கிழித்தெறிந்து கொல்லப்பட்ட உலகின் முதல் பெண் கணித விஞ்ஞானி ஹைபடியா!

மதிப்பு தரும்படியான அமைதியான தோற்றம் கொண்ட ஹைபடியா, மிகவும் துணிச்சல் நிறைந்தவர். பெண்கள் போல உடை உடுத்துவதை வெறுத்தவர். எப்போதும் ஆண் தத்துவஞானிகள் போலவே நீண்ட அங்கியையே அணிவார்.
கணித விஞ்ஞானி ஹைபடியா
கணித விஞ்ஞானி ஹைபடியா

பண்டைய காலத்தில்  கிரேக்க நாடுதான் தத்துவம், அறிவியல் போன்றவற்றில் சிறந்து விளங்கியது. அக்கால உலகின் பெரும்பான்மையான தத்துவஞானிகளும் அறிஞர்களும் கிரேக்கர்களாகவே இருந்தனர். நம்மில் தத்துவஞானிகள் பெயரைக் கேட்டால், பிளேட்டோ, சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், யாக்ஞவல்கிய, கன்பூசிஸ் என நீண்ட தாடிவைத்த ஆண்களையே பெரும்பாலும் பட்டியலிடுகிறோம். யாரும் பெண்களின் பெயரை நினைத்துக்கூட பார்ப்பதில்லை. இது ஏன்? பெண், கேள்வி ஞானத்தில் திறமையற்றவர்கள், பகுத்தறிவாளர்களில்லை என்ற எண்ணமா?  நம்மில் பெரும்பாலோருக்கு பெண்கள் பற்றிய எண்ண ஓட்டமே வருவதில்லை.
 
மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட கதாநாயகி

ஃபிலாசபி ('Philosophy') என்ற ஆங்கில வார்த்தைக்கு 'தத்துவம்' என்பதே பொருள். ஃபிலாசபி என்பது ஒரு கிரேக்க  வார்த்தை. இதற்கு அறிவை நோக்கிய காதல் என்று பொருள். இந்த அறிவை நோக்கிய ஈர்ப்பு, உலகின் சரிபாதியாக ஆண், பெண் இருவருக்குமே ஏற்படலாம். ஆனால், பொதுவாக இதில் பெண்ணைப் பற்றிய பதிவுகள் குறைவாகவே உள்ளன. அப்படிப்பட்ட அரிதான பெண்களில் ஒருவர்தான் ஹைபடியா (Hypatia) என்ற முதல் கிரேக்கப் பெண் தத்துவஞானி.

உலகில் அறியப்பட்ட முதல் பெண் கணித விஞ்ஞானியும், முதல் பெண் ஆசிரியரும், வல்லுநரும், வானியல் கணிப்பாளரும், தத்துவஞானியும், கணிநூல் (சோதிடம்) முன்னோடியும், பிதாமகளும் இவரேதான். கலாசாரங்களாலும், பழங்கால கிரேக்க நாகரிகங்களாலும் மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட  கதாநாயகி.

ஹைபடியாவும்  அலெக்சாண்டிரியாவும்

ஹைபடியாவின் வாழ்க்கை, அறிவியல் மேல் தீராத வேட்கை கொண்டது. ஹைபடியா அலெக்சாண்டிரியாவில் கி.பி. 350 – 370-க்குள், தியோனின் அன்பு மகளாகப் பிறந்தார். இவர் பிறந்த ஆண்டு 355 ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எந்த  நாள் என்பது பற்றிய தகவல் ஏதும் இல்லை. அது போலவே அவரது அன்னை பற்றிய தகவலும் இல்லை. இவர் தியோனின் ஒரே மகள் என்றும், 12 குழந்தைகளில் மூத்தவர் என்றும் பலவாறாகக் கூறப்படுகிறது. இவரின் குழந்தைப் பருவம் பற்றி ஏதும் அறியப்படவில்லை.

அப்போதைய அலெக்சாண்டிரியா நகரம் ஏதன்ஸ் நகர் போல மூன்று மடங்கு பெரியது. செல்வந்தர்களும் அறிவாளிகளும் வாழ்ந்த ஆடம்பர, சிங்கார ஊர் அது. அழகு கொழிக்கும் நகர், தெருக்களில் பளபளக்கும் சலவைக்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அங்கே கல்லூரி இருந்தது. உலகின் பெரிய நூலகமும் அங்குதான் இருந்தது. சுமார் 5 லட்சத்துக்கும்  மேற்பட்ட புத்தகங்களின் தொகுப்புகள் அங்குதான் இருந்தன என்ற பதிவும்கூட உள்ளது. அறிவாளிகள், புலமை மிகுந்தவர்கள், வரலாற்றியலாளர்கள் மற்றும் தத்துவத்தில் கைதேர்ந்த வல்லுநர்கள் சந்தித்து, கருத்து பரிமாறிக்கொள்ளும் இடமாக இருந்தது அலெக்சாண்டிரியா. ஹைபடியாவின் தந்தை தியோன், அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
 
ஹைபடியா - தந்தையின் வளர்ப்பு

இரண்டு முழு கிரகணங்கள் வந்தபோது, தியோன் அதனைப் பதிவு செய்திருந்தார். அந்தக் காலத்தில் பிறந்தவர் ஹைபடியா என்று சொல்லப்படுகிறது. அது (கி.பி. 355) 5 ம் நூற்றாண்டின் சாக்ரடீஸ், ஹைபடியா இறக்கும்போது முதிர்ந்த பெண், 65 வயது இருக்கலாம் என்றே குறிப்பிடுகிறார். ஹைபடியா, கிரேக்கத்தின் மற்ற பெண்கள் போல் வளர்க்கப்படவில்லை. தியோன், மகளின் மீது பாசத்தைப் பொழிந்தார். அவர் ஒரு பேராசிரியர் மற்றும் தத்துவஞானி என்பதால், அவர் மூலம் மகளுக்கு உலகை அறிய உதவினார்.  கற்பித்தலின் அடிப்படை விதிகளையும் சொல்லிக் கொடுத்தார். உடல் ரீதியான ஒழுங்குமுறைகள், உடல் நலம் மற்றும் மனரீதியான கட்டுப்பாடுகளைக் கற்றுத் தந்தார். சொல்லாடலின் செப்பிடு வித்தைகளை அற்புதமாய் மகளுக்குச் சொல்லித் தந்தார். பிளேட்டோ, பித்தாகரஸ் படித்த பள்ளியில் படித்தார் ஹைபடியா. இங்கே பொதுவாகப் பெண்கள் கல்வி பயில்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மனிதர்கள் போற்றும் மாமேதை

ஹைபடியா சொல்லாற்றலின் பேரரசி. அருகிலுள்ள மற்ற நகரங்கள் மற்றும் நாடுகளிலிருந்து, அவரின் சொல்வன்மை அறிந்து, கல்வி கற்க அவரை நாடி ஓடோடி வந்தனர். கணிதத்தை சுத்த ஆய்வு நோக்குடன் கேள்விக் கணைகளோடு தொகுத்து தன் மாணாக்கர்களுக்கு கற்றுத் தந்தார். கணிதம் என்ற விஞ்ஞானம், அறிவியல் மற்றும் மதத்தினை இணைக்கும் அற்புதமான பாலம் என்றே ஹைபடியா கருதினார்.  

பார்வைக்கும் பழகுவதற்கும் இனியவர் ஹைபடியா. ஆராய்ந்தறியும் மனப்பான்மையைக் கொடையாகக் கொண்டவர். அறிவின் காதலி; பெரும்பாலான மக்களின் மனதை வெற்றிகொண்டவர்; நெஞ்சம் நெகிழ வைக்கும் வனப்பு நிறைந்தவர்; கடவுள் நம்பிக்கை இல்லாதவர். கிறிஸ்துவ மதம் கோலோச்சத் துவங்கிய காலத்தில், ஹைபடியாவின் புகழ் பரவியது. இவர் பாசனிசத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அனைத்து மக்களாலும் மதிக்கப்பட்டார்; போற்றப்பட்டார். புதிய பிளேட்டோனிசத்தின்  தலைவரானார். ஹைபடியாவின் சமகால ஆண் தத்துவஞானிகள் அனைவரையும்விட ஹைபடியா மிகச் சிறந்த அறிவாளி என்று 5ம் நூற்றாண்டு சாக்ரடீஸ் மற்றும் 10ம் நூற்றாண்டு பைசாண்டின்னஸ் போன்றோரால் பாராட்டப்பட்டார். 

தேன்மலரை நாடும் வண்டாக...

எப்போதும் தந்தை தியோனுடன் அருங்காட்சியகத்தில் இருக்கவே பிரியப்படுவார். அவருடன் இணைந்து பணி செய்ய, படிக்க, தியோனின் சக பணியாளர்களுடன் சமமாக விவாதம் செய்ய ஹைபடியாவுக்கு கொள்ளைப்பிரியம். மூன்றாம் நூற்றாண்டின் தத்துவவாதிகளை ஹைபடியா பின்பற்றினார். அலெக்சாண்டிரியா நகரில் ஒழுக்க ரீதியான அதிகாரம் பெற்றவர். அந்நகரில் பரந்துபட்ட செல்வாக்குடையவர். செல்வந்தர்களும் அவர்களின் குழந்தைகளும் அதிகாரிகளின் பிள்ளைகளும் ஹைபடியாவிடம் கல்வி பயில பல நாடுகளிலிருந்து வந்தனர். ஹைபடியாவிடம் படித்த மாணவர்களில் பெரும்பாலானோர் பின்னால் கிறிஸ்துவ திருச்சபையில் பெரிய பதவிகளில் பொறுப்பேற்றனர்.

துணிச்சலான, நற்பண்புகளின் நாயகி

மதிப்பு தரும்படியான அமைதியான தோற்றம் கொண்ட ஹைபடியா, மிகவும் துணிச்சல் நிறைந்தவர். பெண்கள் போல உடை உடுத்துவதை வெறுத்தவர். எப்போதும் ஆண் தத்துவஞானிகள் போலவே நீண்ட அங்கியையே அணிவார். நிறைய கிறிஸ்துவர்களால் மதிக்கப்பட்டு மரியாதை செய்யப்படுவதுடன், நற்பண்புகளின் அடையாளமாகக் கற்பொழுக்கம் நிறைந்த பெண்ணாக பார்க்கப்படுகிறார். கிரேக்க தத்துவவாதி 'கிசிடோர்' என்பவரின் மனைவி என சொல்லப்பட்டாலும்கூட ஹைபடியா, இறக்கும்வரை கன்னித்தன்மையுடன் வாழ்ந்தவர். அவரின் அழகை ஆராதித்தனர் மக்கள்.  அவரை மணம் செய்யச் தொந்தரவு செய்தவர்களிடமும்கூட பாலியலில் பெரிதாக ஏதும் இல்லை எனத் தெளிவாகக் கூறி நேர்மையாக உறுதியாய் மறுத்தவர். 

திண்ணிய எண்ணத்தினர்

'நினைப்பது, எண்ணுவது எல்லாம் உங்களின் உரிமை. பாதகமாக, தவறாக நினைத்தாலும் கூட பரவாயில்லை. ஒன்றுமே நினைக்காமல் இருப்பதைவிட எதையாவது எண்ணுவது மேல்' என மூளையைக் கசக்கி கற்பனையை, கருத்தாலும் சொல்லாலும் போதித்தவர் ஹைபடியா. உண்மைகளை அறிய உதவும் ஒரே கருவி கல்விதான் எனப் பலமாக நம்பினார். அறிவியலை தர்க்கரீதியாக முறைப்படுத்தி ஆராய்ந்தறிந்தார். பொதுவாகப் பிரச்சினைகளில் தலையிடுவதன் மூலமே அறிவினைத் தேட முடியும் என்றார்.

குருவை மிஞ்சிய சிஷ்யை

ஹைபடியா முதலில் அப்பாவுக்கு உதவியாகக் கணித ஆராய்ச்சியில் இறங்கினார். தாலமியின் கருத்துகளை, எழுத்துகளைப் பதிப்பு எடுக்கவும், திருத்தியமைக்கவும் உதவினார். தியோன் கிரேக்க இலக்கியங்களில் ஆர்வம் உள்ளவர்; எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என நம்பிய தத்துவவாதி. ஆனால், ஹைபடியா அறிவியலில், எதனையும் சான்றுகள் மூலமே நிரூபிக்க முடியும் என்ற ஆழமான கருத்துக் கொண்டவர். எண் கணிதக் கொள்கைகளை உருவாக்கியவர்.  இயல் கணிதத்திலும் விற்பன்னர். தியோன், ஹைபடியா இருவரும் இணைந்து எழுதிய புத்தகங்களில் அடிக்குறிப்பில் தியோன், "என் மகளும் தத்துவஞானியுமான ஹைபடியாவால் வாசிக்கப்பட்டு திருத்தியமைக்கபட்டது" என எழுதியிருந்தார். சிறுவயதிலேயே தந்தையை விஞ்சிய அறிவாளி ஹைபடியா.

அச்சமில்லாத நெஞ்சத்தின் திறமைகள்

அலெக்சாண்டிரியா நகரின் கட்டமைப்பும், மக்களின் வாழ்விடங்களும், சமூக வகுப்பு ரீதியாகவே உருவாக்கப்பட்டு இருந்தன. யூதர்கள், கிறிஸ்துவர்கள், பாகர்கள், ஹெரடிக்ஸ் எனத் தனித்தனி சமூகமாகவே வாழ்ந்தனர். உயர்குடி மக்கள், வர்த்தகர்கள், கல்வியாளர்கள், அதிகாரிகள் நகரின் மையத்தில் வாழ்ந்தனர். அந்த காலகட்டத்தில், கிறிஸ்துவர் பெரும்பாலோர் ஏழையாக இருந்தனர்; போதுமான கல்வியறிவும் இல்லை. கிறிஸ்துவரல்லாதோர், படித்தோராகவும் செல்வந்தர்களாகவும் இருந்தனர். ஹைபடியா கற்றவர்களால் பெரிதும் காதலிக்கப்பட்டார். கல்வி நிறுவனத்தில், பிளேட்டோனிச முறையில் கல்வியும் தத்துவமும் போதித்தார்.

பெரிய அரங்குகளின் கருத்தரங்கத்தின் பங்குகொண்டு விவாதிப்பார். அடிக்கடி பொதுமேடையில் ஏறி ஆணுக்கு இணையாக பிரசங்கம் செய்வார். ஆண்களின் கூட்டத்திடையே போகவும், தைரியமாய் பேசவும் தயங்காதவர். இசையில் தன்னை மறந்து ஈடுபடுபவர். இவ்வளவு பெருமைகளை ஒரு பெண் பெறுவதா எனப் பொறாமையில் அவதூறு பேசியோரும் உண்டு.

கண்டுபிடிப்புகள்

சைர்ன் என்ற நகரில் வாழ்ந்தவர் சைனிசியஸ். இவர் ஹைபடியாவின் மாணவர். இவரே பிற்காலத்தில் கி.பி.410-ல் கிறிஸ்துவ போதகர் ஆகிறார். ஆசிரியர் ஹைபடியாவிடம் கடைசி வரை கடிதத் தொடர்பு வைத்திருந்தார். வான் பொருள்களான சூரியன், சந்திரன், விண்மீன் போன்றவற்றில் காணப்படும் கோணம் அறிய 'அஸ்ட்ரோலாப்'(Astrolabe) என்ற வானியல் அளக்கும் கருவியினைக் கண்டுபிடித்தவர்.

திரவங்களின் அடர்த்தி, ஈர்ப்பு ஆகியவற்றின் தொடர்பு அறிய நீர்ம எடைமானியைத் (Hydrometer) தானே உருவாக்கினார். நீருக்குள் கிடக்கும் பொருட்களை கண்டறிய 'நீர்ம நோக்கி'யை (Hydroscope) உருவாக்கினார். இதன் தகவல்கள் அறிந்த போதகர் சைனிசியஸ், ஹைபடியாவுக்கு இவற்றை எப்படித் தயாரிப்பது என்று கேட்டுக் கடிதம் எழுதியுள்ளார். தியோனும் ஹைபடியா இருவரும் இணைந்து, தயாரித்த அறிவியல் கண்டிபிடிப்புகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளனர். கூம்பின் குறுக்கு வெட்டு விதிகளையே அதிகம் எழுதியுள்ளனர் என 5ம் நூற்றாண்டின் டமாஸ்டியச் தெரிவிக்கிறார். 

தன்னிகரற்ற கலங்கரை விளக்கு

ஹைபடியா மேலும் படிக்க ஏதன்ஸ் சென்றதாகச் சொல்லப்படுகிறது. எப்போதும் வெற்றியின் கிரீடத்தை அணிந்திருக்கும் ஹைபடியா ஒவ்வொரு ஆண்டும் முதல்நிலை பட்டதாரிகளை உருவாக்கி அனுப்பினார். நகரின் அரசியல் தலைவர்களுடனும் வணிகர்களுடனும் அச்சமின்றித் தொடர்பு வைத்திருந்தார். சாதாரண மக்களுடன் அவ்வளவாக நெருக்கம் இல்லை. குதிரை பூட்டிய  நான்கு சக்கர ரதத்தினை தானே ஓட்டும் திறமைசாலி. அவரது காலத்தில் அவரைப் போல் கருத்துகளைத் துல்லியமாக, தெளிவாக எளிதில் புரியும்படி பாடம் போதித்தவரும் எழுதியவரும் யாருமே இல்லையாம். இவரது வகுப்பறை எப்போதும் கலகலப்பாகவே இருக்குமாம். மாணவர் வினா எழுப்ப,   ஹைபடியா விடைதர, வகுப்பறை எப்போதும் விவாத மேடையாக, கலந்துரையாடல்கள் கொண்டதாகவே இருந்ததாம். அந்தக் காலத்திலேயே மாணவர்களைக் கேள்வி கேட்க அனுமதித்த வித்தியாசமான வித்தகர். 

நூலக, நிர்வாகத் தலைமை

ஹைபடியாவின் எழுத்துகளும் புலமையும் அறிவுத்திறனும் தத்துவ ஞானம், செயல்பாடுகளும் பற்றி அவரது சீடர்களும் அவர் காலத் தத்துவவாதிகளும் அவரைப் பற்றி எழுதியதன் மூலமே அறிய முடிகிறது. கி.பி 642ல் அலெக்சாண்டிரியா நூலகம் 5,00,000 மேற்பட்ட புத்தகங்களுடன் அரேபியர்களால்  பட்டாசு கொளுத்திக் கொண்டாடப்பட்டது.  புத்தகங்கள் தீநாக்குகளால் தீண்டப்பட்டு சாம்பலாயின. ஹைபடியாவின் பெரும்பாலான எழுத்துகள் இதில் எரிந்துபோயின. கி.பி. 400-ல் ஹைபடியா, அலெச்சாண்டிரியா நூலகத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பை முறைப்படி ஏற்றார். அதற்கான ஊதியமும் பெற்றுக்கொண்டார்.

ஹைபடியாவின் புத்தகம்

ஹைபடியா தந்தை தியோனுடன் இணைந்து ஏரளமான புத்தகங்கள் எழுதியுள்ளார். அக்காலத்தில் யாரும் தனியே புத்தகம் வெளியிட முடியாது. பொதுவா ஹைபடியா வானவியலைவிட அதிமாகக் கணிதம் பற்றியே எழுதியுள்ளார். அவற்றில் சில, பாண்டலின் கணிதம் பற்றிய 13 தொகுப்புகள் (கூம்பு வடிவம் தொடர்பு)  'கூம்புகள்' பற்றிய மறுபதிப்பு. நீள்வட்டம், பரவளையம், அதிபரவளையம் பற்றி எளிமையாக அறிந்துகொள்ளும் வழிகள் போன்றவை அவை.

தாலமியின் வானியல் கொள்கைகளை விளக்கிய வானியல் சட்ட விதிகள், கணிதம் மற்றும் வானவியல் தொகுப்புகள், கோள்கள் நகர்வது பற்றிய தகவல் தொகுப்புகள், எலூட்டின் தனிமங்கள் பற்றிய மறுவாசிப்பு புத்தகம் என ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஹைபடியா, தியோனின் – 'வான்கோணம் அறியும் கருவி' பிற்கால மத்திய கால வானவியலாளர்களுக்கு அடிப்படை வழிகாட்டியாக விளங்கியது.
இயல் கணிதம் மற்றும் எண் கணிதம், மொழியியல் மற்றும் வானஇயல் போன்றவற்றில் மிகவும் சிறந்து விளங்கியவர் ஹைபடியா.

பிஷப் சைரிலின் தவறான கருத்து

ஹைபடியாவின் சமகாலத்திலும், அவருக்குப் பின்னரும் 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவவாதி சாக்ரடீஸ், ஹைபடியா பற்றி கூறியது:

'சைரிலின் சரில்' என்ற கிறிஸ்துவ மதபோதகர் கி.பி. 410ஆம் ஆண்டு  பொறுப்பேற்றார். அப்போது 'ஓரஸ்டஸ்' என்பவர்தான் நகர ஆட்சியாளர் / கவர்னர். ஓரஸ்டஸின் அழைப்பின்பேரில் அவருடன் அறிவுபூர்வமான விவாதம் செய்ய, அவரை அடிக்கடி சந்திப்பார் ஹைபடியா. இதனையொட்டி சைரிலினுக்கும் ஓரஸ்டஸுக்கும் கருத்து வேறுபாடுகள் உருவாயின.

ஓரஸ்டஸுடனான நட்புக்கு ஹைபடியாவே தடை என சைரிலின் கருதினார். ஓரஸ்டஸ், ஹைபடியாவின் நட்பை சைரிலின் வெறுத்தார். ஹைபடியா வானவியல், அறிவியலைக் கேள்விகேட்டுப் போதித்தாலும், கடவுள் இல்லை என்ற கருத்தை மாணவர்களிடையே விதைத்தாலும்கூட , கிறிஸ்துவர்களும் கூட, ஹைபடியாவின் மேல் மரியாதையுடன் இருந்தனர். இதனைக்  கண்ட சைரிலினுக்கு, ஹைபடியா மேல் வெறுப்பும்கோபமும் ஏற்பட்டது.

புத்தக எரிப்பு

கிறித்தவ திருச்சபையும் ஹைபடியாவை எதிரியாக பாவித்தது. ஹைபடியாவுக்கு மக்கள் மத்தியில் இருந்த மதிப்பால் கொஞ்ச காலம் அமைதியாக இருதனர். பொதுவாகவே அப்போது சைரில்,  யூதர்கள் பாகனிகர்கள், மற்றும் ஹெரடிக்கர்கள் மேல் கொடூர நடவடிக்கை எடுத்தார். பழங்கால கட்டிடங்களை கிறித்தவ பாதிரியார்கள் மற்றும் துறவிகள் மூலமாக இடித்தார். அவர்கள் மூலம் கல்லூரி, நூலகங்கள், புத்தகங்கள், கிரேக்க கலாசாரம் பற்றிய தகவல்கள் சைரிலின் மூலம் தீக்கிரையாக்கப்பட்டன.

ஹைபடியா மீது  தாக்குதல் கொலைவெறி

கிறிஸ்துவர்கள் சாம்பல் புதன் (Ash Wednesday) முடிந்து ஈஸ்டர் வரும் வரை பட்டினி விரதம் இருந்தனர். அப்போது அந்த நாள்களில் கி.பி. 415-ல் மார்ச் மாதம் வந்தது. அன்று  மார்ச் 8-ம் நாள். ஹைபடியா, குதிரை பூட்டிய ரதத்தினை தானே ஓட்டிக்கொண்டு, மாலை நூலகத்திலிருந்து இல்லம் நோக்கித் திரும்பிகொண்டு இருந்தார்.

பிஷப் சைரிலினால் ஏவப்பட்ட கொலைவெறி தலைக்கேறிய துறவிகள் கூட்டம் ஹைபடியாவை நோக்கி ஓடிவருகிறது. இந்த அடியாள் கூட்டத்தின் தலைவன் பீட்டர் என்ற மாஜிஸ்டிரேட். அவன் கட்டளையின் பேரில் துறவிகள் கூட்டம் ஹைபடியாவை, கோபத்துடன் வேகமாக ரதத்திலிருந்து இழுத்து வீதியில் வீசி எறிந்தது. அடுத்து நடந்தது என்ன? சாக்ரடீஸும் 7 ஆம் நூற்றாண்டு ஜான்நிகியும், நேரில் கண்டவர்கள் போலவே அந்த கொடூர நிகழ்வை விவரிக்கின்றனர்.

துகிலுறிந்து தோல் சுரண்டி கொல்லபட்ட கணித மேதை

மாஜிஸ்டிரேட் பீட்டர் கட்டளையிட துறவிகள் கூட்டம் ஹைபடியாவின் ஆடையை  அவிழ்த்து எறிகிறது; துகில் உரியப்படுகிறார். அத்துடன் முடியவில்லை கொடுமை! அனைவர் கரங்களிலும் சிப்பிகளும், கற்களும், ஹைபடியாவின் தோலைச் சுரண்டி உரிக்க, ஹைபடியாவின் தோல் உயிருடன் துள்ளத் துடிக்க சுரண்டப்படுகிறது. ஹைபடியாவின் கை. கால்களை ஆவேசத்துடன் பிய்த்து எறிகின்றனர். உயிருடன் கதறும்போதே, உடல் சதையை எலும்பிலிருந்து கிழித்து எறிகின்றனர். கோபமாய் ஹைபடியாவை  வீதி முழுவதும் தர தர என்று தரையில் இழுத்து ஓடிக்கொண்டே, வீதி முழுவதும் அவரின் சதைத் துண்டுகளை வீசி இறைக்கின்றனர். மீதமுள்ள சதைத் துண்டுகளுடன், புதிதாக கட்டபட்ட 'காசோரியம்' என்ற திருச்சபைக்குத் துறவிகள் கூட்டம் ஓடுகிறது. மிச்சசொச்ச எலும்பும் சதையும், குவித்து வைத்து 'சின்ரோன்' என்ற இடத்தில் ஹைபடியாவை எரிக்கின்றனர். ஹைபடியாவின் சரித்திரம் முடிந்ததா?

பொறாமையால் பலியான ஹைபடியா

பல சாதனைகளை நிகழ்த்திய, மரியாதை மிக்க முதிர்ந்த பேரழகி, கடைசி தத்துவஞானி ஹைபடியா அழிக்கப்பட்டுவிட்டார் என சாக்ரடீஸ் வேதனையுடன் பதிவிடுகிறார். துறவிகள் கூட்டத்தின் வெறி.

ஹைபடியா வரலாறு கொலையுடன் முடியவில்லை. மற்ற பாகனிகர்கள் மேலும் விழுந்து கொத்தி குதறி எடுக்கிறது. ஹைபடியாவின் கொடூர கொலைக்குப் பிறகு தத்துவம் செத்துவிட்டது என்றும், பெண்ணுக்கு மதிப்பு தரும் எண்ணம் குறைந்துவிட்டது என்றும் சொல்லப்பட்டது. பின்னர் அங்கு கிரேக்க தெய்வம் 'இனிஸ்' உருவம் இடமாற்றம் செய்யப்பட்டு, மேரியின் உருவம் கொண்டுவரப்பட்டது. அநியாயமாய், அரசியல் மற்றும் அறிவியல் பொறாமைக்கு பலியானவர் ஹைபடியா. அந்த நாள் கி.பி. 415-ம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள். 

இன்றும் பேசப்படும், வாழும் ஹைபடியா!

இறப்புக்குப் பின்னும் ஹைபடியாவின் கதை முடியவில்லை. டமாஸ்சியஸ் என்ற பாகன் 'அவமானம், அவதூறுக்குத் தவறாகக் கொடுங்கொலை செய்யப்பட்டவர் ஹைபடியா' என எழுதியுள்ளார். சாக்ரடீஸ், நைஸ்போர்ஸ், பிலாஸ்டோர்ஜியஸ் என்பவர்களும் ஹைபடியாவின் படுகொலை பற்றி எழுதியுள்ளனர்.  ஹைபடியா 'புனித கேதரின்' என்ற பெயரில் வேறு உருவில் வாழ்வதாக அலெச்சாண்டிரிய மக்கள் நம்பினர். பின்னர் அவரும்கூட மாக்சண்டியஸ் என்பவரால் கொலை செய்யப்பட்டார். 18ம் நூற்றாண்டின் ஜாண்டோலண்டு, தாம்ஸ்வெவிஸு, ஹைபடியா புகழை, கொலையை
நினைவு கூர்கின்றனர். கடந்த இரு நூற்றாண்டுகளாக ஹைபடியா வானவியலாளராக மரியாதை செய்யப்படுகிறார். 1984ம் ஆண்டு விண்வெளியில் செவ்வாய்க்கு அப்பால் உள்ள ஆஸ்டிராய்டு வளையத்தின் முக்கிய அடுக்குக்கு ஹைபடியாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சந்திரனின் பள்ளத்தாக்கு ஒன்றுக்கு (Lunar crater) ஹைபடியா பெயர் வைக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு வெளிவந்த 'அகோரா' படத்தின் நாயகி ஹைபடியா!

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்

மேனாள் மாநிலத் தலைவர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com