நல்லாறாகவே இருக்கட்டுமே நல்லாறு

திருப்பூரில் சுருங்கிப்போன ஆறுகளில் ஒன்று நல்லாறு. பல இடங்களில் ஆக்கிரமிப்புகள். பல இடங்களில் வீட்டுக்கழிவுகளின் சேர்க்கை  நால்லாற்றை கெட்ட ஆறாக்கி விட்டது.
நல்லாறாகவே இருக்கட்டுமே நல்லாறு

திருப்பூரில் சுருங்கிப்போன ஆறுகளில் ஒன்று நல்லாறு. பல இடங்களில் ஆக்கிரமிப்புகள். பல இடங்களில் வீட்டுக் கழிவுகளின் சேர்க்கை  நால்லாற்றைக் கெட்ட ஆறாக்கி விட்டது. ஆனாலும் சிறுத்துப் போன அது நம்பிக்கையுடன்  ஓடிக்கொண்டிருக்கிறது. 

திருமுருகன்பூண்டி என்பது திருப்பூரில் வடபகுதியில் உள்ள பக்தர்களின் பிரியமான இடம். காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்ல இருந்த சிவபெருமானை அம்மன் காப்பாற்றியதாகப் பூண்டி தல வரலாறு சொல்கிறது. சூழல் மாசுபாட்டால் அடித்துத் துவைக்கப்பட்ட நல்லாறைத்  திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவனத்தில் கொண்டால் காப்பாற்றலாம். 150 முதல் 250 அடி அகலம் வரை இருந்த நல்லாறு  ஆக்கிரமிப்பாலும், கழிவுகள் ஓடுவதாலும் சாக்கடைக் கால்வாய் ஆக மாறிவிட்டது.

திருப்பூர் மாவட்டம் அன்னூர் பகுதியில் மழை நீர் சிறு ஓடைகளாக  மாறி நல்லாறு என்ற பெயருடன் திருப்பூரில் பயணித்து நொய்யலில் சங்கமிக்கிறது. 17 கிலோ மீட்டர் நீளமுள்ள நல்லாற்றின் கரையில்தான்  அவிநாசி  சிவன் ஆலயமும் அமைந்துள்ளது.

அன்னூர் பகுதியிலிருந்து அவிநாசி எல்லைக்குள் நல்லாறு நுழையும் இடத்திலேயே அது குறுகிவிடுகிறது.  நீர்நிலை ஆக்கிரமிப்புகளின் ஒரு அடையாளம் இந்த நல்லாறு .

திருப்பூர் எல்லைக்குள் வந்த பின் நூற்றுக்கணக்கான சாய, சலவை ஆலைகளின் கழிவுநீர் மற்றும் குடியிருப்புக் கழிவுகள் ஆற்றில் நிரம்பி விடுகிறது, கழிவுநீரும் சாக்கடையாகப் பிறகு மாறிவிடுகிறது .

நொய்யல் ஆற்றங்கரையிலிருந்து சாய ஆலைகளின் கழிவுகள் பல குழாய்கள் மூலம் நல்லாற்றில் கலப்பது சாதாரணமாகி விடுகிறது. 400 ஏக்கர் பரப்பளவு உள்ள பறவைகள் சரணாலயமான நஞ்சராயன் குளத்தில் நீர் எப்போதும் காணப்படுவதற்குக் காரணம் இந்தக் கழிவுநீர் அங்கு வந்து சேர்வது என்பது பலருக்குத் தெரியாத ரகசியமாக இருக்கிறது.

ஒரு காலத்தில் நல்லாற்றின் நீர், திருப்பூர், அவிநாசி, அன்னூர் பகுதிகளின் விவசாய வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக இருந்தது. ஆனால் இன்று கழிவுகளின் ஓட்டத்திற்கு அது இரையாகிவிட்டது .

அவிநாசி சிவன் கோவிலில் அவிநாசி லிங்கேஸ்வரன் கருவறை வெள்ளப்பெருக்குக் காலங்களில் மூழ்கடிக்கப்படுவது பல நேரங்களில் பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. இதுபோல் அதிர்ச்சி அடையச் செய்வது அவ்வப்போது நிகழ்கிறது.

தென்மேற்குப் பருவ காலங்களில் மழை தீவிரமடைந்து நல்லாற்றில்  வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது இப்படி லிங்கேஸ்வரன் வெள்ளத்தில் மூழ்கி விடுகிறார்.

ஆற்று  ஆக்கிரமிப்பு, கட்டடக் கழிவுகள், சாயக்கழிவுகள், குப்பைகள், தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கும் குளங்கள் மற்றும் சிறு பாலங்களில் அடைப்பு ஆகியவற்றால் வெள்ள நீர் அவிநாசிலிங்கேஸ்வரரை மூழ்கடித்து விடுகிறது.

திருப்பூரைக் கடந்து எஸ். பெரியபாளையம் பகுதி நஞ்சராயன் குளத்திற்குச் செல்லும்போது கழிவுகளின் சங்கமம் ஆகிவிடுகிறது. பெரியபாளையத்தில்  இடத்தில் இருக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுக்ரீஸ்வரர்  கோவிலைச் சுற்றி நல்லாற்றின் தண்ணீர் ஓடும் கட்டமைப்பு முன்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதிகளில் கழிவு நீர் ஓடுவது  சுக்ரீஸ்வரருக்கும் அந்தக் கோவில் பக்தர்களுக்கும் பெரும் சங்கடம். 

பல பகுதிகளில் தனியார் சாய ஆலைகள் பின்னலாடை நிறுவன ஆக்கிரமிப்பு போன்றவற்றின் காரணமாக கரை என்பது காணாமல்போய் ஆழமான பள்ளங்கள் காணப்படுகின்றன. பல இடங்களில் ஆற்றுக்குள் தொழிற்சாலைகள், வீடுகள் அமைந்துள்ளன.

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில், சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலம்.  முதலை உண்ட பாலகனை மீட்ட தலம்.  ஆனால், ஆக்கிரமிப்பு முதலையின் வாயில் அகப்பட்டிருக்கும் நல்லாறு தூய்மைப்படுத்தும் பணியும் திருப்பூரில் முக்கியமானதாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் திருப்பூர் பகுதி நொய்யல் ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பது நல்ல ஆரோக்கியமான செய்தி. இதுபோல் திருப்பூர் வடக்குப் பகுதியில் நல்லாறும்  வாழும்படி சுத்தமாக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று - குறள் 222 

நமக்குத் தேவையான செல்வம் நம்மிடம் இருக்கும்பொழுது, நமக்கு நற்பயன் விளைவிக்கும் என்றாலும் ஏற்பது இகழ்ச்சியே. அதேபோல நாம் பிறருக்கு உதவி செய்தாலே மேலுலகம் கிடைக்காது என்றாலும் பிறருக்கு உதவி செய்வது (ஈதலே) வாழ்வின் நோக்கமாக, அறமாக, இன்பமாக இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

நல்லாறு பல காலம் நமக்குத் தேவையானதை வழங்கியிருக்கிறது. அதற்குத் தேவையானதை நாம் வழங்கி புனருத்தாரணம் செய்யலாமே திருப்பூர் பொது மக்களே, திருப்பூர் ஏற்றுமதியாளர்களே...

நல்லாறாகவே இருக்கட்டுமே நல்லாறு...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com