மறைந்து வரும் மன்னர்கள் காலக் குளங்கள்

புராதன நகரமான தஞ்சாவூரில் நீராதாரத்துக்காக மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட குளங்களில் பல இப்போது ஆக்கிரமிப்பு காரணமாகப் படிப்படியாக மறைந்து வருகின்றன.
அய்யன்குளத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணி
அய்யன்குளத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணி


புராதன நகரமான தஞ்சாவூரில் நீராதாரத்துக்காக மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட குளங்களில் பல இப்போது ஆக்கிரமிப்பு காரணமாகப் படிப்படியாக மறைந்து வருகின்றன.

இந்த நகரை ஆண்ட சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் உள்ளிட்டோரின் காலத்தில் 50-க்கும் அதிகமான குளங்கள் வெட்டப்பட்டன.

குறிப்பாக, பெருவுடையார் கோயிலைச் சுற்றியுள்ள அகழி, மேல அலங்கம், வடக்கு அலங்கம், கீழ அலங்கத்தைச் சுற்றிலும் அமைந்திருக்கும் அகழி, சிவகங்கைக் குளம், சாமந்தான் குளம், அய்யன்குளம், அழகிக்குளம், செவ்வப்பன் ஏரி போன்றவை சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் கால நீர்நிலை தேக்கத் தொழில்நுட்பத்தைப் பறைசாற்றக் கூடியவை.

பெரும்பாலான குளங்களுக்கு வெண்ணாறு, வடவாறு போன்றவையே நீராதாரங்களாக இருக்கின்றன. சில குளங்களுக்கு 90 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கல்லணைக் கால்வாயும் (புது ஆறு) நீர் ஆதாரமாக மாற்றப்பட்டன.

ஆறுகளிலிருந்து இந்தக் குளங்களுக்குத் தண்ணீர் செல்வதற்காக வாரிகளும் மன்னர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்டன. தஞ்சை நகரின் தென் மேற்குப் பகுதியில் பெய்யும் மழை நீர் திரண்டு வாரி வழியாக குளங்களுக்குச் செல்லும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நகரிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கக் காரணமாகவும் இருந்தன இக்குளங்கள்.

தற்போது, ஆற்றங்கரையோரம் உள்ள சில குளங்களுக்கு மட்டுமே நீர்வரத்து இருக்கிறது. ஆனால், பெரும்பாலான குளங்களும், கரைகளும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இந்தக் குளங்களுக்குத் தண்ணீர் செல்லும் வாரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், நீர் வரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், முறையான பராமரிப்பு இல்லாததால் குளங்கள் தூர்ந்து வருகின்றன. இவற்றில் சில குளங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிறிய, உயர்ந்த கட்டடங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

செவ்வப்பன் ஏரி

சோழர் காலத்துக்குப் பிறகு தஞ்சாவூரில் கி.பி. 1535 ஆம் ஆண்டில் நாயக்கர்கள் ஆட்சி ஏற்பட்டது. தஞ்சாவூர் நாயக்கர் வம்சத்தில் முதல் முதலாக ஆட்சிப் பொறுப்பேற்ற செவ்வப்பநாயக்கர் இந்நகரத்துக்கு அளித்த முதல் கொடை செவ்வப்பன் ஏரி. தஞ்சை நகரைச் சுற்றி இருந்த காடுகளில் பெய்த மழை நீர் திரண்டு வரும் விதமாக வாரிகள் அமைத்து இந்த ஏரிக்கு நீராதாரத்தை உருவாக்கினார் செவ்வப்பநாயக்கர். இந்த ஏரியிலிருந்து சிவகங்கைக் குளத்துக்குத் தண்ணீர் வந்தது.

காலப்போக்கில் இந்த ஏரியில் தண்ணீர் வரத்து தடைப்பட்டதால், ஆக்கிரப்புகளும் உருவாகின. குறிப்பாக, 50 ஆண்டுகளில் இந்த ஏரி மறைந்து, குடியிருப்புப் பகுதியாகவே மாறிவிட்டது. இப்போது, இப்பகுதியின் பெயர் சேப்பனாவாரி. இந்த இடத்தில் ஏரி இருந்ததற்கான அடையாளமே காண முடியாத அளவுக்குக் குடியிருப்புகள் நிறைந்துள்ளன.

அகழியில் அரசுக் கட்டடங்கள்

பெரியகோயிலை சுற்றி கிட்டத்தட்ட 2 கி.மீ. தொலைவுக்கு அகழி உள்ளது. நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த அகழி பெரியகோயிலில் தொடங்கி சீனிவாசபுரம், மேல அலங்கம், வடக்கு வாசல், கொடிமரத்து மூலை, கீழ அலங்கம், தென் கீழ் அலங்கம், ராசா மிராசுதார் சாலை, சோழன் சிலை வரை நீண்டு இருந்தது. ஏறத்தாழ 4 கி.மீ. தொலைவுள்ள இந்த அகழி 60 அடி ஆழமும், 200 அடி அகலமும் கொண்டது. 

மன்னர் காலத்தில் எப்போதும் நீர் நிரம்பிக் காணப்பட்ட இந்த அகழியில் காலப்போக்கில் தண்ணீர் வரத்தும் குறைந்துவிட்டது. எனவே, இந்த அகழியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செடிகள் அடர்ந்து புதர் போல காணப்படுகின்றன. மேலும், குப்பைகளும் கொட்டப்பட்டு வந்ததால் தூர்ந்து வருகிறது. இந்த அகழியின் இரு கரைகளும் ஆக்கிரமிப்பில் உள்ளன. குறிப்பாக, மாநகராட்சி பள்ளி, திருவையாறு வழித்தடப் பேருந்து நிலையம், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், பாரத ஸ்டேட் வங்கி, மாவட்ட மைய நூலகம் உள்ளிட்ட அரசுக் கட்டடங்களும் இந்த அகழி மீதுதான் உள்ளன.
 
பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் இந்த அகழியை மீட்டெடுத்து புனரமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆனால், பழைய நிலையை மீட்டெடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

அழகிக் குளம்

தஞ்சாவூர் பர்மா பஜார் அருகேயுள்ள அழகிக்குளத்துக்கு கல்லணைக் கால்வாயில் இருந்தும், ராணி வாய்க்கால் மூலமும் தண்ணீர் வந்தது. நாளடைவில் நீர் வரும் பாதையில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளால் அழகிக் குளத்துக்குத் தண்ணீர் வருவது நின்று போனது. இதனால், இக்குளத்தில் கருவேல மரங்கள், முட்புதர்கள் சூழ்ந்து, குப்பை மேடாகக் காட்சியளித்தது. கடந்த ஆண்டு அப்பகுதி மக்களை நேரடியாகக் களத்தில் இறங்கி இக்குளத்தை மீட்டு, சீரமைத்துள்ளனர். ஆனால், நீர் வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் இக்குளத்துக்கு நீர் ஆதாரம் இல்லை. தற்போதைக்கு மழை நீர் மட்டுமே ஆதாரமாக இருக்கிறது. 

சாமந்தான் குளம்

சோழர்களின் ஆட்சிக் கால முடிவில் தஞ்சை நகரம் முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டன. இதன் பின்னர் வந்த பாண்டியர்கள் புதிதாக நகரை உருவாக்கத் தொடங்கியபோது, முதலில் உருவாக்கப்பட்ட குளமே சாமந்தான் குளம். கீழ அலங்கத்தின் அருகேயுள்ள இந்தக் குளத்துக்கும் நீர் வரத்து தடைப்பட்டதால், புதர்கள் மண்டின. இப்போது, பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் இக்குளத்தில் சீரமைப்புப் பணி நடைபெறுகிறது. இதேபோல, மேல வீதி அருகேயுள்ள அய்யன்குளத்திலும் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும், இந்த இரு குளங்களின் நீர் வரத்து முற்றிலும் சிதைந்துவிட்டது. எனவே, இக்குளங்கள் சீரமைக்கப்பட்டாலும், நீர் ஆதாரத்தைப் பொருத்தவரை கேள்விக்குறியாகவே தொடர்கிறது.

கருணாகரசாமி குளம்

தஞ்சாவூர் கரந்தையில் உள்ள கருணாகரசாமி கோயில் சோழர் காலத்தைச் சார்ந்தது. இக்குளத்துக்கு ஏறத்தாழ அரை கி.மீ. தொலைவில் உள்ள வடவாறிலிருந்து தண்ணீர் வருவதற்கு வாரி இருந்தது. இந்த வரத்து வாரி காலப்போக்கில் ஆங்காங்கே சேதமடைந்து, இப்போது முற்றிலும் மறைந்துவிட்டது. இதனால், இந்தக் குளத்துக்குத் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக, இக்குளம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டுக் கிடக்கிறது.

கரந்தையில் இதுபோல ஜைன குளம், கிருஷ்ணன் கோயில் பின்புறமுள்ள குளம், உப்புக்குட்டை எனப் பல குளங்கள் வரத்து வாரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் தண்ணீரின்றி உள்ளன. தாமரைக்குளம், காசி பண்டிதர் குளம், கோவலன் குளம் உள்ளிட்டவை முழுமையான ஆக்கிரமிப்பில் உள்ளன. இதேபோல, தெற்கு பகுதியில் மோத்திரப்ப சாவடி அருகேயுள்ள குளம் உள்ளிட்டவை பயனற்ற நிலையில் இருக்கின்றன.

இந்தக் குளங்களெல்லாம் ஒரு காலத்தில் நகரின் முக்கியமான நீர் ஆதாரங்களாக இருந்தன. குடிநீருக்கே இக்குளங்கள் பயன்படுத்தப்பட்ட காலமும் இருந்தது. இப்போது இக்குளங்கள் படிப்படியாக மறைந்து வருவதால், நிலத்தடி நீர்மட்டமும் பல அடி ஆழத்துக்குப் போய்விட்டது. தொடர் மழை பெய்தாலும், இக்குளங்களில் நீர்மட்டம் உயர்வதில்லை. இதனால், குடிநீர் பற்றாக்குறையும் மிகப் பெரும் பிரச்னையாக மாறிக் கொண்டிருக்கிறது. இக்குளங்களை எல்லாம் மீட்டால் மட்டுமே நகரின் குடிநீர்ப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com