உலகப் புகழ்பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய்

உணவு வகைகளில் கோவில்பட்டி என்றாலே நினைவுக்கு வருவது கடலைமிட்டாய். தரமான நிலக்கடலை, மண்டை வெல்லம் கிடைப்பதால் கடலை மிட்டாய் உற்பத்தியில் கோவில்பட்டி சிறப்பு பெற்று விளங்குகிறது.
உலகப் புகழ்பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி முறையில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் விவசாயம் நடைபெறுகிறது. நவதானியங்கள், எண்ணெய் வித்துகள் சாகுபடியும் இந்த மண்ணுக்கே உரித்தான மகிமை.

மழை பெய்யும் பருவ காலத்தில் நெல் பயிரிடுவதற்குப் பதிலாக கோவில்பட்டியில் நிலக்கடலை பயிர் செய்கிறார்கள். தரமான நிலக்கடலை, மண்டை வெல்லம் கிடைப்பதால் கடலை மிட்டாய் உற்பத்தியில் கோவில்பட்டி சிறப்பு பெற்று விளங்குகிறது.

தயாரிக்கும் முறை

கடலை மிட்டாய் தயார் செய்யும் பக்குவத்தைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறத் தொடங்கிவிடுகிறது. வெல்லத்துடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து, சரி பாதியாக வரும் வரை காய்ச்சி 'பாகு' தயார் செய்து கொள்கிறார்கள். அதாவது, 10 கிலோ மண்டை வெல்லத்தில் 7  முதல் 8  லிட்டர் வரை தண்ணீர் சேர்த்து நன்றாக காய்ச்சி பாகு தயாரிக்கிறார்கள். காய்ச்சியதும் அதில் படியும் மண்டியை அப்புறப்படுத்திவிட்டு தெளிந்த பாகைக் கடலை மிட்டாய் தயாரிக்க பத்திரப்படுத்துகிறார்கள். 

மறுநாள் அந்த வெல்லப்பாகுவை மீண்டும் வாணலியில் போட்டு காய்ச்சுகிறார்கள். அடிபிடித்துவிடாமல் இருக்க கரண்டியால் கிளறிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பொன் நிறமாக மாறும் பதத்திற்கு வெல்லப்பாகு சற்று நேரத்தில் வருகிறது. பின்னர், உடைத்து வைக்கப்பட்ட நிலக்கடலை பருப்பை அதில் போடுகிறார்கள். வாணலியில் வெல்லப்பாகுவை 2  லிட்டர் ஊற்றிருந்தால் 2 கிலோ அளவுக்கு நிலக்கடலை பருப்பு போடுகிறார்கள். பின்னர் கிளறிவிட்டு புரோட்டா மாவு போன்று மொத்தமாக கடலைபருப்பு - வெல்லப்பாகு கலவையை உருட்டி பெரிய உருண்டையாக எடுக்கிறார்கள்.

அதனை ஒரு மரப்பலகை தட்டில் வைத்து சப்பாத்தி உருட்டும் கட்டையைக் கொண்டு, இரும்பினால் செய்யப்பட்ட உருளையால் உருட்டி பரப்புகிறார்கள். அந்த மரத்தட்டில் ஒட்டாமல் இருப்பதற்காக கிழங்கு மாவை ஏற்கெனவே அதில் தடவி வைக்கிறார்கள். அதில் 5  நிமிடங்களில் வெல்லப்பாகு, கடலை பருப்பு சேர்ந்த கடலை அந்த தட்டில் உறைந்து கடலை மிட்டாய் ஆகிவிடுகிறது. 

விற்பனைக்கு தயார்

மரத்தட்டில் இருக்கும் மிட்டாயை தேவையான அளவில் வெட்டி எடுக்கிறார்கள். சூட்டோடு சூட்டாக பாக்கெட் செய்துவிடுகிறார்கள். கடலை மிட்டாய் விற்பனைக்கு தயாராகிவிடுகிறது.

பூவுக்கு விளம்பரம் தேவையில்லை என்பார்கள். அதுபோல், கோவில்பட்டி கடலை மிட்டாய் வெளி உலகில் அறியப்பட்டதற்கு தனியாக யாரும் விளம்பரம் செய்ததில்லை. காலம்காலமாக கோவில்பட்டி மக்களும், வாடிக்கையாளர்களும்தான் கடலை மிட்டாயை உலகெங்கும் கொண்டுபோய் சேர்த்துள்ளனர் என்று கூற வேண்டும். 

வயது வித்தியாசமின்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மிட்டாய் கடலை மிட்டாய். மண்ணுக்கு பெருமை சேர்த்த கோவில்பட்டி கடலை மிட்டாய் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு தனி ருசி உண்டு. கோவில்பட்டி என்றும் கடலை மிட்டாயை நினைவுகூரும் அளவிற்கு தனிப்பெயர் பெற்றுள்ளது. 

புவிசார் குறியீடு

கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெற 2014இல் அப்போது சார் ஆட்சியராக இருந்த விஜயகார்த்திகேயன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. பின்னர்,  புவிசார் குறியீட்டு அலுவலகத்தின் அறிவுறுத்தலில் கோவில்பட்டி வட்டார கடலை மிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நலச் சங்கம் என்ற பெயரில் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி மூலம் மறுசீரமைப்பு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2019இல் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையேற்று கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு 2020, ஏப்ரலில் வழங்கப்பட்டது. தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, விருப்பாச்சி வாழைப்பழம், கொடைக்கானல் மலைப்பூண்டு, ஈரோடு மஞ்சள், பழனி பஞ்சாமிர்தம் என 33 பொருள்களுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 34 ஆவது பொருளாக கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றது. 

இதுகுறித்து, கோவில்பட்டி வட்டார கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியது: கோவில்பட்டியில் சுமார் 150  கடலை மிட்டாய் கடைகள் உள்ளன. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது எங்களுக்கு கிடைத்த அங்கீகாரம். எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஏலக்காய், சுக்கு கலந்த கடலைமிட்டாயை ஸ்பெஷல் கடலை மிட்டாய் என மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த ஸ்பெஷல் கடலை மிட்டாய் கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குற்றாலம் சீசன் காலத்தில் சுற்றுலாவுக்கு வருபவர்களும், சபரிமலைக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பும் ஐயப்ப பக்தர்களும் கடலை மிட்டாயை மறக்காமல் வாங்கிச் செல்கின்றனர். சென்னை, மும்பை, பெங்களூரு, புதுதில்லி உள்ளிட்ட வெளியூர்களுக்குச் செல்பவர்களும் மொத்தமாக வாங்குகின்றனர். கோவில்பட்டி ஊருக்குச் சென்றுவிட்டு வந்ததன் அடையாளமாக நண்பர்கள், உறவினர்களிடம் கடலை மிட்டாயை கொடுத்து மகிழ்கிறார்கள். இலங்கை, மாலத்தீவு, குவைத், கத்தார், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு கோவில்பட்டியில் இருந்து பயணம் மேற்கொள்கிறவர்கள் கோவில்பட்டி கடலை மிட்டாயை மறக்காமல் வாங்கிச் செல்கின்றனர். இப்படித்தான் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு சிறப்பு கிடைத்தது என்றனர்.

மேலும், கடலைமிட்டாயின் தரத்தை அறிய பகுப்பாய்வு மையம் ஒன்றை கோவில்பட்டியில் அமைக்க வேண்டும் என்றும், கடலைமிட்டாயை சத்துணவு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பதே கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களின் கோரிக்கையாகும்.         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com