தொலைந்துபோன நதி; தொடரும் மீட்புப் பயணம்

நொய்யலின் கிளைநதியான கௌசிகா நதி செழிப்புடன் இருந்த காலம் மாறித் தற்போது மழைக் காலங்களில் காட்டாற்று வெள்ளம் வடியும் இடமாகவும், கழிவு நீர் செல்லும் பாதையாகவும் ஆகிவிட்டது.
தொலைந்துபோன நதி; தொடரும் மீட்புப் பயணம்

நொய்யலின் கிளை நதியான கௌசிகா நதி செழிப்புடன் இருந்த காலம் மாறித் தற்போது மழைக் காலங்களில் காட்டாற்று வெள்ளம் வடியும் இடமாகவும், கழிவு நீர் செல்லும் பாதையாகவும் ஆகிவிட்டது.

காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்று நொய்யல். கோவை மாவட்டத்தின் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் பல சிற்றாறுகள் இணைந்து நதியாகி கோவை மாநகரம், திருப்பூர் மாநகரின் வழியே பயணித்து கரூர் மாவட்டம் நொய்யல் என்ற இடத்தில் காவிரியுடன் கலக்கிறது நொய்யல்.

இந்த நொய்யலின் முக்கியமான கிளை ஆறுதான் கௌசிகா நதி. கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியிருக்கும் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள குருடி (குருசீரடி) மலையில் உற்பத்தியாகி, கிழக்கு நோக்கிப் பயணித்து பெரியநாயக்கன்பாளையம், சர்க்கார்சாமக்குளம், அன்னூர், திருப்பூர் ஒன்றியங்களின் வழியாக சுமார் 48 கிலோ மீட்டர் தூரம் ஓடி நொய்யலில் கலக்கிறது கௌசிகா நதி.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த நதி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் நீர் ஓடும் நதியாக செழிப்புடனேயே இருந்துள்ளது. வழியோரங்களில் உள்ள குளம், குட்டைகளை நிறைத்து அதன் மூலம் அப்பகுதியை செழிப்புடன் வைத்திருந்த நதி தற்போது மழைக் காலங்களில் காட்டாறு வெள்ளம் வடியும் இடமாகவும், கழிவு நீர் செல்லும் பாதையாகவும் மாறியுள்ளது.

கோவையின் வடக்கு வட்டம், அன்னூர், சூலூர் வட்டங்கள் மற்ற பகுதிகளைக் காட்டிலும் வறட்சியானவை. மத்திய அரசால் வறட்சியான பகுதிகள் என அறிவிக்கப்பட்டவை. (Drought proven Area) கௌசிகா நதி இந்த வழியாகத்தான் பயணிக்கிறது. கௌசிகா நதியாக இருந்த காலத்தில் வளம் பெற்றிருந்தன கௌசிகா நதிப் பகுதிகள்.

இந்தப் பகுதிகளில் நெல், பருத்தி, வாழை என உணவுப் பயிர், பணப் பயிர் இரண்டும் விளையும் இடமாக இருந்தது. ஆனால், தற்போது புதர் மண்டிக் குப்பைகள் நிறைந்து காட்சியளிக்கும் இடமாக கௌசிகா மாறியதன் விளைவு விளைநிலங்கள் வறண்ட பூமி ஆகிவிட்டது. பல ஆண்டுகளாக நீர்வரத்து முற்றிலுமாகத் தடைபட்டிருப்பதால் வழியிலுள்ள குளங்கள், தடுப்பணைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் 60 அடியில் இருந்த தண்ணீர் தற்போது 1200 அடி அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இதனால் கோடைக்காலங்களில் கால்நடைகளின் குடிநீருக்கே தடுமாறுகின்றன இப்பகுதிகள்.

கௌசிகாவின் வழித்தடத்திலுள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகளில் 1,200 அடி ஆழத்துக்கும் அதிகமாக ஆயிரக்கணக்கான ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டுள்ளன. ஆனால், இவற்றில் தண்ணீரைப் பார்ப்பதே அரிதாக உள்ளது. இதனால் இப்பகுதியில் விவசாயம் கேள்விக்குறியாகி, விளைநிலங்கள் மனைகளாகி வருகின்றன.

இந்த நிலையில்தான் கௌசிகா நதிக்கு நீரை வழங்கும் ஓடைகளை சீரமைத்து மீண்டும் இந்த நதியில் வெள்ளத்தை வரவழைத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தை செழிப்படையச் செய்யலாம் என்ற முயற்சியில் இறங்கியுள்ளது அத்திக்கடவு - கௌசிகா நதி மேம்பாட்டுச் சங்கம்.

இது குறித்து சங்கத்தின் செயலர் பி.கே.செல்வராஜ் கூறியதாவது: 

கௌசிகா நதி தமிழகத்தின் தொன்மையான நதிகளில் ஒன்று. இதைப்பற்றி அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். தன்னாசி ஓடை, தாளமடல் ஓடைகள் கௌசிகாவுக்கு நீரை வழங்கும் முக்கிய ஓடைகள். இத்துடன் பல சிற்றோடைகளை இணைத்துக்கொள்ளும் கௌசிகா, இடிகரை, அத்திப்பாளையம், கோவில்பாளையம், வாகராயம்பாளையம், தெக்கலூர், வஞ்சிப்பாளையம் வழியாக சுல்தான்பேட்டை அருகே நொய்யலில் கலக்கிறது. இந்த நதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் வெள்ளம் ஓடியது.
ஆனால் நகரமயமாக்கலின் விளைவாக நதி அழிக்கப்பட்டுள்ளது. நதியின் நீரைப் பறித்த நகரமயம், நதியின் இடத்தையும் பறித்துக் கொண்டுள்ளது.

இந்த நிலையில்தான் அரசின் உதவியுடன் கௌசிகா நதிக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் திட்டத்தைத் தொடங்கி கடுமையான சவால்களுக்கு இடையே நடத்தி வருகிறோம் என்றார். 

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஓடும் பவானி ஆற்றில் இருந்து அத்திக்கடவு என்ற இடத்தில் உபரி நீரை எடுத்து அதை கௌசிகா நதியில் திருப்பி வறண்டுபோன நதிக்கு புத்துயிரூட்டுவதே அத்திக்கடவு - கௌசிகா நதி திட்டம். இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் கௌசிகாவிலும், அதன் மூலம் நொய்யலிலும் ஆண்டுதோறும் தண்ணீரைப் பார்க்க முடியும். இதன் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 500க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் நிரம்பும், மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயருவதால் பல ஆயிரக்கணக்காண ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதி பெறும்.

இந்தத் திட்டம் காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காலகட்டடங்களில் அது தடைபட்டு வந்தது. தற்போது அத்திக்கடவு - அவிநாசி திட்டமாக முன்பு திட்டமிடப்பட்ட இடத்துக்கு எதிர்ப்புறத்தில் இருந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தால் கௌசிகா நதியில் தண்ணீரைப் பார்க்க முடியும். நமக்கு தண்ணீர் கடைசியாக மட்டுமே வரும்.

இப்போதும் இந்த நதியில் நீரைப் பார்க்க ஒரு வாய்ப்பு உள்ளது. அது அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில் இருந்து துணை திட்டமாக 5 கிலோ மீட்டர் அளவுக்கு குறுக்குக் கால்வாய் வெட்டி 0.5 டி.எம்.சி. தண்ணீரை கௌசிகாவுக்கு திருப்புவதேயாகும். கௌசிகா நதியின் குறுக்கே வடுகபாளையம், அன்னூர் பச்சாபாளையம், தேவம்பாளையம், கரிச்சபாளையம், வாகை பாப்பம்பட்டி, கிட்டாம்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் பெரியதும் சிறியதுமாக 19 தடுப்பணைகள் உள்ளன. அத்துடன் மேலும் 10 இடங்களில் தடுப்பணைகள் அமைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. இவற்றை நிரப்பினால் நதியும், விவசாயமும் மீட்டெடுக்கப்படும்.

கௌசிகாவை மீட்பதற்கான கோரிக்கைகள் வலுப்பெற்ற நிலையில் கோவை வேளாண் பொறியியல் துறையினர், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன், நதியின் பாதை, அது பயன்பெறும் கிராமங்கள், அமைக்க வேண்டிய தடுப்பணைகள் தொடர்பாக 6 மாதங்களுக்கு மேலாக கள ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ரூ.55 கோடி மதிப்பில் திட்ட வரைவு தயாரித்து அரசுக்கு அனுப்பினர். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகும் நிலையில் அது தொடர்பான தகவல்களே இல்லை.

அத்திக்கடவு -அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில் கௌசிகா நதியைச் சேர்த்தால் கௌசிகா என்ற இறந்த நதியை இந்தத் தலைமுறை உயிருடன் பார்க்க முடியும்.

நீண்ட பெரும் போராட்டத்திற்கு பின்னர் மறைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயண சாமி அய்யா சமாதியின் அருகில் இருக்கும் தடுப்பணைகள் ஆரம்பித்து திருப்பூர் மாவட்டம் வரை உள்ள தடுப்பணைகள் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது கௌசிகா நதியின் கரைகளை பலப்படுத்துவதும் தடுப்பணைகளை புனரமைப்பது , விடுபட்ட தடுப்பணைகள் மற்றும் குளம் குட்டைகளை சேர்ப்பது, சின்னவேடம்பட்டி ஏரியை இணைப்பது ஆகியவைகள் முக்கிய குறிக்கோளாக உள்ளது. அரசு அத்திக்கடவு- அவிநாசி இரண்டாவது திட்டத்தில் மேற்படி பகுதிகளை சேர்க்க முடியும் என்று கூறியுள்ளது. கடைசிக்கு ஒரு பஞ்சாயத்துக்கு பத்து விவசாயிகள் ஆவது காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நகர்கிறோம் என்கிறார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com