மக்களை மயக்கும் மதுரை ஜிகர்தண்டா!

மதுரை என்றவுடன் நினைவுக்கு வரும் நாவூறும் உணவுவகைகள் பல இருப்பினும் ஜிகர்தண்டாவுக்கு தனி மவுசு உண்டு. பழச்சாறுகளைக் குடித்து சலித்தவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் பானமாக இருப்பது ஜிகர்தண்டா.  
மதுரை ஜிகர்தண்டா
மதுரை ஜிகர்தண்டா

மதுரை என்றவுடன் நினைவுக்கு வருவது நாவூறும் உணவுவகைகள் தான். அந்தி சாய்ந்தவுடன் மதுரை நகரத்தெருக்களில் திரும்பிய திசையெல்லாம் பரோட்டாகொத்தும் இசையுடன், திறந்திருக்கும் மாலை நேர உணவகங்கள், சுடச்சுட மல்லிகைப்பூ இட்லியை அவித்துக்கொட்டும் சாலையோரக் கடைகள், நள்ளிரவிலும் கிடைக்கும் சூடான புளியோதரை, எலுமிச்சை சாத வகைகள் என ஏராளமான பெருமைகள் உண்டு.

இவையெல்லாம் இருந்தபோதும், மதுரை என்றவுடன் வெளிநாடுகளிலும் நீங்காபுகழ் பெற்றுள்ள ஜிகர்தண்டா என்றாலே கண்கள் மட்டுமல்ல நாவூம் சப்புக்கொட்டி விரியும். சாதாரண குளிர்பானங்கள், பழச்சாறுகளைக் குடித்து சலித்தவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் பானமாக இருப்பது ஜிகர்தண்டா.  

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜிகர்தண்டாவை விரும்பாதவர் எவரும் கிடையாது.  ஜிகர்தண்டாவுக்கென்று நெடிய வரலாறு உண்டு. ராஜ பானம் என்ற பெயர் ஜிகர்தண்டாவுக்கு மட்டுமே உண்டு. ஏனென்றால் ஒரு காலத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே பருகிய பானம் அது.

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் குடும்பத்தினரை திருப்தி படுத்துவதற்காக மராட்டிய சமையல் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது ஜிகர்தண்டா என்ற கருத்தும் உண்டு. தொடக்க காலங்களில் கடல்பாசி(இதற்கு பாதாம் பிசின் என்ற பெயரும் உண்டு), பாலேடு போன்றவற்றை கொண்டு ஜிகர்தண்டா தயாரிக்கப்பட்டுள்ளது.

நாளடைவில் நன்னாரி வேர், ஐஸ்கிரீம், பாசந்தி ஆகியவையும் இணைந்து ஜிகர்தண்டாவின் சுவையைக் கூட்டியுள்ளது. மன்னர் குடும்பத்தினருக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தாலும் நாளடைவில் அரண்மனையில் பணிபுரிந்து வந்த சில குடும்பத்தின் மூலமாக ஜிகர்தண்டா வெளியிலும் பரவியதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே ஜிகர்தண்டாவின் பெருமை மதுரையைத் தாண்டி அயல்நாடுகளிலும் பரவி வருகிறது. மதுரை விளக்குத்தூண் பகுதியில் இயங்கி வரும் ஜிகர்தண்டா கடை தான் பாரம்பரியக் கடையாக உள்ளது.

இங்கு கடந்த 50 ஆண்டுகளாக ஜிகர்தண்டா விற்பனையில் ஈடுபட்டு வரும் ஜிந்தா மதாரின் தந்தை ஷேக் மைதீன் 50 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலேயே ஐஸ்கிரீம் தயாரித்து மதுரை கடை வீதியில் விற்பனை செய்து வந்துள்ளார். ஐஸ்கிரீமில் ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்று  சில ஆண்டுகள் முனைப்பாக ஈடுபட்டிருந்தார். அப்போது தான் ஐஸ்கிரீமுடன் வெவ்வேறு வகையான பொருள்களை சேர்த்து  ஜிகர்தண்டாவை விற்பனை செய்துள்ளார்.

1977-இல் விளக்குத்தூண் பகுதியில் தள்ளுவண்டி மூலம் ஜிகர்தண்டா விற்கப்பட்டுள்ளது. அப்போது சாதாரண ஜிகர்தண்டா கிளாஸ் ஒன்றுக்கு 20 பைசாவுக்கும், ஸ்பெஷல் ஜிகர்தண்டா 30 பைசாவுக்கும் விற்கப்பட்டது. நாளடைவில் ஜிகர்தண்டாவை அனைவரும் விரும்பி அருந்தியதால் தள்ளுவண்டி வைத்திருந்த பகுதியிலேயே ஜிகர்தண்டா விற்பனைக்காக கடை திறக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று சாதாரண ஜிகர்தண்டா ரூ.30-க்கும் ஸ்பெஷல் ஜிகர்தண்டா ஒரு கிளாஸ் ரூ.60-க்கும் விற்கப்படுகிறது. விலை எவ்வளவு இருந்தாலும் மதுரை மக்கள் மட்டுமின்றி மதுரைக்கு வரும் வெளி மாவட்ட, வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஜிகர்தண்டாவை விரும்பி அருந்துகின்றனர்.

தற்போது மதுரையில் இருந்து சிங்கப்பூர், மலேசியால உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஜிகர்தண்டா கொண்டு செல்லப்படுகிறது. ஜிகர்தண்டாவில் பாதாம் பிசின், நன்னாரி, பாலேடு போன்ற உடலுக்கு நலம் பயக்கும் பொருள்கள் மட்டுமே உள்ளதால் உடலுக்கு ஒவ்வாமை, அஜீரணம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவது இல்லை. இதனால் ஜிகர்தண்டா சுவைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com