வருங்கால மாமியார்கள் எப்படி இருக்க வேண்டும்? - கல்லூரி மாணவிகள் கருத்து

அக். 26 மாமியார் தினத்தையொட்டி திருச்சி கலை காவேரி கல்லூரி மாணவிகள் தங்களுடைய வருங்கால மாமியார்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். 
வருங்கால மாமியார்கள் எப்படி இருக்க வேண்டும்? - கல்லூரி மாணவிகள் கருத்து

அக். 26 மாமியார் தினத்தையொட்டி திருச்சி கலை காவேரி கல்லூரி மாணவிகள் தங்களுடைய வருங்கால மாமியார்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். 

கே. அபிநயா (பிஏ மூன்றாமாண்டு): எனது வருங்கால மாமியார் என்னை தாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர், அவராக இருக்கலாம். நான், நானாக இருக்க அனுமதிக்க வேண்டும். நான், ஏதாவது தவறு செய்தால் கூட நேரடியாக என்னிடம் தெரிவித்து திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும். மாறாக, குடும்பத்தின் பிற உறுப்பினர்களிடமும், எனது கணவரிடம் எனது குறையை தெரிவித்து பேசக்கூடாது. எங்கு சென்றாலும் அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டும். நீ தனியே போ. நான், எனது மகனுடன் செல்கிறேன் என பிரித்துப் பார்க்காமல், எந்த விருந்து, விசேஷமாக இருந்தாலும் ஒன்றாகவே செல்ல வேண்டும். பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை.

எம்.எஸ். ஆஷ்லின் (பிஏ மூன்றாமாண்டு): எனது வருங்கால மாமியார் என்னுடன் தோழியாகப் பழக வேண்டும். அனைத்து விஷயங்களையும் நான் அவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவரும் குடும்ப விஷயங்கள் அனைத்தையும் என்னுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.அனைத்து வேலைகளையும் என்னுடன் சேர்த்து செய்ய வேண்டும். என்னை ஒருபோதும் விட்டுக் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவரது மகனை எப்படி பார்க்கிறாரோ, அதேபோல என்னையும் ஒரு மகளாக பார்க்க வேண்டும். மருமகளாக இல்லாமல் மகளாக நினைத்து அன்பு பாராட்ட வேண்டும்.

எஃப்: ரூத் மரிய வின்ஸி (பிஏ மூன்றாமாண்டு): மாமியார் என்பவர், இப்போதைய இளைய தலைமுறையினரைப் போன்று மார்டனாக, டிரண்டிங்காக இருக்க வேண்டும். பழங்காலத்தில் பெண்களை வைத்திருந்ததைப் போன்று வைத்திருக்கக்கூடாது. வீட்டில் எந்த வேலையாக இருந்தாலும் பகிர்ந்து செய்ய வேண்டும். மகன் என்பதற்காக அவருக்கு மட்டும் ஆதரவாக பேசாமல், மருமகளுக்கும் ஆதரவாக இருக்க வேண்டும். எனது, அம்மா எப்படி என்னை பார்த்துக் கொள்வார்களோ அதுபோல இருக்க வேண்டும். என்னைப் பற்றி பிறரிடம் குறை சொல்லக் கூடாது. பிறர் முன்பு என்னை விட்டுக் கொடுக்காமல் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஜே. வெண்ணிலா (பிஏ மூன்றாமாண்டு): எனது மாமியார், எனது தோழியாக இருக்க வேண்டும். அனைத்து விஷயங்களையும் இருவரும் பரஸ்பரம் சேர்ந்து பகிர்ந்துகொள்ள வேண்டும். எத்தனை கஷ்டம் வந்தாலும் என்னோடு அவர் இருக்க வேண்டும். அதேபோல, எந்த கஷ்டமாக இருந்தாலும் அவருடன் நான் இருப்பேன். என் வகுப்புத் தோழியைப் போன்ற குணம் கொண்ட மாமியார் வர வேண்டும் என்பதே விருப்பம். 

ஜே. ராட்ரா (பிஏ மூன்றாமாண்டு): எனது மாமியார் ஒருபோதும் கண்டிப்புடன் இருக்கக் கூடாது. சாதாரணமாக இருந்தாலே போதும். ஆடை அணிவதில் எந்தவித நிர்பந்தமும் செய்யக் கூடாது. நான், இப்போதைய வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்ப டிரண்டாக இருப்பேன். அதேபோல, அவரும் டிரண்டாக, எனது சக தோழியாக இருக்க வேண்டும். எந்த இடத்திலும், எப்போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. வெளியே செல்லும்போது எந்தவித கட்டுப்பாடும், தடையும் விதிக்காமல் எங்கும் சுதந்திரமாக சென்றுவர அனுமதிக்க வேண்டும்.

ஏ. ரம்யா (பிஏ இரண்டாமாண்டு): மகனுக்கு எப்படி சுதந்திரம் கொடுக்கிறாரோ, அதுபோல மருமகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். மகள் எப்படி வீட்டில் இருப்பாளோ, அதேபோல மருமகளும் இருக்க அனுமதிக்க வேண்டும். சுதந்திரம் கொடுத்தாலும் நாங்கள் எந்தவித மீறலும் செய்யாமல் மாமியாருடன் இணைந்து செயல்படுவோம். மாறாக ஒருவட்டத்துக்குள் வைத்து, சிறையில் அடைத்ததைப் போல நடத்தக் கூடாது. கஷ்டம், நஷ்டங்களை பகிர்ந்து மகளாக நடத்த வேண்டும்.

யூ. பிரதீபா (பிஏ இரண்டாமாண்டு): எனது வருங்கால மாமியார் தோழியாக இருக்க வேண்டும். மகள் தவறு செய்தால் அதனை கண்டிக்காமல் காப்பாற்றுவதும், மருமகள் தவறு செய்தால் சுட்டிக்காட்டி குறை கூறுவதையும் தவிர்க்க வேண்டும். எனது ஆசையை தெரிந்து, விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். எந்தத் துறையாக இருந்தாலும் என்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தனது மகனிடம் எனது விருப்பத்தை தெரிவித்து அதற்கு துணையாக இருக்கச் செய்ய வேண்டும்.

எஸ்.எஸ். நிவேதா (பிஏ இரண்டாமாண்டு): எனது வருங்கால மாமியார் தோழியாக இருக்க வேண்டும். குடும்பத்தில் என்னையறியாமல் ஏதேனும் தவறு செய்துவிட்டால் அதற்காக கண்டிக்கும் நோக்கத்துடன் நடந்துவிடக் கூடாது. தவறை சுட்டிக்காட்டி மறுமுறை அது நிகழாத வகையில் என்னை வழிநடத்த வேண்டும்.

ஜி.பி. போபிஷா (பிஏ இரண்டாமாண்டு): எனக்கு வரப்போகும் மாமியார். எனது, 2ஆவது அம்மாவாக இருக்க வேண்டும். யாராலும் அம்மாவின் இடத்தை பூர்த்தி செய்ய முடியாது. இருந்தாலும், அம்மாவின் இடத்தை நிரப்பும் வகையில் மாமியார் இருக்க வேண்டும். எனது, கனவுகளை பூர்த்தி செய்ய வேண்டும். திருமணத்துக்குப் பிறகு நான் படிப்பதற்கோ, பணிக்கு செல்வதற்கோ தடையாக இல்லாமல், ஊக்குவிக்கும் நபராக இருக்க வேண்டும். சமையல் தெரியாது என்பதற்காக குறைகூறாமல், அவர் சொல்லிக்கொடுத்து நான் கற்றுக் கொள்வேன். நான், அவருக்கு துணையாகவும், எனக்கு அவர் துணையாகவும் இருக்க வேண்டும்.

ஐஸ்வர்யா லட்சுமி (பிஏ இரண்டாமாண்டு): நான் இசைக் கல்லூரி மாணவி. இசைக்கு நான் எப்படி முக்கியத்துவம் அளிக்கிறேனோ அதனை, எனது வருங்கால மாமியாரும் ஆதரிக்க வேண்டும். நான் இசைத்துறையை விட முயற்சித்தாலும், விட்டுக்கொடுக்காமல் என்னை ஊக்குவித்து, எனது விருப்பத்தை நிறைவேற்றித் தருவதில் முக்கிய பங்காற்ற வேண்டும். எனது தோழிபோன்று இருக்க வேண்டும்.

கே. சோனா (பிஏ இரண்டமாண்டு): எனது வருங்கால மாமியார், எனது அம்மா எப்படி என்னைப் பார்த்துக் கொள்வாரோ அவரைப் போல பார்த்துக் கொள்ள வேண்டும். தோழியாக இருக்க வேண்டும். நல்ல முறையில் என்னை கவனித்துக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com