உங்க உப்புல பிளாஸ்டிக் இருக்கா? ஆமாங்க.. ஆமாம்

உங்க பேஸ்டுல உப்பு இருக்கா என்பது விளம்பரமாக இருக்கலாம்.. ஆனால் உங்க உப்புல பிளாஸ்டிக் இருக்கா? என்பது அதிபயங்கர உண்மையை வெளிக்கொணரும் கேள்வியாக உள்ளது.
உங்க உப்புல பிளாஸ்டிக் இருக்கா? ஆமாங்க.. ஆமாம்
உங்க உப்புல பிளாஸ்டிக் இருக்கா? ஆமாங்க.. ஆமாம்


உங்க பேஸ்டுல உப்பு இருக்கா என்பது விளம்பரமாக இருக்கலாம்.. ஆனால் உங்க உப்புல பிளாஸ்டிக் இருக்கா? என்பது அதிபயங்கர உண்மையை வெளிக்கொணரும் கேள்வியாக உள்ளது.

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. ஆனால் நாமோ பல குப்பைகளைச் சேர்த்துத்தான் உப்பாகப் பயன்படுத்துகிறோம். ஒரு உணவில் உப்பை சேர்த்து சாப்பிடும் போது, அதில் ஒரு சிட்டிகை அளவுக்கு பிளாஸ்டிக்கையும் சேர்த்துத்தான் சாப்பிடுகிறோம் என்கிறது ஆய்வறிக்கை. பிளாஸ்டிக் என்றால் பாலிதீன் பைகள், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் கப்கள் போன்றவற்றின் துகள்கள்தான். நாம் பயன்படுத்தி தூக்கி எறியும் குப்பைகள், கடலில் கலந்து, துகள்களாகி, கடல் நீரிலிருந்து உப்பு தயாரிக்கும் போது அதனுடன் ஒரு அங்கமாகக் கலந்து மீண்டும் அந்த குப்பைகள் நமக்கே திரும்ப வருகின்றன.

நாட்டிலேயே தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களில்தான் உணவில் சேர்க்கப்படும் உப்பு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த வகையில், இவ்விரு மாநிலங்களிலும் தயாராகும் உப்பில் ஒன்றல்ல இரண்டல்ல 1,075 பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட உப்பு மாதிரியில் தெரிய வந்திருப்பது என்னவென்றால், ஒவ்வொரு 200 கிராம் உப்பிலும் 46 முதல் 115 பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருக்கிறது.

தமிழகத்தில் இதன் அளவு 200 கிராமுக்கு 23 - 101 நுண்துகள்கள் என்ற அளவில் உள்ளது. இந்த நுண்துகள்களில் 74.3 சதவீதம் சிவப்பு மற்றும் நீல நிறத்திலான மிகச் சிறிய பிளாஸ்டிக் நுண்துகள்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை வெறும் கண்களால் கண்டறிய முடியாது. மைக்ரோஸ்கோப் உதவியோடு பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே.. ஆன்லைன் வகுப்புகள்: ஏமாற்றாதே... ஏமாறாதே... ஆசிரியரின் குரல்

கோவாவில் உள்ள தேசிய போலார் மற்றும் கடல் ஆராய்ச்சி மையம், தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. அந்த ஆராய்ச்சியில் குஜராத் மற்றும் தமிழகத்திலிருந்து உப்பு மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அதில், உப்பு மாதிரிகளில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டன. அவை, நாம் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பொருள்களின் துகள்கள்தான். அதாவது, பிளாஸ்டிக் பொருள்கள், சாலைகளில் அடிக்கப்படும் பெயிண்ட், பாலியஸ்டர் துணி, மணிகள், மீன் வலைகள், பிளாஸ்டிக் கருவிகள், அலங்காரப் பொருள்கள் போன்றவற்றின் சிதைந்த நுண்துகள்கள்தான் அவை. பெரும்பாலான பிளாஸ்டிக் நுண்துகள்கள் பாலித்தீன், பாலியஸ்டர், பாலிவினில் குளோரைட் ஆக உள்ளன.

கடலையும், கடற்கரைகளையும் மாசுபடுத்திவரும் பிளாஸ்டிக் கழிவுகள் உலகப் பேரிடராக உள்ளது. பல லட்சக்கணக்கான பிளாஸ்டிக் குப்பைகள் கடற்பரப்புகளை மூழ்கடித்து வருகின்றன. அதாவது, தற்போதைய கணிப்பின்படி, கடலில் இருக்கும் மீன்களின் அளவை விடவும், 2050ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் எந்த தடையுமின்றி கடலைச் சென்றடைகிறது. பிளாஸ்டிக் குப்பைகள் கடலையும், கடல்வாழ் உயிரினங்களையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதித்து வருகிறது. பிளாஸ்டிக் பொருள்களை விழுங்கியும், பிளாஸ்டிக் பொருள்களுக்குள் சிக்கியும் ஆண்டுதோறும் எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கின்றன. பிளாஸ்டிக் கழிவுகள் கடலை அடைவதற்குள் அதனை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க பல சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் குரல் எழுப்பிக் கொண்டுதானிருக்கின்றன.

இந்த குப்பைகளால், கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமல்ல, கடற்பரப்புகளில் வாழும் பறவையினங்களும் பாதிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பொருள்களை உணவென்ற நினைத்து ஆமைகள், பறவைகள், மீன்கள் விழுங்கி விடுகின்றன. இதனால், இந்த உயிரினங்களின் வயிற்றுப் பகுதியில் காயத்தை ஏற்படுத்தி, அவற்றுக்கு செரிமானப் பிரச்னைகள் ஏற்பட்டு, கடைசியாக அவை பலியாகின்றன.

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் பற்றி இதுவரை மக்கள் யாரும் அவ்வளவாகக் கண்டுகொண்டது இல்லை. பிளாஸ்டிக் குப்பைகளால் மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பல பல வழிகளில் எடுத்துச் சொன்னாலும், நமக்கென்ன என்ற மனநிலையில்தான் இருந்து வருகிறோம்.

ஆனால், அங்குச் சுற்றி இங்குச் சுற்றி, நாம் தேவையின்றி தூக்கி எறியும் பிளாஸ்டிக் குப்பைகள் இன்று உப்புடன் கலந்து நமக்கே, நேரடியாக நமது சமையல் கூடத்துக்கே வந்துவிடுகிறது. அதையும் அறியாமல், நாம் சமையலில் கலந்து பிளாஸ்டிக் துகள்களுடன் சேர்த்து சாப்பிட்டு வருகிறோம். 

உப்பில் பிளாஸ்டிக் பொருள்கள் கலந்திருப்பது குறித்து பல ஆண்டுகளாக ஆய்வுகள் சொல்லிக்கொண்டுதான் வருகின்றன. ஆனால், இப்போதாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும். உப்பில் பிளாஸ்டிக் இருப்பதைக் கண்டறிந்த ஆய்வாளர்கள், அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கு எந்த வகையான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்த ஆய்வில் இறங்கியுள்ளனர்.

நிச்சயம் இதற்கு சில பல ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால், அதற்குள், நமது உடலுக்குள் செல்லும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் பல பிரச்னைகளை ஏற்படுத்திவிட்டிருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில உயிர்களும் காவுவாங்கப்பட்டிருக்கும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com