மரமில்லையேல் மழையில்லை!

ஒரு காலத்தில் மழையாலும், வன வளங்களாலும் செழித்திருந்த இந்த பூமி, பின்னர் மனிதனின் சுரண்டலால் வறண்டு, இப்போது வறட்சியின் உச்சத்தில் இருக்கிறது.
மரமில்லையேல் மழையில்லை!


'நீரின்றி அமையாது உலகு' என்றான் வள்ளுவன். ஒரே வரியில் அவன் சொன்னதைப் போலவே இந்த உலகில் உயிர்கள் வாழ நீரின் பங்கு இன்றியமையாதது.

ஒரு காலத்தில் மழையாலும், வன வளங்களாலும் செழித்திருந்த இந்த பூமி, பின்னர் மனிதனின் சுரண்டலால் வறண்டு, இப்போது வறட்சியின் உச்சத்தில் இருக்கிறது. உலகம் வெப்பமயமாகிக் கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது பேராற்றல் கொண்ட மனித இனம்.  
50 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைப் பின்னோக்கி பார்த்தால், அணைகள் நிரம்பி வழிந்தன. ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன. விவசாயம் செழித்திருந்தது. ஆழ்துளை குழாய்களைப் பார்ப்பது அரிதாக இருந்தது.

தண்ணீர் பஞ்சம் என்பதே இல்லை. ஆனால், இப்போது நாம் தினந்தோறும் பேசிக்கொ ண்டிருப்பது தண்ணீர் பஞ்சத்தைப் பற்றித்தான். நம் முன்னோர்கள் அணைகளையும், ஏரிகளையும், குளங்களையும் உருவாக்கியது விவசாயம் செய்வதற்காக மட்டுமல்ல, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும்தான் என்பது பலருக்கும் தெரியாது. 

மழை நீரை அணைகளில் சேமித்து வைத்து ஆறுகள் மூலமாகவும், அதிலிருந்து பிரியும் கால்வாய்கள் மூலமாகவும் ஏரிகளுக்கும், குளங்களுக்கும் கொண்டு சென்றார்கள் நம் முன்னோர்கள். அந்த நீர் வயல்களில் பாய்ந்து பயிர்கள் செழிப்பாக வளர உதவியதோடு, நிலத்துக்குள் இறங்கி இந்த பூமி காயாமலும் பார்த்துக் கொண்டது. அதன் பலனாக நிலத்தடி நீர் மட்டமும் குறையாமல் இருந்தது.

வானம் பார்த்த பூமி: முன்னோர்கள் உருவாக்கிய நீர் ஆதாரங்களைப் பாதுகாக்காமல் ஆக்கிரமித்ததோடு, வனங்களையும் அழித்ததன் விளைவு இப்போது பல இடங்கள் வானம் பார்த்த பூமியாக மாறிவிட்டது. வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறான் மனிதன். தாகம் தீர்க்க இயலாமல் வன விலங்குகள் செத்து மடிகின்றன. கடுமையான வறட்சியால் வனங்கள்கூட பல நேரங்களில் தீக்கிரையாகி வருகின்றன.

இப்போது எங்கும் பார்த்தாலும் பூமித்தாயை துளையிட்டு ஆழ்துளைக் குழாய்கள் அமைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் 25 அடியில் போர் போட்டாலே தண்ணீர் வந்துவிடும். அதிகபட்சமாக 45 அடிகள்தான் போர் போடப்பட்டன. ஆனால், தற்போது ஆயிரக்கணக்கான அடிகள் துளையிட்டாலும் தண்ணீர் இல்லாத நிலை. 

இன்றைக்கு காற்றில் இருந்து நீரை எடுக்கலாம் என்கிறது விஞ்ஞானம். அப்படி எடுக்கிறபோது, காற்றில் இருக்கும் ஈரப்பதம் உறிஞ்சப்படும். வெப்பநிலை உயரும். இன்னும் பல விளைவுகள் ஏற்படும். மொத்தத்தில் மனிதன் வாழத் தகுதியற்றதாக மாறிவிடும் இந்த பூமி. இனி நாம் செய்த தவறுகளைப் பற்றி கவலைப்படுவதைவிட, இனி தூர்ந்த நீர்நிலைகளை மீட்பது எப்படி? வனங்களை உருவாக்கி அதன் மூலம் மழை பெற்று இந்த பூமியை பசுமை சோலையாக மாற்றுவது எப்படி என்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்.

மீட்பு நடவடிக்கை தேவை: ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கும் நீர் நிலைகளை மீட்டுத் தூர்வார வேண்டும். நீர் நிலைகளுக்கான ஆதாரமாகத் திகழும் மழை நீர் ஓடைகள் இன்று பலருடைய வீட்டுக்குள்ளும், தோட்டத்திற்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அதையெல்லாம் கண்டறிந்து தூர் வாரியாக வேண்டும்.

அடுத்ததாக சொட்டு நீர் பாசனம், மழைத்தூவான் பாசனம் போன்ற நுண்ணீர் பாசனங்களை எல்லாம் படிப்படியாகக் கைவிட வேண்டும். சொட்டு நீர் பாசனம் போன்றவற்றின் மூலம் மரங்களுக்குத்தான் நீர் கிடைக்குமே ஒழிய பூமிக்கு ஒரு போதும் நீர் கிடைக்காது. சொட்டு நீர் பாசனம் நுண்ணீர் பாசனங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும்போது நிலத்தடி நீர் என்பது இல்லாமலேயே போய்விடும்.

தற்காலத்தில் நமக்குத் தேவை நல்ல மழை. மழையை இழுக்க மரங்கள் தேவை. அதிலும் சவுக்கு, தென்னை போன்ற அடர் வனங்களைவிட, இடைவெளிவிட்டு மழையை இழுக்கும் தன்மை கொண்ட மரங்களை வளர்ப்பது முக்கியமானதாகும். குளங்களை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க,  குளங்களில் தேங்கும் தண்ணீரைத் தாங்கி வளரக்கூடிய தூங்கு மூஞ்சி, நாவல், அத்தி, பூவரசு, மருது போன்ற மரங்களை நடலாம்.

4 லட்சம் மரங்கள்:  மரங்கள் இருந்தால்தான் மழை பொழியும். அதைக் கருத்தில் கொண்டுதான் நாங்கள் மரங்களை வளர்க்க ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் விதைகள் மூலமாக மரக்கன்றுகளை உருவாக்கி மரங்களை வளர்த்தோம். ஆனால், அதற்கு அதிக காலம் ஆனதால், மரக்கிளைகளிலிருந்து மரங்களை உருவாக்கினோம். ஆரம்பத்தில் எனது திட்டத்தை எல்லோரும் எதிர்த்தார்கள். ஏன் கேலி கூடச் செய்தார்கள். ஆனால் நான் வைத்த எல்லா வகையான மரக்கிளைகளும் துளிர்விட்டபோது, எங்கள் பகுதி மக்களுக்கு என் மீது நம்பிக்கை ஏற்பட்டது.

மக்கள் தந்த ஆதரவால், தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி நீங்கலாக, அனைத்து மாவட்டங்களிலும் மரக்கன்றுகளை நடவு செய்திருக்கிறேன். இப்போது என்னோடு ஏராளமானோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்று மரக்கிளையிலிருந்து மரங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறேன். தமிழகம் முழுவதும் இதுவரை 4 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்திருக்கிறோம்.

என்னென்ன மரங்கள்: வேம்பு, புளி, மகா கனி, ஆலமரம், அரசமரம், அத்திமரம், நாவல்மரம், பூவரசு, புங்கன், மருதமரம், இலுப்பை, கருங்காலி, செம்மரம் என ஏராளமான மரக்கன்றுகளை உருவாக்கி மரங்களாக்கியிருக்கிறேன்.

கடந்த ஆண்டு மழைக் காலத்துக்கு முன்னதாக ஒரு லட்சம் மரக்கன்றுகளை உருவாக்கி நடவு செய்திருக்கிறோம். வழக்கமாக 10 முதல் 12 அடி உயர மரங்களை வளர்த்து ஆடி மாதங்களில் சாலைகள், முக்கிய இடங்களில் நடவு செய்வோம். அடுத்த 3 மாதங்களுக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் அளிப்போம். அதன்பிறகு மழைக் காலத்தில் செழித்து வளர்ந்து மரமாகிவிடும்.
நாங்கள் மரக்கன்றுகளை நடுகிறபோது, அதனைச் சுற்றிலும் சேலை உள்ளிட்ட துணிகளை சுத்தி விடுவோம். இதனால் மரக்கன்றுகளின் தண்டுகள் வெயில் காலத்தில் எளிதாகக் காய்வதில்லை. மேலும் ஆடு, மாடுகள் திண்பதில்லை. அதேநேரத்தில் மனிதர்களும் அந்த மரங்களில் சாமி இருப்பதாக நம்பி அதை வெட்டுவதில்லை.

இதனால் நாங்கள் வைக்கும் மரங்கள் ஒன்று கூட சோடை போகாமல் சோலைகளாக மாறுகின்றன. சிறிய மரக்கன்றுகளை நடுவதைவிட, அவற்றை வளர்த்து பெரிய மரக்கன்றுகளாக நட வேண்டும்.

சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் இருந்து தாழையூத்து வரையிலான புறவழிச்சாலையை அகலப்படுத்தியபோது, அங்கிருந்து மரக்கன்றுகளை அகற்றி நடுமாறு நெடுஞ்சாலைத்துறையினர் எங்களை அணுகினர். அந்த மரங்களை அடியோடு எடுத்து இப்போது தாழையூத்து- சீவலப்பேரி சாலையில் தாழையூத்து ராஜவல்லிபுரம் இடையே குளக்கரையில் வைத்திருக்கிறோம். அந்த மரங்கள் துளிர்விட்டு வளரத் தொடங்கிவிட்டன.

ஆறு கிராமங்கள் தத்தெடுப்பு: உலக காடுகள் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், அரியலூர் மாவட்டங்களில்  6 கிராமங்களை மரம் நடுவதற்காக தத்தெடுத்திருக்கிறோம். முதற்கட்டமாக திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரத்தை அடுத்த பாலாமடையில் 100 மரங்களை வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகள் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி ஆலமரம் உள்ளிட்ட 7 மரங்களை (10 அடி உயரம் கொண்டது) நடவு செய்திருக்கிறோம்.  

1 சதுர கி.மீ.க்கு 10 ஆயிரம் மரங்கள் இருந்தால்தான், அங்கு 100 சதவீத மரம் இருப்பதாகக் கணக்கில் கொள்ள முடியும். குறைந்தபட்சம் 33 சதவீத மரங்கள் இருந்தால் மாதம் மும்மாரி மழை பொழியும். அதுதான் எங்கள் கனவும், இலக்கும்கூட.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com