அழிவை நோக்கிச் செல்லும் நொய்யல் ஆறு: மீட்டெடுக்க வேண்டியது அனைவரின் பொறுப்பு

கோவையின் முக்கிய ஆதாரமாகவும், கொங்கு மண்டலத்தின் அடையாளமாகவும் விளங்கி வரும் நொய்யல் ஆறு ஆக்கிரமிப்புகளாலும், கழிவுநீர் கலப்பாலும் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
அழிவை நோக்கிச் செல்லும் நொய்யல் ஆறு: மீட்டெடுக்க வேண்டியது அனைவரின் பொறுப்பு


கோவையின் முக்கிய ஆதாரமாகவும், கொங்கு மண்டலத்தின் அடையாளமாகவும் விளங்கி வரும் நொய்யல் ஆறு ஆக்கிரமிப்புகளாலும், கழிவுநீர் கலப்பாலும் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

இதனை மீட்டெடுக்க வேண்டியப் பெரும் பொறுப்பு மக்களுக்கும் உள்ளது. கோவை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையின் வெள்ளிங்கிரி மலைக்காடுகளில் உருவாகும் நொய்யல் ஆறு  திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பயணித்து கரூர் மாவட்டத்தில் நொய்யல் எனும் இடத்தில் காவிரியுடன் கலக்கிறது. மொத்தம் 170 கி.மீ. பயணிக்கும் நொய்யல் ஆறு கோவை மாவட்டத்தில் மட்டும் 78 கி.மீ., செல்கிறது. கோவையின் வளமைக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வந்துள்ளது.

தவிர ஆன்மிகம் வளர்க்கும் இடமாகவும் விளங்கியுள்ளது. நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள பேரூர் பட்டீஸ்வரர் உள்ளிட்ட புன்னியத் தலங்களே சாட்சி. மேலும் பெரியாறு, சின்னாறு, நீலியாறு, தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி, மசவொரம்பு ஆறு, முண்டந்துறை ஆறு, சங்கனூர் ஓடை, இருட்டுப் பள்ளம் போன்ற பல்வேறு துணையாறுகள் நொய்யலில் கலக்கின்றன. தவி வடக்கு, தெற்கு என இரு பக்கங்களில் இருந்தும் 50க்கும் மேற்பட்ட மழைநீர் ஓடைகள் நொய்யலுக்கு தண்ணீரை வழங்கி வருகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையில் எப்போதும் மழைப்பொழிவு இருப்பதால் ஆண்டுமுழுவதும் வற்றாமல் ஓடும் ஜீவநதியாகவும் விளங்கி வந்துள்ளது.

இந்நிலையில் நொய்யல் ஆற்றுநீரை முறையாக சேமித்து வைத்து பயன்படுத்தும் வகையில் நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் 40க்கும் மேற்பட்ட குளங்கள் வெட்டப்பட்டுள்ளன. இக்குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு ஏதுவாக 20க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகளை கட்டியுள்ளனர். தவிர ஒவ்வொரு குளங்களிலும் நிறைந்து வழியும் தண்ணீர் மீண்டும் நொய்யல் ஆற்றில் கலக்கும் வகையில் வடிகால் பகுதியையும் அமைத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் நெல், கரும்பு, பருத்தி உள்பட பல வகைப் பயிர்கள் சாகுபடியால் விவசாயம் செழிப்பாக காணப்பட்டது.  
கோவை மாவட்டத்தின் வளத்துக்கும், வளர்ச்சிக்கும் ஆதாரமாகவும், கொங்குமண்டலத்தின் அடையாளமாகவும் திகழ்ந்து வந்த நொய்யல் ஆறு இன்று அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் அலட்சியத்தாலும், அதிகாரிகளின் கவனக்குறைவாலும் நொய்யல் ஆறு சமவெளியை அடையும் இடத்திலே கழிவுநீர் கலக்கப்படுகிறது. வழிநெடுக உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் கழிவநீர் அனைத்தும் நொய்யலிலே கலக்கப்பட்டு வருகிறது. மேலும் பிளாஸ்டிக் உள்பட அனைத்து வகையான திடக்கழிவுகளையும் கொட்டும் குப்பைத்தொட்டியாக ஆற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆற்றங்கரையோரத்தில் குடிசைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆற்றின் வழித்தடமே மாற்றப்பட்டு வருகிறது. கரை, படுகையில் தனிநபர் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளனர். கிராமப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளாலும், கழிவுகளாலும் மூச்சு முட்டும் நொய்யலுக்கு, நகரின் தொடக்கத்திலே நஞ்சை கொட்டுகின்றனர். 

தெலுங்குப்பாளையம், செல்வபுரம், செட்டி வீதிகளிலுள்ள தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள், சலவைப் பட்டறைகள் அனைத்தும் கழிவுகளை நொய்யலில் நேரடியாக கலந்துவிடுகின்றன. இதன்பின் நொய்யல் தண்ணீர் எவ்வித பயன்பாட்டுக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

அதேபோல நொய்யல் தண்ணீரை குளங்களில் தேக்குவதற்காக ஆற்றில் கட்டப்பட்டுள்ள கல் தடுப்பணைகளும் போதிய பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்துள்ளது. இதனால் மழைக்காலங்கள் அணைக்கட்டுகளில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை காணப்படுகிறது. மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் அலட்சியப்போக்காலும், அதிகாரிகளின் அக்கரையின்மையாலும் பல நூற்றாண்டுகளாக வளமையுடன் காணப்பட்ட வரலாற்று நதியான நொய்யல் ஆறு கண்முன்னே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை குளங்கள் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ரா.மணிகண்டன் கூறியதாவது: 

ஆறு உள்பட அனைத்து நீர்நிலைகளும் மனிதனுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. ஆனால் தன்னுடைய சுயநலத்தால் நீர்நிலைகளை மக்கள் தனது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டடங்களை எழுப்பியுள்ளதால் நீரோட்டம் தடைபட்டு ஆற்றில் நீர்வரத்தின்றி வறண்டுபொகிறது. பல்வேறு இடங்களில் தனிநபர் ஆக்கிரமிப்புகளால் வழித்தடமே மாறியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் தங்களது திட, திரவக்கழிவுகளை கொட்டும் சாக்கடை வாய்க்காலாக மாற்றிவிட்டனர். இதனை அரசும் கண்டுகொள்ளாமல் உள்ளது வருத்தத்துக்குரியது.

நான்கு மாவட்டத்திலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களின் உயிர்நாடியாக இருந்து வந்த நொய்யல் ஆற்றினை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு மக்களுக்கும் உள்ளது. இதனால் உள்ளூர் நீராதாரங்களை பயன்படுத்தும் முறையை கொண்டு வர வேண்டும். 

கோவை மாநகராட்சி உள்பட பல்வேறு உள்ளாட்சிகளிலும் சிறுவாணி, பவானி, அத்திக்கடவு, ஆழியார் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்குப்பதில் உள்ளூர் ஆதாரமான நொய்யலை சீர்படுத்தி, கிராமங்களிலும் நீர்நிலைகளை மேம்படுத்தி இதிலிருந்து குடிநீரை பெரும் முறையினை கொண்டுவர வேண்டும்.

பாசன வாய்க்கால்கள், குளங்களை பாதுகாக்கும் பொறுப்பை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். கிராமங்களிலுள்ள நீர்நிலைகளை அழியாமல் பாதுகாத்தால்தான் தண்ணீர் கிடைக்கும் என்ற நிலையை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். 

குளக்கரைகள் உள்பட அனைத்து நீர்நிலைகளிலும் மரக்கன்றுகள் வைப்பதை கட்டாயப்படுத்தி பல்லுயிர் பெருக்க மண்டலத்தை உருவாக்க வேண்டும். சுற்றுச்சூழல் அமைப்பு சீராக இருந்தால்தான் மழைப்பொழிவும் சீராக இருக்கும். நொய்யல் ஆறு, துணையாறுகள், மழைநீர் ஓடைகளை சீரமைக்கும் நடவடிக்கையை தற்போதே எடுத்தால்தான் உண்டு. இல்லையெனில் கொங்கு மண்டலத்தின் ஜீவநதியான நொய்யல் ஆறு அழிவுக்கு  நாமே காரணமாகி விடுவோம், என்றார்.  

சுருக்கப்பட்டு வரும் குளங்களின் பரப்பளவு: 

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம், சிங்காநல்லூர் குளம், செல்வசிந்தாமணி குளம், கிருஷ்ணம்பதி, நரசம்பதி ஆகிய 8 குளங்கள் உள்ளன. நொய்யல் ஆற்றில் இருந்து இக்குளங்களுக்கு நீர்விட்டு நிறைக்கப்படுகிறது. இக்குளங்களில் தேக்கிவைக்கப்படும் தண்ணீர் அப்பகுதியில் நிலத்தடி நீராதாரத்திற்கு வழிவகுக்கிறது. இதில் ஏற்கனவே வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன்குளம், செல்வசிந்தாமணி குளங்கள் ஆக்கிரமிப்புகளால் சுருங்கிப்போயுள்ளது.

குறிப்பாக வாலாங்களத்தின் நீர்தேக்கப்பரப்புகளில் தார்சாலை, உயர்மட்ட மேம்பாலம், பேருந்து பணிமனை, பேருந்து நிலையம் என பல்வேறு ஆக்கிரமிப்புகளை அரசே ஏற்படுத்தியுள்ளது. வாலாங்குளம் உள்பட அனைத்துக் குளங்களிலும் மாநகராட்சியே கழிவுகளை கலந்து வருகிறது. இதனால் குளத்திலுள்ள தண்ணீரை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் அடுத்தக்கட்ட அபாயமாக மாநகராட்சியில் பொலிவுரு நகரத் திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் பகுதிகளில் நீர்தேக்கப் பரப்புகளை ஆக்கிரமித்து பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் குறிச்சிக்குளம், செல்வசிந்தாமணி குளங்களிலும் அதற்கானப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. நீர் நிலைகளைப் பதுகாக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகமே குளத்தை அழித்து பூங்காவை உருவாக்கி வருகிறது. தட்டிக்கேட்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித் துறையும் மௌனமாக உள்ளது. ஏற்கனவே பல்வேறு ஆக்கிரமிப்புகளால் சுருங்கியுள்ள நீர்நிலைகள் பொலிவுரு நகரத்திட்டத்தின் கீழ் மீண்டும் சுருக்கப்படுகிறது. 

இதேபோல் ஒவ்வொரு காரணங்களுக்கான நீர்நிலைகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினால் வரும் காலங்களில் நீர் நிலைகள் இருந்ததற்கான அடையாளம் கூட இல்லாமல் போய்விடும். மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான தண்ணீரை தேக்கிவைக்கும் நீர்நிலைகளை பாதுகாக்காமல், நகரை அழகுப்படுத்துகிறேன் என்கிறப் பெயரில் நீர் நிலையை அபகரிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com