கரகர மொறுமொறு கீழ ஈரால் காரசேவு!

தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே கீழ ஈரால் என்ற ஊர் காரசேவுக்கு மிகவும் பிரபலம்.
கீழ ஈரால் காரசேவு
கீழ ஈரால் காரசேவு

தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே கீழ ஈரால் என்ற ஊர் காரசேவுக்கு மிகவும் பிரபலம் ஆகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் நோக்கி செல்லும் பயணிகள் பெரும்பாலோனோர்  திருச்செந்தூர் தரிசனம் முடித்துவிட்டு தங்களது ஊர்களுக்கு திரும்பிச் செல்கையில் கீழ ஈராலில் தங்களது கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி  கீழ ஈரால் காரச்சேவு விரும்பி வாங்கிச் செல்வதை காணமுடியும். 

நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கீழ ஈரால் காரச்சேவுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர். அந்தளவுக்கு கீழ ஈரால் கார சேவுக்கு மவுசு அதிகம்.

தாமிரபரணி தண்ணீர், கரிசல் மண்ணில் விளைந்த கடலைப் பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெய் ஆகிய இரண்டுமே கீழ ஈரால் காரச்சேவுக்கு புகழ் சேர்க்கும் அடிப்படை ஆதாரமாகும். மேலும் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மறுமுறை பயன்படுத்தப்படுவது கிடையாது என்பது கூடுதல் சிறப்பாகும்.

1980களில் உருவான கீழ ஈரால் காரசேவு வியாபாரம் இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் தலைநகர் சென்னைக்கும் தில்லி, மும்பை, வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

கீழ ஈரால் காரசேவு செய்யும் முறை

கடலைமாவு 
பச்சரிசிமாவு 
வெண்ணெய் 
காரப் பொடி 
வெள்ளைப்பூண்டு 
மிளகு
பெருங்காயம் 
உப்பு 
எண்ணெய் 

செய்முறை: முதலில் பூண்டு மற்றும் பெருங்காயத்தை அரைத்துக்கொள்ள வேண்டும். மிளகைப் பொடி செய்து  வெண்ணெய்,  உப்பு, காரப்பொடி,  கடலை மாவு, அரிசி மாவு, அரைத்து வைத்திருக்கும் பூண்டு பெருங்காயம், மிளகுத்தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

சட்டியில் கடலை எண்ணெய் ஊற்றி நன்றாகக் காய்ந்ததும் காராச் சேவு தேய்க்கும் கரண்டியில் கைப்பிடி அளவு மாவை வைத்து நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும்.

கையினால் நேராக, மேலிருந்து கீழ், அழுத்தவேண்டும். மாவு நீளமாக வெளிவரும். குறிப்பிட்ட நீளம் வந்தவுடன், மேலே மாவினை முன்னோக்கி தள்ளினால், நீளமாக வெளிவந்த மாவு துண்டுகளாகி விழும். 

மற்றொரு கரண்டியால் சேவை திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய வைக்க வேண்டும். இதேபோல் எல்லா மாவையும் பொரித்து எடுக்கவும். மாவை சற்று இறுக்கமாக பிசைந்து கொண்டால்தான் தேய்ப்பதற்கு வசதியாக இருக்கும். தளர்வாக இருந்தால் தேய்க்கும் போது பூந்தி போன்று முத்துமுத்தாக விழுந்துவிடும். காரசேவுக்கு என்றே அச்சுப் பலகைகள் உள்ளன. அது இல்லையெனில் சற்று பெரிய ஓட்டைகள் உடைய பெரிய அளவிலான கரண்டியைப் பயன்படுத்தலாம்.

கரிசல் மண்ணின் மணத்தோடும் தொழில் பக்தியோடும் வாடிக்கையாளர்களின் பேராதரவோடும் 40 ஆண்டுகளை கடந்து பொன்விழா நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது  கீழ ஈரால் காரச்சேவு வணிகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com