ஊத்துக்குளி என்றதுமே நினைவுக்கு வரும் வெண்ணெய், நெய்

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு உணவுப்பொருள் பிரபலமாக உள்ளது. அந்தவகையில் ஊத்துக்குளி என்றவுடன் நினைவுக்கு வருவது வெண்ணெய்தான். 
ஊத்துக்குளி என்றதுமே நினைவுக்கு வரும் வெண்ணெய், நெய்
Published on
Updated on
2 min read

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு உணவுப்பொருள் பிரபலமாக உள்ளது. அந்தவகையில் ஊத்துக்குளி என்றவுடன் நினைவுக்கு வருவது வெண்ணெய்தான். ஊத்துக்குளியில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக சுவை குறையாத வெண்ணெய், நெய் தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் அதனைச்சார்ந்த பகுதிகளில் கடந்த 1,945 ஆண்டு முதல் வெண்ணெய், நெய் தயாரிக்கும் தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதில், ஊத்துக்குளி மட்டுமின்றி அருகம்பாளையம், இரட்டைக் கிணறு, கொடியாம்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு காலத்தில் குடிசைத் தொழிலாகவும் இந்தத்தொழில் இருந்து வந்தது. இதன் மூலமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வந்த இந்தத் தொழிலாளது காலப்போக்கில் மழையின்மை, கால்நடைகள் குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் சரிவைச் சந்தித்து வந்தது. 

நெய் தயாரிக்கும் இயந்திரம்
நெய் தயாரிக்கும் இயந்திரம்

மேலும், கடந்த 1,990 ஆம் ஆண்டு முதல் எருமை வளர்ப்பு குறைவும் இந்தத் தொழில் நலிவடைந்து  வருவதற்கு ஒரு காரணமாக அமைந்தது. எனினும் 75 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியம் மிக்க ஊத்துக்குளி நெய், வெண்ணெய் தயாரிக்கும் தொழிலில் தற்போது 10க்கும் குறைவான நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டு வந்தாலும் அதன் தரமும், சுவையும் குறையவில்லை என்கின்றனர் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள்.

சபரிமலையில் ஊத்துக்குளி நெய்

இதுகுறித்து ஊத்துக்குளியில் உள்ள பட்டர்மேன் டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.துரைசாமி கூறுகையில், ஊத்துக்குளியில் தயாரிக்கப்படும் நெய்யானது கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் சபரிமலைக்கு டன் கணக்கில் அனுப்பப்பட்டு வந்தது. அதேபோல தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, திருமண விழாக்கள், கிருஷ்ண ஜயந்தி உள்ளிட்ட விசேஷ தினங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் டன் கணக்கில் வெண்ணெய், நெய் அனுப்பப்படுகிறது. 

நெய் நிரப்பும் இயந்திரம்
நெய் நிரப்பும் இயந்திரம்

ஊத்துக்குளியில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய்க்கு இன்றளவும் மவுசு குறையவில்லை. எனினும் தற்போது கூட ஊத்துக்குளியில் இருந்து ஆன்லைன் (அமேசான்), (பிளிப்கார்ட்)மூலமாக மாதந்தேறும் 10 டன் அளவுக்கு நெய், வெண்ணெய்யை விற்பனை செய்து வருகிறோம். அதேபோல, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் கப்பல் மூலமாக மாதந்தோறும் ஒரு டன்
நெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கரோனா நோய்த் தொற்றுக்கு முன்பாக இந்தத் தொழில் மந்தமான நிலையில் இருந்து வந்தது. ஆனால், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  மக்கள் தற்போது நெய், வெண்ணெய்யை அதிக அளவில் வாங்குகின்றனர். இதில், பசு நெய் ஒரு லிட்டர் ரூ.750-க்கும், எருமை நெய் ஒரு லிட்டர் ரூ.800-க்கும், பசு வெண்ணெய் ஒரு கிலோ ரூ.500-க்கும், எருமை வெண்ணெய் ஒரு கிலோ ரூ.550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com