சிலம்பத்தில் அசத்தும் பெண் காவலர்!

ஆண்களுக்கு இணையாக தமிழர்களின் வீர விளையாட்டுக் கலைகளில் ஒன்றான சிலம்பாட்டத்தில் தூத்துக்குடியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார்.
சிலம்பத்தில் அசத்தும் பெண் காவலர்!


ஆண்களுக்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதித்து வரும் நிலையில், தமிழர்களின் வீர விளையாட்டுக் கலைகளில் ஒன்றான சிலம்பாட்டத்தில் தூத்துக்குடியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார்.

தூத்துக்குடி ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணி புரிந்து வரும் குருலட்சுமி தான் அந்த சாதனைக்கு சொந்தக்காரர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகராஜ்- மாரியம்மாள் தம்பதியின் மகள் குருலட்சுமி. இவர்,  நாலாட்டின்புதூர் சாரதா பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் போதே சிலம்பம் கற்க தொடங்கினார்.

பள்ளி படிக்கும்போது மாநில அளவிலும், தொடர்ந்து, கோவில்பட்டி அரசு கலைக் கல்லூரியில் பயிலும் போது தேசிய அளவிலும் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார் குருலட்சுமி.

தனது சாதனை பயணம் குறித்து காவலர் குருலட்சுமி நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்:

எனது தந்தை சண்முகராஜ் சிலம்பம் சுற்றுவார் என்பதால் சிறுவயதில் இருந்தே சிலம்பம் மீது ஆர்வம் வந்தது. எனது மாமா பரமசிவம், அத்தை மாடத்தியம்மாள் வீட்டில்தான் வளர்ந்தேன். பள்ளியில் பயிலும் போது சிலம்பம் மாஸ்டர் மாரிக்கண்ணன் பயிற்சி அளித்தது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. 2018 ஆம் ஆண்டில் காவலர் பணியில் சேர்ந்தேன். இருப்பினும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

சிலம்பம் என்பது தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலை. இதை பெண்கள் எளிதில் கற்றுக் கொள்ளலாம். பெண்களால் முடியாதது எதுவம் கிடையாது. சிலம்பம் கற்றுக் கொண்டால் தன்னை பாதுகாத்துக் கொள்வது மட்டுமின்றி மன தைரியத்தையும் கொடுக்கும்.

பாரம்பரியக் கலையை மீட்டெடுக்கும் வகையில் அனைவரும் சிலம்பம் கற்றுக் கொள்ள வேண்டும். சர்வதேச அளவிலான போட்டிகளில் அதிகளவு கலந்து கொண்டு சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. ஒலிம்பிக் விளையாட்டில் சிலம்பம் சேர்கப்பட வேண்டும்.

என்னைப்போல அதிக பெண்களை சிலம்பம் கற்க வைக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன் என்றார் குருலட்சுமி.                                    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com