மாமியார் என்னும் மனுஷி!

மாமியார் என்பவர் தனிக் குடும்பத்தில் இருந்தாலும் அல்லது சேர்ந்து வாழும் கூட்டுக் குடும்பத்தில் இருந்தாலும் பெரும்பான்மையானக் குடும்பங்களில் மாமியார் - மருமகள் உறவு சுமூகமாக இருப்பதில்லை.
மாமியார் என்னும் மனுஷி!

ஒரு வீட்டில் ஒரே அடுப்பில் சமைத்து பகிர்ந்துண்டு வாழும் உறவுகள் அடங்கிய அமைப்பிற்கு குடும்பம் என்று பெயர். இந்தக் குடும்பம் என்ற அமைப்புதான் சமூகத்தின் ஒழுக்க மேம்பாட்டிற்கு உறுதுணை புரிகின்றது. இக்குடும்ப அமைப்பு கூட்டுக் குடும்பம், தனிக்குடும்பம் என்கிற வகைமையுடையதாய் அமைந்து உறவுகளின் உணர்வு, உரிமை என்கிற நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது. இருதரக் குடும்ப அமைப்புகளிலும் மாமியார் என்ற உறவு ஒரு உறுதியான முக்கியமான உறவாகத் திகழ்கிறது.

மாமியார் என்பவர் தனிக் குடும்பத்தில் இருந்தாலும் அல்லது சேர்ந்து வாழும் கூட்டுக் குடும்பத்தில் இருந்தாலும் பெரும்பான்மையானக் குடும்பங்களில் மாமியார் - மருமகள் உறவு சுமூகமாக இருப்பதில்லை. சில குடும்பங்களில் மாமியாருக்கும் - மருமகளுக்குமான மன இறுக்கம் வெளிப்படையாகவும், சில குடும்பங்களில் பனி மூட்டம் போலவும் திகழ்கிறது. பெரும்பாலும் பல்வேறு சூழல்களில்  இவர்களது வானிலைப் பதட்டமாகவே இருக்கிறது. இதன் அடிப்படையில் இல்லம் சூடாகவே இருந்துவிடுவதுண்டு. இதனால் இவர்களுக்குள் ஒரு புன்னகை மனநிலை இல்லாமல் மறைந்துவிடுகிறது.

இத்தனைக்கும் தன் மகனுக்கு பிடித்துப் போன பெண்ணை மணம் முடித்து அழைத்துவரும் மாமியாராயினும், அல்லது தனக்குப் பிடித்த வீட்டிற்கு மருமகளாகச் செல்லும் பெண்ணாயினும் இந்த உறவுக்குள் பல குடும்பங்களில் உறவும் அன்பும் பலமாக அமைந்திருக்கிறதா என்றால் அது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

மாமியார் என்பவர் கணவன் என்கிற உறவைத் தந்த அற்புதமான உறவு என்பதை முதலில் மருமகளா இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் புரிந்துகொள்வது நலம். மாமியார் என்பவர் ஒரு குடும்பத்தை நிர்வகித்துவரும் ஆளுமை இவர் தனது ஆளுமை உடையாமல் இருப்பதற்கு கவனமாகச் செயல் படுவார். அப்பொழுது மருமகளாகச் செல்லும் பெண் தன்முனைப்பு இன்றி தன்னால் மாமியாரின் மதிப்பீடு குடும்பத்தில் என்னிலையிலும் உடைபடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

செயல்பாடு நம்பிக்கை உடையதாக இருக்க வேண்டும். மாமியாரும் பொன் பொருள் நோக்கம் கொண்டு மருமகளை வதைசெய்யும் தொலைக்காட்சி நாடக மாமியார் போல் வில்லியாக செயல்படும் மனநிலை இல்லாதவராக இருக்க வேண்டும். மருமகளை கடுமையாக வேலை வாங்கும் கெடு மனமில்லாது மருமகளை மகள்போல் நடத்தும் மனம் கொள்ள வேண்டும்.

வலுவுடையவர் வலுவில்லாதவர்களை அதிகாரவரம்பிற்குள் உட்படுத்த நினைப்பது மிகப்பெரும் தவறென்பதை இருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

இருவரும் புரிதலோடு செயல்படுகையில் குடும்பத்தின் பாதுகாப்புக் கூடுகிறது. மாமியார் என்பவர் தன் மகனின் உலகத்தை பாதுகாக்க சுழல்கிறார் என்பதை மருமகள் புரிந்துகொள்ள வேண்டும். மாமியார் என்கிற உறவு ஒரு பன்முக ஆளுமைவுடையது. இந்தப் புரிதல் ஒவ்வொரு மருமகளுக்கும் வேண்டும். பொருளாதாரக் கட்டமைப்பையும் உறவுகளையும் அறிமுகப்படுத்தும் வலிமையும் மாமியார் என்பவராலேயே ஒரு மருமகளுக்கு கிடைக்கிறது என்பதை  இருவரும் புரிந்து பயணிக்கையில் சிக்கல் எழுவது குறைந்துவிட வாய்ப்பிருக்கிறது.

மாமியார் அவரது மகன் மீது கொண்டுள்ள அன்பால் பல நேரங்களில் தன் மகனுக்கு வேண்டியதை தானே செய்ய வெண்டுமென நினைப்பார். அதேபோல் தன் மீது மகன் கொண்ட அன்பு குறைந்துவிடக் கூடாது அந்த அன்பை யாரும் பகிர்ந்து போய் விடக்கூடாதென்பதும் சிலரிடம் இருக்கும். இது காலம் செல்ல செல்ல சரியாகிவிடும் என்பதை மருமகள் புரிந்துகொள்கையில் மாமியார் - மருமகள் உறவுச் சிக்கல் சற்று தணிந்து போகிறது.

மாமியார்,  மருமகள் வந்தப் புதிதில் தன் மகன் மீது கொண்ட அன்பு, நம்பிக்கை மருமகளால் சேதமாகி விடுமோ என்ற பயம், பதட்டம் மாமியார் என்கிறப் பெண்ணுக்குள் விழும் போதும் தன் மகனின் அன்பு திடீரென்று இன்னொரு பெண்ணிற்கு பகிர்ந்தளிக்கப்படும்போதும் தன்மகனை தன்னிடமிருந்தும் தன் குடும்பத்திலிருந்து பிரித்துவிடுவாளோ எங்கிற அச்சம் வருகிறபோதும்  மாமியார் என்கிறப் பெண் உளவியல் சார்ந்த சிக்கலுக்கு ஆளாகிறாள். இதிலிருந்து விடுவித்து மாமியாருக்கு நம்பிக்கை கொடுப்பவராகப் மருமகள் என்கிறப் பெண் திகழ வேண்டும். இது சமூகத்தில் சாத்தியமாகிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.

மாமியார் மருகளுக்குள் புரிதல், விட்டுக்கொடுத்தல் குறையும் போது மனச் சிக்கல் ஏற்பட்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. இந்நிலை பல்வேறு இடங்களில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் இரு பெண்களையும் சமநிலைக்கு கொண்டுவர முடியாது, ஆண்கள் திண்டாடிவிடுகிறார்கள். இருவரையும் சாமளித்து தாய்க்கு நம்பிக்கையையும் மனைவிக்கு புரிதலையுக் கொடுக்கும் ஆண், மாமியார்-மருமகள் உறவு வலுப்பெற அதைத் தக்கவைக்க  காரணமாகிறான். மருமகள் சிறுபெண் தன் குடும்பத்தை தனக்குப் பிறகு வழிநடத்தும் பெண் என்கிற நிலையில் அன்பையும் அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்க வேண்டும் மாமியார்.

மருமகள் -மாமியார் இடையே ஏற்படும் சண்டைதான் கூட்டுக் குடும்பச் சிதைவிற்கும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. சில குடும்பங்களில் மாமியாருக்கு உணவிடுவதில்கூட சிக்கலாகி அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள் இல்லையேல் முதியோர் இல்லங்களைக் காட்டிவிடுகிறார்கள்..

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந்தலை.

என்கிற உயரிய பண்பாடு மறந்துபோனவறாகிறோம்.

மாமியார்கள் மருமகள்கள் மீது அதிகாரம் செலுத்துபவர்களாக பொன், பொருள் சார்ந்து  சித்ரவதை செய்யும் கொடும் மனதைத் தன்னிலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும். மருமகளும் தன் அம்மாவாக நினைத்து மனம் கொண்டு தன்செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். அம்மாவிற்கு கொடுக்கும் அதே பிரியத்தை, மரியாதையை மாமியாருக்கும் கொடுக்க மனம் கொள்ளவேண்டும்.குற்றத்தை பொறுத்தலும் பெரிதுப்படுத்தாமல் இருத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும். மருமகளுக்கு அம்மா வீடென்றால் அன்பு, சுதந்திரம் மாமியார் வீடென்றால் அச்சம், பயம் நிறைந்த இடமாக இருப்பதை மாமியார்கள் களைய வேண்டும். 

மாமியார்களின் நிலை என்பது அன்பிற்கும் உணவிற்கும் உடைக்கும் தடுமாறும் நிலையாகவும் பாதுகாப்பற்றதாகவே இருக்கிறது. நகர்ப்புறத்தில் பொருளாதார நிலையுடைய மாமியார் என்கிறப் பெண்ணிற்கு பொருள் சார்ந்த சிக்கல் சிலருக்கு குறைவு, சிலர் வயதான நிலையிலும் ஏதோ ஒரு வேலை செய்தால்தான் சாப்பாடு என்ற நிலை உள்ளது.

கிராமப்புறங்களில் சற்று நிலை வேறென்றாலும் உணவு சார்ந்தும் அன்பு சார்ந்தும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இங்கு எத்தகு குடும்பம் மகிழ்ச்சியான குடும்பமென்றால் பணத்தால் நிறைந்த குடும்பமல்ல, உறவால்  நிறைந்தக் குடும்பமே மகிழ்ச்சியானக் குடும்பம். இதற்கு மாமியார்கள் காரணமாய் அமைய வேண்டும். மருமகள்கள் இவரின் கரம் பற்றிக்கொள்ள வேண்டும். மாமியாரும் ஒரு மனுஷி என்பதை மனம் கொண்டு அவர்களின் உலகை அழகாக்குவோம். இது நடக்குமா? நடந்தால் எல்லா நாளும் மகிழ்ச்சிதான்.  

[கட்டுரையாளர் -உதவிப் பேராசிரியர்-தமிழ்த் துறை, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி(த), தஞ்சாவூர்]      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com