மாமியார் - மருமகள் உறவு மேம்பட...மனநல மருத்துவர் கூறும் ஆலோசனைகள்!

பெரும்பாலான உறவுகள் பாதிப்பதற்கு மிக முக்கிய காரணியாக இருப்பது நம்முடைய ஈகோ தான். குறிப்பாக மாமியார்- மருமகள் உறவு பிரச்னைகளில் ஈகோவின் பங்கு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மாமியார்-மருமகள் என்றாலே சண்டை, சச்சரவு என்றே முன்னிறுத்தப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்களில் இதை மனதில் வைத்தே திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்குகிறது. பொதுவாக ஒவ்வொரு பெற்றோரும் தனது மகனுக்கு ஒருவிதமாகவும், மகளுக்கு வேறு விதமாகவும் அவரவர் இல்லத் துணையைத் தேர்வு செய்கின்றனர். மகள் என்றால் மாப்பிள்ளை தனிக்குடித்தனம் வந்துவிட வேண்டும் என நினைக்கின்றனர்.

மாமியார், நாத்தனார் இல்லாத குடும்பம் என்றால் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர், அதேநேரம், மகனுக்கு பெண் பார்க்கும் பெற்றோர், பெண் வீட்டில் மாமியார்-நாத்தனார் இருக்க வேண்டும். அதிலும் மைத்துனர் கண்டிப்பாக வேண்டும். அதோடு பெண்ணின் உடன் பிறந்த சகோதரர்கள் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருந்தால் மகிழ்வுக்கு அளவே இல்லை. இன்றைய சூழலில் திரைப்படங்கள், தொலைக்காட்சித்  தொடர்கள் அனைத்தும் மாமியார்-மருமகள் உறவை மிகவும் கொடுமையாகக் காட்டி வருகின்றன.

ஆனால், இதையெல்லாம் தாண்டி பல குடும்பங்களில் மாமியார்-மருமகள் உறவு ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்குச் சிறப்பாக இருக்கிறது. ஒரு பெண் சுமார் 20 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தில் வானம்பாடியாக வலம் வந்த நிலையில்,  திருமணம் என்ற பந்தத்தில் வேறொரு குடும்பத்தோடு இணைகிறார். அத்தகைய சூழலில் புதிய உறவு உருவாகும்போது இருதரப்பிலும் சக உறுப்பினராக முதலில் அங்கீகாரம் அளிப்பது அவசியமானது. இதில் ஏற்படக் கூடிய சறுக்கல்கள்தான் பல்வேறு குடும்பங்களில் பிரச்னை, கருத்து வேறுபாடு, பிளவு என பல அசௌகரியங்களுக்கு அடித்தளமிடுகின்றன. மற்ற உறவு முறைகளைப் போலவே மாமியார் - மருமகள் உறவும் என்ற மனமாற்றம் அவசியமாகிறது.

மாமியார்-மருமகள் உறவு வலுப்பட மதுரை அஹானா மருத்துவமனையின் மனநல ஆலோசகர் மற்றும் உள சிகிச்சையாளர் ப.ராஜசௌந்தரபாண்டியன் கூறும் ஆலோசனைகள்...

மனநல ஆலோசகர் ப.ராஜசௌந்தரபாண்டியன்
மனநல ஆலோசகர் ப.ராஜசௌந்தரபாண்டியன்

ஒரு மனிதனுக்கு பிறக்கும்போதே தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் எனப் பலர் இருப்பார்கள். அவர்கள் வளர்ந்து மணம் செய்யும்போது அவர்களின் துணைவர்கள் வழியிலும் புதிய உறவுகள் சேருகின்றன. அப்படி ஒரு பெண்ணுக்கு தன் கணவன் மூலம் கிடைக்கும் ஒரு உறவு தான் மாமியார். அதேபோல் ஒரு பெண்ணுக்கு தன் மகன் மூலம் கிடைக்கும் உறவுதான் மருமகள். உலகில் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வுண்டு.  ஆனால் மாமியார் -மருமகள் பிரச்சனைக்கு தீர்வேயில்லை என நம்மில் பலர் நினைப்பதுண்டு. நம்மைப் படைத்த ஆண்டவனால் கூட இந்த பிரச்சனைக்குத்  தீர்வு காண முடியாது என புலம்பிய ஆண்கள் இவ்வுலகில் பலர் உண்டு. பல திரைப்படங்களில் இந்த இரண்டு உறவுகளுக்கு இடையேயான உறவை கேலி செய்வது போல் சித்தரித்திருப்பார்கள்.

காலங்காலமாகவே திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் மாமியாரையோ அல்லது மருமகளையோ வில்லியாகத்தான் காட்டி வருகிறார்கள். அம்மாவிற்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் பிரச்னையில் அதிகம் சிக்கித் தவிக்காத ஆண்கள் சிலரே. தொழில் மற்றும்  வேலைகளில் சிறப்பாக செயல்படும் ஆண்கள் கூட அம்மா மற்றும் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்னைகளை சமாளிக்கத் தெரியாமல் முழி பிதுங்கி நிற்கிறார்கள்.

உறவு மேம்பட

மாமியார் -மருமகள் உறவு சிறப்பதில் மிக முக்கிய பங்கு ஆண்களுக்கே. ஆண்கள், திருமணத்திற்கு முன்பு பல மணி நேரம் நிச்சயித்த பெண்ணோடு பேசுகிறார்கள். இக்காலகட்டத்தில் கண்டிப்பாக தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை பற்றி அப்பெண்ணிடம் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக தங்களதுஅம்மாவைப் பற்றி முழுமையாக அப்பெண்ணிடம் தெரிவிக்க வேண்டும். பெண்ணின் குடும்பத்தினர் பற்றியும் ஆண் தெரிந்துகொள்ள வேண்டும். அதேசமயம் அம்மாவிடம் தன் வருங்கால மனைவியைப் பற்றி தெரிவிக்க வேண்டும். இப்படி தெரிவிப்பதன் மூலம் ஒவ்வொருவருடைய குணம் பற்றி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ஏற்றார் போல் நாம் அவரிடம் நடந்து கொள்வதன் மூலம் பல தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

மாமியார் அல்லது மருமகள், உறவு வலுப்படுவதற்கு இருவருக்கும் சமஅளவில் பொறுப்பு உள்ளது. இருவருமே தங்களை குடும்பத்தின் சக அங்கத்தினராகப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். அநேக மக்கள் தங்கள் உறவினர்களுடனான உறவை கெடுத்துவிடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் அவர்களை எதிரிகளாகப் பார்க்கிறார்கள். பெரும்பாலும் குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாட்டினால் மட்டுமே இவ்வாறு ஏற்படுகிறது. எந்தவொரு கருத்து வேறுபாட்டையும் மற்றவர்கள் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு நிறைய விசயங்கள் நன்றாகப் புலப்படும். இதன் மூலம் பல தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம். அதே நேரத்தில் உங்கள் உறவை நன்றாக வளர்த்துக்கொள்ள முடியும்.

ஈகோவை விட்டெறியுங்கள்

பெரும்பாலான உறவுகள் பாதிப்பதற்கு மிக முக்கிய காரணியாக இருப்பது நம்முடைய ஈகோ தான். குறிப்பாக மாமியார்- மருமகள் உறவு பிரச்னைகளில் ஈகோவின் பங்கு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். தாழ்மையுடன் இருங்கள் மற்றும் எந்தவிதமான மோதலையும் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஈகோவை விட்டெறிந்து அன்பை கையில் எடுப்பதன் மூலம் உறவு வலுவடைகிறது அவர்களைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்களின் சொந்தங்கள் மற்றும் உறவுமுறைகளை தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்களுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இப்படி தெரிந்து கொள்வதன் மூலம் நம்மால் பல விஷயங்களில் தவறான முடிவு எடுப்பதைத் தவிர்க்க முடியும் . நமக்கு ஒரு விஷயத்தை பற்றி முழுமையாக தெரிந்தால் மட்டுமே அதில் வெற்றி காண முடியும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதேபோல் ஒருவரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வதன் மூலமே அவர்களுடனான உறவை சரியான முறையில் அமைத்துக்கொள்ள முடியும்.

மரியாதை, மதிப்பை உயர்த்தும்

நீங்கள் பேசும்போதும் அல்லது சாப்பிடும்போது அவர்களுக்கான மரியாதையை கொடுங்கள். குறிப்பாக அவர்கள் குடும்ப பாரம்பரியம் மற்றும் பின்னணி பற்றி கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். மரியாதை என்பது நேரில் கொடுப்பதைத் தாண்டி மற்றவர்களிடம் அவர்களைப் பற்றி பேசும்போதும் இருக்கிறது.

மிகவும் மரியாதையாகப் பேசுவதால்  கண்டிப்பாக அந்த விஷயம் அவர்களுக்குச் சென்றடையும். அது உங்களின் உறவை வலிமையாக்கும். அதேபோல, மற்றவர்களைக் குறை கூறுவது என்பது நமக்கு எப்போதும் அலாதி பிரியம்தான். ஆனால், இது உறவுகளில் பெரிய விரிசலை ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை. ஒருவரை குறை கூறுவதைத் தாண்டி அவர்களை மற்றவர்களிடம் பாராட்டிப் பேசிப் பாருங்கள். அது மிகப்பெரிய மாற்றத்தை உங்கள் உறவில் உருவாக்கும். இதைத்தான் புரிந்துகொள்ள நாம் தவறுகிறோம். மற்றவர்களிடம் உள்ள குறையை பார்ப்பதை விட்டுவிட்டு அவர்களிடம் உள்ள நிறையை பார்ப்பதன் மூலம், அவர்கள் மீது உள்ள மதிப்பு கூடுகிறது அது பிரகாசமான உறவிற்கு வித்திடுகிறது. 

வேலையின்போது முன்வந்து உதவுங்கள்

மாமியாரோ அல்லது மருமகளோ வேலை செய்யும்போது அவர்களுக்கு முன்வந்து பரஸ்பரம் உதவி செய்யுங்கள். அது அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கும். குறிப்பாக நீங்கள் விடுமுறைக்குச் செல்லும்போது  நாம் விடுமுறைக்கு தானே வந்தோம் என்று சும்மா இருந்துவிடாமல் அனைத்துப் பணிகளிலும் பங்கு எடுத்து முடித்துக் கொடுப்பதன் மூலம் அவர்களின் மனதில் நீங்கா இடம் பெறுவீர்கள்.அதேநேரம், நீங்கள் நீங்களாகவே இருங்கள். எக்காரணம் கொண்டும் அவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று பாசாங்கு செய்யாதீர்கள். அதனால் துளியளவும் உபயோகம் இல்லை. இப்படி நடிப்பது நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. உண்மையான அன்புடன் இருந்தால் மட்டுமே அந்த உறவு நீண்ட நாட்களுக்கு நிலைக்கும்.

மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் 

நம்மை யாராவது மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசினால் நமக்கு அறவே அது பிடிக்காது. ஆனால் அதே விஷயத்தை நாம் அடிக்கடி செய்து கொண்டுதான் இருக்கிறோம். மருமகள் மாமியாரை மற்றொருவருடன் ஒப்பிட்டும், மாமியார் மருமகளை மற்றொருவருடன் ஒப்பிட்டும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இதுவே பலவித பிரச்னைகளுக்கு அடித்தளமாக அமைகிறது. ஒப்பிடுதல் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர் வரை யாருக்கும் பிடிக்காத ஒரு விஷயம். இதை தவிர்ப்பதன் மூலம் உறவுகள் பலப்படும்.

எப்பொழுதும் தொடர்பில் இருங்கள்

இன்று மாமியார்-மருமகள் ஒரே வீட்டில் வசிப்பதை அரிதாகவே பார்க்க முடிகிறது. அப்படி வெவ்வேறு வீட்டில் இருந்தாலும் கூட அடிக்கடி தொடர்பில் இருக்க வேண்டும். நலம் விசாரிப்பது என்பது உறவை எப்பொழுதுமே மேம்படுத்தும். நலம் விசாரிப்பதற்கு நேரமில்லை என்று சொல்வது மிகவும் அபத்தமான செயல் ஆகும்.  மணிக்கணக்கில் மற்றவர்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் உங்கள் சொந்தத்திடம் பேச நேரமில்லை. ஒரு சில நிமிடம் அன்பாக பேசுவதன் மூலமும் கல்யாண நாள், பிறந்த நாள், பண்டிகை நாட்களில் தொடர்புகொண்டு வாழ்த்துவதன் மூலமும் அந்த உறவு சிறப்பாக அமையும்.

உறுதுணையாக  இருங்கள்

அம்மா தன் மகனுக்கு உதவுவதன் மூலம் மருமகளின் மனதில் இடம் பிடிக்கிறார். மனைவி தன் கணவனுக்கு துணையாக நிற்கும் போது கண்டிப்பாக மாமியாரின் மனதில் நீங்கா இடம் பெறுகிறார். இவ்வாறு  இருப்பதன் மூலம் மாமியார் - மருமகள் உறவு நிலையானதாக மாறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com