ஆண்டாள் தமிழை ஆண்டாள்

இலக்கிய செழுமைக்கும், தத்துவம், பக்தி ஆகியவற்றிற்கும் உதாரணமாக போற்றப்படும் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களையும் ஆண்டாள் தனது 15 ஆம் வயதில் இயற்றியுள்ளார்.
ஆண்டாள்(கோப்புப்படம்)
ஆண்டாள்(கோப்புப்படம்)

இலக்கியச் செழுமைக்கும் தத்துவம், பக்தி ஆகியவற்றிற்கும் உதாரணமாக போற்றப்படும் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களையும் ஆண்டாள் தனது 15 ஆம் வயதில் இயற்றியுள்ளார். இந்த இரண்டு நூல்களையும் படித்தால் ஆண்டாளின் தெய்விகத் தன்மையையும் ஞானத்தையும் உணர முடியும். 

ஆண்டாள் தமிழகத்தில் 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பாவை என்பது மார்கழி மாதத்தில் எப்படி இருக்க வேண்டும். இறைவனை எப்படி வணங்கி அருளைப் பெற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ஆண்டாள் பாடிய நூல்.

இது மொத்தம் 30 பாடல்களைக்  கொண்டது, வைணவ பக்தி நூல்களின் தொகுப்பு 'நாலாயிர திவ்ய பிரபந்தங்கள்' என அழைக்கப்படுகின்றன. இதில் 473 முதல் 503 வரை உள்ள பாடல்களின் தொகுப்புதான் திருப்பாவைப் பாடல்கள்.

அர்ஜுனனுக்கு பகவத் கீதையைக் கூறிவிட்டு வைகுந்தம் சென்ற கிருஷ்ண பகவான் தனது பகவத் கீதை, இவ்வுலக மக்களனைவரையும் சென்றடைய திருவுளம் கொண்டான். வையகத்து மக்கள் எல்லாம் பெருமாளின் குழந்தைகளே, அவர்களுக்கும் எளிய முறையில் கீதையின் சரணாகதி தத்துவம் விளங்கச் செய்ய வேண்டும் என்று விரும்பிய பகவான், மஹாலட்சுமி த் தாயாரிடம் “நீ சென்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடேன்” என்று கூறுகிறார். “நீங்கள் அவதாரம் எடுத்தபொழுதெல்லாம் உங்களுடன் பிறவி எடுத்து எடுத்து இளைத்தேன், என்னால் ஆகாது” என்று மஹாலட்சுமித் தாயார் சொல்ல, “அப்போது நான் சென்று குழந்தைகளைக் கரை சேர்க்கிறேன்” என்று பூமித் தாயார் வைகுண்டத்தில் இருந்து பூலோகத்திற்கு ஆண்டாளாக அவதரித்துக் கோதை என்று பெயர் பெற்றாள்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்து வந்தார் பெரியாழ்வார். இவரது இயற்பெயர் விஷ்ணுசித்தர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மலர்த் தோட்டம் அமைத்தார், அத்தோட்டத்தில் செண்பகம், வகுளம், மல்லிகை, முல்லை ஆகிய மலர் செடி, கொடிகளுடன் துளசிச் செடியையும் வளர்த்து வந்தார். இவற்றைக் கொண்டு பின்னல், கண்ணி, கோவை ஆகிய அழகிய வடிவங்களில் மாலை கட்டி அவ்வூரில் உள்ள வடபத்திரசாயிக்கு மாலை அணிவித்து வந்தார்.

ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அத்தோட்டத்தில் நன்கு வளர்ந்து இருந்த துளசிச் செடியின் அடியில் பெண் குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தார். அக்குழந்தைக்கு சுரும்பார் குழற்கோதை என்ற பெயரிட்டுக் குழந்தைக்குத் தானே தந்தையாக இருந்து வளர்த்தார்.

தனக்கென குடும்பம் இல்லாத பெரியாழ்வார், ஆண்டாளை இறைவன் கொடுத்த கொடையாக நினைத்து வளர்த்து வந்தார். சிறுவயது முதல் வைணவ சமயம் சார்ந்த தனக்குத் தெரிந்த அனைத்தையும், தான் மகளாக வளர்த்த கோதைக்கு விஷ்ணுசித்தர் சொல்லிக் கொடுத்து வளர்த்தார். இதனால் இளம் வயதிலிருந்து கண்ணன் மீது அளவு கடந்த பக்தி பெருகியது. போகப் போக அது கண்ணன் மீது காதலாக மாறியது. அவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஆண்டாள் வளர்த்துக் கொண்டார்.

தமிழில் புலமை பெற்ற பெரியாழ்வார் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே கோதைக்கு சொல்லிக் கொடுத்தார். கோதை இளம் வயதிலேயே கிருஷ்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராகவும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். 

கண்ணனின் அவதாரக் கதைகளைக் கேட்டுக் கேட்டே வளர்ந்த கோதையோ, கண்ணன்பால் ஈர்ப்புக் கொண்டாள். கண்ணனையே கணவனாக வரித்தும் கொண்டாள். தன்னைக் கிருஷ்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தாள்.

அவனையே மணாளனாக வரித்த பின் அவனுக்கு தான் ஈடாக இருக்கிறோமா என்பதை அறிய, வடபத்திரசாயிக்கு மாலை போடும் முன், தான் போட்டு அழகு பார்த்தாள் கோதை. கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணு சித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாதவனின் தோளைத் தழுவும் அந்த மாலையை அவர் மீது கொண்ட காதலால் ஆண்டாள் தம் கழுத்தில் அணிந்து அழகு பார்த்து அதன் பின் பெருமாளுக்கு அனுப்பி வைப்பாள்.

ஒவ்வொரு நாளும் இப்படி நடந்தது. தந்தைக்கு தெரியாமல் அவள் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக இருக்கிறேனா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்தாள். பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்து வந்தாள். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருமுறை பெருமாள் அணிந்திருந்த மாலையில் நீண்ட முடி இருப்பதைக் கண்ட அர்ச்சகர்கள் அதை எறிந்து விட்டு வேறு மாலை கொண்டு வரும்படி ஆழ்வாரிடம் கூறிவிட்டனர். பகவானின் சேவையில் தவறு வந்துவிட்டதே என்று ஆழ்வார் வருந்தினார். மறுநாளும் மாலை தொடுத்து ஆண்டவனுக்கு அனுப்பும் சமயத்தில், அந்த மாலையை ஆண்டாள் அணிவதைக் கண்டார்.

“மலர்களை எல்லாம் பறித்து ஒரே மாலையாகக் கட்டிவிட்டதால், புது மாலை கட்ட, தோட்டத்தில் எஞ்சிய மலர்களும் போதாது. கோதை போட்டுக் கழித்த மாலையையும் பெருமாளுக்குப் போட முடியாதே” எண்ணியபடி இரவில் வெதும்பிய மனதுடனேயே தூங்கிவிட்டார் விஷ்ணு சித்தர். அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஒன்றும் அறியாதது போல, வழக்கமாகத் தனக்கு அணிவிக்கும் மாலை எங்கே எனக் கேட்கிறார். விஷ்ணு சித்தரோ நடந்த கதையைக் கூறி, நிர்மால்யமான மாலையை அணிவிக்க தன் மனம் ஒப்பவில்லை என்று பதிலளித்தார். அதற்கு தனக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையே உகப்பானவை, அதனால் தினமும் ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை எனக்கு சூட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஆண்டவனின் மனதையே கவர்ந்து ஆண்டுவிட்டதால், கோதை,  'ஆண்டாள்' என்றும், "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் போற்றப்பட்டாள். பூமாலை மட்டுமின்றி பாமாலையும் சூடி மகிழ்ந்தாள். ஆண்டாள் மண வயதடைந்த பின்னர் அவளுக்காக செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து வந்தாள்.

இது இப்படியே தொடர, தன் பெண்ணுக்கு மணம் முடிக்கும் காலமும் வந்துவிட்டது என உணர்ந்த விஷ்ணுசித்தர், இதனை ஆண்டாளிடம் தெரிவிக்கிறார்.

ஸ்ரீரங்கப்பெருமாளைத் திருமணம் செய்வதற்காக ஆண்டாள் மார்கழியில் நோன்பிருந்து பக்தியின் சாரமாக திருப்பாவையும். காதலின் வீரமாக நாச்சியார் திருமொழியையும் பாடினார். தன் தந்தையிடமும் இந்த தெய்விகத் திருமணம் பற்றி கூறினார்.

அவளுக்கு மணப்பருவம் நெருங்க, “நீ யாரை மணம் செய்துகொள்வாய்” என்று தந்தை பெரியாழ்வார் கேட்டதற்கு, அவள் பாடிய பாடல் இதோ

“வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தட முலைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே”

இந்த பாடலின் பொருள்:

தேவர்களுக்காக அந்தணர்கள் யாகங்களில் சேர்த்த உணவை காட்டில் திரியும் நரி புகுந்து மோப்பம் பிடிப்பது போல, உடலைப் பிளக்கும் சக்கரமும், சங்கமும் தாங்கிய திருமாலுக்கென்று ஏற்பட்ட என் மார்பகங்கள் மனிதர்களுக்காக என்கிற வார்த்தை காதில் பட்டாலே என்னால் வாழ முடியாது என்று சொல்லிவிட்டாள்.

தன் உடல், பொருள், ஆவி யாவும் பகவானுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அவியுணவே என்பதாக, தனது நாச்சியார் திருமொழியில், தெளிவாக மனஉறுதியுடன் தெரிவிக்கிறாள். தனது உள்ளம் என்றுமே திருவரங்கனின் திருமலர்க் கரங்களைக் கைப்பிடிக்க, கனாக்கண்டு காத்துக் கொண்டிருப்பதாக நினைத்து ஏங்குகிறாள். 

அவன் எந்த ஊரான் என்று பெரியாழ்வார் கேட்டு, திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தையும் சொல்ல, திருவரங்கனின் பெயர் கேட்டதும் நாணினாள். ‘இந்தத் திருமணம் எவ்வாறு சாத்தியம்? அரங்கனோடு மணம் புரிவதாவது’ என்று பெரியாழ்வார் கவலைப்பட அவர் கனவில் பெருமாள் தோன்றி 'அவளை அலங்கரித்துக் கோயில் என்னும் திருவரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று கட்டளையிட்டார்.

திருவரங்கனும் ஒப்புதல் அளித்து நாள் குறிக்க, ஒரு சிறந்த பல்லக்கில் ஆண்டாளை ஏற்றி மேளதாளத்துடன் திருவரங்கம் அழைத்துச் சென்றார் விஷ்ணுசித்தர். ஆழ்வாரும் ஆண்டாளை பல்லக்கில் ஏற்றி வந்தார்.

உண்மையின் உறைவிடமாக விளங்கிய நம்மாழ்வாரை நன்கு அறிந்த பாண்டிய மன்னன் ஆண்டாள் திருமணத்தைச் சிறப்பாக நடத்த விரும்பினான். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரை அலங்கரிக்க ஏற்பாடு செய்தான். காவிரியின் தென்கரையில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்ல விரும்பினாள் ஆண்டாள்,  

இறைவனின் அறிவுறுத்தல்படி பங்குனி உத்திர நன்னாளில் கோயிலுக்கு வந்து சேர்ந்தாள் கோதை. திருமண அலங்காரத்துடன் கோதையை அழைத்துச் செல்ல, அங்கே அரங்கன் அனந்த சயனத்தில் ஆதிசேஷன் மேல் சயன கோலத்தில் காட்சி அளித்தார். ஆதிசேஷனின் உடல் படி போல் சுற்றிச் சுற்றிக் கிடந்ததால், அதில் தன் பிஞ்சுப் பாதங்களை பதித்து ஏறினாள் ஆண்டாள், ஆண்டாள் பாதம் வலிக்குமே என்றெண்ணிய ரெங்கநாதர் அவளை தன் மார்பில் வீற்றிருக்கும்படியாக செய்தார். ஆண்டாள் ரெங்கநாதர் திருமணம் சிறப்பாக நடந்தது. கோயிலின் கருவறைக்குள் சென்ற ஆண்டாள் இறைவனோடு கலந்துவிட்டாள்.

தமிழகத்தில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு ஏற்பது வழக்கம். மார்கழி மாதம் அதிகாலை எழுந்து நீராடி, வீட்டின் முன் கோலம் போட்டு, இறைவனைத் துதித்து வழிபடுவது வழக்கம். இதனைப் பின்னணியாக கொண்டு இயற்றப்பெற்றதுதான் திருப்பாவை நூல். தற்போது ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்கள்தான் பாவை நோன்பு காலத்தில் பாடப்படுகிறது.

ஆண்டவனையே ஆள நினைத்து, ஆண்டதால் 'ஆண்டாள்' என்றும், இவள் சூடிக்கொடுத்த மாலைகளையே அரங்கன் விரும்பி அணிவதால் 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்றும், இறைவனைக் குறித்து நாச்சியார் திருமொழி இயற்றியதால் 'கோதிலாக் கோதை நாச்சியார்' என்றெல்லாம் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுபவள் பக்தி நெறி ஒழுகிய ஆண்டாள். 

வைகுண்ட வாசனுடனே இருந்த பூதேவி பூமியில் அவதரித்து உண்மையின் உறைவிடமாக விளங்கிய நம்மாழ்வாரால் ஆண்டாளாக வளர்க்கப்பட்ட காலத்தில் அவள் பாடிய பாடல்கள் திருப்பாவை 30 பாடல்களும், நாச்சியார் திருமொழி 143 பாடல்களும் அவளது அவதார நோக்கத்தை நிறைவு செய்தது. ஆம் “என்னையே சரணடை” என்று பகவத் கீதையில் கண்ணன் கூறும் சரணாகதி தத்துவத்தைத் தன் பாடல் முழுவதும் விளக்கியுள்ளார். அதனை வலியுறுத்தும் வகையில் 'பறை தருவான்’ என்று உறுதி இட்டு கூறுகிறாள்.

7 ஆம் நூற்றாண்டில் ஒரு பெண், தன் தோழிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகப் பாடிய பாவைப் பாடல்கள் உணர்த்தும் தத்துவங்கள் பல.

ஆண்டாளைப் பற்றி யோசிக்கும்போது அவளை ஒரு அறியா பதின் பருவ பெண்ணாகவோ,  நாராயணனையே நினைந்து அவனுக்கு வாழ்க்கைப்பட பிடிவாதம் செய்யும் பெண்ணாகவோ மட்டும் நினைக்க முடியாது. அவர் பாடல்களிலுள்ள தேர்ந்த புலமையும், சிந்தனையும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. திருப்பாவை மிகக் கடினமான ‘இயற்றர வினை கொச்சகக் கலிப்பா’ வகையைச் சேர்ந்தது.

திருப்பாவை முப்பது பாடல்களையும் படிக்கும்போது ஆண்டாள் பெரும்பாலும் தன் தோழிகளையும், கண்ணனின் உறவினர்களையும், இறுதியில் கண்ணனையும் துயிலெழுப்புவதாகப் பாடுகிறார். அந்தப் பாடல்களில்  பக்தியின் மேன்மை, கற்பனை, இலக்கியச் செறிவு, விஞ்ஞான தத்துவம் என ஆண்டாளின் திருப்பாவைப் பாடல்கள் தன்னிகரில்லாதவையாகும்

பெண்களே, நீங்கள் வெறும் போகப் பொருள்களல்ல; பகவானையே எழுப்பி நீங்கள் விரும்பும் பறையைக் கேட்கலாம். புறத்தூய்மையாலும் அகத்தூய்மையாலும் அவனை அடைய உங்களால் முடியும் என்று பாடி எழுப்பும் பாசுரங்கள் நம்மை அறியாமையாகிய தூக்கத்தில் இருந்து மெய் ஞானமாகிய விழிப்பு நிலைக்கு அழைத்துச் செல்லும்.   

இப்பாசுரங்களின் பெருமையை உணர்ந்த வசுமதி என்பவர், ஆண்டாளின் திருப்பாவையை பிரெஞ்சில் மொழி பெயர்த்தார். ‘Le Tiruppavai ou Le chant matinal de Margali’ என்னும் இந்த நூலை பாரிசின் எடிசன்ஸ் பான்யன் பதிப்பகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. இவர்களது பணியால் பிரெஞ்சு மொழி பேசும் மக்களுக்கும் தமிழை ஆண்ட ஆண்டாளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

மாதங்களில் மார்கழி மாதம் தலைசிறந்து விளங்குகிறது. இத்தகைய சிறப்புகள் பொருந்திய மார்கழியில், நாட்டுக்கும், வீட்டுக்கும், தன்னைப்போன்ற அனைத்துப் பெண்களுக்கும் நன்மை ஏற்படும் விதமாக ஆண்டாள் கடைப்பிடித்த நோன்பே, மார்கழி நோன்பாக இன்றளவும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் கடைப்பிடிக்கப்பட்டு போற்றுதலுக்கு உரியதாயிற்று. 

நோன்பினை நோற்கும் மகளிர், சில விதிமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகினர் என்பதை, ஆண்டாள் அருளிய சங்கத் தமிழ் மாலையாம் திருப்பாவையின் வாயிலாக அறிய முடிகிறது. பொழுது விடிவதற்குரிய அறிகுறிகளாக கீழ்வானம் வெளுப்பதும், பறவைகள் ஒலிப்பதும், கோழி கூவுவதும், முனிவர்களும் தேவர்களும் துயிலெழுந்து எம்பெருமானின் பெயரை முழங்குவதாகவும் விடியல் பொழுதின் அடையாளங்களாகக் குறிப்பிடும் ஆண்டாள், அதற்கெல்லாம் முன்பாகவே எழுந்து விரத நியமத்தை முடிக்கவேண்டி, ஆயர்பாடிப் பெண்களைத் துயிலெழுப்புகிறாள்.

அவளது பாடல்கள் தெய்விகத்தன்மை கொண்டவை என நம்பப்படுவதால், மழை வேண்டி பாடப்படும் ஆழிமழைக் கண்ணா என்ற திருப்பாவைப் பாடல் இன்றும் பள்ளிகளில் மாணவர்களால் கோடைக் காலங்களில் பாடப்படுகிறது. ஆண்டாளின் நான்காவது திருப்பாவையில் ஓர் அற்புதமான மழைக்காட்சியும் விஞ்ஞானக் குறிப்பும் உள்ளது.

ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்

ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்

பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்

ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

மழை மண்டலத்துக்குத் தலைவனாக விளங்கும் கண்ணனே! உன் கொடையில் எதையும் நீ ஒளிக்காமல் அருள வேண்டும். நீ செய்ய வேண்டிய பணி ஒன்றும் உண்டு. அது, நீ கடலினுள் புகுந்து, அங்கிருந்து நீரினை முகந்து கொண்டு பேரொலி எழுப்பி கர்ஜனை செய்து, ஆகாயத்தின் மேல் ஏறி, ஊழி காலம் முதலான அனைத்துக்கும் காரணனாக விளங்கும் எம்பெருமானின் திருமேனியைப் போலே கறுத்து, பெருமை பொருந்திய சுந்தரத் தோளுடையானும், நாபியிலே கமல மலர் கொண்டு திகழும் பெருமானின் வலக்கையிலே திகழும் சக்கரத்தாழ்வானாகிய திருவாழியைப் போலே ஒளிர்ந்து, இடது கரத்தில் திகழும் பாஞ்சஜன்யப் பெரும் சங்கினைப் போலே நிலை நின்று முழக்கி, உன் சார்ங்கம் ஆகிற வில்லில் இருந்து விரைந்து புறப்படும் அம்புகளைப் போலே, இந்த உலகத்தார் அனைவரும் வாழும்படியாகவும், கண்ணன் எம்மானுடன் கலந்து மகிழ நோன்பு நோற்கும் நாங்களும் உளம் மகிழ மார்கழி நீராட்டம் செய்யும்படி, தாமதம் ஏதுமின்றி மழை பொழிய வைத்திடுவாய்... என்று கண்ணனை வேண்டுகிறார் ஆண்டாள்.

மழை எப்படிப் பொழிகிறது என்ற அறிவியல் நுட்பத்தைத் தம் பாசுரத்தில் புகுத்தி, அதற்குக் காரணம் கண்ணனே என்று கூறி, அனைவரும் அவனைப் பிரார்த்தனை செய்யப் பணிக்கிறார் ஸ்ரீஆண்டாள் நாச்சியார்! மழை எப்படிப் பெய்கிறது என்று ஆண்டாள் விவரிக்கும் இந்தக் கருத்தை இன்றைய வானிலை நிபுணர்கள் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

கவிதைத் திறமையால் திருமாலின் கரிய உடல் சங்கு சக்கரம் இவைகளோடு மழையை ஒப்பிட மற்றதில் மழை பெய்வதன் இயற்கையான விளக்கத்தைத் தப்பில்லாமல் தருகிறார். அந்த 7 ஆம் நூற்றாண்டில் ஒரு பதின்பருவப் பெண்ணுக்கு இந்த விஞ்ஞானம் தெரிந்திருந்தது உலக அதிசயமே.

கண்ணன் மேல் ஆசைப்பட்டு, அவனை விரும்பிப் பாவை நோன்புற்று ஆண்டாள் பாடிய  ‘வாரணமாயிரம் சூழ வலம் செய்து’ என்று துவங்கும் நாராயணனுடைய திருமந்திரத்தைப் பற்றிய பாசுரங்களை இன்று வரை தெலுங்கினைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் ஆந்திரத்தில் பாடுகின்றனர்.

ஆந்திரத் திருமலையில் திருக்கல்யாண உற்சவத்தின்பொழுது, ஆண்டாளின் வாரணமாயிரம் என்ற தமிழ்ப் பாசுரம் பாடப்படுகிறது. பேரரசர் கிருஷ்ண தேவராயர் இயற்றிய தெலுங்குக் காப்பியமான ‘ஆமுக்த மால்யதா’ (சூடிக்கொடுத்த சுடர்க்கொடி) மிகவும்  குறிப்பிடத்தக்கது.

ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்தான கண்ணனை மணப்பதையே எண்ணிக் கொண்டிருப்பதற்கு சிகரம் வைத்தது போன்றது திருப்பாவை. ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப்படுகின்றன. திருப்பாவை என்பது பின்னர் வைத்த பெயராக இருக்கலாம். முதலில் இதற்கு ‘சங்கத் தமிழ் மாலை’ என்றுதான் பெயர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பாவை நோன்புக்கு அடிப்படை தமிழ்நாட்டின் பழைய வழக்கத்தை தழுவியது. இந்த நோன்பு சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, பரிபாடல்களில் பாவை நோன்பும் தைந்நீராடலுமாகக் குறிப்பிடப்படுகிறது. ‘தைந்நீராடல்’ என்றாலும் மார்கழித் திங்களில் பௌர்ணமியில் திருவாதிரையில் தொடங்கியதால் இந்த நீராடல் தை மாதத்தில் தொடர்ந்தது. அதனால் தைந்நீராடல் என்பதும் பொருந்தும் என்று இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார். எப்படியும் மகளிரின் பாவை நோன்பு பழந்தமிழ் வழக்கம் என்பதில் சந்தேகமில்லை.

கண்ணனை அனுசரித்த பெண்ணாகப் தன்னை பாவித்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகக் கொண்டு வடபெரும் கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும் அதில் உள்ள தெய்வத்தை கிருஷ்ணனாகவும் பாவித்து அந்தப் பெண்கள் செய்த பாவை நோன்பை ஆண்டாள் தான் செய்வதாக பாவித்து பாடிய முப்பது பாட்டுகளில் இராமானுஜருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஆண்டாள் பாவையில் பாடி சென்றதைப் பின் நாள்களில் நிறைவேற்றியுள்ளார். அதனால் அவரை திருப்பாவை ஜீயர் என்று சிறப்பித்து அழைத்தனர்.

ஆண்டாளின் பாவை நோன்புக்கான கிரிசைகள் (காரியங்கள்) எளிமையானவை. எல்லாப் பெண்களும் கடைப்பிடிக்கக் கூடியவை.

நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.

”நெய் கிடையாது, பால் கிடையாது, கண்ணுக்கு மை கிடையாது. கூந்தலுக்கு மலர் கிடையாது. செய்யக்கூடாத காரியங்களைச் செய்ய மாட்டோம், கோள் சொல்ல மாட்டோம் அதிகாலையில் குளித்துவிட்டு தகுந்தவர்களுக்குப் பொருளும், பிச்சையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு கொடுப்போம். இப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது எம் பாவை நோன்பு"
அதற்காகத் தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்களில் இருக்கும் நுட்பமான விளக்கங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.

திருப்பாவையில் பொழுது விடிவதற்குரிய அடையாளங்கள் பல கூறப்பட்டுள்ளன. அவை, கீழ்வானம் வெளுப்பது, கோழி கூவுவது, பறவைகள் ஒலிப்பது, முனிவர்களும் யோகிகளும் துயிலெழுந்து செல்வது போன்றவை. காலை நேரத்தின் பலவித சப்தங்களையும் நடைமுறைகளையும் இயல்பாகச் சொல்லுகிறது.

கோதையின் பாவை நம்மை எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது..

'திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே
 திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
 பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
 பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
 ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
 உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
 மருவாரும் திருவல்லி வள நாடி வாழியே
 வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே'

என்று ஆண்டாளை வாழ்த்தி வணங்க செய்கிறது.. ஆன்மாக்கள் எல்லாம் உய்யும்படி எளிய முறையான சரணாகதி தத்துவத்தை காட்டிய கோதை பிராட்டியின் திருவடிகளைப் போற்றுவோம்.

[கட்டுரையாளர் - நூலகர் மற்றும்

நூலக அறிவியல் துறைத் தலைவர்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com