் கருதினால் சிவகாமி நடேசுவரி (ஆடலரசி)யாக சித்தரிக்கப்படுகிறார். நடராஜருக்குரிய தாண்டவமும் சிவகாமிக்குரிய பாங்கியமும் இணைந்தால்தான் நடனம் முழுமைப்பெறுவதை அச்சிற்பம் தெளிவுப்படுத்துகிறது.

முற்கால சோழர் கோயிலான கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயில் கருவறை புறச் சுவர் தேவகோட்டங்களில் அரசர் குல ஆய்சிற்பங்களுக்கு இணையாக பெண் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் இறைவனுக்கு நிகராக அரசர், அரசி கருதப்படுவதால் அவர்களது திருவுருவ சிற்பங்களையும் கோயில்களில் நிறுவியுள்ளமை சிந்தைக்கினியதாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com