மாமியார் Vs மாமியார்!

மாமியாரும் தாய்க்கு நிகரானவர்தான். ஆனால் விதிவசத்தால் கொண்டாட முடியவில்லை, கொண்டாடப்படுவதில்லை. 
மாமியார் Vs மாமியார்!


"நீ மட்டும் எனக்கு மருமகளா வந்த.. அந்த வெடுக்கு வெடுக்குனு ஆட்டுற இடுப்பு எலும்பை உடைச்சி மாலையா போட்டுக்குவேன்..."

"நீ மட்டும் என் மாமியாரா வந்த.. முன் பல் எல்லாத்தையும் உதிர்த்து கோத்து ஒட்டியானமா கட்டிக்குவேன்.." இது சின்னக்கவுண்டர் படத்தில் வரும் மனோரமா - சுகன்யா நடித்த கதாப்பாத்திரங்கள் பேசிக் கொள்ளும் வசனமாக அமையப்பெற்றிருக்கும்.

உண்மையிலேயே சுகன்யா மருமகளாக வீட்டுக்குள் வரும் போது, இந்த மைன்ட் வாய்ஸ், அங்கிருக்கும் அனைவருக்குமே கேட்கும். அதனால் மனோரமா - சுகன்யாவுடன் சேர்ந்து அனைவரும் சிரிக்க, இது புரிபடாத சின்ன கவுண்டர் விஜயகாந்தோ, எதற்கு வம்பு என்று சிரித்து வைப்பார்.

குடும்பச் சித்திரத்தில் இது ஒரு அருமையான நகைச்சுவைக் காட்சி மட்டுமல்ல, இத்திரைப்படத்தில் மாமியார் - மருமகளின் கதாப்பாத்திரங்களும் அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இத்தனையும் இங்குச் சொல்லக் காரணம்.. மாமியார்களைப் பற்றி நாம் சொல்லப் போகும் விஷயம்தான்.

என்ன திடீரென மாமியார்களைப் பற்றி என்று சிந்திக்கிறீர்களா? காரணம் இல்லாமல் இல்லை. அன்னையர் நாள், தந்தையர் நாள், காதலர் நாள் என்பது போல அக்டோபர் 4வது ஞாயிற்றுக்கிழமை மாமியார் தினம் கொண்டாடப்படுகிறது. 

மாமியாரைக் கொண்டாட ஒரு நாளா? என்று ஆச்சரியப்படுபவர்களுக்கும், மாமியாரைக் கொண்டாடவெல்லாம் ஒரு நாளா? என்று கோபப்பார்வை பார்ப்பவர்களுக்கும் ஒரு பதில் உண்டென்றால் அது ஆம் என்பதுவே.

தாயை கொண்டாடுவது போல மாமியாரும் கொண்டாடப்பட வேண்டியவர்தான். நமக்கான வாழ்க்கைத் துணையை பெற்றெடுத்து பெரும்பாடுபட்டு வளர்த்து ஆளாக்கி, நம் கையில் ஒப்படைத்திருக்கும் மாமியாரும் தாய்க்கு நிகரானவர்தான். ஆனால் விதிவசத்தால் கொண்டாட முடியவில்லை, கொண்டாடப்படுவதில்லை. 

அது ஏன் என்றெல்லாம் இங்கே அலசப்போவதில்லை. மாறாக. மாமியாரில் இரண்டு ரகம் உண்டு. அந்த இரண்டு ரகம் எவ்வாறு ஒன்றோடு ஒன்று வேறுபடுகிறது என்பதைத்தான் இங்கு நாம் பார்க்கப் போகிறோம்.

சொந்தத்தில் திருமணம் முடித்தவர்களுக்கு அத்தை, மாமி, ஏன் பாட்டி கூட மாமியாராகிறார். ஆணைப் பொருத்தவரை அக்காவே மாமியாராவதும் உண்டு. ஆனால் ஒரு பெண்ணுக்கு வாய்க்கும் மாமியாரும், ஆணுக்கு வாய்க்கும் மாமியாரும் குணத்தால், மனத்தால் எத்தனை வேறுபடுகிறார்கள்? உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

ஒரு பெண் திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு வரும் போது, அங்கே தனது மகனின் வாழ்க்கைத்துணையாக மருமகளைப் பார்க்காமல், தன் மகன் மீதான அன்பு, பாசம், ஆதிக்கம், வருமானத்தைப் பங்குப் போட வருபவளாக மருமகளைப் பார்க்கத் தொடங்கும் போதுதான் பிரச்னையும் தொடங்குகிறது. திருமணத்துக்குப் பிறகு மகன் செய்யும் ஒவ்வொரு செயலையும், பூதக் கண்ணாடி வைத்து உற்று கவனித்து, அதில் ஏற்படும் மாறுபாடுகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து, அதன் தாக்கத்தை மருமகள் மீது கொட்டுவதும் உண்டு.

ஆனால், மகளைக் கட்டிக் கொண்டு மருமகனாக வீட்டுக்குள் வருபவருக்குக் கிடைக்கும் மரியாதையே தனிவிதம்தான். நம் பெண்ணைக் கட்டிக் கொண்டு கடைசி வரை காப்பாற்றப் போகும் மருமகனை, ஒரு தாய், தனது மாமனாருக்கும் அதிகப்படியாக மதிப்பதைப் பார்க்கலாம். இது சில குடும்பங்களில் மாறுபடலாம். அது வேறுக் கதை.

வீட்டுக்கு வந்த மருமகளுக்கு தனது குடும்ப பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்து, அதை அவர் முழுமையாகச் செய்ய வைப்பதில் குறியாக இருப்பார் மாமியார். ஆனால், வீட்டுக்கு வந்த மருமகனின் பழக்க வழக்கங்களை நாசுக்காகவோ, மேம்போக்காகவோ கேட்டறிந்து கொண்டு அதற்கேற்ப வீட்டில் சில மாற்றங்களைச் செய்வதோடு, மகளையும் அதற்கேற்ப மாறச் சொல்வார்.

மருமகளுக்கு என்னப் பிடிக்கும் என்பதைப் பற்றி எந்த மாமியாரும் லட்சியம் கொள்வதில்லை. அப்படியே ஏதாவது ஒன்றை மருமகள் பிடிக்காது என்று சொல்லிவிட்டால் அது பற்றி ஒரு புராணமே பாடப்படும்.  ஆனால் மருமகனுக்குப் பிடித்த உணவை சமைத்துக் கொடுப்பதில் தாயை விட மாமியார்களை அடித்துக் கொள்ளவே முடியாது. பார்த்து பார்த்து சமைத்துக் கொடுப்பார்கள். அது மட்டுமா? மருமகன் வந்துவிட்டால் வீட்டில் சமையல் வேலை திருமண வேலை போல நடக்கும். 

மருமகன் ஏதேனும் தவறு செய்து விட்டதாக மகள் கண் கலங்கினால் கூட, அவரை விட்டுக் கொடுக்காமல், மகளைத் திட்டி அனுசரித்துப் போகுமாறு சொல்லும் மாமியாரே, தன் வீட்டுக்கு வந்த மருமகள் ஏதேனும் தெரியாமல் சிறிய தவறு செய்து விட்டால் கூட அதைப் பெரிதாக்கி, பலூன் ஊதி அவரது பெற்றோர் வீடு வரைக்கும் பறக்கவிடுவார்கள்.

பெரும்பாலும் மருமகனிடம் மாமியார் பேசும் வழக்கம் கூட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இல்லை. பேசுவது என்ன, அவர் இருக்கும் பக்கத்துக்கே மாமியார் போக மாட்டார். பேசுவது கேட்பது எல்லாம் மறைவிலிருந்துதான். அதெல்லாம் நகரத்தில் இல்லை என்று ஆணியடித்தார்போலச் சொல்பவர்கள், பல கிராமங்களுக்குச் சென்று கேட்டுப் பார்க்கத்தான் வேண்டும் இது எவ்வளவு உண்மையென்று. இதை நிச்சயம் மற்றொரு பக்கத்தில் ஒப்பிட வேண்டிய அவசியமே இல்லை.

இப்படி, பெண்ணின் மாமியாருக்கும் ஆணின் மாமியாருக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் இயல்பாகவே ஏற்பட்டுவிடுகின்றன. ஒரு பெண்ணுக்கு மகனும், மகளும் இருக்கும்பட்சத்தில், இருவருக்கும் மணமுடித்துக் கொடுத்த பிறகு, தனது மகள் புகுந்த வீட்டில் கொண்டாடப்பட வேண்டும் என்று விரும்பும் தாய், தனது மருமகளை அவ்வாறு நடத்துவது பற்றி சிந்திக்க வேண்டும். அங்கிருந்துதான் மாற்றம் தொடங்கும்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல, மாற்றத்தை ஒவ்வொரு வீடுகளிலும் கொண்டு வந்தால், அன்னையர் தினத்தைப் போல, தந்தையர் தினத்தைப் போல நிச்சயம் ஒவ்வொரு ஆண்டும் மாமியார் தினமும் வெகுச் சிறப்பாக கொண்டாடப்படும் நாள்களில் ஒன்றாக வெகு விரைவில் இணைந்து விடும்.

மாமியார்  என்ற ஒற்றைச் சொல்தான் பல குடும்பங்களின் அஸ்திவாரங்களாக இருக்கும். எனவே, அந்த அஸ்திவாரம் அதிகம் ஆடாமலும், ஆட்டங்கான வைக்காமலும் இருப்பதுவே அழகான குடும்பங்களின் தலையாய கடமை. இதில் இரு தரப்புக்குமே பொறுப்புகள் அதிகம். அவரவர் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால் கைமேல் பலன் நிச்சயம்.

மாற்றத்தை இந்த ஆண்டு மாமியார் தினத்தன்றே தொடங்குவோம்.. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com