பேறுகால எதிர்கொள்ளல்: 10 ஆயிரம் பெண்களைப் பயிற்றுவித்த சிருஷ்டி!

பிரசவ காலத்தை எதிர்கொள்ளும் பயிற்சியை 10,000 கர்ப்பிணிகளுக்கு அளித்து சாதனை படைத்துள்ளார் குமுதவள்ளி சிவ்குமார்.
பேறுகால எதிர்கொள்ளல்: 10 ஆயிரம் பெண்களைப் பயிற்றுவித்த சிருஷ்டி!

சிருஷ்டி என்ற வடமொழி சொல்லுக்கு படைத்தல் என்பது பொருள். கடவுள் மனிதனை படைத்தார். மனிதனை அறிவு கொண்டவனாக சிருஷ்டித்தார் என்கிறது வேதம்.  இதனால் சிருஷ்டி என்பது உருவாக்குவது, புதுமையாக படைப்பது.

அப்படி ஒரு புதுமைப் படைப்பை செய்து வருகிறது. ஈரோட்டில் உள்ள சிருஷ்டி அமைப்பு. வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன், என்ற மங்கல வார்த்தைகளை உதட்டில் உச்சரித்தபடி கண்களை மூடி தியானத்தில் இருக்கிறார்கள் சில பெண்கள். அனைவரும் வயிற்றில் கருதாங்கி இருக்கும் கர்ப்பிணிகள். கண்கள் தியானத்தில் மூடி இருந்தாலும் அவர்களின் மனம் கற்பனையில் பறந்து கொண்டிருக்கிறது. அவர்களின் கற்பனைக்கு சிறகு விரித்துக்கொண்டு இருக்கிறார் குமுதவள்ளி சிவ்குமார்.

நான் மிகவும் மகிழ்ச்சியானவள். நான் இந்த உலகின் சிறந்த குழந்தையை எனது வயிற்றில் தாங்கி இருக்கிறேன். எனக்கு எனது கணவர், எனது உறவினர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்கிறார்கள். என் குழந்தை எனது கருவில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதோ விரைவில் எனக்கு பிரசவ வலி ஏற்பட இருக்கிறது. என் குழந்தை இந்த உலகத்தைப் பார்க்கப்போகிற தருணம் இது.

நான் ஒரு தாயாக மிகவும் மகிழ்கிறேன். என்னைச்சுற்றி எனது உறவினர்கள் இருக்கிறார்கள். எனது பிரசவ வலி எனக்கு தெரியவில்லை. என் குழந்தை பிறக்கிறது. அனைவரும் மகிழ்கிறார்கள் என்று கண்களை மூடிக்கொண்டு இருக்கும், கருதாங்கிய தாய்மாருக்கு வார்த்தைகளை ஒவ்வொன்றாய் எடுத்துக்கொடுக்கிறார் குமுதவல்லி. அவற்றை அப்படியே திரும்பச் சொல்லி கர்ப்பிணிகள் தங்கள் உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை வருடிக்கொடுக்கிறார்கள்.

எந்த பேதமுமின்றி, மகிழ்ச்சியான ஒரு தருணத்தை அந்த கர்ப்பிணிகள் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு சில யோகாசன பயிற்சி அளிக்கப்படுகின்றன. பயிற்சியாளர் கூறக்கூற, சிரிப்பும், புன்னகையுமாக அந்த பெண்கள் யோகாசனங்களை செய்து முடிக்கின்றனர். சுமார் 15 நிமிடங்கள் நடக்கும் இந்த பயிற்சி கர்ப்ப காலத்தில் தங்களுக்கு நம்பிக்கையை தருவதாக கூறுகிறார்கள். பயிற்சியில் ஈடுபட்ட பெண்கள்.
இது எதற்காக? கருத்தரித்து விட்டாலே பெண்களை குனியாதே, எழும்பாதே, ஓடாதே என்று பல கட்டுப்பாடுகள் போடுவதுதானே வழக்கம்.

எதற்காக இத்தனை ஆசனங்கள்? என்ற கேள்வியுடன்  குமுதவல்லி சிவ்குமாரை கேட்டோம், தாய்மைப் பெண்களுக்கு கிடைக்கும் வரம். வரத்தை பெற வேண்டும் என்றால் தவம் மிகவும் முக்கியம். நான் பெற்ற தவத்தின் மகிழ்ச்சியை, எனது தவத்தால் பெற்ற வலிமையை நான் பிறருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் ஏற்பட்டதுதான் இந்த சிருஷ்டி.

ஒரு தலைமுறையை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு பெண்களுக்கு உள்ளது. பெண்கள் ஏற்கும் பாத்திரங்களில் மிக முக்கியமானது தாய் என்ற பாத்திரம். தாயாதல் எளிதல்ல. ஒரு பெண் கருத்தரித்தால் மட்டும் தயாகிவிட முடியுமா?. தான் பெற்ற மகனோ, மகளோ சான்றோன் என மற்றவர்கள் கூறக்கேட்கும்போதுதான் ஒரு பெண் உண்மையான தாயாக மாறுகிறாள்.
தாய்மை ஒரு வரம். அது அந்த வரத்தை பெற்றவர்களுக்குத் தெரியும் தாய்மையின் வலிமை. அப்படி என்றால் 10 மாதங்கள் மகவைச் சுமந்து பெற்றெடுக்கும் ஒவ்வொரு தாயும் தெய்வத்துக்கு சமமானவர்கள். அவர்கள் படைப்பவர்கள். உயிரை சிருஷ்டிப்பவர்கள். வெறும் உயிரை மட்டுமா அவர்கள் சிருஷ்டிக்கிறார்கள். இந்த உலகத்தின் எதிர்காலத்தையும் படைக்கிறார்கள்.

ஒரு பெண் கருதாங்கும்போது அவளுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியும், மரியாதையும் இரட்டிப்பாகிறது. ஆனால் உண்மையான மகிழ்ச்சி குழந்தை பெறுவதில் இல்லை. அந்த குழந்தையை சிறந்த குழந்தையாக உருவாக்குவதுதான். இது எப்படி சாத்தியம் என்பதை அறிவியல் விளக்கி விட்டது. அறிவியல் விளக்கும் முன்பே அபிமன்யு கதையையும், பிரகலாதன் கதையையும் நமது புராணங்கள் சொல்லிக்கொடுத்து உள்ளன. அதாவது ஒரு கரு உருவாகி 6ஆவது மாதத்தில் இருந்தே காதுகள் கேட்கத் தொடங்கும். 7 ஆவது மாதத்தில் கண்கள் பார்க்கத் தொடங்கும். கருவில் இருக்கும் ஒரு குழந்தை 9 ஆவது மாதத்தில் இருந்து கற்றுக்கொள்ளத் தொடங்குகிறது. இது 2 வயது வரை நடக்கிறது. இந்த காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு சிறந்த பயிற்சிகளை, நற்சிந்தனைகளை அளிக்க வேண்டியது கட்டாயம்.

இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம், குழந்தையின் மூளை செல்களை தூண்டி ஊக்குவிப்பது. 2 வயதுக்குள் எந்த அளவுக்கு குழந்தையின் மூளையை தூண்டி, புதிய நரம்பு மண்டல பாதைகளை உருவாக்குகிறோமோ, அந்த அளவுக்கு குழந்தையின் ஆற்றல் பெருகும். குறிப்பாக மனித மூளையில் கோடிக்கணக்கான இணைப்புப் பாதைகள் உள்ளன. இந்த இணைப்புப் பாதைகள் திறந்து இருந்தால் மட்டுமே மூளையின் செயல்பாடு நன்றாக இருக்கும்.

இசை, விளையாட்டு, பேச்சு, சிந்தனை, ஆளுமை என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு வழிப்பாதை. இந்த வழிப்பாதையை இணைக்கும் காலக்கட்டம்தான் கருவில் 9 மாதம் முதல் பிறந்து 2 வயதுவரை.  இந்த தகவலை நான் படித்தபோது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. வருங்காலத்தில் மிகவும் புத்திசாலி குழந்தைகளை உருவாக்க இந்த காலக்கட்டம் மிகவும் உதவும் என்று நினைத்தேன். இப்படி எனது எண்ண ஓட்டம் செல்லவும் காரணம் இருந்தது.

நான் ஈரோட்டில் பிறந்தவள். மூத்த வழக்கறிஞராகத் திகழும் வெங்கடாசலபதி எனது தந்தை. அவரிடம் இருந்து எளிமையும், வாசிக்கும் பழக்கமும் எனக்கு வந்தது. கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் முதுகலை மாஸ் மீடியா படித்துக்கொண்டு இருந்தபோது திருமணம் முடிந்தது. எனது மாமனார் பிரபல தொழிலதிபர் எஸ்.கே.எம்.மயிலானந்தன். தொழில் அதிபராக இருந்தாலும், ஆன்மிக ஈடுபாட்டுடன் இருந்ததால் குடும்பத்தில் அனைவரும் எளிமையானவர்களாகவே இருந்தார்கள்.

19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தபோது சிருஷ்டி குறித்த எந்த எண்ணமும் எனக்கு இல்லை. ஆனால் நான் கருவுற்றபோது என்மீது பிறர் கொண்ட அக்கறை என்னைப்பற்றி சிந்திக்க வைக்கத் தொடங்கியது. அப்போது எங்கள் வீட்டுக்கு ஆன்மிக பெரியவர்கள் அதிகம் வருவார்கள். நான் கருவுற்று இருக்கிறேன் என்றதும், என்னை அழைத்து உடன் அமர்த்திக் கொண்டு ஏராளமான நல்ல விஷயங்களை போதித்தார்கள். சுவாமி ஓம்காரானந்தா, சுவாமி குருபரானந்தா ஆகியோர் அடிக்கடி வந்து போதனைகள் தருவார்கள்.

அப்போது சுவாமி ஓம்காரானந்தா கர்ப்பிணிகள் சொல்லவேண்டிய மந்திரம் ஒன்றை சொல்லிக் கொடுத்தார். அதை நான் திருப்பி சொல்லியபோது எனக்கு அளவில்லாத ஆனந்தம் ஏற்பட்டது. மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கிப்போய், அவர்களின் ஆராய்ச்சி முடிவை கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சொல்லப்பட்டு வரும் இந்த மந்திரத்தில், ஆராய்ச்சிகளுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் சொல்லப்பட்டு இருந்தது. அது எனக்கு இன்னும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது.

சுவாமி குருபரானந்தா, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கற்றுக்கொடுக்கப்படும் கர்ப்பகால பயிற்சி குறித்து கற்றுத் தந்தார். ஆக எனது கர்ப்பகாலம் இதுபோன்ற விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது.  அதில் நான் அதிக ஆர்வமாகவும் இருந்தேன். காரணம், எனக்கு நான் எந்த வேலையை செய்தாலும் அதில் நான்தான் சிறந்தவளாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். எனவே கருத்தரித்த நாள் முதல் எனது குழந்தைக்கு சிறந்த தாயாக இருக்க வேண்டும் என்று நினைத்து இந்த நல்ல விஷயங்களை தொடர்ந்து கேட்டேன். 

ஆனால், பல விஷயங்கள் தெரிந்து கொள்ளும்முன்பே, பிரசவகாலம் வந்து, சுகப்பிரசவமாக குழந்தை பெற்றேடுத்தேன். ஆனால், அத்துடன் என்னுடைய கற்றல் முடிந்து விடவில்லை. எங்கே முடிந்ததோ, அங்கிருந்து மீண்டும் தேடல் தொடங்கியது. அப்போது கணினியின் புழக்கம் அதிக அளவில் இல்லை. அதில் தேடுவதும் சிரமமாக இருக்கும். ஆனால் எனது கணவர் ஸ்ரீசிவ்குமார் கணினியை கையாளுவது பற்றி கற்றுக்கொடுத்தார். நான் கையால் எழுதி வைத்திருந்த குறிப்புகளை கணினியில் பதிவு செய்யவும் சொல்லிக் கொடுத்தார். அதனால் எனது தேடுதல் அதிகமானது.

இதற்கிடையே உளவியலில் முதுகலை படிப்பு படித்தேன். உளவியல் மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள், குழந்தை பேறு மருத்துவர்கள் என்று நான் பார்க்கும் அனைவரிடமிருந்தும் குழந்தை வளர்ப்பு, பிரசவகால செயல்பாடுகள், கர்ப்பத்தின்போது குழந்தைகளுக்கு ஏற்படும் மாற்றங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டேன். சுமார் 5 ஆண்டுகள் எனது ஆராய்ச்சி நீண்டது.

நான் பிரசவ காலத்தில் கேட்ட நல்ல விஷயங்கள், எனது மகனின் வளர்ச்சியில் தெரிந்தது. அவன் பள்ளியில் சிறந்த மாணவனாக, எதையும் உடனடியாக கிரகித்துக்கொள்பவனாக இருந்தான். அப்போதுதான் எனக்குள் ஒரு பொறி ஏற்பட்டது. 

எனக்கு இத்தனை விஷயங்கள் கற்றுத்தர பெரியவர்கள் இருந்தார்கள். ஆனால், இன்றைய கால பெண்களுக்கு யார் இருக்கிறார்கள்? ஏன் நாமே அதை கற்றுத்தரக் கூடாது? என்ற கேள்விகள் எழுந்தபோது, அதனை என் குடும்பத்தினரிடம் வெளியிட்டேன். எந்த மறுப்பும் இல்லாமல், எங்கள் வீட்டின் ஒரு பகுதியையே எனக்காக ஒதுக்கினார்கள். 

2003ஆம் ஆண்டு ஈரோடு பெரியார் நகரில் சிருஷ்டி என்ற பெயருடன் கர்ப்பிணி பெண்களுக்கான பயிற்சி நிலையம் தொடங்கியது. முதன் முதலில் நான் இதுபற்றி பேசியது ஈரோட்டில் உள்ள பிரபல மகப்பேறு மருத்துவர்களிடம்தான். அவர்களும் எனது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

அப்போது தொடங்கிய இந்த பயணத்தில் இதுவரை பல டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அதிகாரிகளின் மனைவிகள், சாதாரண குடும்பத்து பெண்கள், நடுத்தர குடும்பத்தினர் என்று சுமார் 10,000 பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.  அவர்களின் குழந்தைகளை நாங்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம். அனைவரும் சுறுசுறுப்பும் துறு துறுப்புமானவர்காக, அறிவாற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

பொதுவாக கர்ப்பிணிகளுக்கான பயிற்சி என்று கூறியதும், பலரும் சுகப்பிரசவத்துக்கான பயிற்சியா? என்றுதான் கேட்கிறார்கள். சுகப்பிரசவத்துக்கான பயிற்சிகள் இன்று பெரும்பாலான மகப்பேறு மருத்துவமனைகளிலேயே நடக்கிறது. எங்கள் சிருஷ்டி பயிற்சி என்பது சிறந்த குழந்தைகளை உருவாக்கும் பயிற்சி. குழந்தையை சுமக்கும் தாய், மனதில் வெறுப்பு இல்லாமல் குழந்தையை போற்றி வளர்க்கும் பயிற்சி.

மனதில் அகங்காரம், பொறாமை, மாசு இல்லாமல் தூய்மையான மனதுடன் குழந்தையுடன் பேசும் பயிற்சி. சுற்றத்தார் அனைவரும் நல்லவர்கள் என்றும், அக்கம்பக்கத்தினர் எல்லாம் நம்மோடு இருக்கிறார்கள் என்ற பாதுகாப்பையும் கொடுக்கும் பயிற்சி. கருவில் வளருவது வெறும் குழந்தை அல்ல இந்த நாட்டின் எதிர்காலம் என்பதை உணர்த்தும் பயிற்சி. எனவேதான், குழந்தை பிறப்பின்போது, அதாவது பிரசவ காலத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தை பெண்களுக்கு அளிக்கிறோம். பிரசவ கால வேதனைகளை சொல்லிச்சொல்லி வளர்க்கப்பட்ட சமூகத்தில், அது மகிழ்ச்சியான தருணம் என்பதை புரிய வைக்கிறோம்.

இதனால் எங்களிடம் பயிற்சி பெற்றவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமாகவர்கள் சுகப்பிரசவம் அடைந்து இருக்கிறார்கள். ஆனால், அறுவை சிகிச்சை வேண்டாம் என்று நாங்கள் கூறுவதில்லை. அது சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் சூழலை பொறுத்தது. அதே நேரம் அறுவை சிகிச்சையையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளும் பக்குவத்தை அளிக்கிறோம்.

பண்டைய நமது தமிழ்ச் சமூகம் குடும்ப உறவுகளுடன் பிணைக்கப்பட்டு இருந்தது. கூட்டுக்குடும்ப காலாசாரம் மிகப்பெரிய பலமாக இருந்தது. அப்போது பாட்டிகள், சொந்த பந்தங்கள் பல நல்ல விஷயங்களை கற்றுத்தந்தார்கள். இதனால் சுக பிரசவம் நடந்தது. வீட்டு வேலைகள் அதிகம் செய்ததால் தனியாக யோகாசனம் செய்ய வேண்டியது இல்லை.

பசுமையாக காய்கள், பழங்கள் கிடைத்தது, தனியாக உணவு ஆலோசகர்கள் தேவை இல்லை. சொந்தங்கள் அதிகம் இருந்தது. அரவணைப்புக்காக ஏங்க வேண்டியது இல்லை. ஆனால் இன்று, தனிக்குடித்தனத்தில் ஒற்றை பெண்ணாக எதைப்பற்றி சிந்திப்பது. கல்வி பெற்ற பெண்கள் தனக்கு தெரிந்த விஷயங்களை வைத்துக்கொண்டு ஒருவித வறட்டு கௌரவத்தில் இருக்கிறார்கள். இறுகிய அல்லது குறுகிய மனத்துடன் வாழும் மனிதர்களிடம் இருந்து பிறக்கும் குழந்தைகளும் அப்படித்தானே இருக்கும்.

எனவேதான் எண்ணம் போல் வாழ்க்கை என்ற தாரக மந்திரத்தை கடைபிடிக்கிறோம். மகிழ்ச்சியாக இருக்க பழக்கப்படுத்துவது இந்த பயிற்சியின் நோக்கம். தாய்மார்கள் தங்கள் திறமைகளை இங்கே வெளிப்படுத்துகிறார்கள். கைவினைப் பொருட்கள் உருவாக்குகிறார்கள், பாடுகிறார்கள், ஓவியங்கள் வரைகிறார்கள். 2 கைகளாலும் எழுத கற்றுக்கொள்கிறார்கள்.

உடல் முழுவதற்கும் சமமான பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தம் 21 நாட்கள் பயிற்சி. கருத்தரித்த 4ஆவது மாதத்தில் இருந்து பயிற்சியை தொடங்கினால் மிகச்சிறந்த மாற்றம் அவர்களுக்கு கிடைக்கும். பயிற்சியை எளிதாக செய்யவும் முடியும். தற்போது ஈரோடு, கோவை, திருப்பூரில் எங்கள் கிளைகள் இயங்கி வருகிறது.

கிராமப்புற மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு கொஞ்சமும் இல்லை. எனவே கிராமங்களை நோக்கிய பயணத்தை தொடங்கி இருக்கிறேன். இது மிகவும் சவாலான ஒன்றுதான். ஆனால் எதிர்கால சமுதாயத்துக்காக இதை செய்தே ஆக வேண்டும். பல கல்லூரிகளில் மாணவிகள் மத்தியில் பேசி இருக்கிறேன்.

இவருக்கு சிருஷ்டியை தாண்டி இன்னொரு முகம் இருக்கிறது. அது எஸ்.கே.எம் சித்த மருத்துவ நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் என்ற பொறுப்பு. நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தொழிலதிபராக தொடர் பயணங்கள் இருந்தாலும், ஒரு இந்திய குடிமகளாக சிறந்த குடிமக்களை உருவாக்கும் சிருஷ்டியின் பயணம்தான் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.  உங்கள் குழந்தை என்னவாக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ,  அப்படி உங்களால் உருவாக்க முடியும் என்கிறார் குமுதவள்ளி சிவ்குமார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.