மாமியார்-மருமகள் வீண் சண்டைகளைத் தவிர்க்க சில வழிகள்!

உலகில் எதைத் தக்க வைக்க அதிகம் சிரமப்படுகிறீர்கள் எனக் கேட்டால் 10-ல் 8 பேர் உறவுகளை என்பார்கள்
மாமியார்-மருமகள் வீண் சண்டைகளைத் தவிர்க்க சில வழிகள்!

உலகில் எதைத் தக்க வைக்க அதிகம் சிரமப்படுகிறீர்கள் எனக் கேட்டால் 10-ல் 8 பேர் உறவுகளை என்பார்கள். ஏன்? அத்தனை சிரமமானதா உறவின் பாரம்? இருக்கலாம் . ஆனால் சிரமம் என்பதை விட சிக்கல் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தாலும் சில சமயங்களில் எதிர்தரப்பினர் புரிந்துகொள்ளாமல் பிரிந்து செல்லக் கூடும் .

அவர்கள் நண்பர்கள், அண்ணன், தங்கை, வேறு யாரானாலும் விட்டுப் பிடிக்கலாம். ஆனால் அது உங்கள் மாமியாராக இருந்தால்? ஒரு துப்பாக்கி, ஒரு தோட்டா, ஒரு வாய்ப்பு போன்றதுதான் இந்த மாமியார்-மருமகள் உறவு. ஒருமுறை மாமியாரின் பார்வையில் நீங்கள் சிக்கிவிட்டாலும் எதிலும் குற்றத்தைத் தேட ஆரம்பித்துவிடுவார்கள் இல்லையா? 

அதனால் உங்கள் வருங்கால அல்லது நிகழ்கால மாமியாரிடம் உருவாகும் சண்டைக்கான காரணங்களைத் எப்படி தவிர்ப்பது என்பதைப் பார்ப்போம்.

1. தாய் வீட்டை பற்றி நினைத்துக் கொண்டிருப்பது

முதலில் திருமணமான புதிதில் பெற்றோர்களைப் பிரிந்து வேறு ஒரு வீட்டில் புதிய மனிதர்களுடன் இருக்கும்போது உருவாகும் வெறுமையில் உங்கள் மாமியாரிடம் ‘ என்னோட வீட்டை ரொம்ப மிஸ் பண்றேன்’ என சொல்லவே கூடாது. அதில் மனரீதியான உருவாகும் விலகல்கள் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கும்.

2. உங்கள் அம்மாவின் பெருமைகளைப் பேசக்கூடாது

சொந்த வீட்டில் இருக்கும் வரை தெரியாத அம்மாவின் அருமைகளை தூக்கத்தில் கூட மாமியாரிடம் சொல்லி புலம்பக் கூடாது. ஒருவேளை தெரியாமல் சொன்னாலும் அதைவிடச் சிறந்தவர் என் மாமியார் எனக் காதைக் கடித்தால் உண்மையிலேயே நீங்கள் புத்திசாலி.

3. ஆடையைப் பற்றிய அபிப்ராயம்

உங்களுக்கு நல்ல ‘டிரெண்டிங்’ ஆடைகளை அணிய விருப்பம் இருக்கலாம். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு உங்கள் மாமியார் இல்லாமல் இருந்தால் என்ன செய்வீர்கள்? அதனால் சில நேரங்களில் அவருக்கு பிடித்த மாதிரி உடைகளைத் தேர்வு செய்து அதனால் உருவாகும் தேவையற்ற வாதங்களிலிருந்து தப்பித்து விடுங்கள்.

4. குழந்தைப் பேறு

நவீன சிந்தனையின் விளைவுகளில் ஒன்றான ‘இப்ப கொழந்தை பெத்துக்க முடியாது’ என்ற பல மருமகள்கள் அவர்களுடைய மாமியாரை சமாளிக்க முடியாமல் திணறி வருவதால் கூடுமானவரை அதைப் பற்றிய எண்ணங்களை உங்கள் கணவர் மூலம் தெரிவிப்பது சரியான வழி.

5. ஸ்மார்ட்போன் என்னும் வில்லன்

தற்போது உறவுகளுக்குள்ளான நிறைய சண்டைகளுக்கு அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவதுதான் காரணம் எனத் தெரிய வந்திருக்கிறது. ’அந்த காலத்துல‘ என்கிற கதைகளைக் கேட்க விடாத உங்கள் ஸ்மாட்போனை மாமியார் எதிர்படும் போது தூர வீசிவிடுங்கள். ஒருவேளை உங்களுடன் இணைந்து அவர் ‘ரீல்ஸ்’ செய்கிற ஆளாக இருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்.

6. ஆணவத்தைக் கவனித்தல் 

பல நேரம் நமக்கு எதிர்தரப்பினர் மீது உருவாகிற கோபத்தைவிட ஆணவம் பயங்கரமானது. குறிப்பாக, மருமகள்-மாமியார் உறவுகளில் இந்த ஆணவமே பெரிய சண்டைகளுக்கு வழி வகுக்கிறது என்பதால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்த பழக வேண்டும்.

7. உடல்நிலையை அறிதல்

உங்கள் மாமியாருக்கு உடலில் என்னனென்ன பிரச்னைகள் இருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்திருங்கள். அதனால் அவர் உடல் ஒத்துழைக்காத வேலைகளை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள். மேலும் அவரது உடல்நிலையை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது. 

8. அக்கம் பக்கம் பார்

உங்கள் மாமியாருக்கு ஆகாத அக்கம் பக்கத்தினருடன் நீங்கள் உறவாடினால் ஏற்படும் புரிதலின்மை, குழப்பங்கள் இருவருக்கும் மனக்கசப்பை உருவாக்கும். அதனால் அவர் நடமாட்டம் இல்லாதபோது தோழிகளிடம் குழம்பு, பொரியலைப் பரிமாறிக் கொள்ளலாம். 

9.விட்டுக்கொடுக்காமை

உறவைத் தக்கவைக்க முதன்மையான குணங்களில் ஒன்று எந்த நிலையிலும் உடன் இருப்பவரை விட்டுக் கொடுக்காமல் இருப்பது. பொதுவெளியிலோ, குடும்பச் சந்திப்புகளிலோ மாமியாருக்கு உண்டான மரியாதையை அளித்து விடுங்கள்.

10.வேற்று மனிதர்கள் என்ற எண்ணத்தைக் களைதல்

எந்த உறவுகளும் என் பெற்றோர்களுக்கு இணையானவர்கள் இல்லை என நினைத்து பிறரிடம் வேற்று மனிதர் என்ற எண்ணத்தை உருவாக்கக் கூடாது. அது உறவில் ஏற்படும் முக்கியமான பிளவு. அதை சரி செய்ய வேண்டுமென்றால் மாமியாருடனான உறவு கசப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது அதை அறிந்து இணங்கி உங்கள் அன்பை தெரிவித்துக் கொண்டே இருங்கள்.

மேலே சொன்னக் கருத்துகள் நாட்டில் 80 சதவீதம் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள். அதை மறுக்கலாம் அல்லது ஏற்கலாம். ஆனால் மாமியார் - மருமகள் என்கிற ஒரு அற்புதமான உறவை அன்றாட சண்டைகள், ஆணவங்கள் மூலம் அழித்தால் நீங்கள் ஒரு அழகான வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com