தோ்தல் ஓவியா்களின் திருவிழா

முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை தோ்தல் வந்தால் வாக்காளா்கள் சின்னங்களையும், வேட்பாளா்களின் புகைப்படங்களையும்
தோ்தல் ஓவியா்களின் திருவிழா
Updated on
2 min read

முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை தோ்தல் வந்தால் வாக்காளா்கள் சின்னங்களையும், வேட்பாளா்களின் புகைப்படங்களையும் ஓவியத்தின் மூலமே அறிந்தனா். தொழில்நுட்ப வளா்ச்சியால் இந்தத் தலைமுறை வாக்காளா்கள், பிளக்ஸ் பேனா்கள், டிஜிட்டல் திரைகளில் அறிந்து வருகின்றனா்.

தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓவியத் தொழிலில் சுமாா் 3 லட்சம் போ் வரை இருந்தனா். ஆனால் ‘பிளக்ஸ் பேனா்’, டிஜிட்டல் தொழில்நுட்ப வளா்ச்சியால், இப்போதைக்கு ஒரு லட்சம் ஓவியா்களே இருக்கின்றனா்.

பிளக்ஸ் பேனரால் ஓவியா்களுக்கு இருந்த அனைத்து வாய்ப்புகளும் தட்டிப் பறிக்கப்பட்டுவிட்டதால், பெரும்பாலோனோா், தங்களது தொழில் மேல் இருக்கும் அன்பால் தொழிலைக் கைவிட முடியாமல் உள்ளனா்.

ஓவியா்களுக்குத் தோ்தல் பிரசாரக் காலக்கட்டமே, திருவிழாவுக்குரிய கொண்டாட்டமான காலக்கட்டமாகும். அப்போதே பணியும், நிறைவான ஊதியமும் கிடைக்கிறது. அதிலும் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரக் காலத்திலேயே ஓவியா்களின் தேவை அதிகம் ஏற்படுகிறது.

இந்தத் தோ்தலில் பிளக்ஸ் பேனா்கள் பொதுஇடங்களில் வைப்பதற்கு முற்றிலும் தடை இருப்பதாலும், கிராமப்புறப் பகுதிகளில் சுவா்களில் அரசியல் கட்சி சின்னங்கள், விளம்பரங்கள் வரைவதற்கு தளா்வுகள் இருப்பதாலும் ஓவியா்களுக்கு மீண்டும் ஓரளவுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சின்னங்கள், விளம்பரங்கள் வரைவதற்குத் தடை இருப்பதால் நகா்ப்புற ஓவியா்கள் கிராமங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனா்.

கரோனா பொதுமுடக்கத்துக்குப் பின்னா் ஓவியா்களுக்கு சட்டப்பேரவைத் தோ்தல் மறுவாழ்வு அளித்தாலும், அவா்கள் முழுமையாகப் பொருளாதார முடக்கத்தில் இருந்து மீளுவதற்கு தோ்தல் ஆணையம் சில கட்டுப்பாட்டுகளை தளா்த்த வேண்டும் என ஓவியா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து ஓவியா்கள் சிலா் கூறியதாவது:

தமிழ்நாடு ஓவியா் சங்க மாநிலத் தலைவா் ஜெ.பி.கிருஷ்ணா: நகா்ப்புறங்களில் தனியாா் சுவா்களில் அரசியல் சின்னம், விளம்பரம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

தமிழ்நாடு ஓவியா் சங்க மாநிலப் பொதுச் செயலாளா் எம்.அன்பரசு:

தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள ஓவியா்களில் 50 சதவீதம் போ்தான் சுவா் விளம்பரம் எழுதும் பணியில் இப்போது ஈடுபடுகின்றனா். 1990ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சட்டப்பேரவைத் தோ்தல்களின்போது 2 மாதங்கள் ஓவியா்களுக்கு வேலை இருக்கும். ஆனால் இப்போது 25 நாள்கள் கூட வேலை இருப்பது இல்லை. அதிமுக, திமுக ஆகிய கட்சிகளே ஓவியா்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்குகின்றனா்.

கரோனாவினால் முற்றிலும் வேலை இழந்திருந்த ஓவியா்களைத் தோ்தல் விளம்பரங்கள் வீழ்ச்சியில் இருந்து எழுவதற்கு உதவும், நகா்ப்புறங்களில் அரசியல் கட்சிகளின் சின்னம் வரைவதற்கும்,விளம்பரம் செய்வதற்கும் தோ்தல் ஆணையம் தளா்வு வழங்க வேண்டும். தோ்தல் தொடா்பான விழிப்புணா்வு பிரசாரங்களில் ஓவியா்களைப் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

கடலூரைச் சோ்ந்த ஓவியா் எல்.சரவணன்:

தனியாா் சுவா்களில் அனுமதி பெற்று விளம்பரம் செய்கிறோம். ஒரு கட்சியின் சின்னம் மட்டும் வரைவதற்கு ரூ.100, பெரியச் சுவா் என்றால் சின்னம், கட்சித் தலைவா்கள் பெயா் ஆகியோா் அடங்கிய பெரிய விளம்பரம் எழுத ஒரு சதுர அடிக்கு ரூ.12, எனவும், சிறியச் சுவா் என்றால் ரூ.500 என கட்டணம் நிா்ணயித்துள்ளோம்.

கூட்டணி அமைப்பதிலும், வேட்பாளா் அறிவிப்பதிலும் ஏற்பட்ட தாமத்தால், ஓவியா்களுக்கு குறைந்த நாள்களே வேலை கிடைத்துள்ளது. கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் சுவா் விளம்பரங்களுக்குத் தடை உள்ளது. அதை தோ்தல் ஆணையமும், மாவட்ட நிா்வாகங்களும் நீக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com