அறிவியல் ஆயிரம்: தொழில்சார் மருத்துவப் பிதாமகன் பெர்னார்தீனோ ரமக்ஸீனி

வேலையில் உட்கார்ந்திருப்பவர்கள் தங்களது குறிப்பிட்ட சொந்த நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறார் ரமக்ஸீனி. 
பெர்னார்டினோ ராமஸ்ஸினி
பெர்னார்டினோ ராமஸ்ஸினி

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர்  இத்தாலிய மருத்துவர் பெர்னார்தீனோ (Bernardino Ramazzini) ரமக்ஸீனி (இத்தாலியப் பெயரின் சரியான உச்சரிப்பு).

1633, நவம்பர் 3ம் நாள், இத்தாலியின் மோடேனாவில் காப்ரி என்ற நகரில் ஐரோப்பிய வரலாற்றின் ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தில் இவர் பிறந்தார்.

தந்தையின் பெயர் ரமக்ஸீனி பார்த்தலோமியோ; தாயின் பெயர் கேதரினா ரமக்ஸீனி. இவர்களது குடும்பம் நகரின் வசதியான குடும்பங்களில் ஒன்று. செய்யும் தொழில்களின் சூழல் மூலமாகவும்கூட நோய்கள் உருவாகும் என்ற உண்மையைக் கண்டறிந்தவர் பெர்னார்தீனோ ரமக்ஸீனி. இரண்டுக்குமான உறவுகளைத் தெளிவாகப் பதிவு செய்தவர். இதனால் இவரைத் தொழில்சார் மருத்துவத்தின் பிதாமகன் என்று அழைக்கின்றனர்.

தத்துவம் மற்றும் மருத்துவம் படித்த ரமக்ஸீனி 1676 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை மோடேனா பல்கலைக்கழகத்திலும் (1682-1700) மற்றும் படுவாவிலும் (1714 வரை) மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

1682ல் டியூக் ஃபிரான்செஸ்கோ டி எஸ்டா (Duke Francesco d'Esta) பல்கலைக்கழகத்தில் சேர அழைக்கப்பட்டு, மருத்துவத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். ரமக்ஸீனி தொற்றுநோயியல், நோய்க்கான காரணங்கள், பரவல் மற்றும் கட்டுப்பாடு பற்றிய ஆய்வினை மேற்கொண்டார்.

பிறகு தனது ஆய்வுகளை தொழில்சார் நோய்களுக்கு விரிவுபடுத்தினார். 50-க்கும் மேற்பட்ட தொழில்கள் மற்றும் அவற்றுடன் அடிக்கடி தொடர்புடைய நோய்களை ஆய்வு செய்தார்.

இளமைக் கல்வி 

தனது துவக்க கல்விக்குப் பின், ரமக்ஸீனி 1652ல் டியூக் ரெய்னூட்டியோ I வின் பார்மா பல்கலைக்கழகத்தில் தத்துவம் படிக்க சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் தத்துவம் படிக்கும்போதே மனம் மருத்துவத்தில் லயித்து, 1655-ல் மருத்துவப் படிப்பைத் தொடங்கினார்; தத்துவம் மற்றும் மருத்துவம் பயின்ற பின், ரோம் சென்றார். அங்கு கிளெமென்ஸ் VIII இன் மருத்துவரான அந்தோனியோ மரியா ரோஸ்ஸின் (ஜெரோலமோ ரோஸியின் மகன்) கீழ் தனது படிப்பைத் தொடர்ந்தார். ரமக்ஸீனியின் ரோம் நகர வாழ்க்கை தொடர்பாக அதிகம் அறியப்படவில்லை. ஆனால், இந்த நகரத்தின் வர்த்தகங்களைப் பற்றி அவர் பெற்ற அறிவு, தொழில் மருத்துவம் பற்றிய பதிவுகள் அங்கு அவர் தொழிலாளிகளின் நோய்கள் குறித்து எழுதிய புத்தகமான "டி மோர்பிஸ் ஆர்டிஃபிகம் டயட்ரிபா (De morbis artificum diatriba- Diseases of Workers")-ல் உள்ளன. இந்த புத்தகம் அவரது அறிவியல் தேடல் மற்றும் மருத்துவ உலகின் அடுத்தடுத்த பணிகளுக்கு மிகவும் முக்கியமானது ஆகும்.

தொழில்சார் நோய்கள்

தத்துவம் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவராக இருந்தபோது தொழிலாளர்களின் ஆரோக்கியத்தில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். மேலும், பலவகை நோய்களுக்கு காரணங்களாக, தொழில்கள் நடக்கும் இடங்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் நீராவிகள், சில துகள்கள், வெப்பம், குளிர், ஈரப்பதம், ஒழுங்கற்ற உடல் இயக்கங்கள் போன்றவை வகைப்படுத்தப்பட்ட தொழில்சார் சுகாதார அபாயங்கள் என கண்டறிந்தார்.

மேலும், மாசு கலந்த / துப்புரவு இல்லாத காற்றோட்டம் தொடர்பான பிரச்சினைகளும்கூட நோய்களை விளைவிக்கும் என அறிந்து அவற்றை நிவர்த்தி செய்தார்; இதற்காக முகமூடிகள் போன்ற பாதுகாப்புகளை தொழிற்சாலைகளுக்குப் பரிந்துரைத்தார். அப்போதுதான் தொழில்சார் நோய்கள் குறித்த முதல்முதலான கட்டுரையான டி மோர்பிஸ் ஆர்டிஃபிகம் டயட்ரிபா (1700) தொகுத்தார். 

தொழிலாளிகளின் நேசிப்பாளர் 

இப்படி பெர்னார்தீனோ ரமக்ஸீனி, தொழில்சார் நோய்கள் பற்றிய அவரது ஆய்வுகள், தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆதரிப்பது, தொழிற்சாலை பாதுகாப்பு தொடர்பாகவே பேசின. அத்துடன் தொழிலாளர்களின் இழப்பீட்டுச் சட்டங்களை இறுதியில் நிறைவேற்ற இவை ஊக்குவித்தன. எனவேதான், 1,700 ஆம் ஆண்டில் தொழில் நோய்கள் மற்றும் தொழில்துறை சுகாதாரம் குறித்த முதல் முக்கியமான புத்தகத்தை ரமக்ஸீனியால் எழுத முடிந்தது. ஆனால் இந்தக் காலகட்டத்தில் இத்தாலியிலுள்ள ரோமில், கலிலியோ கலிலி மீது கடவுள் துவேஷ மற்றும் மத துவேஷ வழக்கு நடந்துகொண்டிருந்தது (பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று சொன்னதனால்).

எனவே. இத்தாலியில் விசாரணையின்போது அதன்  தீர்ப்பாயம் கலிலியோ கலிலியின் போதனைகளைத் தடை செய்தது; குற்றம் சாட்டப்பட்டவர் தனது மதங்களுக்கு எதிரான கொள்கையைக் கைவிடச் செய்தது.

கார்பி பயணம்

ரமக்ஸீனிக்கு கல்வி போதிப்பதுடன், ரோம் மருத்துவர் அந்தோனியோ மரியா ரோஸ்ஸி, பாப்பல் மாநிலத்திற்கு வடக்கே உள்ள வசதி குறைவான காஸ்ட்ரோவின் டச்சியில் நகர மருத்துவராக பொறுப்பு ஏற்றார். இந்த பகுதி மலேரியாவால் பாதிக்கப்பட்டது; ரமக்ஸீனியும் அங்கு நோய்வாய்ப்பட்டார். 

ஆனால் விரைவில் அவர் தனது சொந்த ஊரான கார்பியில் குடியேறினார். இங்கே அவர், பழங்கால இலக்கியங்களைப் படிப்பது போன்ற அறிவுசார் முயற்சிகளுக்கு நேரத்தைச் செலவிட்டார். 

திறமைக்கும் வாய்ப்பு 

ரமக்ஸீனி 1671ல் கார்பி மாகாணத்தைவிட்டு வெளியேறி மோடேனாவுக்குச் சென்றார். அங்கு அவர் முதலில் கல்வி நிறுவனத்தால் கடுமையாக எதிர்க்கப்பட்டார். இருப்பினும், 1682ல் மோடேனாவின் இரண்டாம் டியூக் ஃபிரான்செஸ்கோ (Duke Francesco II) அவருக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில்  ஒரு வேலை வழங்கினார்.

மேலும் அவர் ரமக்ஸீனிக்கு பேராசிரியர் “மருத்துவ தியரிகா” (medicinae theoricae”) என்ற பட்டத்தையும் வழங்கினார். 1683ல் அகாதெமி சான் கார்லோ அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டபோது, ரமக்ஸீனி ஆராட்டியோ இன்ஸ்டுரேஷனிஸ் என்ற முகவரியைக் கொடுத்தார். அடுத்த ஆண்டுகளில், அவர் தனது சகாவான ஃபிரான்செஸ்கோ டோர்டியுடன் (1658-1741) நெருக்கமாகப் பணியாற்றினார்.

மேலும், மருத்துவப் பயிற்சி குறித்தும் விரிவுரை செய்தார். இருப்பினும் டோர்டிக்கு மட்டுமே முறையாக மருத்துவப் பயிற்சிக்கு பொறுப்பானவராக இருந்தார். எனவே ரமக்ஸீனிக்கும் டோர்டிக்கும் இடையிலான நட்பு முறிந்தது. 

லாதிரைஸ் நோய் 

பெர்னார்தீனோ ரமக்ஸீனி 1600களின் பிற்பகுதியில் லாதிரைஸ் என்ற நோயின் பரவல்களை  விவரித்தார். இது லாதிரைஸ் என்ற பருப்பு இனத்தின் (பட்டாணி. கொண்டைக் கடலை வகை) மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் நோய். இது பொதுவாக விலங்குகளின் நோயாகும். இந்நோய் கொண்டைக் கடலை விஷம் என்றும், இதனால் தசை பக்கவாதம், முடக்கம், தோலில் முட்கள் முளைத்ததுபோல இருத்தல் போன்றவை உருவாகலாம் என்றும் கருதப்பட்டது. 

மலேரியாவும் சின்கோனாவும் 

1690களில் ரமக்ஸீனி இத்தாலியின் எல்லைகளுக்கு அப்பால் முதல் தொற்றுநோயியல் படைப்புகளை செய்தார். அதில் ரமக்ஸீனி மோடேனாவைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் மனிதன் மற்றும் விலங்குகளின் தொற்றுநோய்கள் பற்றிய ஒரு விளக்கத்தை அளிக்கிறார்.

மண், காலநிலை, நீர் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக காற்று ஆகியவற்றின் அடிப்படையில் ஹிப்போகிரட்டீஸின் கூற்றுப்படி இப்பகுதியின் அனைத்து தொற்றுநோய்களின் உறவுகளையும் ரமக்ஸீனி மதிப்பீடு செய்தார். அவரது ஆய்வுகள் கொண்டைக் கடலை விஷம் (1690) மற்றும் மலேரியா (1690-1695) ஆகியவை அடங்கும்.

1690 மற்றும் 1695க்கு இடையில் அவர் தனது ஆய்வுகளை இத்தாலியில் மலேரியா பரவலுக்குப் பின்னர் விரிவுபடுத்தினார். இந்த ஆய்வின்போது, ரமக்ஸீனி மலேரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சின்கோனா பட்டை பயன்படுத்தினார். இந்த மருந்தை அவர் பயன்படுத்துவது மருத்துவ வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. எல்லா வகையான நோய்களுக்கும் சின்கோனா பட்டை சாற்றைப் பரிந்துரைப்பது அக்கால பெரும்பாலான மருத்துவர்களின் நடைமுறையாக இருந்தது. 

எவ்வாறாயினும், இந்த மருந்தைக் கண்மூடித்தனமாக பயன்படுத்தக் கூடாது, மாறாக மலேரியா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட வேண்டும் என உணர்ந்து அரசிடம் கூறியவர்.  சின்கோனா பட்டை (chinchona bark) பயன்பாடு என்பது மலேரியா சிகிச்சையில் ஒரு புதிய "சூப்பர் மருந்து" என அறிமுகப்படுத்தப்பட்ட காலம் இது.

ரமக்ஸீனி இதனை அறிமுகப்படுத்தியதுடன், மருத்துவ வரலாற்றில் ஒரு புரட்சிகர நிகழ்வு என்றும் கூறப்பட்டது. இதனை பாரம்பரிய கிரேக்க மருத்துவர் கேலனின் மருத்துவக் கோட்பாடுகளின் (Greek physician Galen) உள்ள குறைகளை நிறைவு செய்து, நோய்க்கு சிகிச்சையில் தூய்மையானவற்றை நிர்வகிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். 

துப்புரவுத் தொழிலாளர்கள் 

ரமக்ஸீனி பணியிடங்களுக்குச் சென்று தொழிலாளர்களுடன் நேரடியாகப் பேசுவதன் மூலம் அவர்களின் பணியிடங்கள் வழியே உருவாகும் நோய்களைக் கண்டறிய முடியும்; மேலும் நோய்க்கு சிகிச்சை என்பதைவிட அதன் வராமல் தடுப்பதே சிறந்தது என்றும் போதித்தார். ஆனால், அவரது சகாக்கள் இதனைப் புரிந்துகொள்ளாமல், அவரை மிகவும் எள்ளி நகையாடினர்.

சக மருத்துவர்களிடமிருந்து மிகுந்த ஏளனத்தையும் பிரச்னைகளையும் சந்தித்தார். அவர் துவக்கத்தில் கழிவுநீர்/துப்புரவுத் தொழிலாளர்கள் பணியினால், அவர்களின் கண்கள் கடுமையாக சிவப்பால் பாதித்திருப்பதும், பிற்காலத்தில் அது அதன் விளைவாக அவர்களில் பலருக்குப் பார்வையிழப்பு ஏற்பட்டதும் அறியப்பட்டது. இந்த ஆய்வின் விளைவாக, அவர் தொழில்சார் நோய்கள் குறித்த தனது ஆய்வுக்கான யோசனையை உருவாக்கினார்.

தொழில் நோய்கள்

ரமக்ஸீனி தனது டி மோர்பிஸ் ஆர்டிஃபிகம் டயட்ரிபா (தொழிலாளர்களின் நோய்கள்) குறித்த பணிகளை எப்போது தொடங்கினார் என்பது தெரியவில்லை. ஆனால், அவர் 1690 ஆம் ஆண்டிலேயே இந்த தலைப்பில் சொற்பொழிவு செய்தார் என்பது அறியப்படுகிறது. 1700 இல் வெளியிடப்பட்டது.

இது தொழில் நோய்கள் குறித்த முதல் விரிவான படைப்பு, மற்றும் தொழில் மருத்துவ வரலாற்றில் ஒரு மைல்கல். ரமக்ஸீனி 52 தொழில்களில் ஆய்வு செய்த பின்னர், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உடல் மற்றும் கண்களை எரிச்சலூட்டும் ரசாயனங்கள், தூசி, உலோகங்கள் போன்றவை உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் என டி மோர்பிஸ் ஆர்டிஃபிகம் டயட்ரிபா (De morbis artificum diatriba) என்ற புத்தகத்தின் மூலம் தொழிலாளர்களின் நோய்களை கோடிட்டுக் காட்டுகிறது. அவர்களில் சுரங்கத் தொழிலாளர்கள், குயவர்கள், கொத்தனார்கள், மல்யுத்த வீரர்கள், விவசாயிகள், செவிலியர்கள், வீரர்கள் மற்றும் பலர் இருந்தனர்.

"கற்றறிந்த மனிதர்களிடையே" மிகைப்படுத்தப்பட்ட மனதின் தலைப்பைக் கூட அவர் விவாதித்தார். இந்த நோய்களின் நோயியல், சிகிச்சை மற்றும் தடுப்பு பற்றி விவாதிப்பதில் ரமக்ஸீனி பெரும்பாலும் ஹிப்போகிரேட்ஸ், செல்சஸ் மற்றும் கேலன் ஆகியோருடன் ஒப்பிட்டுச் சொல்கிறார். மேலும் அவற்றின் அவதானிப்புகளைச் சுருக்கமாகக் கூறிய பின்னர், பல்வேறு நோய்களுடன் தனது சொந்த அனுபவத்தையும் விவரிக்கிறார்.

பெண்களின் பாலியல் தொழில் நோய்களிலும் கவனம் செலுத்தி ரமக்ஸீனி கவலைப்பட்டார். இந்தப் பிரிவில் அவர் சிபிலிடிக் என்ற பாலியல் நோய்த் தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், செவிலியர்கள் மத்தியில் தூய்மையையும் பரிந்துரைக்கிறார்.

மோடேனா முதல் படுவா வரை 

ரமக்ஸீனி 1682 முதல் 1700 வரை 18 ஆண்டுகள் மோடேனாவில் தங்கி பணி செய்தார். பின் அவர் படூவாவில் நடைமுறை மருத்துவத் தலைவருக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டார். அங்கு வெனிஸ் குடியரசு நாட்டில் மிகவும் புகழ்பெற்ற மருத்துவ ஆசிரியர்களைக் கொண்டிருந்தது. அவர் தனது தொடக்க உரையை டிசம்பர் 12 அன்று “படவினியோ அட்டெனியோவில்” நடத்தினார். இதில் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். அவர் படுவாவில் இருந்தபோது  ஐரோப்பாவின் மிகவும் பிரபலமான கொண்டாடப்படும் மருத்துவ விஞ்ஞானிகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.

1706 ஆம் ஆண்டில் அவர் ரோமன் அகாடெமியா டெக்லி ஆர்கடி மற்றும் பேர்லினில் உள்ள ராயல் பிரஷ்யன் சொசைட்டி(Roman Accademia degli Arcadi and the Royal Prussian Society) உறுப்பினராக அழைக்கப்பட்டார்.

ஜோதிடம் இகழ்ந்த ரமக்ஸீனி 

பிக்கோ டெல்லா மிராண்டோலா (1463-1494) போன்ற எழுத்தாளர்கள் ஜோதிடத்தைக் கண்டனம் செய்வதை ரமக்ஸீனி ஆதரித்தார். இந்த அடிப்படையில் 1710-1711 இல் வெனிஸ் குடியரசில் கால்நடை பிளேக்கின் தொற்றுநோய் போன்ற மனிதனிலும் விலங்குகளிலும் தொற்றுநோய்களுக்கான பல போலி விளக்கங்களை ரமக்ஸீனி நிராகரித்தார்.

இறுதிக்காலம் - பதவி உயர்வு

இந்த நேரத்தில் அவரது வயது முதிர்வால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது; அவர் இதயப் பிரச்னை  மற்றும் தலைவலி போன்றவற்றால் அவதிப்பட்டார். இருப்பினும், 1709-ல் வெனிஸ் கவுன்சில் ரமக்ஸீனியை பேராசிரியர் மருத்துவ பிரைமாரியோ (professore medicinae primario) வாக பதவி உயர்வு தந்தது.

ஆனால் அவரது உடல் நிலைமை அனுமதிக்கப்படும்போது மட்டுமே கற்பித்தார். "நோய்வாய்ப்பட்ட உடல்நலம் இருந்தபோதிலும், இறுதியில் பார்வையற்றவராக இருப்பினும், இளவரசர் பிரான்செஸ்கோ டி எஸ்டேவுக்கு "ஆரோக்கியமான வாழ்க்கை" குறித்த ஆலோசனைகளின் புத்தகத்தை எழுதினார்.

அவர் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு 1713ல், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய், திருமணமாகாத கன்னியாஸ்திரீகளுக்குத்தான் வரும் என்றும். அதன் காரணம், அவர்கள் பாலுறவில் ஈடுபடாததனால், மார்பக திசுக்கள் ஸ்திரத்தன்மை இழந்து அதன் மூலம் புற்றுநோய் வரும் என்றும் கூறினார்.

மேலும் 1713 இல் ரமக்ஸீனி தனது நூலை விரிவுபடுத்தினார். இந்த திருத்தப்பட்ட பதிப்பு வில்மர் கேவ் ரைட்டின் இணையான ஆங்கில மொழிபெயர்ப்புடன் மறுபதிப்பு செய்யப்பட்டது மற்றும் டி மோர்பிஸ் ஆர்ட்டிஃபிகம் பெர்னார்டினி, ரமக்ஸீனி தொழிலாளர்கள் நோய்கள் (1940) என வெளியிடப்பட்டது. 1713ல் அவர் தனது திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட புத்தகப் பதிப்பை உருவாக்கினார். இறுதியில் நவம்பர் 5, 1714 இல் ரமக்ஸீனி மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்தார்.

அவரின் இறந்த உடலை, ஜியோவானி பாட்டிஸ்டா மோர்காக்னி (Giovanni Battista Morgagni) என்ற மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தார். பாட்டிஸ்டா மோர்காக்னிதான் ரமக்ஸீனியின் முக்கியப் படைப்பான டி செடிபஸ் மற்றும் காசிஸ் மோர்போரமில் (De sedibus et causis morborum.) நெறிமுறைப்படுத்தியவரும்கூட.

கொலீஜியம்  பெர்னார்தீனோ ரமக்ஸீனி -  அமைப்பு 

உலகெங்கிலும் உள்ள தொழில் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார பிரச்னைகள் குறித்த ஆய்வை முன்னெடுப்பதற்காக 1982 ஆம் ஆண்டில், சர்வதேச அறிஞர்கள் சமூகம் அவரது நினைவாக கொலீஜியம் ரமக்ஸீனி (Collegium Ramazzini) என்ற அமைப்பை உருவாக்கியது. இதை நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் ஸ்கூல் ஆஃப் மெடிசின் (Mount Sinai School of Medicine) டாக்டர் இர்விங் ஜே. செலிகோஃப் நிறுவினார்.

கொலீஜியத்தின் ஆண்டுக் கூட்டம் கார்பியில் நடைபெறுகிறது. கார்பி நகரின் மகன் என புகழாரம் பெற்ற "பெர்னார்தீனோ ரமக்ஸீனி"வின் நினைவாக, கொலீஜியத்தின் சர்வதேச தலைமையகத்தை அங்கு வழங்கியுள்ளது. ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பெர்னார்தீனோ ரமக்ஸீனியின் நோக்கங்களை மேம்படுத்துவதில் சிறப்பான பங்களிப்புகளைச் செய்த கொலீஜியத்தால் நியமிக்கப்பட்ட அந்த விஞ்ஞானிகளுக்கு கார்பி நகரத்தால் ஆண்டுதோறும் ஒரு "ரமக்ஸீனி" விருது வழங்கப்படுகிறது.

நோயாளியை நோக்குதல் 

"நீங்கள் ஒரு நோயாளியின் வீட்டிற்கு வரும்போது, அவருக்கு என்ன வகையான வலிகள் உள்ளன, அவற்றுக்கு என்ன காரணம், எத்தனை நாள்கள் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், குடல் வேலை செய்கிறதா, அவர் என்ன வகையான உணவை சாப்பிடுகிறார் என்று அவரிடம் கேட்க வேண்டும்"

எனவே ஹிப்போகிரட்டீஸ் தனது படைப்பில்  கூறுகிறார். அதில் ரமக்ஸீனி ஒரு கேள்வியைச் சேர்க்க விரும்புகிறார். அதுதான் அவர் என்ன தொழிலைச் செய்கிறார் என்பதும்கூட. இதுதான் பெர்னார்தீனோ ரமக்ஸீனிவின் ஆய்வு. இதுவும் கேட்கப்பட்டால்தான் நோயாளியின் நோய்க்கான பூரண காரணிகள் தெரியும். 

வேலையில் உட்கார்ந்திருப்பவர்கள் தங்களது சொந்த குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மீண்டும் மீண்டும் கை இயக்கங்கள் வீங்கிய கைகளாலும், வேதனையுடனும் ரொட்டி விற்பவர்களை நான் கவனித்திருக்கிறேன் என்கிறார் ரமக்ஸீனி.

உண்மையில் இதுபோன்ற அனைத்து தொழிலாளர்களின் கைகளும் மாவைப் பிசைவதற்கான தொடர்ச்சியான அழுத்தத்தால் மிகவும் தடிமனாகின்றன என்கிறார். 

பதினேழாம் நூற்றாண்டில், இத்தாலியில், ஐரோப்பா முழுவதும், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கும் ஆழ்ந்த மந்தநிலையால் வகைப்படுத்தப்பட்டது. கலாசாரம் நீதிமன்றத்தின் சேவையில் இருந்தது, முக்கியமாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் நெருக்கடியில் இருந்தது அப்போது மருத்துவர்களின் கவனம் மிகவும் பணக்கார நோயாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

தொழிலாளர்களின் உடல்நலப் பிரச்னைகளை விசாரிக்க ஒரு மருத்துவர் (ரமக்ஸீனி) தனது கவனத்தை அர்ப்பணித்தது என்பது எதிர்பாராத மற்றும் அசாதாரணமானது. தொழிலாளர்களின் கோளாறுகள் ஒரு முக்கியமான சமூக பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை உணர்ந்த ரமக்ஸீனி பட்டறைகளுக்குச் சென்று, தொழிலாளர்களுடன் பேசினார், பணியிடங்களை விவரித்தார், அவர்கள் பணிபுரிந்த நிலைமைகளைப் பற்றி ஆய்வு செய்தார், இருக்கும் தகவல்களை மதிப்பாய்வு செய்தார், சுகாதாரக் கோளாறுகளைக் கண்டறிந்தார் மற்றும் அபாயங்களைத் தடுப்பதற்கும் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகளை பரிந்துரைத்தார்.

பல தொழிலாளர்கள் பொறுத்துக்கொள்ளும் கொடூரமான மற்றும் இழிவான நிலைமைகளை எடுத்துக்காட்டுகின்ற அவரது அவதானிப்புகள் மூலம், அவர் ஒரு அறிவொளி அல்லாத அமைப்பாளராக நிரூபித்தார், அவர் தனிநபர்கள், சுற்றுச்சூழல் மற்றும் சமூக மற்றும் பொருளாதார நிலைகளைத் தழுவிய ஒரு மானுடவியல் கட்டமைப்பில் மக்களின் பாதிப்பை மதிப்பிட்டார்.

ரமக்ஸீனியின் படைப்புகளைப் படித்த ஆசிரியர்கள், தொழிலாளர்களின் உடல்நலப் பிரச்னைகளை அடையாளம் காண்பதற்கான புதுமையான அணுகுமுறையை வலியுறுத்தினர் மற்றும் மாஸ்டர் மருத்துவ ஆய்வுகளை மதிப்பிட்டனர் . உண்மையில், அவர் பொது சுகாதாரத்தின் கட்டமைப்பிற்குள் வெவ்வேறு சிக்கல்களை எதிர்பார்த்தார்: அதனை சரி செய்ய முயன்றார், 

ரமக்ஸீனியின் புத்தகம் ஆங்கிலத்தில், லண்டனில் 1705ல்   மொழி பெயர்க்கப்பட்டது. வர்த்தகர்களின் நோய்கள் பற்றிய ஒரு சிகிச்சையும் கூட அதில் இருந்தது. பின்னர் அது  இத்தாலிய, ஜெர்மன், பிரஞ்சு மற்றும் டச்சு மொழிகளில் என  பல்வேறு லத்தீன் பதிப்புகள் மற்றும் மொழிப்பெயர்ப்புகள் வெளிவந்தன.

இதன் மூலம் இது பொருளாதார வரலாற்றிலும் செல்வாக்கு செலுத்தியது. ஆடம் ஸ்மித் அதை தனது செல்வ நாடுகளில் மேற்கோள் காட்டினார் மற்றும் கார்ல் மார்க்ஸ் அதை மூலதனத்திலும்  மேற்கோள் காட்டினார். மேலும் 1995 வரை பல மருத்துவ புத்தகங்களிலும் இது குறிப்பிடப்பட்டு பேசப்படுகிறது. ஒரு அசாதாரண மருத்துவர் ரமக்ஸீனி, உழைப்பாளி மக்களின் தொழில்சார் நோய்கள் தொடர்பாக 350 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து ஆய்வு செய்திருக்கிறார் என்றால் அவரின் மனித தன்மையை இவ்வையகம் மனித உயிர்கள் உள்ளளவும் உலகில் பேசப்படுவார்; அவரை நாம் போற்றிப் பாராட்டக்  கடமை உடையவர்கள்.

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்

மேனாள் மாநிலத் தலைவர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com