வடமேற்கு சீனாவில் விஞ்ஞானிகள் 2.65 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'ஒட்டகச்சிவிங்கியைவிட உயரமான' ஒரு பெரிய வகை காண்டாமிருகத்தின் புதைபடிவ ஆதாரங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது நம் பூமிக்கோளில் சுற்றித் திரிந்து உலாவிய மிகப்பெரிய பாலூட்டிகளில் ஒன்றாகும். இத்தகவல் 'தி ஜர்னல் கம்யூனிகேஷன்ஸ் பயாலஜி' (The Journal Communications Biology) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காண்டாமிருகத்தின் பெயர் பராசெராதேரியம் லிங்க்சியன்ஸ் (Paraceratherium linxiaense) என்பதாகும். இதன் எடை 21 டன்.
இந்த காண்டாமிருகம், சுமார் 2.65 கோடி ஆண்டுகளுக்கு முன் வந்திருக்கலாம் என அனுமானிக்கின்றனர். புதிதாக வந்த ஒரு பெரிய காண்டாமிருக இனம் வடகிழக்கு திபெத்திய பீடபூமியில் சுற்றித் திரிந்தது. அதன் மண்டை உடற்கூறியல் அடிப்படையில், காண்டாமிருக கண்டுபிடிப்பாளர்கள் இது ஒரு நவீன டபீர் (Modern TapirModern Tapir ) போன்று ஒரு குறுகிய துதிக்கை இருந்ததாக கணித்துள்ளனர்.
ராட்சத காண்டாமிருகம் ஒட்டகச்சிவிங்கியைவிட உயரம்
வரலாற்றுக்கு முந்தைய இந்த ராட்சத காண்டாமிருகம் ‘ஒட்டகச்சிவிங்கியைவிட உயரமானது' என்று தெரிவிக்கின்றனர். இந்த பாலூட்டியின் தலை 3.8 அடி நீளம்; உயரம் 16 அடியாக இருந்தது. அது சுமார் 2 கோடி முதல் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு யூரேசியாவில் சுற்றித் திரிந்த வகையாகும். அழிந்துபோன பாலூட்டியின் உடல் 26 அடிக்கு மேல் நீண்டு இருந்தது. அதன் எடை கிட்டத்தட்ட ஐந்து யானைகளின் எடைக்குச் சமமானது. இப்போது, புதைபடிமவியலாளர்கள் சீனாவில் இதன் எச்சங்களைக் கண்டுபிடித்து இது புதிய வகை மாபெரும் காண்டாமிருகத்தின் எச்சங்கள் அறிந்து ஆய்வில், இதுபற்றித் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கண்டுபிடிப்பு கொம்பு இல்லாத காண்டாமிருக இனமே
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் காண்டாமிருகம் (பாராசெராதேரியம் லிங்க்ஸியன்ஸ்) ஆசியாவில் காணப்பட்ட கொம்பு இல்லாத காண்டாமிருகத்தில் ஒரு வகை ஆகும். பண்டைய காண்டாமிருகங்களின் தோற்றம், யூரேசியா முழுவதும் அவற்றின் வீச்சு மற்றும் அவை எவ்வாறு உருவாகின என்பதை விளக்குவதற்கு இந்த எச்சங்கள் பல்லுயிரியலாளர்களுக்கு உதவக்கூடும் என்பதை கார்லி காசெல்லா தெரிவிக்கிறார்.
மிகப்பெரிய நில பாலூட்டி காண்டாமிருகம்
ராட்சத காண்டாமிருகங்கள் இதுவரை வாழ்ந்தவைகளில் மிகப்பெரிய நில பாலூட்டிகள் என்று கருதப்படுகிறது. சீனா, மங்கோலியா, கஜகஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசியா முழுவதிலும் அவற்றின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று ஜார்ஜ் டுவோர்ஸ்கி தெரிவித்துள்ளார். இருப்பினும், ஆசியா முழுவதும் அவைகள் பரவுவது முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை.
லின்க்சியா பகுதிவாழ் காண்டாமிருகம்
சீனாவின் லின்க்சியா என்ற பகுதியில் 2.65 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒலிகோசீனின் (Oligocene) பிற்காலத்தில் படிந்திருந்த பகுதிகளில் இருந்து இந்த இராட்சத காண்டாமிருகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது பற்றிய புதைபடிவங்களில் ஏராளமாக தகவல்கள் அறியப்படுகிறது. புதைபடிவங்களில் ஒரு மண்டை ஓடு, கீழ்த்தாடை மற்றும் பல முதுகெலும்பு துணுக்குகள் இருந்தன என்று கிஸ்மோடோ தெரிவிக்கிறது. சீன அறிவியல் அகாடமியின் புவியியல் நிபுணரான தாவோ டெங் மற்றும் அவரது குழுவினர் லேசர் ஸ்கேன்களைப் பயன்படுத்தி பழங்கால விலங்குகளின் 3-டி புனரமைப்புகளை எஞ்சியுள்ள இடங்களிலிருந்து உருவாக்கினர்.
5 ஆப்பிரிக்க யானைகளின் எடையளவுள்ள காண்டாமிருகம்
வரலாற்றுக்கு முந்தைய விலங்குகள் ஒட்டகச்சிவிங்கிகள் போல நான்கு கால்களில் கிட்டத்தட்ட 16 அடி உயரத்தில், 11 - 20 மெட்ரிக் டன் வரை எடையுள்ளதாக இருந்தது. இது சுமார் 3-5 ஆப்பிரிக்க யானைகளுக்குச் சமம் என்று அறிவியல் பதிவுகள் தெரிவிக்கின்றன. மண்டை ஓட்டின் அளவை அடிப்படையாகக் கொண்டு, காண்டாமிருகம் ஒரு நீண்ட தடிமனான கழுத்து, ஆழமான நாசிக் குழி மற்றும் நவீன கால டபீரை ஒத்த ஒரு குறுகிய துதிக்கை மற்றும் முதுகெலும்பு இருந்தன. புதைபடிவங்கள் புதிய இனங்களாக மற்ற வகை காண்டாமிருகங்களைவிட நெகிழ்வான கழுத்தைக் கொண்டிருந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் அறிக்கையில் விளக்குகின்றனர்.
பாகிஸ்தான் இனங்களுடன் தொடர்பானவை
காண்டாமிருகத்தின் மெல்லிய கால்கள் ஓடுவதற்கு சிறந்தவை என்றும், அதன் தலை மரங்களின் உயரத்தில் இருந்த இலைகளை பறிக்க பயன்பட்டு இருக்கக்கூடும் என்றும் டெங் கூறுகிறார். மேலதிக பகுப்பாய்விற்குப் பிறகு, விஞ்ஞானிகள் புதிய இனங்கள் பாகிஸ்தானில் வாழ்ந்த ஒரு மாபெரும் காண்டாமிருகத்துடன் நெருக்கமாக இருந்தது தெரிய வந்துள்ளது. பராசெராதேரியம் பக்டியன்ஸ், ஒரு கட்டத்தில் மத்திய ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்ததாக தெரிகிறது.
காலநிலை மாற்றத்தால் இடம்பெயர்வு
ஆரம்பகால ஒலிகோசீன் காலத்தின்போது, மத்திய ஆசியாவைச் சுற்றியுள்ள காலநிலை வறண்டதாக இருந்தது. அதேநேரத்தில் தெற்காசியா மிகவும் ஈரப்பதமாகவும், திறந்த நிலப்பரப்பு மற்றும் ஆங்காங்கே பசுமையான காடுகளின் நிரம்பியதாகவும் இருந்தன என்று டாம் மெட்காஃப் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கிறார். மாபெரும் காண்டாமிருகங்கள் தங்கள் வயிற்றை நிரப்ப உணவு தேடி தெற்காசியாவுக்கு குடிபெயர்ந்திருக்கலாம். பின்னர், ஒலிகோசீனின் பிற்பகுதியில், காலநிலை மீண்டும் மாறியதும், மத்திய ஆசியா இனி வறண்டதும் இல்லாதபோது காண்டாமிருகங்கள் வடக்கு நோக்கித் திரும்பின என்று கூறப்படுகிறது.
திபெத் அன்று பீடபூமி அல்ல; தாழ் நிலம்
பல்வேறு மாபெரும் காண்டாமிருக புதைபடிவங்களின் பாதை அவர்கள் மங்கோலிய பீடபூமியிலிருந்து வடமேற்கு சீனா மற்றும் கஜகஸ்தானுக்கு குடிபெயர்ந்ததாகவும் பின்னர் திபெத் வழியாக பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்ததாகவும் அறிவியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, இந்தோ/திபெத்திய பகுதி இன்றுபோல அப்போது உயரமான மலைகள் நிறைந்த பீடபூமி அல்ல என்பதை குறிக்கிறது. அதற்கு பதிலாக, லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பாலூட்டிகள் கடந்து செல்லக்கூடிய சில தாழ்நிலங்களாக இருந்திருக்கலாம் என்றும் கணித்துள்ளனர்.
இடம் பெயர்வும் காலநிலை மாற்றமும்
விலங்கின இடம்பெயர்வு என்பது காலநிலை மாற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மங்கோலிய பீடபூமி வறண்டுபோனபோது, அவை தெற்கு நோக்கி நகர்ந்தன என்று டெங்(Deng), சி.என்.என் செய்தியின் ஜாக் கை மற்றும் ஜிக்சு வாங் (Jack Guy and Zixu Wang)-யிடம் தெரிவிக்கிறார்.
எதிர்கால நம்பிக்கை விதைப்பு
தற்போது கிடைத்துள்ள புதைபடிவங்கள் சீனாவின் வட-மத்திய கன்சு (Gansu province) மாகாணத்தில் உள்ள ஹெசெங் பேலியோசூலாஜிக்கல் (Hezheng Paleozoological)அருங்காட்சியகத்தில் உள்ளன. எதிர்கால ஆய்வுகளில், காண்டாமிருகத்தின் தசைகளை புனரமைப்பதன் மூலம் பாலூட்டிகளின் உடல் நிறை குறித்து இன்னும் துல்லியமான மதிப்பீட்டைப் பெற முடியும் என டெங் மற்றும் அவரது குழு தெளிவான நம்பிக்கை கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.