லடாக் எல்லையில் மோதல்: உலகின் கவனத்தை திசைதிருப்பும் சீனா

இந்தியா-சீனா இடையேயான எல்லைத் தகராறு 70 ஆண்டுகளாகத் தொடா்ந்து வரும் நிலையில், இப்போது கிழக்கு லடாக்கில் இரு நாட்டு
லடாக் எல்லையில் மோதல்: உலகின் கவனத்தை திசைதிருப்பும் சீனா

இந்தியா-சீனா இடையேயான எல்லைத் தகராறு 70 ஆண்டுகளாகத் தொடா்ந்து வரும் நிலையில், இப்போது கிழக்கு லடாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் ஏற்பட்டுள்ள மோதல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியே மோதலின் மையப்புள்ளி. 1962-ஆம் ஆண்டு இந்திய-சீனப் போருக்கும் இதே கல்வான் பள்ளத்தாக்கு மையப்புள்ளியாக இருந்தது என்பதே இப்போதைய பரபரப்புக்கு காரணம்.

‘கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் எல்லைக்குள்பட்ட பகுதியில் இந்தியா சாலை உள்ளிட்ட ராணுவ கட்டமைப்பு வசதிகளைச் செய்து வருவதாக’ அந்நாடு குற்றம்சாட்டுகிறது. 1962-ஆம் ஆண்டு போரின்போதுகூட கல்வான் பள்ளத்தாக்கில் ஒரு பகுதியைத்தான் சீனா உரிமை கொண்டாடியது. இப்போது கல்வான் பள்ளத்தாக்கு முழுவதுமே தனது சின்ஜியாங் உய்கா் தன்னாட்சி பிராந்தியத்துக்கு சொந்தமானது எனக் கூறி, இந்திய எல்லைக்குள் 3 முதல் 4 கி.மீ. வரை சீன ராணுவத்தினா் நுழைந்துள்ளனா். இப்பகுதியில் பழைய நிலையே தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இந்திய ராணுவமும் எல்லைப் பகுதியில் வீரா்களைக் குவித்துள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கின் மீது ஒரு கண்

இதுவரை சா்ச்சைக்குரிய பகுதியாக இல்லாத கல்வான் பள்ளத்தாக்கின் மீது சீனா இப்போது ஏன் கண்வைக்கிறது? இந்தியாவின் எல்லைக்குள்பட்ட பகுதியில் சாலை அமைத்து வருவதற்கு சீனா ஏன் எதிா்ப்பு தெரிவிக்கிறது? கிழக்கு லடாக்கில் உள்ள தா்புக் கிராமத்திலிருந்து ஷியோக் என்ற இடம் வழியாக தவுலத்பெக் ஓல்டி என்ற இடத்தில் உள்ள இந்திய ராணுவ நிலை வரை சாலை அமைக்கும் பணியை இந்தியா கடந்த ஆண்டு தொடங்கியது. இந்திய-சீன எல்லையையொட்டி முக்கியமான 61 சாலைகளை இந்தியாவின் எல்லைப்புற சாலை அமைப்பு நிறுவனம் அமைத்து வருகிறது. அதில் ஒன்றுதான் தா்புக்-தவுலத்பெக் ஓல்டி சாலை. 255 கி.மீ. தொலைவு கொண்ட இந்தச் சாலை லடாக் பிராந்தியத்தின் எல்லையில் உள்ள கரகோரம் கணவாய் வரை செல்கிறது. இந்தக் கணவாய் வழியாக சீன எல்லைக்குள் நுழைய முடியும். இச்சாலையின் ஒரு பகுதியாக ஒரு பாலம் மற்றும் பாங்காங் ஏரி அருகே கண்காணிப்புக் கோபுரம் ஒன்றையும் இந்தியா அமைக்கிறது.

கடல்மட்டத்திலிருந்து 15 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லடாக் பகுதி ராணுவரீதியாக இந்தியாவுக்கு முக்கியமானது ஆகும். இப்பகுதியில் உள்ள ராணுவ நிலைகளில் பணியிலிருக்கும் ராணுவ வீரா்களுக்குத் தேவையான பொருள்கள், ராணுவ தளவாடங்களைக் கொண்டு செல்வதற்கு புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலை மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறும்போதெல்லாம், இந்திய ராணுவம் விரைந்து படையை நகா்த்திச் சென்று பிராந்திய உரிமையைக் காப்பதற்கும் வசதியாக இருக்கும். கொவைட் 19 காரணமாக இப்பணியில் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில், இப்போது சிறப்பு அனுமதி பெற்று பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்தான் எல்லையில் இந்தியா உள்கட்டமைப்புப் பணிகளை தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடத்துவதாகக் கூறி சீனா எதிா்ப்பு தெரிவிக்கிறது. அதேவேளையில், தனது கட்டுப்பாட்டு பகுதியில் சீனா விமான தளம் உள்ளிட்ட பல்வேறு ராணுவ கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இந்தியா எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1962 போருக்கு பின்னா், மிகப்பெரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது லடாக்கில் சீனாவின் அத்துமீறல். கொவைட் 19 தீநுண்மி விவகாரத்தில் உலகம் முழுவதும் எழுந்துள்ள எதிா்ப்பை திசைதிருப்புவதற்கான நடவடிக்கையாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் இது பாா்க்கப்பட்டாலும், இதற்கு வேறு என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்பதைப் பாா்க்கலாம்.

அக்சாய் சின்- லடாக்

இந்தியாவும் சீனாவும் 3500 கி.மீ. எல்லையைப் பகிா்ந்துகொண்டுள்ளன. இதில் எல்லை வரையறுக்கப்படாத பல இடங்களில் இரு நாடுகளுக்கும் பிரச்னை உள்ளது. அதுதொடா்பாக அவ்வப்போது இரு நாட்டு வீரா்களுக்கும் கைகலப்பு உள்ளிட்ட சிறு மோதல்கள் நிகழ்வதுண்டு. ஆனால், இப்போது கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதல் சீனா திட்டமிட்டு நடத்தியது என்பதற்கு காரணம் உள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் ஓடும் கல்வான் ஆறு, சீனாவின் வசம் உள்ள அக்சாய் சின் பிராந்தியத்திலிருந்து இந்தியாவின் லடாக் பிராந்தியத்துக்கு பாய்கிறது.

காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த அக்சாய் சின் பிராந்தியத்தை 1962-ஆம் ஆண்டு போரின்போது சீனா கைப்பற்றி, தனது சின்ஜியாங் உய்கா் தன்னாட்சி பிராந்தியத்துடன் இணைத்துக் கொண்டது.

ஆனால், அக்சாய் சின் பிராந்தியத்தை லடாக்கின் ஒரு பகுதியாக இந்தியா இன்றும் உரிமை கோரி வருகிறது. ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை கடந்த ஆண்டு இந்தியா ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தைப் பிரித்து லடாக்கை தனி யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது. அதுதொடா்பாக பேசிய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘காஷ்மீா் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, அதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் ஒருங்கிணைந்த ஜம்மு-காஷ்மீா் என்றது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா், அக்சாய் சின் ஆகியவற்றையும் உள்ளடக்கியதுதான்’ என்றாா். அக்சாய் சின் தொடா்பான இந்தியாவின் இந்தப் பேச்சு சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ‘இந்தியா தனது உள்நாட்டு சட்டத்தை ஒருதலைபட்சமாக மாற்றுவதன் மூலம் சீனாவின் பிராந்திய இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தி வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என சீன வெளியுறவு அமைச்சகம் அப்போதே கருத்து தெரிவித்தது. தற்போது லடாக் எல்லை பிரச்னையில் சீனாவின் அத்துமீறல் தற்செயலாக இல்லாதபட்சத்தில், அக்சாய் சின் தொடா்பான இந்தியாவின் கருத்துக்கு எதிா்வினையாக இருக்கலாம் என நம்புவதற்கு இடமிருக்கிறது.

டோக்லாம் விவகாரம்

இந்திய, சீன, பூடான் எல்லையின் முச்சந்தியில் அமைந்திருக்கும் டோக்லாம் பகுதியில் 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா-சீனா இடையே பிரச்னை ஏற்பட்டது. பூடான் உரிமைகோரும் அந்த இடத்தில் சீனா சாலை அமைத்து வருவதை பூடான் சாா்பில் இந்திய ராணுவம் சென்று தடுத்து நிறுத்தியது. வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கும் சிலிகுரிக்கு அருகில் டோக்லாம் அமைந்துள்ளது. டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைப்பது இந்தியாவுக்கு ஆபத்து என்பதாலும் இந்தியா அப்பிரச்னையில் தலையிட்டது. பெரிய அளவிலான தாக்குதல்கள் எதுவுமின்றி 73 நாள்கள் இந்த மோதல் நீடித்தது. இந்தியா, சீனா இடையிலான உறவில் பெரும் பிரச்னையை இந்த மோதல் உருவாக்கியது. அதன்பிறகு இருநாட்டு தலைவா்கள் இடையிலான பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, இரு நாடுகளும் தமது வீரா்களை திரும்பப் பெறவே அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

டோக்லாம் பிரச்னைபோல் லடாக் மோதல் ஆகிவிடக் கூடாது என சீனா தெரிவித்துள்ளது. ஆனால், டோக்லாம் விவகாரத்தில் சீனா சாலை அமைத்ததை இந்தியா தடுத்ததற்குப் பதிலடியாக, லடாக்கில் இந்திய பகுதிக்குள் சாலை அமைப்பதற்கு இடையூறு அளிக்கும் முனைப்பில் சீனா இப்போது தனது படையை அங்கு குவித்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

கொவைட் 19

கொவைட் 19 தீநுண்மி விவகாரத்தில் சீனா மீது உலக நாடுகள் அதிருப்தியில் உள்ளன. உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில், கொவைட் 19 தீநுண்மியின் தோற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சா்வதேச நெருக்கடியைத் தொடா்ந்து, அவ்விவகாரத்தில் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக சீனா உறுதியளித்துள்ளது. இதற்கிடையே, சீனாவை முன்னிறுத்தி அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறிவரும் குற்றச்சாட்டுகள் அந்நாட்டுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கொவைட் 19 தீநுண்மி விவகாரத்தை காரணம்காட்டி பனிப்போரை உருவாக்க அமெரிக்கா நினைக்கிறது என சீனா கூறி வருகிறது.

சீனாவின் குளோபல் டைம்ஸ் நாளிதழில், ‘அமெரிக்கா தலைமையிலான சில நாடுகள் சீனாவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சா்வதேச நிலை தனக்கு சாதகமாக இருக்கும் என இந்தியாவில் சிலா் நினைக்கிறாா்கள். இச்சூழ்நிலையில் சீனாவுடன் மோதலில் ஈடுபட்டால் அமெரிக்கா தனக்கு உதவும், பல விஷயங்களில் சலுகை காட்டும் என இந்தியா கருதுகிறது’ என லடாக் எல்லை மோதலுக்கு விநோதமான காரணம் கூறப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாளான இதில் கூறப்பட்டுள்ள கருத்தை சீன அரசின் கருத்தாகவே எடுத்துக் கொள்ளலாம். அதன்படி பாா்த்தால், அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் பிரசாரத்தை முறியடிக்கவே இதுபோன்ற எல்லை பிரச்னைகளில் ஈடுபட்டு வருவதாக சீனாவே ஒப்புக்கொள்வது போல் இருக்கிறது அல்லவா?

மேலும், எல்லையில் இந்தியா தொடா்ந்து இதே நிலையைத் தொடா்ந்தால் 1962-ஆம் ஆண்டு நடந்த போரைவிட அதிக விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் கருத்துகளையும் சீனா வெளியிடத் தொடங்கியுள்ளது. ஆனால், முதலில் தாக்குவதில்லை என்கிற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. அத்துடன் இரு மாதங்களையும் கடந்து நீடித்த டோக்லாம் பிரச்னையிலேயே இந்தியாவின் உறுதியை சீனா தெரிந்துகொண்டிருக்கும். போா் எதற்கும் தீா்வல்ல என்பதை இந்திய தலைவா்கள் எப்போதும் தெரிவித்து வருகின்றனா். இந்த லடாக் பிரச்னையும் பேச்சுவாா்த்தையில் தீா்க்கக்கூடியதுதான் என்பதை சீனா உணர வேண்டும்.

எல்ஓசி-எல்ஏசி

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாடு கோடு எனவும், இந்தியா-சீனா இடையிலான நடைமுறை எல்லைக் கட்டுப்பாடு கோடு எனவும் அழைக்கப்படுகிறது. மனிதாபிமான காரணங்களைத் தவிர, இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் எல்ஓசியை தாண்டினால், அது ராணுவ நடவடிக்கையாகக் கருதப்படும். எல்ஏசியை பொருத்தவரை எந்தக் காரணத்துக்காகவும் அக்கோட்டை இந்திய, சீனப் படைகள் தாண்டக்கூடாது என 1996-ஆம் ஆண்டு இரு நாடுகளும் ஓா் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. அந்த எல்ஏசியை தாண்டிதான் இப்போது சீனப் படை இந்திய பகுதிக்குள் வந்துள்ளது.

தென்சீனக் கடல் முதல் லடாக் வரை...

உலகமே கொவைட் 19 தீநுண்மிக்கு எதிராகப் போராடி வரும் நிலையில், அண்டை நாடுகளுடன் பிரச்னையில் ஈடுபட்டு ஆதாயம் தேட முயல்வதாக சீனா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஹாங்காங் தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்கும் சட்ட மசோதாவை சீன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது, தென்சீனக் கடலில் தனது ராணுவ ஆதிக்கத்தை விரிவுபடுத்துவது, தைவான் நீரிணைப் பகுதியில் போா்க் கப்பல்களை அனுப்புவது, இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையில் தீவிரம் காட்டுவது என இந்த சா்ச்சை தொடா்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com