கையளவு சிபியு-வைக் கண்டறிந்த மாணவர்: நேரில் அழைத்துப் பாராட்டிய முதல்வர்!

கணினியின் செயல்பாட்டுக்குக் காரணமாக இருக்கும் மைய செயலாக்கக் கருவி(CPU)யில் கையடக்க அளவு கருவியைக் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார் திருவாரூரைச் சேர்ந்த மாணவர் மாதவ்.
கையடக்க அளவு சிபியு-வை கண்டறிந்த திருவாரூர் மாணவர் மாதவ்.
கையடக்க அளவு சிபியு-வை கண்டறிந்த திருவாரூர் மாணவர் மாதவ்.
Updated on
2 min read

கணினியின் செயல்பாட்டுக்குக் காரணமாக இருக்கும் மைய செயலாக்கக் கருவி(CPU)யில் கையடக்க அளவு கருவியைக் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார் திருவாரூரைச் சேர்ந்த மாணவர் மாதவ்.

திருவாரூர் நகர் பகுதியை ஒட்டியுள்ள மருதப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன். இவர் தமிழ்நாடு கூட்டுறவுத் துறையில் தட்டச்சராக தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் சுதா. இவர்களுக்கு  இரண்டு மகன்கள். முதல் மகன் மாதவ் ஒன்பதாம் வகுப்பும், இரண்டாவது மகன் கிரித்திக் ஒன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர். சேதுராமன் தூத்துக்குடியில் தங்கிப் பணியாற்றி வரும் நிலையில் அவரது மனைவியும் இரண்டு மகன்களும் மருதப்பட்டினத்தில் வசித்து வருகின்றனர்.

சிறுவயது முதலே மாதவ் கணினி மீது தீவிர ஆர்வம் கொண்டிருப்பதைக் கண்ட அவரது பெற்றோர், அதை ஊக்குவிக்கும் வகையிலான உதவிகளை செய்து வந்துள்ளனர். இதனிடையே, தனியார் பள்ளியில் அவர் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். அப்போது கரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வந்தது.

கையடக்க சிபியு கருவி
கையடக்க சிபியு கருவி

கரோனா விடுமுறையை வீணடிக்க விரும்பாத மாதவ், வீட்டிலிருந்தவாறு ஆன்லைன் மூலமாக ஜாவா, சி, சி++, பைத்தான் போன்ற கணினி சாப்ட்வேர் பயிற்சிகளை படித்து முடித்துள்ளார். தற்போது 9 ஆம் வகுப்பு படிக்கும் மாதவ், கணினியை இயங்கச் செய்யக் கூடிய மைய செயலாக்கக் கருவி என்று அழைக்கப்படக்கூடிய சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் கருவியை(CPU) கையடக்க அளவில் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கான முயற்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதவ் ஈடுபட்டு வந்த நிலையில், தானே அந்தக் கருவியை வடிவம் செய்து அதனை பல்வேறு தனியார் கணினி செயலாக்க கருவியை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர், அதற்கான மதர்போர்டு என்று அழைக்கக்கூடிய முக்கிய பாகங்களை மும்பையிலிருந்து வரவழைத்து இவரே வடிவமைத்துள்ளார்.

தொடக்கத்தில், இதற்கான வடிவமைப்பில் இருபது முறை தோல்வியடைந்துள்ளார். 21 ஆவது முறை கணினி மைய செயலாக்க கருவியை கண்டுபிடித்து வெற்றி பெற்றுள்ளார். பின்னர், அந்தக் கருவியின் மேல்புற மற்றும் அடிப்புற மூடு பாகங்களையும் அவரே செய்து வருகிறார்.

தான் கண்டுபிடித்த கருவி பிறருக்கும் எளிமையாக கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் டெரா பைட் இந்தியா சிபியு மேனுஃபாக்சரிங் கம்பெனி என்கிற நிறுவனத்தைத் தொடங்கி, தான் செய்த கருவிக்கான காப்புரிமத்தையும் பெற்றுள்ளார். மேலும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்தி பிறருக்கும் விற்பனை செய்து வருகிறார். இதுவரை 15 கருவிகளை உருவாக்கி விற்பனை செய்துள்ள மாதவ், தன் நிறுவனத்திற்கென தனி இணையதளப் பக்கத்தையும் தொடங்கி அதன் மூலம் ஆன்லைனிலும் தனது கருவியை விற்பனை செய்து வருகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பாராட்டு பெறும் மாதவ். 
முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பாராட்டு பெறும் மாதவ். 

சாதாரணமாக கணினியை இயங்க வைக்கக்கூடிய முக்கிய கருவியான மைய செயலாக்கக் கருவி ஒரு சிறிய அளவு சூட்கேஸ் போன்ற வடிவத்தில் இருக்கும். அதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது சிரமத்துக்கு உரியதாக இருக்கும். மேலும் 4 ஜிபி ரேம் வசதி கொண்ட மைய செயலாக்க கருவியை வாங்க வேண்டுமென்றால் ரூ. 16 ஆயிரம் வரை செலவு ஆகும் என வணிக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மாதவ் கண்டுபிடித்த கையளவுள்ள 200 கிராம் எடை கொண்ட மைய செயலாக்கக் கருவி ரூ. 8 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், மாதவ் கண்டுபிடித்துள்ள கருவி, மற்ற கருவிகளைப் போலவே அதே வேகத்தில் அதே திறன்களைக் கொண்டும் செயல்படுகிறது. மாதவின் அடுத்தகட்ட திட்டமாக கணினியை இயங்க வைக்கக்கூடிய முக்கிய சாஃப்ட்வேர் செயலியான விண்டோஸ் 7-க்கு நிகரான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்.

மேலும் தொடர்ந்து தனது ஆராய்ச்சிகள் மூலமாகவும், கல்வித்திறன் மூலமாகவும், தேடல்கள் மூலமாகவும் ரூ. 2000 க்கு மைய செயலாக்க கருவியை விற்பனை செய்வதே தனது இலக்கு என்றும் தெரிவிக்கிறார்.

இவரின் கண்டுபிடிப்பை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாதவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும், அரசு அவரின் செயல்களுக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் உறுதி அளித்திருப்பது மாதவுக்கு இன்னும் உத்வேகத்தை அளித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com