'குறிப்பறிந்து தேவைகளை நிறைவேற்றுவதில் வல்லவர் என் மாமியார்'

மூலிகை அம்மா என்று அழைத்துக் கொண்டே சிலர் மூலிகைகளை வாங்க வரும்போது எனக்கே சில நேரங்களில் பொறாமை ஏற்படுவதுண்டு. அத்துடன், அவர் என் மாமியார் என நினைக்கும்போது கர்வமும் ஏற்படும்.
மாமியார் அமுதவல்லியுடன் மருமகள் சுபிதா.
மாமியார் அமுதவல்லியுடன் மருமகள் சுபிதா.
Published on
Updated on
1 min read

திருவாரூரில் மூலிகைப் பெண்மணி என்ற பெயர் பெற்றவர் ஓய்வு பெற்ற ஆசிரியரான அமுதவல்லி. அரசு விழாக்களிலோ, திருவிழா நடக்கும் ஊர்களிலோ தவறாமல் பங்கேற்று மூலிகைகளை பரிசாக வழங்கியவர். இயற்கையுடன் கழிப்பதில் அலாதியான பிரியம் கொண்டவர். அவரைப் பற்றிக் கூறுகிறார் அவரது மருமகளும், கருத்தரிப்பு மற்றும் வாழ்வியல் நோய் சிறப்பு மருத்துவருமான எம். சுபிதா.

புதிதாக மணமாகி வந்தபோது கொஞ்சம் பயமாக இருந்தது. நிறைய பேர் மூலிகைகளை வாங்க வருவதால் தோட்டப் பராமரிப்பு அவருக்கு ரொம்பப் பிரியம். அதனால், எப்படி நடந்து கொள்வாரோ என்ற அச்சம் இருந்தது. ஆனால், அவரோ மருமகள் என்று கருதாமல் மகளாகவே என்னை பாவித்தார். எனவேதான் நான் அவரை 'அம்மா' என அழைப்பது வழக்கம்.

திருமணம் போன்ற விசேஷங்களுக்கு செல்லுமிடத்தில் நான் அவரை அம்மா என உரிமையுடன் பேசுவதை சிலர் பார்க்கும்போது இவர் உங்கள் மகளா.. என ஆச்சரியத்தோடு கேட்கும்போது பெருமையாக இருக்கும். மூலிகைத்தாய், மூலிகை அம்மா என்று அழைத்துக் கொண்டு சிலர் மூலிகைகளை வாங்க வருவர். அப்போது எனக்கே சில நேரங்களில் பொறாமை ஏற்படுவதுண்டு. அத்துடன், அவர் என் மாமியார் என நினைக்கும்போது கர்வமும் ஏற்படும்.

பெண்கள் தங்கள் நேரத்தை டிவி பார்ப்பதிலே செலவிடுவார்கள். விளம்பரங்கள், நாடகங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்திவிட்டு, தங்கள் வீட்டை மறந்துவிடும் பல பெண்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் மத்தியில், அமுதா அம்மா முற்றிலும் மாறுபட்டவர். நெடிய சிந்தனை அதிகம் கொண்டவர். வெட்டியாக அரட்டை அடித்துக்கொண்டு வீணாக நேரத்தை கழிக்கும் பெண்ணில் தனித்துவமாக தெரிந்தவர் என் மாமியார்.

ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் படிப்பது, இயற்கை சார்ந்த நிகழ்வுகள், செடி, கொடிகள் வளர்ப்பு என இன்னமும் தன்னை சுறுசுறுப்பான மனநிலையிலேயே வைத்துள்ளார். பயிர் வாடினாலும் அவரால் தாங்க முடியாது, எங்கள் முகம் வாடினாலும் அவரால் தாங்க முடியாது. குறிப்பறிந்து எங்கள் தேவைகளை நிறைவேற்றுவதில் அவர் கெட்டிக்காரி. வீட்டையும், சமுதாயப் பணியையும் செவ்வனே ஒருங்கிணைத்து நடத்துவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்.

அவர் கூட இருக்கிறபொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு புகுந்த இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் நம் வீட்டில் சுதந்திரமாக இருக்கிறோம் என்ற உணர்வை அதிகமாக உணர வைத்தவர். இதுபோன்ற மாமியார் கிடைத்தது என் பூர்வ ஜென்ம புண்ணியம் என என் தோழிகளிடம் பல முறை தெரிவித்துள்ளேன்.

நம்மாழ்வாரால் பாரட்டப்பட்ட பெண்மணிக்கு நான் மருமகளாக இருக்கிறேன் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com