ஆப்கனில் தலிபான் ஆட்சி: அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலா?

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அண்டை நாடுகளிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.
ஆப்கன் அதிபர் மாளிகையை கைப்பற்றிய தலிபான்கள்
ஆப்கன் அதிபர் மாளிகையை கைப்பற்றிய தலிபான்கள்

சர்வதேச ஊடகங்களில் சில நாள்களாக அதிகளவு பேசப்பட்ட பெயர் தலிபான். ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது முழு ஆப்கானிஸ்தானும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துள்ளது.

அமெரிக்கப்படைகள் பின்வாங்கப்பட்டதன் விளைவாக, ஆப்கன் பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறிய தலிபான்கள் தற்போது அதிபர் மாளிகையையும் கைப்பற்றியுள்ளனர். 

அமெரிக்க கட்டமைப்பில் ஆப்கானிஸ்தான் மக்கள் எந்தவித பலனையும் அனுபவிக்கவில்லை என்றாலும், தலிபான்களின் பிடியில் தற்போது நாடு சிக்கியுள்ளது மேலும் அவர்களை வாட்டி வதைக்கவே செய்யும் என்று அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் பெண்கள் உள்பட அந்நாட்டு மக்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற பதற்றம் எழுந்துள்ளது. இந்த அச்சம் அண்டை நாட்டின் பாதுகாப்பிலும் எதிரொலிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இரண்டாம் உலகப்போருக்கு பின், அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியன் நாடுகளுக்கும் இடையே பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு சோவியத் யூனியன் ஆதரவு என இரண்டு பக்கங்களில் நின்றன.

அப்போது, சோவியத் யூனியனின் ஆதரவோடு 1978ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இடதுசாரிகள் ஆட்சியை கைப்பற்றினர். இருப்பினும், ஓராண்டில் அவர்களது ஆட்சி கவிழ்க்கப்பட்டு 1979-ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி சோவியத் யூனியன் ஆப்கனுக்குள் புகுந்து ஆட்சியை கைப்பற்றியது.

இதையடுத்து சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் முஜாகிதீன் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் அமெரிக்கா, பாகிஸ்தான் ஆதரவோடு சோவியத் படைகளுக்கு எதிராக தீவிர தாக்குதலை மேற்கொள்ள தொடங்கின.

சோவியத் யூனியன் படைகளுக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கு மேல் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சோவியத் யூனியன் படைகள் 1989ஆம் ஆண்டு பின் வாங்கின.

1992 முதல் முஜாகிதீனின் 7 இஸ்லாமிய பிரிவுகளுக்கு இடையே அதிகாரத்தைப் பகிர ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கிடையே 1994ஆம் ஆண்டு முஜாகிதீனின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து முல்லா ஓமர் தலைமையில் தெற்கு காந்தகாரில் தலிபான் படையினராக உருவெடுத்தார்கள்.

தலிபான்களின் தொடர் தாக்குதலால், 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 26இல் தலைநகர் காபூல் கைப்பற்றப்பட்டது. முல்லா ஓமர் தலைமையிலான தலிபான்கள் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பையேற்றனர்.

முல்லாவின் ஆட்சியில், கடுமையான பிற்போக்குவாத செயல்கள் கடுமையாக பின்பற்றப்பட்டன. ஆண்கள் கட்டாயமாக தாடி வளர்க்க வேண்டும், பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல தடை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இவற்றை மீறினால் மரண தண்டனையும் விதித்தனர்.

இதற்கிடையே, அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தின் மீது 2001 செப்டம்பர் 11ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடத்திய அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், தலிபான்களின் பாதுகாப்பில் இருந்தார்.

இந்நிலையில், செப்டம்பர் இறுதிக்குள் பின்லேடனை ஒப்படைக்குமாறு ஆப்கனில் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் தலிபான்களுக்கு இறுதி எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை பொறுப்படுத்தாமல் இருந்த ஆப்கன் மீது அமெரிக்காவின் படைகள் தாக்குதல் நடத்தின. நவம்பர் 13ஆம் தேதி காபூலுக்குள் புகுந்த அமெரிக்க படைகள் ஆட்சியைக் கைப்பற்றியது.

இதன்பின், அமெரிக்க ஆதரவுடன் ஹமீத் கர்சாயின் ஆட்சி அமைக்கப்பட்டது. ஆப்கனின் பாதுகாப்பிற்காக லட்சக்கணக்கான வீரர்களை அமெரிக்கா அனுப்பியது. பல்லாயிரம் கோடி டாலா்களை செலவிட்டு ஆப்கன் அரசையும் ராணுவத்தையும் அமெரிக்கா கட்டமைத்தது.

ஆனால், ராணுவத்திற்கு முக்கியத்துவம் அளித்த அமெரிக்கா, ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பிற்கும், நாட்டு மக்களின் படிப்பறிவை மேம்படுத்தவும் எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை.

இதனால், தலிபான் அமைப்புகளில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் சேரத் தொடங்கியதன் விளைவு மீண்டும் தலிபான்கள் வலுப்பெற்று நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கினர்.

2018ஆம் ஆண்டு பாதிக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். அவ்வப்போது அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல் நடத்தினாலும், இறுதியில் தலிபான்களின் கைகளே ஓங்கின.

பிப். 29, 2020இல் அமெரிக்கா - தலிபான் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. அமெரிக்கப் படைகள் அடுத்த 14 மாதங்களில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டது.

அமெரிக்க அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற ஜோ பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க வீரா்களையும் திரும்ப அழைக்கும் திட்டத்தை துரிதப்படுத்தினாா். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்ப அழைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. 

இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், ஒரே வாரத்தில் நாட்டின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் ஊடகப் பிரிவுத் தலைவர் தாவா கான் மேனாபால், இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனியல் சித்திகி உள்ளிட்டோரை தலிபான்கள் சுட்டுக் கொன்றனர்.

ஆனால், ஆப்கன் படையினா் தலிபான்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முழுவீச்சில் போராடவில்லை. அதற்குப் பதிலாக ஆயுதங்களைப் போட்டுவிட்டு அவா்கள் தப்பியோடினா். அமெரிக்கா வான்வழித் தாக்குதல் மூலம் உதவி செய்தாலும், சில ஆப்கன் படையினா் தலிபான்களுடன் மிதமான மோதலில் மட்டும் ஈடுபட்டனா். 

கடந்த 10 நாள்களிலேயே பல முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். ஏராளமான படைப் பிரிவுகள் மோதல் இல்லாமலேயே தலிபான்களிடம் சரணடைந்தன. இந்த நிலையில், தலைநகா் காபூலின் புறநகா்ப் பகுதிகள் வரை முன்னேறி வந்த தலிபான்கள், சண்டையை தற்காலிகமாக நிறுத்திவைத்தனா். காபூலை ரத்தம் சிந்தாமல் அமைதியான முறையில் ஒப்படைக்குமாறு ஆப்கன் அரசை அவா்கள் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினா். 

இதனிடையே, தலைநகரில் ரத்த வெள்ளத்தை ஏற்படுத்த விரும்பாததால் ஆட்சிப்பொறுப்பை விட்டு செல்வதாக தெரிவித்த அதிபா் அஷ்ரஃப் கனி, ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டைவிட்டு வெளியேறினார்.

இதையடுத்து, காபூலுக்குள் புகுந்த தலிபான்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் அதிபர் மாளிகையையும் கைப்பற்றினர். மேலும், ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்துள்ளதாக ஆகஸ்ட் 16ஆம் தேதி தலிபான் செய்தி தொடர்பாளர் முகமது நயீம் அறிவித்தார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலிபான்களின் கருத்தியல்களை வலுவாகப் பின்பற்றும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் வங்கதேசம் (ஜேஎம்பி) பயங்கரவாத இயக்கம் தெற்காசியாவில் மீண்டும் வலுப்பெற வாய்ப்பிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.

மேலும், இந்தியா - சீனா, இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பிரச்னைகள் இருந்து வரும் நிலையில், தலிபான் அரசுக்கு பாகிஸ்தானும் சீனாவும் ஆதரவு அளித்திருப்பது, இந்தியாவிற்கான அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

தலிபான்களால் பிற நாட்டினருக்கு ஒருபுறம் பிரச்னை இருந்தாலும், சொந்த நாட்டை மீண்டும் பிற்போக்குத்தன்மைக்கு அழைத்துச் செல்வார்கள் என்றும் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்றும் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com