இன்று காசநோய் நாள்: காசநோயும் ஓர் இயற்கைப் பேரிடர்தான்

வறுமை உள்ளவரை வெல்ல முடியாத என்றும் தொடரும் பேரிடர் காசநோய். அதை ஒழிக்க அர்ப்பணிப்பு மிக்க சமூகக் கடமையாக ஏற்கும் சமூகம் என்றும் தேவை.
இன்று காசநோய் நாள்: காசநோயும் ஓர் இயற்கைப் பேரிடர்தான்

மார்ச் 24 காசநோய் நாள். எனக்கும் காசநோய்க்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. என் அம்மா ஒரு காசநோயாளி. 1955ம் ஆண்டு காசநோய் பாதிப்புக்காக பெருந்துறை ராமலிங்கம் காசநோய் சானிடோரியத்தில் ஓராண்டு காலம் தங்கியிருந்து மருத்துவம் பெற்றவர். அப்பொழுது ஸ்டெப்ரோமைசின் போன்ற சில மருந்துகள் தவிர வேறு மருந்துகள் எதுவுமில்லை. பெருந்துறை சானிடோரியம் பெரிய வேலமரக்காடு, வறண்ட காற்றும், சர்வ சாதாரணமாகச் சுற்றி வரும் மயில் கூட்டம், அர்ப்பணிப்பு மிக்க மருத்துவக்குழு இதுதான் பெருந்துறை சானிடோரியம். வறண்ட காற்று ஒரு பெரும் மருந்து என்பார்கள். நல்ல சத்தா சாப்பாடு, ஓய்வு, சில மருந்துகள், நிறையக் காற்று இவைதான் அங்கு மருத்துவமாக இயற்கையாக அமைந்தது. 

அம்மாவுக்கு நுரையீரலில் காசநோய். அதற்கு நோயுற்ற நுரையீரலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடுவதான் (labectony) அன்றைய மருத்துவம். அப்படி ஒற்றை நுரையீரலுடன் 92 வயது வரை வாழ்ந்தார் அம்மா. நோய் குணமானதற்கு பிறகு சானிடோரியத்தில் நர்ஸாக பணியாற்றினார். அப்பா அரசியல்வாதி அம்மா உழைத்துதான் குடும்பத்தைக் காக்க வேண்டும். என்னை டாக்டருக்குப் படிக்க வைத்தது, தம்பியை பல் மருத்துவருக்கு படிக்க வைத்தது அம்மாவுக்கு பெரும் பங்குண்டு. அம்மாவின் காசநோய் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகுதான் தங்கை ஜெயபாரதி பிறந்தார். இத்தனையையும் ஒரு காசநோயாளி  செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பது இன்றைக்கான செய்தி. 

காசநோய் எனும்போது ஜவஹர்லால் நேருவின் மனைவி கமலா நேருந்து மறந்து விட முடியாது. 1930களில் காசநோய்க்கான மருந்து எதுவுமில்லை. ஆரோக்கியமான சூழலும், காற்றும்தான் மருந்து. அதைப்பெற சுவிட்சர்லாந்துக்கு கூட்டிச் சென்று ஓராண்டு உடனிருந்து தனது மனைவியைக் கவனித்த பாசமுள்ள கணவர்தான் நேரு.

பின் கணிதமேதை ராமானுஜம் காசநோயுற்று மருத்துவம் ஏதும் முறையாக கிடைக்கப் பெற முடியாத சூழலில் இளம் வயதிலேயே இறந்து போனார். கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் கூட ஒரு காசநோயாளியே என்பதை பின்னர் அறிந்தேன். செத்துப்போய் விடுவார் என்று ஒதுக்கப்பட்ட அந்தக் காசோயாளி தனது 96 வயதிலும் உறுதியுடனும், மிகுந்த நகைச்சுவையுணர்வுடன் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருவதை இந்தக் காசநோய் நாளில் உலகுக்கு அறிவிக்க வேண்டிய முக்கிய செய்தி.  அரசு அவருடைய காசநோய் அனுபவத்தைப் பதிவு செய்து வெளியிடுவதை விடப் பெரிய பயனுள்ள நம்பிக்கையூட்டும் செய்தி வேறெதுவும் இருக்க முடியாது. பண்டத்தின் சுவை உண்பதில் உள்ளது என்பார்கள். கி.ராவின் பயனுள்ள உற்சாகமான 96 ஆண்டு கால காச்நோய் உறவைச் சொல்வதை விட மக்களுக்கு வேறெப்படி நம்பிக்கையையூட்டி விட முடியும்.

சானிடோரியங்கள் மூடப்பட்டு வீட்டிலிருந்தே மருத்துவம் பெறலாமென்ற செய்தியின் விளைவு இது. ஆனால், காசநோய் முன் எப்போதையும் விட வீரியத்துடன் வெல்ல முடியாத நான்காவது பெரும் நோயாக லட்சக்கணக்கான சாதாரணை ஏழை மக்களைக் கொன்று கொண்டுதான் உள்ளது. ஆண்டொன்றுக்கு இந்தியாவில் சராசரியாக 2 லட்சம் பேர் காசநோய் பாதிப்பால் உயிரிழக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. 

காசநோய் கிருமியான ட்யூபங்குளோ பேசில்ஸ்(டி.பி) காற்றில் எங்கும் உள்ளதுதான். பலவீனமான மனிதரை அது எளிதில் தாக்குகிறது. இப்போது எச்.ஐ.வி எய்ட்ஸ் ஆபத்து அதிகம் பரவியுள்ள நிலையில் நோய்த் தடுப்பு சக்தியற்ற அவர்களை காசநோயும் தொற்றிக் கொண்டு வெல்ல முடியாததாக்கி மரணத்தை விரைவுப்படுத்திக் கொண்டுள்ளது. அரைகுறை மருத்துவத்தால் மருந்துகளுக்குக் கட்டுப்படாத வீரியம் கொண்ட காசநோய் வேகமாகப் பரவி விடுகிறது. 

வளர்ச்சியும் வசதியும் அதிகமாகி வாழ்க்கைத்தரம் உலகமய உலகில் உயர்ந்துள்ளது என்பது போலித் தொற்றுப் பிழையே என்பதைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. வறுமையும், ஏழ்மையும் அதிகரித்து சத்தான உணவின்றி வாடுவோர் எண்ணிக்கை இன்றும் பெரிதாகவே உள்ளது. காசநோய் மருதுகளுக்குக் கட்டுப்படாத நோயாக மாறி வருவதை சமீபத்தில் வெளியான மெக்ராவின் காசநோய் தடுப்பு நூல் ஆதாரத்துடன் கூறுகின்றது. இன்று உலக சுகாதார நிறுவனத்தில் உயர் தலைவராக உள்ள டாக்டர் செளமிய சுவாமிநாதன் தனது முன்னுரையில் காசநோய் வெல்ல முடியாத சவாலாக நீடிக்கிறது என எச்சரிக்கிறார்.

மருந்துகளுக்குக் கட்டுப்படாத காசநோய் மிகவும்  செலவு பிடிக்கும் நோயாக ஏழைகள் எட்ட முடியாததாக அச்சுறுத்துகிறது. காசநோய் தடுப்புப் பணியை இந்திய அரசும், உலக சுகாதார நிறுவனமும், முதன்மைக் கடமையாக  ஏற்றுப் பிரசாரம் செய்து வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் காசநோய்ப் பிரிவு நோய் கண்டுபிடிப்பு, பரிசோதனைகள், எக்ஸ்ரே, மருத்துகள் என அனைத்தையும் முற்றிலும் இலவசமாகவே வழங்கி வருகின்றன.

ஒரு மாதத்திற்குத் தேவையான மருந்துகளை ஒட்டுமொத்தமாக தருவதுடன், சரியான தேதியில் மருந்துகளை பெற்றுச் செல்ல மருத்துவமனைகளுக்கு வராத நோயாளிகளை தொலைபேசியிலோ, அஞ்சலட்டைகள் மூலமாகவோ நினைவுபடுத்தி  வரவழைத்து மருந்துகளைத் தரும் பெரும் தொண்டு தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. எனினும் அறியாமையும், வறுமையும் மக்கள் தொகையும் கொண்ட நாட்டில் அர்ப்பணிப்பு மிக்க அரசும், அரசுப் பணியாளர்களும் தனியார் மருத்துவர்களும் முழுமையாக இந்த நோயை ஒழிப்புப் பணியில் ஈடுபடாவிடில்  பெரிய பலனை எதிர்பார்க்க முடியாது. ஏழைகளைக் கொல்லும் வருமானம் தராத காசநோய் பர்றிய பெரும்பணியை இனியாவது மருத்துவர்கள் கவனம் செலுத்துவதில்லை என்பதை  காசநோய்க்காக சமீபத்தில் வெளியான நூல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஒரு வாரத்திற்கு மேல் தொடரும் ஓயாத இருமல், சளியில் ரத்தம், மாலைக் காய்ச்சல், உடல் இளைப்பு என்பன கொண்டு எளிதாகக் காசநோயைக் கண்டுபிடித்து விடலாம். எனினும் மின்சாரமும், கழிப்பறையும், சத்துணவும், குடிநீரும் எட்டாத நாட்டில் சுவரொட்டிகள் என்ன பலனைத் தந்து விட முடியும்?

மாபெரும் உயிர்க்கொல்லியாக உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா பாதிப்பில் சீன அரசு மேற்கொண்ட துரிதமான கட்டுப்பாடான நடவடிக்கைகள் நமக்கு ஒரு சிறந்த வழிகாட்டி. இயற்கைப் பேரழிவுகள் இனித் தொடர்கதையாக பருவநிலை மாற்றத்தால் மீண்டும் மீண்டும் புதிய புதிய வடிவில் தொடருமென உலக நாடுகள் சபை எச்சரிக்கிறது.

நகரின் நெரிசலில் உள்ள அரசு மருத்துவமனைகள் இதற்கு நல்ல தீர்வைத் தர முடியாது. நோய்க்குத் தீர்வைத் தரத்தக்க வகையில் திட்டமிட்டு 1930களில் நகருக்கு வெளியே தூய்மையான காற்று கிடைக்கும் பரந்த வெளிகளில் சானிடோரியங்கள் தாம்பரம், பெருந்துறை, செங்கப்பள்ளி, மதனப்பள்ளி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டன. அவற்றைப் புதுப்பித்து இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வசதியுடன் புத்தாக்கம் செய்ய அரசு சிந்திப்பது தேவையானது. கரோனா போன்ற இயற்கைப் பேரிடர்கள் புயல்போல் வந்து அழித்துக் கடந்து போகலாம் அவை புதிய புதிய பெயர்களில் மீண்டும் மீண்டும் வரும். 

ஆனால் வறுமை உள்ளவரை வெல்ல முடியாத என்றும் தொடரும் பேரிடர் காசநோய். அதை ஒழிக்க அர்ப்பணிப்பு மிக்க சமூகக் கடமையாக ஏற்கும் சமூகம் என்றும் தேவை. மார்ச் 24 உடன் பேசி எழுதி முடிக்கும் சவாலல்ல காசநோய். அறியாமையை ஒழித்தாக வேண்டும் வறுமையை ஒழித்தாக வேண்டும், ஒவ்வோரு தனிமனிதனையும் சமூகப் பொறுப்புள்ள நல வாழ்வுத் தூதுவனாக்கிட வேண்டும், இவற்றை எப்படி விரைவில் எட்டுவது என்பதைச் சிந்திப்பதற்கான நாளாகட்டும் இந்த மார்ச் 24.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com