குளமாகிப்போன குண்டாறு நீர்த்தேக்கம்

செங்கோட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கைச் சூழலுடன் அமைந்துள்ள குண்டாறு நீர்த்தேக்கத்தை தூர்வாரி, புணரமைக்க வேண்டும் என விவசாயிகளும், சுற்றுலாப் பயணிகளும் விரும்புகின்றனர்.
குளமாகிப்போன குண்டாறு நீர்த்தேக்கம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கைச் சூழலுடன் அமைந்துள்ள குண்டாறு நீர்த்தேக்கத்தை தூர்வாரி, புனரமைக்க வேண்டும் என விவசாயிகளும் சுற்றுலாப் பயணிகளும் விரும்புகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் மழைக் காலங்களில் அணையின் முழு கொள்ளளவும் நிறைந்து முதலில் நீர்வழிவது செங்கோட்டை குண்டாறு நீர்த்தேக்கமாகும். ஏனெனில் இந்த அணையின் மொத்த கொள்ளவே 25 மி. கனஅடி தான். எனவே சில தினங்கள் மழை பெய்தாலே இந்த நீர்த்தேக்கம் தன்னுடைய முழுக் கொள்ளளவை எட்டிவிடும். 

ஆனால், அதேபோன்று மிக விரைவில் தண்ணீர் வற்றி குளம் போல் மாறுவதும் இந்த நீர்த்தேக்கம் என்றால் அது மிகையில்லை. கடந்த 1978ம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 25 மி.கனஅடியாகும். இந்த அணைக்கு ஆண்டிற்கு நீர்வரத்து 50 மி. கனஅடியாகும்.
இந்த அணையின் மூலமாக நேரடியாக 731 ஏக்கர் நிலமும், மறைமுகமாக 391 ஏக்கர் நிலமும் என மொத்தம் 1122 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றது.

மேலும், இந்த அணையின் மூலம் தஞ்சாவூர்குளம், நிறைகுளம், கீழ கொட்டாகுளம் குளம், மேலகொட்டாகுளம் குளம் என மொத்தம் 12 குளங்கள் பயனடைகின்றது.

குண்டாறு நீர்த்தேக்கம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை சூழலுடன் மிகவும் ரம்மியமான பகுதியில் அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகளவில் இருக்கும். குற்றாலத்திலிருந்து 15 கிமீ தொலைவில் இந்த நீர்த்தேக்கம் அமைந்துள்ளதால் குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய குடும்பத்தினருடன் இந்த அணைப்பகுதிக்கு வந்து இங்குள்ள பூங்காக்களில் பொழுதை போக்குவதுடன், அணையில்  படகு சவாரியிலும் ஈடுபடுவது வழக்கம்.

பூங்கா மற்றும் படகு சவாரியில் பயணம் செய்வதற்கான கட்டணம் வசூலிக்கும் உரிமங்களை வசூலிக்க ஏலம் விடுவதன் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைத்து வந்தது.

ஆனால், தற்போது குண்டாறு நீர்த்தேக்கம், ஒரு குளம் போல் சுருங்கிப் போனதால் உள்ளூர் விவசாயிகளும், சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

25மி.கனஅடி தண்ணீர் கொள்ளளவுடன் அமைக்கப்பட்ட குண்டாறு நீர்த்தேக்கத்தில் தற்போது வெறும் 18.46 மி. கனஅடி தண்ணீர் மட்டுமே சேமிக்கமுடியும் என்ற நிலை நிலவுகிறது.இதற்கு காரணம் கடந்த 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் மழையின் காரணமாக அணைக்கு வந்த தண்ணீரில் மணலும், கற்களும், சகதியும் என சேர்ந்து ஒன்றரை லட்சம் கனஅடி அளவில் மணல் சேர்ந்து கொள்ளவு குறைந்துவிட்டது.

இதனால் அணையைத் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து குளத்தை தூர்வாருவதற்காக திட்டமிடப்பட்டு ரூ. 1 கோடியே 25 லட்சம் செலவாகும் என அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனிடையே இந்த அணையை புணரமைக்கும் பணிகள் மேற்கொள்ள ரூ. 2 கோடியே 50 லட்சம் ஆகும் என கணக்கிடப்பட்டு  உலகவங்கியிடமிருந்து நிதி பெறுவதற்கான முயற்சிகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டு அப்பணிகளும் கிடப்பில் உள்ளது. 

இந்த அணையை தூர்வாரி தண்ணீரை கூடுதலாக சேமிப்பதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் மிகவும் பயனடைவார்கள். அதேபோன்று சுற்றுலாப் பயணிகளும் தங்களுடைய குடும்பத்தினருடன் பொழுதை போக்குவதற்கும் பயன்படுத்தி கொள்வர். 

குளமாகிப்போன குண்டாறு நீர்த்தேக்கத்தை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com