சென்னையில் சாப்பிடத் தூண்டும் சாம்பார் இட்லி

சென்னையில் சாப்பிடத் தூண்டும் சாம்பார் இட்லி

இப்படிப்பட்ட இட்லி சென்னையின் பல்வேறு பகுதிகளில் கிடைத்தாலும் ரத்னா கபேயின் சாம்பார் இட்லி என்றால் தனி சுவை தான். இட்லி மூழ்கும் அளவுக்கு சாம்பார் இட்டு தருவதே அதன் சிறப்பு.

அவித்த உணவுகளை உள்கொண்டால் ஆயுள் அதிகரிக்கும் என்று ஒரு கூற்று உண்டு. அவ்வாறு அவித்த வகை உணவுகளில் அனைவரது வீட்டிலும் பெரும்பாலும் காலை சிற்றுண்டிக்கான இடத்தைத் தன் வசமாக்கியிருப்பது இட்லி.

இந்தோனேசியாவைத் தாயகமாகக் கொண்டதாகக் கூறப்படும் இட்லி, தமிழனின் பட்டியலில் தவிர்க்க இயலாத உணவாக மாறியது தனிக்கதை.

இப்படிப்பட்ட இட்லி சென்னையின் பல்வேறு பகுதிகளில் கிடைத்தாலும் ரத்னா கபேயின் சாம்பார் இட்லி என்றால் தனி சுவை தான். இட்லி மூழ்கும் அளவுக்கு சாம்பார் இட்டு தருவதே அதன் சிறப்பு.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர், ரத்னா கபேக்கு வந்து சாம்பார்  இட்லியை சுவைத்துச் செல்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.

இட்லியை ருசிக்க வேண்டும் என்று பிற்பகல் நேரத்தில் ரத்னா கபேக்கு சென்றாலும் அப்போதும் கூட்டம் அலைமோதுகிறது.

இருக்கையில் அமர்ந்து ஒரு பிளேட் சாம்பார் இட்லி ஆர்டர் செய்தோம். இரண்டு பெரிய இட்லி. முழுவதுமாக மூழ்கும் அளவுக்கு சாம்பார். சிறிய பாத்திரத்தில் சட்னி, உடன் இரண்டு மர ஸ்பூன் என நம்மிடம் வந்து சேர்ந்தது சுடச் சுட சாம்பார் இட்லி.

கையால் தொட முயற்சித்து தோற்று, பின் ஸ்பூனை பயன்படுத்தத் தொடங்கினோம். முழுவதுமாக ஊறிய இட்லியை மேலும் கீறியதால் சாம்பாரும் இட்லியும் ஒன்றாகக் கலந்தது. சாம்பார் சிறிது குறைந்ததும் மீண்டும் தட்டு நிறைய ஊற்றப்பட்டது.

சிற்றுண்டியை முடித்த பிறகு உணவகப் பொது மேலாளர் சாமிநாதனிடம் சாம்பார் இட்லியின் விற்பனை குறித்தும், பிரபலமடைந்ததன் காரணம் குறித்தும் கேட்டறிந்தோம்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்த உணவகம் தொடங்கப்பட்டது முதல் சைவ உணவுகள் மட்டுமே சமைக்கப்படுகின்றன. பிரபலமானது சாம்பார் இட்லி. உணவகம் தொடங்கிய 1948-ஆம் ஆண்டு முதலே சாம்பார் இட்லி அனைவராலும் விரும்பிக் கேட்கப்படும் உணவு. அது பிரபலமடைய காரணம் சாம்பாரில் இட்லி மிதக்கும் வகையில் கொடுப்பதுதான்.

மேலும், சாம்பாரும் வீட்டு ருசியில் இருப்பதுடன், உடலுக்கு கேடு விளைவிக்கும் வேதிப் பொருள் பயன்படுத்தாமல் சமைக்கப்படுவதால் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்றதாக இருப்பதால் சாம்பார் இட்லியை பலரும் விரும்பிச் சுவைக்கின்றனர். அன்று முதல் இன்று வரை அதே ருசியில் கொடுப்பதும் அனைவரும் விரும்புவதற்கான காரணங்களுள் ஒன்று.

தொடக்கத்தில் அனா கணக்கில் விற்பனை செய்யப்பட்ட சாம்பார் இட்லி, தற்போது ஒரு பிளேட் ரூ.60-க்கு விற்பனை செய்கிறோம் என்றார்.

அருகில் அமர்ந்து சாப்பிட்ட ஆர்.சுரேஷிடம் (அரசு ஊழியர்) கேட்டபோது, இங்கு மாதம் ஒரு முறையாவது வந்து உணவருந்துவது வழக்கம். காலை, இரவு ஆகிய வேளைகளில் வந்தால் பெரும்பாலும் எனது தேர்வு சாம்பார் இட்லிதான். உடன் ஒரு மெதுவடையும். இறுதியில் காபி. 4 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். சுவை மாறாமல் இருப்பதே இந்த சாம்பார் இட்லியின் சிறப்பு என்றார் அவர்.

இவ்வாறாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை தரிசிக்க வரும் பக்தர்களில் சாம்பார் இட்லி ரசிகர்கள் இருந்தால், அவர்களுக்கு ஏற்ற உணவகம் 200 மீட்டர் தூரத்திலேயே காத்திருக்கிறது என்பதை மறக்க வேண்டாம் என்கிறார்கள் உணவுப் பிரியர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com