மத்திய பட்ஜெட்: தனிநபர் வரி விதிப்பில் பெரிய சலுகைகள் இல்லை

மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வரிவிதிப்பில் பெரிய சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மத்திய பட்ஜெட்: தனிநபர் வரி விதிப்பில் பெரிய சலுகைகள் இல்லை
மத்திய பட்ஜெட்: தனிநபர் வரி விதிப்பில் பெரிய சலுகைகள் இல்லை

மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வரிவிதிப்பில் பெரிய சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

பிப்ரவரி 1, 2021-க்குப் பிறகு எடுக்கப்பட்ட புதிய காப்பீட்டுத் திட்டங்கள் அல்லது காப்பீட்டுத் தவணைகள் எந்த ஆண்டிலும் ரூ.2.5 லட்சத்தை தாண்டினால் புதிய யூனிட் - இணைக்கப்பட்ட காப்பீட்டுக் கொள்கைகள் (யுலிப்ஸ்) முதிர்வுக்கு மூலதன ஆதாயங்களாகக் கருதப்பட்டு வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் தனிநபர் வரி செலுத்துவோருக்கு குறிப்பிடத்தக்க புதிய நிதி நிவாரணம் எதுவும் இல்லை. அநேகமாக, குறிப்பிட்ட பொருள்களை வாங்குவதற்கு எல்.டி.சி. செலவழித்த விலக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் சொத்து வாங்குவதற்கான முத்திரை வரி மதிப்பீட்டிலிருந்து 20% அதிக மாறுபாட்டை அனுமதிப்பது போன்ற சில தளர்வுகள் முந்தைய பட்ஜெட்டில்  அறிவிக்கப்பட்டிருந்தன. அவை இந்த பட்ஜெட்டில் நடைமுறைக்கு வருகின்றன. 

அதேவேளையில், ஒரு சில நிர்வாக ரீதியிலான தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

அத்தகைய ஒரு தளர்வாக, தனிநபர் வரி செலுத்துவோர் ரூ.50 லட்சம் வரை வருமானம் மற்றும் ரூ. 10 லட்சம் வரை சச்சரவுகளுக்குரிய வருமானம் கொண்ட வரி செலுத்துவோருக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டதே தீர்ப்பாய அமைப்புகள் (டி.ஆர்.சி) ஆகும். தீர்ப்பாய அமைப்புகளின் முன் அனைத்து நடவடிக்கைகளும் அடையாளமற்றதாகவும் அதிகார வரம்பு குறைவாகவும் இருக்கும். சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோருக்கு ஆரம்ப கட்டங்களில் சச்சரவுகளைத் தீர்ப்பதற்கான உந்துதலை இது வழங்கும்.

அனைத்து இரண்டாம் நிலை மேல்முறையீட்டு வழக்குகளுக்கும் தேசிய அடையாளமற்ற வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய குழுக்கள் அமைக்க முன்மொழியப்பட்டது.

மற்றொரு நிவாரணமாக, 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியதில்லை. அதாவது, அவர்கள் ஓய்வூதியம் மற்றும் வங்கி வட்டி மூலம் மட்டுமே வருமானத்தைப் பெறுபவர்களாகவும், அதுவும் வங்கி வட்டி அவர்கள் ஓய்வூதியத்தைப் பெறும் அதே வங்கியிலிருந்தே பெறும் வகையில் இருக்க வேண்டும். 

இவ்வாறு ஓய்வூதியம் மற்றும் வங்கியின் வட்டி மூலம் வருவாய் ஈட்டும் 75 வயதுக்கு மற்பட்டவர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சேமிப்புக் கணக்கிலிருந்து வங்கியே அவர்களுக்கான வரியை கழித்துக் கொள்ளும்.

பாதுகாப்பு மற்றும் பணப்புழக்கத்தை உறுதி செய்வதற்காக, பெரும்பாலான மூத்த குடிமக்கள் பல வங்கிகளில் வைப்பு வைத்திருப்பதால், இந்த நன்மை மிகச் சிலருக்கு மட்டுமே பொருந்தலாம். மூத்த குடிமக்களுக்கு பரஸ்பர நிதி, முதலீட்டு வரவுகள், வாடகை அல்லது மூலதன ஆதாயங்கள் ஆகியவற்றிலிருந்து வருமானம் இருந்தால், அத்தகைய வருமானம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அவர்களுக்கு இந்த தளர்வால் நன்மை கிடைக்காது.

கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கான வட்டி வரிச்சலுகையை மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும் அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

அதன்படி இந்த சலுகையின்கீழ் வீட்டுக்கடன் பெற்று வட்டி செலுத்துவோருக்கு ரூ.1.5 லட்சம் கூடுதல் வரி சலுகை வழங்குவது 2022 மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. 

இந்த அறிவிப்பால் கரோனா பொதுமுடக்கத்தால் மந்த நிலையில் இருக்கும் கட்டுமானத் துறை புத்துணர்ச்சி பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு ஓய்வூதிய நிதி உள்ள நபர்களுக்கு ஒரு நல்ல செய்தி!  

வெளிநாடு வாழ் இந்தியா்கள் நாடு திரும்பும்போது சந்தித்து வரும் இரட்டை வரி விதிப்பு முறை சிக்கலை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகளை வருமான வரித் துறை வெளியிடும் என்ற அறிவிப்பும் அதில் ஒன்று. 

தாமதமாக, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 3 மாதங்கள் குறைக்கப்படுகிறது. வருமானவரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இதுவரை மார்ச் 31-ஆம் தேதியாக இருந்த நிலையில், இதனை இப்போது டிசம்பர்  31ஆகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சிறப்பாக, மாத வருமானம், வங்கி கணக்கு, வரி செலுத்துதல் மற்றும் டி.டி.எஸ். விவரங்கள், முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கு ஆகியவற்றுடன், இனி வங்கி மற்றும் அஞ்சலகக் கணக்குகளின் மூலதன ஆதாயங்களும் முன் நிரப்பப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com