'நீர்வள மேம்பாட்டிற்கு நூதனத் திட்டமிடலே இன்றைய தேவை'

தமிழ்நாடு அரசுத் தமிழகத்தின் நீர்வளத்தைப் பெருக்கிடவும், வேளாண்மையை மேம்படுத்திடவும் மேற்கொண்டு வரும் திட்டங்கள் வரவேற்கத்தக்க அவசர, அவசியமான ஒன்றாகும்.
தாமிரவருணி ஆறு.
தாமிரவருணி ஆறு.

தமிழ்நாடு அரசுத் தமிழகத்தின் நீர்வளத்தைப் பெருக்கிடவும், வேளாண்மையை மேம்படுத்திடவும், இளைஞர்களுக்கு வேளாண்மையின் மீது ஆர்வத்தைத் தூண்டிடவும் மேற்கொண்டு வரும் திட்டங்கள் வரவேற்கத்தக்க அவசர, அவசியமான ஒன்றாகும்.

தென் இந்தியாவிலேயே தண்ணீர் பற்றாக்குறை உள்ள ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2050-இல் தமிழகத்தின் நீர் தேவை 57,725 மி.க.மீ. ஆக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் நிலத்தடிப் பரப்பில் 73% கடினமான பாறைகளால் ஆனது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 925 மி.மீ. கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மிக அதிகமாக 1,200 மி.மீ மழை பெய்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டதோடு, சுமார் 75% நீர் குடிக்கவே லாயக்கற்றதாக உள்ளது.

தமிழகத்தில் வற்றாத ஜீவ நதிகள் என எதுவும் இல்லை. சுமார் 40,000 ஏரிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த கொள்ளளவு 180 டி.எம்.சி. அதாவது தமிழகத்தின் மிகப் பெரிய நீர்த்தேக்கமான மேட்டூர் அணையின் (93.5) கொள்ளளவைவிட இரண்டு மடங்கு அதிகம். இவற்றில் பல ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியும், தூர்ந்தும், வரத்து வாய்க்கால்களும், நீர்ப்பிடிப்புப் பகுதியும், நீர் வெளியேறும் பாசனக் கட்டமைப்பும் தகர்ந்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. 

தமிழகத்தின் நீர் வளம்:

தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு 325 லட்சம் ஏக்கர். இதில் 150 லட்சம் ஏக்கர்தான் பயிரிடப்படுகிறது. இதில் 65 லட்சம் ஏக்கருக்குத்தான் பாசன வசதி உள்ளது. சுமார் 85 லட்சம் ஏக்கர் வானம் பார்த்த பூமியாக உள்ளது. 20 லட்சம் ஏக்கர் ஏரிப்பாசனமாகவும், 20 லட்சம் ஏக்கர் கிணற்றுப் பாசனமாகவும், 25 லட்சம் ஏக்கர் ஆற்றுப் பாசனமாகவும் உள்ளது. இதில் காவிரிப் பாசனப் பகுதி 12.5 லட்சம் ஏக்கர்.

தமிழகத்தில் பாசனமாகும் மொத்த நிலப்பரப்பில் 63 லட்சம் ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு ஏரிப் பாசனத்தை நம்பி இருக்கிறது. அனைத்து பாசன முறைகளும் சுருங்கி ஆழ்குழாய் கிணற்றுப் பாசனம் அதிகரித்துள்ளது. அதன் விளைவாக நிலத்தடி நீர் மட்டம் எட்டமுடியாத ஆழத்துக்கு சென்றுவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சேகரமாகியுள்ள எளிதில் மறுசேகாரமாக இயலாத நீரை ஆழத்திலிருந்து எடுத்து பயன்படுத்த வேண்டிய நிலைக்கு சென்றிருக்கிறோம்.

ஆறுகளில் மணல் அள்ளப்படுவதால் ஏற்படும் கட்டாந்தரையால் நீர் விரைத்து ஓடிவிடுவதாலும், நீரில்லா காலத்தில் நிலத்தடி நீர் ஏளிதில் ஆவியாகி விடுவதாலும் ஆற்றோரப்பகுதியில் வசிப்பவர்களுக்குக் கூட நிலத்தடி நீர் கிடைப்பதில்லை, ஆற்றுப்படுகைகளுக்கும் வண்டல் மண் வருகை குறைத்து விட்டது. அதனால் நிலத்தின் வலம் குறைந்து வருகிறது.

நதி நீர் நிலை:

காவிரி, பாலாறு, பெரியாறு பிரச்னைகள் தமிழகத்தின் தீராத பிரச்னைகளாக உள்ளன. தமிழகத்தில் 3ல் 2 பங்கு மாவட்டங்கள் இந்த மூன்று ஆறுகளை நம்பித்தான் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆறுகளின் பிரச்னைகள் தீர்க்கப்படாவிட்டால் தமிழகம் வறட்சிப் பிரதேசமாக மாறும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் பெரிய நெருக்கடியை சந்திக்கிறது. கர்நாடகமும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என உச்சநீதிமன்ற தீர்ப்பையே துச்சமென தூக்கி எரிகிறது. கோதாவரி-காவிரி இணைப்பு நடைமுறைச் சாத்தியம் இல்லாத ஒன்றாக உள்ளது. தாமிரவருணியைத் தவிர தமிழகத்தில் உருவாகி தமிழகத்திலேயே பாயும் நதிகள் ஏதும் இங்கில்லை. ஆற்று நீருக்கு மற்ற மாநிலங்களை எதிர்பார்க்கும் நிலையே தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்கள் தமிழகத்தின் உரிமையான நீரையே தர மறுக்கும் நிலையே உள்ளது.

திறன்மிகு மழை நீர் சேகரிப்பு:

தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பானது பெயரளவிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மக்கள் பங்கேற்போடு அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது, ஒவ்வொரு வீடுகளிலிருந்தும், கட்டிடங்களிலிருந்தும் சேகரிக்கப்படும் மழை நீரை பாதாளச் சாக்கடையில் இணைத்து, அவற்றை ஊருக்கு வெளியே உள்ள கால்வாய்க்கோ அல்லது ஆற்றுக்கோ கொண்டு சேர்க்கப்படுகிறது. ஆலைகளிலும், நிறுவனங்களிலும், வீடுகளிலும் பயன்படுத்திட, ஆழ்குழாய்கள் மூலம் அந்தந்த இடத்தில் நிலத்தடியிலிருந்து உறிஞ்சப்படும் நீரையும் பாதாள சாக்கடைகள் வழியாக வெளியேற்றுவதன் மூலம், மக்கள் வசிக்கக்கூடிய மற்றும் நீர் இரைக்கக் கூடிய பகுதிகளில் நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் செல்கிறது. அதனால் அவ்விடங்களில் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைகிறது. ஆங்காங்கே பயன்படுத்தப்பட்ட நீரும், மழை நீரும் பூமிக்குள் செலுத்தப்பட உயரிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மழைக்காலங்களில் பொது இடங்கள், சாலைகள் மற்றும் தெருக்களில் வழிந்தோடும் மழை நீரை சேகரித்து ஆங்காங்கே உறிஞ்சு குழிகள் அமைத்து நீர் பூமிக்குள் செலுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீதிகள், சாலைகள் சந்திப்பில் நீர் ஒன்று சேரும் இடங்களில் பொதுவான பெரிய உறிஞ்சு குழிகளை அமைத்து ஆங்காங்கே நீர் பூமிக்குள் செல்வதற்கான பொருத்தமான அமைப்பை மக்கள் பங்கேற்போடு, அரசின் சிறப்புத் திட்டங்கள் மூலம் செயல்படுத்திட வேண்டும்.

காட்டாறுகள், சிற்றோடைகளிலும் தடுப்பணைகள் அமைத்தல், உறிஞ்சு குழிகள் அமைத்தல், அரிமானத்தைத் தடுப்பதற்கான தாவரங்களை நடுதல் முதலியவையும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆறு, ஏரி, குளம், குட்டைகள் மற்றும் நீர் தேக்கங்களை வலுப்படுத்தும் பணியில் மக்கள் இறங்க வேண்டும். பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு கிராமத்திலும் நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும் .தமிழ்நாட்டில் இருக்கிற 40000 நீர் நிலைகளை பேணிக்காக்க உரிய திட்டமிடல் வேண்டும். காவிரியில் பாசன மேம்பாட்டுத் திட்டங்கள் உடனே செயல்படுத்தப்பட வேண்டும். அரசுக் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்புக்கு அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.

நகர்ப்புற கான்க்ரீட் வளாகங்கள், வீதிகள் மற்றும் சாலைகளில் வழிந்தோடும் மழை நீரும், வீடு மற்றும் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் நீரும் ஆங்காங்கே பொது உற்ஞ்சு குழிகள் ஏற்படுத்தப்பட்டு பூமிக்குள் செலுத்தப்பட வேண்டும். ஆற்று மணலை அள்ளி விற்பதை உடனே நிறுத்த வேண்டும். அதற்காக கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். நீர்வளத்தையும், வாழ்வாதாரங்களையும், சுற்றுச் சூழலையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை அனுமதிக்கவே கூடாது. மின்சார மற்றும் துறைமுக திட்டங்கள் மூலம் கடலோரப் பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாவது தடுக்கப்பட வேண்டும். அரசு, தன்னார்வலர்கள், சேவை அமைப்புக்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு சமூக, அரசியல் இயக்கங்கள் முழு வீச்சில் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும் மற்றும், பாதுகாக்கும் பணியில் கரம் கோர்க்க வேண்டும்.

இந்த நிலையில் நீர் நிலைகளின் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு, ஏரி, குளம், கண்மாய், ஆறுகள், கிளை ஆறுகள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு நீர்வள மேலாண்மை செம்மையாக்கப்பட அரசு உறுதியான முடிவினை மேற்கொள்ள வேண்டும்.

ஆறுகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடும் வகையில் தடுப்பணைகள் கட்டப்பட்டு, வெள்ளக் காலங்களில் கடலில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட காவிரி-குண்டாறு, அவிநாசி - அத்திகடவு போன்ற நிலுவயிலுள்ள திட்டங்களை உறுதியோடு செயல்படுத்த வேண்டும்.

அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு தொலைநோக்கு பார்வையோடு திட்டமிட்டு, நிபுனர்கள், ஆர்வலர்கள், அமைப்புக்கள் பங்கேற்போடு சிறப்பாக செயல்படுத்திட வேண்டியதே இன்றைய தேவை. அத்தகைய முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. 

[கட்டுரையாளர் - குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி, தஞ்சாவூர்; மாநில துணைத் தலைவர், தமிழ் நாடு அறிவியல் இயக்கம்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com