குமரி மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகள்

மழைப்பொழிவு அதிகமுள்ள குமரி மாவட்டத்திலேயே கோடைக்காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படுகிறது என்றால் நமது நீர் மேலாண்மை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
குமரி மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகள்

மனிதன் தோன்றிய காலத்துக்கும் முன்பே இவ்வுலகம் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களைக் கொண்டு விளங்கியது. இவை ஐந்தும் மனித வாழ்வுக்கு இன்றியமையாதவை, இவற்றுள் நீரை மக்கள் உயிரின் ஆதாரமாகக் கொண்டனர்.

பல்வேறுபட்ட நீர்ப் பிடிப்புகள் நிலத்தில் காணப்பட்டாலும் குளங்கள் அனைத்து ஊர்களிலும் பொதுவாக அமைந்தது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வு, நீர் நிலைகளைச் சுற்றியே  அமைந்துள்ளது என்பது வரலாறு.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியர் தம் ஒல்காப்புகழ்  தொல்காப்பியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 வகை  நிலங்களை சுட்டிக்காட்டியுள்ளார். இதில் குமரி மாவட்டத்தில் பாலை தவிர மற்ற நால்வகை நிலங்களும் உள்ளன. குமரி மாவட்டம், பரப்பளவில் சிறிய மாவட்டம் என்றாலும், மக்கள்தொகை அடர்த்தியான மாவட்டம். இதனால் மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கோ, வணிக நோக்கத்துக்கோ கட்டடம் கட்டுவதற்கு நீர்நிலைகளைத் தூர்த்தால்தான் நோக்கம் நிறைவேறுகிறது.

19  ஆம் நூற்றாண்டு வரை பாசனத்துக்காக மழையையும், குளங்களையும் நம்பிக்கொண்டிருந்த தென் திருவிதாங்கூர் பகுதிகளின் நிலை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் கட்டப்பட்ட பின்னர் மாறியது. 1981 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி குமரி மாவட்ட விவசாய நிலங்களில் 56.6 சதவீதம் குளங்களை நம்பியே இருந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 1981 ஆம் ஆண்டு அரசு அறிக்கையின்படி 959 பாசனக் குளங்கள் இருந்தன. இவற்றில் சில தற்போது விளையாட்டு அரங்கங்களாக, பேருந்து நிலையங்களாக, வீடு, குடியிருப்புகளாக மாறிவிட்டன.

திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் உள்நாட்டுப் பகைவர்களையும், வெளிநாட்டு எதிரிகளையும் கொன்று குவித்த பின்னர் தங்களின் பாவம் தீர யாகங்கள் செய்தனர். குளங்களும் தோண்டினர். இடநாட்டு பகுதியில் (கன்னியாகுமரி மாவட்டம்) குளம் கோருதல் என்றும் வழக்காறு உண்டு. இதற்கு ஓர் அழிவைச்  செய்துவிட்டு நன்மையைச்  செய்தல் என்பது இதன் பொருளாகும்.

பாவத்தைத் தீர்க்க குளத்தைத் தோண்டிய காலம் போய், குளங்களை மூடுவது என்பது இப்போது புண்ணியமாகிவிட்டது. இதற்கு ஆயிரம் காரணங்களை முன்வைக்கிறார்கள். ஒருகாலத்தில் அரசர்கள் வெட்டிய குளங்களை ஜனநாயக அரசு மூடுவதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது.

நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானம் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் சிறைக் கைதிகள் குளிப்பதற்கான குளமாக கள்ளர்குளம் என்ற பெயரில் இருந்த குளமாகும். இதேபோல் வடசேரியில் உள்ள கிறிஸ்டோபர் பேருந்து நிலையமும், மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையமும், குளமாக இருந்த இடங்கள்தான்.

'நீராதாரத்தை மீட்போம்' என்ற பெயரில் நாகர்கோவில் நகரில் கூட்டம் நடத்தப்படும் நாகராஜா கோயில் திடலும்கூட குளமாக இருந்ததுதான். நாகர்கோவில் நகரின் பிரதானமாக உள்ள செட்டிகுளம் சந்திப்பு என்பதில் இருந்து செட்டிகுளம் இன்று காணாமல் போய் சாக்கடையாக மாறிவிட்டது. அங்கு தற்போது பெரிய வணிக வளாகங்கள், குடியிருப்புகள் என நகரமாக  காட்சியளிக்கிறது. அண்மைக்காலத்தில் புத்தேரி பெரியகுளம் நான்கு வழிச் சாலைக்காக  இரண்டாகப் பிரிக்கப்பட்டு குளத்தின் நடுவில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாஞ்சில் நாட்டு நீர்வளம் பல்வேறு வகைகளில் குன்றி வருகிறது. ஆனால் நீர் நிலையைக் காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் வழக்காடி வென்ற மாவட்டமும் குமரி மாவட்டம்தான். 

கன்னியாகுமரி அருகேயுள்ள மகாதானபுரத்தில் இருக்கிறது நரிக்குளம். இந்தக்  குளத்தை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தங்க நாற்கர சாலைத் திட்டத்துக்காக மூட முயற்சி எடுத்தனர். உடனே மகாதானபுரம் மக்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதில் சாதகமான தீர்ப்பு கிடைத்தது,

மேலும் இதுதொடர்பாக அரசு, உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்ய 
மக்கள் அங்கும் சென்று அங்கும் குளத்தை மூடுவதற்கு உச்சநீதிமன்றம் தடை பிறப்பித்தது. இதனால் ஒன்றரை கி.மீ. நீளமுள்ள நரிக்குளத்தை மூடாமல்  அங்கு பாலம் அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.30 கோடி ஒதுக்கியுள்ளது. இது மக்களிடம் நீர் நிலையைக் காப்பாற்ற வேண்டும் என்று ஏற்பட்ட  விழிப்புணர்வுக்குக் கிடைத்த வெற்றி என்று கூறலாம்.

நாகர்கோவில் நகர மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணை விளங்குகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் வற்றி, நகர மக்களுக்கு பேச்சிப்பாறை,  பெருஞ்சாணி அணைகளில் இருந்து குடிநீர் கொண்டுவருவதும், இதற்கு  விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதும் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாக உள்ளது.

மழைப்பொழிவு அதிகமுள்ள குமரி மாவட்டத்திலேயே கோடைக்காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படுகிறது என்றால் நமது நீர் மேலாண்மை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

குமரி மாவட்டத்தையும், கேரள மாநிலத்தையும் நீர் வழியில் இணைக்கும் பாலமாக இருந்த ஏ.வி.எம். கால்வாய் இன்று குமரியில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. ஆனால், அதே நேரத்தில் கேரள மாநிலத்தில் இந்த நீர்நிலையை முறையாகப் பராமரித்து அதில் படகு சவாரி இயக்கி சுற்றுலாப் பயணிகளுக்கான ஒரு பொழுதுபோக்கு இடமாகவும் மாற்றியுள்ளனர். இதேபோல் கேரளத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

மொத்தத்தில் பொதுமக்களிடம் நீர் நிலைகளைப் பராமரிப்பது, பாதுகாப்பது,  அதனைத் தான் அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல் தனது சந்ததிக்கும்  விட்டுச் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டால்தான் நீர் நிலைகளைக் காப்பாற்ற முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com