Enable Javscript for better performance
தென்னிந்திய சினிமா ராணி டி.பி.ராஜலட்சுமி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  தென்னிந்திய சினிமா ராணி டி.பி.ராஜலட்சுமி

  By மனோஜ் கிருஷ்ணா  |   Published On : 08th March 2020 06:00 AM  |   Last Updated : 07th March 2020 05:31 PM  |  அ+அ அ-  |  

  sk1

  புரட்சி என்ற வார்த்தையைப் பலர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெறுமனே வாய் வார்த்தையாக மட்டுமே பயன்படுத்தியதையும் பயன்படுத்தி வருவதையும் நாம் அறிவோம். ஆனால் அந்த வார்த்தைக்குரிய உண்மையான பொருளுணர்ந்து அதைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்து சாதனைப் பெண்மணியாகத் திகழ்ந்தவர் ஒருவர் உண்டு என்றால் அவர் "தென்னிந்திய சினிமா ராணி' எனப் போற்றப்பட்ட மறைந்த டி.பி. ராஜலட்சுமிதான் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமிருக்காது.

  11-11-1911 அன்று பிறந்து நாடகம், சினிமா, இலக்கியம் உள்ளிட்ட கலையுலகின் அனைத்துப் பிரிவுகளிலும் கொடிகட்டிப் பறந்த டி.பி. ராஜலட்சுமிக்கு இது நூற்றாண்டு விழா.

  ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார் கள். சில துறைகளில் ஆண் களையும் விஞ்சி சாதனை படைக்கிறார்கள் என்றெல்லாம் நாம் சொல்லிக்கொண்டிருந்தாலும் உண்மையான கணக்கெடுப்பின்படி பார்த்தால் பெண் சுதந்திரம் என்பது இந்த 21-ம் நூற்றாண்டி லும் சொல்லிக்கொள்ளுமளவுக்கு இல்லை. இந்தியாவில் 70 சதவீதப் பெண்கள் வீட்டுக்குள் கட்டுப்பெட்டியாகத்தான் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

  இப்போதே இப்படி என்றால் நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலகட்டத்தில் பெண்களின் நிலைமையும் வாழ்வியல் சூழலும் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை சொல்லவா வேண்டும்? திருவையாறு சாலியமங் கலம் கிராமத்தில் பஞ்சாப கேச சாஸ்திரி-மீனாட்சி தம்பதியருக்கு மகளாப் பிறந்த டி.பி.ராஜலட்சுமி, மிகவும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

  அவருடைய தந்தை அந்தக் கிராமத்தின் கர்ண மாகப் பொறுப்பு வகித்தவர். டி.பி.ராஜலட்சுமிக்கு 7 வயதிலேயே பால்ய விவாகம் செய்து வைத்துள்ளனர் குடும் பத்தினர். ஆனால் அந்தத் திருமண பந்தம் விரைவிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. சிறுமியாக இருந்த டி.பி.ஆர். பெற்றோருடன்தான் இருப்பேன் என வீட்டுக்கு வந்துவிட்டார்.

  இந்நிலையில் அவருடைய தந்தை திடீரென காலமாகி விடவே வருமானம் இன்றி குடும்பம் தத்தளித்தது. உற்றார் உறவினர் யாரும் உதவ முன் வரவில்லை. படித்துக் கொண்டிருந்த சிறுமி ராஜலட்சுமிக்கு அபார கேள்வி ஞானம். ஒரு முறை கவனித்தாலே தான் கேட்ட கீர்த்தனைகளை அட்சரம் பிறழாமல் நல்ல குரல் வளத்துடன் பாடுவார்.

  வீட்டுக்கு அருகில் உள்ள சிலர், ""குழந்தையைப் பாட அனுப்பலாமே'' என அவருடைய தாயாரிடம் கூறியுள்ளனர். ராஜலட்சுமிக்கும் அதுதான் சரியாகப்பட்டது. ஆனால் வறுமையில் வாடிய குடும்பத்துக்கு உதவாத உறவினர்கள் "நம் வீட்டுப் பெண் மேடைகளில் பாடுவதா? ' என வசை பாட மட்டும் மறக்கவில்லை. ஆனால் டி.பி.ஆரின் உறுதி, நிலை குலையவில்லை. தன் தாயாரிடம் மட்டும் சம்மதம் பெற்றார். அந்த நேரத்தில் அவருக்கு வாய்த்த ஒரே அதிர்ஷ்டம் - "தமிழ் நாடகவுலகின் தந்தை' என அழைக்கப்பட்ட சங்கர தாஸ் சுவாமிகளைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்புதான். அவரிடம் "ராமனை விட்டு ஒரு நாள் ராஜ்யத்தில் ஒரு கணம் பூமியில் இருப்பதுண்டோ...' என்ற பாடலைப் பாடிக் காட்ட, அசந்து போன சங்கரதாஸ் "இந்தத் துறையில் இனி உனக்குத்தான் முதலிடம்' என வாழ்த்தி ஆசீர்வதித்தார்.

  அவருடைய பயிற்சியாலும் டி.பி.ராஜலட்சுமியின் முயற்சியாலும் வி.எஸ்.சாமண்ணா ஐயரின் நாடகக் கம்பெனியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் நடித்த முதல் நாடகம் "பவளக் கொடி'. இதுதான் பின்னாளில் தியாகராஜ பாகவதர், எஸ்.டி. சுப்புலட்சுமி நடிக்க அதே பெயரில் திரைப்படமானது.

  இதற்கிடையில் 1917-ல் ஆர்.நடராஜ முதலியார் தயாரித்த தமிழ் சினிமாவுலகின் முதல் மெளனப் படமான "கீசக வதம்' என்ற படத்தில் நடித்தார் டி.பி.ராஜலட்சுமி. அதையடுத்து நாடகங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்.

  கே.எ ஸ். செல்லப்பா, கே.பி.மொய்ன் சாகிப், கண்ணையா போன்ற ஜாம்பவான்களின் நாடகக் கம்பெனிகளில் ஏராளமான நாடகங்களில் கதாநாயகன், கதாநாயகி, இரட்டை வேடம் எனப் பற்பல கதாபாத்தி ரங்களில் நடித்துப் புகழின் உச்சிக்குச் சென்றார்.

  இந்நிலையில் தொழில் நிமித் தம் குடும்பத்துடன் திருச்சிக்கு இடம்பெயர்ந்தார். நாடகம் என்றால் வெறுமனே ஆடிப் பாடுவது என்றில்லாமல் தான் நடித்த நாட கங்கள் அனைத்திலும் தேசபக்திப் பாடல்களைப் பாடி மக்களிடையே சுதந்திர தாகத்தைத் தூண்டினார். அதே போல கர்னாடக சங்கீதப் பாடல்களையும் பாடி மக் களை ஈர்த்தார். தியாகராய கிருதிகளான "எந்தரா நீதானா...', சுரரா கசுதா...' ஆகிய பாடல்களை ஹரி காம்போதி, சங்கராபரணம் முதலிய ராகங்களில் டி.பி.ராஜலட்சுமியின் குரலில் கேட்ட ரசிகர்கள் மெய்மறந்தனர். அதே போல "இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை...', "ராட்டினமாம் காந்தி கைபாணமாம்...' போன்ற தேசபக்திப் பாடல்களும் வெகு பிரபலம்.

  இவற்றுக்காகவே இவருடைய நாடகங்கள் பல முறை மீண்டும் மீண்டும் அரங்கேறின. அதே சமயம் தேச பக்திப் பாடல்களைப் பாடியதற்காக பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சில முறை சிறை வாசத்தையும் அனுபவித்திருக்கிறார். நாடக உலகில் பல பிரபலங்களுடன் நடித்தபோதும் ராஜலட்சுமி - வி.ஏ.செல்லப்பா ஜோடி மிகவும் வெற்றிகரமான ஜோடியாக வலம் வந்தது.

  அவர் பணியாற்றிய நாடகக் கம்பெனிகளுடன் அந்தக் காலத்திலேயே இலங்கை, பர்மா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்கும் தனது நடிப் பால், பாடலால் ஏராளமான ரசி கர்களைக் கவர்ந்தார். யாழ்ப்பா ணத்தில் "ஹரிச்சந்திரா' நாடகத்தில் நடித்தபோது அதைக் காண காந்தியடிகள் வந்துள்ளார். நாட கத்தைப் பார்த்து மகிழ்ந்த காந்தியடிகள் வெள்ளை நிறத்தில் இருந்த ஒரு பொம்மைப் புலியை டி.பி.ராஜலட்சுமியிடம் பரிசாகக் கொடுத்து "இந்த வெற்றிப் புலியை வைத்துக்கொள்' என்று கூறியிருக்கிறார்.

  பரவசத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தான் அணிந்திருந்த வைர வளையலைக் கழற்றி "சுதந்திரப் போராட்ட நிதிக்காக இதை வைத்துக்கொள்ளுங்கள்' என்று கஸ்தூரிபாயிடம் கொடுத்திருக்கிறார் டி.பி.ராஜ லட்சுமி.

  இவருடைய நாடகத்தைப் பார்த்த பல தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் ஏராளமான பதக்கங்களையும் பாராட்டுப் பத்திரங்களையும் கொடுத்துள்ளனர்.

  இந்தக் காலகட்டத்தில் அதாவது 1929-ல் சிலப்பதிகாரக் கதையை "கோவலன் அல்லது "The Fatal Anklet' என்ற பெயரில் ஏ.நாராயணன் என்பவர் மெளனப் படமாகத் தயாரித்தார். அதில் 18 வயதான ராஜலட்சுமியைக் கண்ணகியாக நடிக்க வைத்து மீண்டும் அவருடைய சினிமா சகாப்தத்தைத் தொடங்கி வைத்தார். ராஜலட்சுமியின் மூன்றாவது மெளனப்படம் "ராஜேஸ்வரி'. 1931-ல் வெளியான இந்தப் படத்தை ராஜா சாண்டோ இயக்கியிருந்தார்.

  தமிழ் சினிமாவின் முதல் குறும்படத்தில் நடித்த பெருமை யும் ராஜலட்சுமியையே சாரும். மும்பையைச் சேர்ந்த சாகர் மூவி டோன் தயாரித்த "குறத்தி பாட் டும் நடனமும்' என்ற அந்தப் படம் நான்கு ரீல்களை மட்டுமே கொண்டது. இந்தப் படமும் 1931-ல் தான் வெளியானது.

  இதையடுத்து தமிழ் சினி மாவின் முதல் பேசும் படமான "காளிதாஸ்' படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தென்னிந்தியாவின் முதல் பேசும் பட நடிகை என்ற பெருமையையும் பெற்றார் ராஜலட்சுமி. இந்தப் படத்தை இம்பீரியல் டாக்கீஸ் தயாரிக்க எச்.எம்.ரெட்டி இயக்கியிருந்தார்.

  இதில் "காந்தியின் கைராட்டினமே' பாடலைப் பாடி திரை இசை என்ற ஒரு புதிய அத்தியாயத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் ராஜலட்சுமி. படம் மாபெரும் வரவேற்பைப் பெற ராஜலட்சுமியின் புகழ் மேலும் மேலும் பரவத் தொடங்கியது.

  "காளிதாஸ்' படத்துக்குப் பிறகு 1932-ல் "ராமாயணம்' படத்தில் டி.பி.ராஜலட்சுமி சீதை, சூர்ப்பனகை என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இந்தக் காலகட்டத்தில் ரசிகர்கள் அவருக்கு "சினிமா ராணி' என்ற  பட்டத்தை வழங்கினர். அதுவே அவருடைய அடைமொழியாகிவிட்டது.  அதன் பிறகு டி.பி.ராஜலட்சுமி இல்லாத படங்களே இல்லை எனும் அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. "சத்தியவான் சாவித்ரி', "கோவ லன்', "வள்ளி திருமணம்', "அரிச்சந்திரா', "லலிதாங்கி', "குலேபகாவலி' என 1935 வரை பிஸியான நடிகை யாக இருந்தார்.

  இந்தப் படங்களையெல்லாம் ரசி கர்கள் பல முறை விரும்பிப் பார்த்தனர். இந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்களும் மக்கள் மனதில் நீண்ட காலம் நிலைத்து நின்றன. ("வள்ளிதிருமணம்' படத்தில் நடித்த டி.வி. சுந்தரத்தைத்தான் பின்னாளில் திருமணம் செய்துகொண்டார்.)

  1936-ம் ஆண்டு தன்னுடைய புகழ் கிரீடத்தில் மேலும் ஒரு மணி மகுடத்தைப் பதித்தார் ராஜலட்சுமி. கதை, வசனம், பாடல்கள் எழுதி, படத்தைத் தயாரித்து இயக்கி அதில்  கதாநாயகி யாகவும் நடித்து பல அவதாரங்கள் எடுத்ததுதான் அது!

  ஸ்ரீ ராஜம் டாக்கீஸ் என்ற பட நிறுவனத்தை நிறுவி "மிஸ் கமலா' என்ற படத்தை இயக்கி தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குநர், இந்தியாவின் இரண்டாவது பெண் இயக்குநர் (இந்தியாவின் முதல் பெண் இயக்குநர் ஃபாத்திமா பேகம்) என்ற பெருமையைப் பெற்றார்.

  இதில் டி.வி.சுந்தரம், சி.எம்.துரை ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர். படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் "வீர அபிமன்யு', "திரெளபதி வஸ்திராபகரணம்', "பாமா  பரிணயம்', "சீமந்தினி', "பக்தகுமணன்', "தமிழ்த்தாய்', "உத்தமி' உள்ளிட்ட பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தார். அதையடுத்து 1939-ல் "மதுரை வீரன்' என்ற படத்தை இயக்கினார். இதில் வி.ஏ. செல்லப்பா கதாநாயகனாக நடித்திருந்தார். 1950-ம் ஆண்டு ஜோசப் தளியத் இயக்கிய "இத யகீதம்' படம்தான் டி.பி.ராஜலட்சுமி நடித்த கடைசிப் படம்.

  சினிமாவுலகில் 1931-ம் ஆண்டு முதல் 1950 வரை  முன்னணி  நடிகையாகவே  வலம்  வந்த டி.பி.ராஜலட்சுமியின் பல படங்கள் பல மாதங் கள் ஓடி வசூலில் சாதனை படைத்துள்ளன. தன்னுடைய படங்களில் பல புரட்சிகரமான வசனங்க ளையும் கருத்துகளையும் புகுத்தி ரசிகர்களின் ரசனைத் திறனை மேம்படச் செய்தவர்.

  நாடகமானாலும் சினிமாவானாலும் ஒப்பனைக்காகத் தனக்கென எந்த ஓர் உதவியாளரையும் டி.பி.ராஜலட்சுமி  வைத்துக்கொண் டதில்லை. தானே ஒப்பனை செய்து கொள்ளுவார். அதே போன்று தான் இயக்கிய படங்களின் படத்தொகுப்புப் பணிகளையும் அவர்தான் செய்வார். கலையுலகச் சேவைக்காக பல பதக்கங்களையும் கலைமாமணி விருதையும் பெற்றிருக்கிறார். "கமல வல்லி', "விமலா' என்ற இரு நாவல்களையும் எழுதியுள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக 1964-ல் மறைந்தார் டி.பி.ராஜலட்சுமி.

  வறுமையான குடும்பப் பின்னணியில் பிறந்திருந்தாலும் போராட்டம் இருந்தால்தான் வாழ்வில் சுவையும் வேகமும் இருக்கும். இல்லாவிட்டால் வெறும் உயிர்தான் இருக்கும். அதில் உயிரோட்டம் இருக்காது என்ற உண்மையை உணர்ந்து கொண்டு, தனியொரு பெண்ணாக, தான் எதிர் கொண்ட பல சோதனைகளைத்  தன்னுடைய முயற்சியால் முட்டி எறிந்தவர். அதனால்தான் அவரது வாழ்க்கையில் எதிர்ப்பட்ட சோதனைகளில் உள்ள கொம்பு ("ú') நீங்கி சாதனைகளாக மாறின.

  பெண் என்று இல்லை... ஒவ்வொருவரும் டி.பி.ராஜலட்சுமியின்  வாழ்க்கைப் பாடத்தை வழித்தடமாக ஏற்றுக்கொண்டு வீறு நடை போட்டால் விழுந்து விடும் இலைகளாக இல்லாமல் விழுது விடும் கிளைகளாகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பது மட்டும் நிதர்சனம்.

  மனோஜ் கிருஷ்ணா

  படங்கள் உதவி: பிலிம் நியூஸ் ஆனந்தன்

  (டி.பி. ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழாவையொட்டி, நவம்பர் 11, 2011 தினமணி - ஞாயிறு கொண்டாட்டத்தில் வெளியான சிறப்புக் கட்டுரையின் மறுபிரசுரம்)

   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp