கைவிட்டதா பாஜக? கலக்கத்தில் எடப்பாடி
கைவிட்டதா பாஜக? கலக்கத்தில் எடப்பாடி

கைவிட்டதா பாஜக? கலக்கத்தில் அதிமுக!

அதிமுக அமைச்சர்கள் மீது எழுந்த புகார்களும், குற்றச்சாட்டுகளும் தூசி தட்டப்பட்டு முதல்வரின் மேசையை அலங்கரித்து வருவதாகக் கூறப்படுவது அதிமுகவினரைக் கலக்கமடையச் செய்திருப்பதாகத் தோன்றுகிறது.

கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி வழக்கம்போல் கூடியது சட்டப்பேரவை. எனினும்  அதிமுகவிற்கு அது வழக்கமான நாளாக இருக்கவில்லை. அதிமுக  பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொள்ளையும் அதனைத் தொடர்ந்த கொலையுமாக உருவான வழக்கு ஏற்படுத்தியிருந்த பதற்றம் மீண்டும் அதிமுகவை சூழத் தொடங்கியுள்ளது. குறிப்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறலாம்.

ஆட்சியில் இருப்பவர்கள் முந்தைய ஆட்சியாளர்களின் மீது ஊழல், கொலை, கொள்ளை புகார்களைத் தெரிவிப்பதும், அதனை விசாரணை செய்யத் தனிக் கவனம் செலுத்துவதும் மக்களுக்குப் பழக்கப்பட்ட செய்திகளானாலும் தற்போதைய அரசியல் சூழலில் இது சாதாரணமாக கடக்கக் கூடியதாக இல்லை.

தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்த இந்தக் குற்றச்சாட்டுகள் தற்போது விசாரணை வடிவம் பெற்றிருக்கின்றன. முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி விசாரணை ஆணையம் அமைக்க வித்திட்டுத் தனது அரசியல் முக்கியத்துவத்தை உறுதி செய்துகொண்டாலும் அதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் மு.க.ஸ்டாலின்.

இளம் நடிகை ஐஸ்வர்யா போட்டோஷூட் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

“திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும்” என அவர் கூறிவைத்த அந்த உறுதிமொழி அப்போது பேசுபொருளாகியது. மக்கள் நலத் திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக இருப்பதை மக்கள் கண்டிருந்தாலும் ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் ஒவ்வொருவரின் மீதான புகார்கள் மீதும் நடவடிக்கை நிச்சயம் என்கிற திமுகவின் வாக்குறுதிகள் தற்போதைய அரசியலின் நகர்வைத் தீர்மானிக்கும் நிலையை எட்டியுள்ளன. 

அதன் முதல் அடியாக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு புதிய அதிகாரிகளை நியமித்தது அதிமுகவினரை கலக்கமடையச் செய்தது. நாள்தோறும் ஒரு அமைச்சர், முன்னாள் அமைச்சர் மீது தெரிவிக்கும் புகார்கள் தனித்தனி விசாரணைகளாக பரிணாமம் பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் அதிமுக அமைச்சர்கள் மீது பிறர் தெரிவித்த புகார்களும் தூசி தட்டப்பட்டு முதல்வரின் மேசையை அலங்கரித்து வருவதாகக் கூறுகின்றனர். 

முந்தைய ஆட்சியில் தமிழக ஆளுநரைச் சந்தித்து அதிமுக அமைச்சர்கள் மீது திமுக சார்பில் ஊழல் புகார்கள் அளிக்கப்பட்டன. அப்போதைக்கு அவை கிடப்பில் போடப்பட்டாலும் அவை அனைத்தும் முன்பே ஒலிக்கவிடப்பட்ட எச்சரிக்கை மணிகள் என்பதை அதிமுக கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது.  எனினும் அரசியல் குளத்தில் கல்லெறியும் விதமாக அதிமுக மீதான பாமகவின் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படுவதாகப் பந்தை அதிமுக கூட்டணிக்குள் திரும்பிவிட்டது திமுக.

கடந்த மார்ச் மாதம் நிறைவடைய இருந்த பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் தலைமை நீதிபதிக்கு வழக்கு சென்றுள்ள நிலையில் இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்கத் தடை கோரி உச்ச நீதிமன்றப் படியேறியுள்ளார் ராஜேந்திர பாலாஜி. இவற்றுக்கு மத்தியில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஆவின் நிர்வாக வரவு செலவுகளைத் தணிக்கை செய்த அதிகாரிகள் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

பணியிட மாறுதலில் லஞ்சம், பணி வழங்கியதில் ஊழல், ரூ. 100 கோடி வரை முறைகேடு, 5 டன் ஸ்வீட் பாக்ஸ்கள் மாயம் என  ராஜேந்திர பாலாஜி மீது அடுத்தடுத்த புகார்களை அடுக்கினார் தற்போதைய அமைச்சர் நாசர். காட்சிகளைக் கணித்த ராஜேந்திர பாலாஜி தில்லியில் முகாமிட்டார். வழக்குகள் தீவிரமடைந்து வரும் அதேவேளையில் அவரின் பாஜக ஐக்கியம் பரபரப்பு பேசுபொருளாகியது.

பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் கசியவிடப்பட்ட நிலையில் பாஜகவில் இணைந்தாலும் விட மாட்டோம் என அமைச்சர் நாசர் எச்சரித்தார். இறுதியில் பாஜகவும் கைவிட்டதாகக் கருதும் நிலையில் ஆடிப்போயுள்ளார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்கிறார்கள். அதிமுக சற்றே இளைப்பாறுவதற்குள் அடுத்த குறியாக சிக்கியவர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை வாகனங்களுக்குக் கருவிகள் வாங்கியதில் ரூ. 2000 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

382வது சென்னை தினம் - புகைப்படங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில் கடந்த ஜூலை 22ஆம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 20 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது லஞ்ச ஒழிப்புத் துறை. விஜயபாஸ்கர் அலுவலகம், உறவினர்கள், ஆதரவாளர்கள் இல்லம் என விரிந்த சோதனை அதிமுகவைச் சற்றுத் தடுமாற வைக்கத் தான் செய்தது.

இந்த பரபரப்புகள் அடங்குவதற்குள் அடுத்தது யார் எனும் கேள்விகள் உலவின. 
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்கு கொங்கு மண்டலத்தில் பெருவாரியான வெற்றியைப் பெற்றுத் தந்த எஸ்.பி. வேலுமணிக்கு தூண்டில் போட்டது லஞ்ச ஒழிப்புத்துறை. திமுகவின் முதல் குறி வேலுமணி என அரசியல் களமே ஊகித்திருந்த நிலையில் இது காலதாமதமாக சோதனையாகவே பார்க்கப்பட்டது.  

தேர்தல் பிரசாரத்தில் “நானே தலையிட்டு சட்டப்படி என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கிறேன் எனப் பாருங்கள்” என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சொன்னது கடந்த 10ஆம் தேதி நடந்தேறியது. டெண்டர் வழங்கியதில் முறைகேடு, உறவினர்கள் மற்றும் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அதிக டெண்டர்களை வழங்கியது என அதிமுகவின் அடுத்த பெரிய கையான எஸ்.பி.வேலுமணி மீதான அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையைத் தீவிரப்படுத்தியது. 

எனினும் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான சோதனை போல் இல்லாமல் எஸ்.பி.வேலுமணி மீதான சோதனையில் கட்சியின் கை ஓங்கி இருந்தது. தங்களது பலத்தைக் காட்ட சோதனை நடைபெற்ற  இடங்களில் அதிமுக தொண்டர்கள் குவிந்தனர் அல்லது குவிக்கப்பட்டனர். காலை சாப்பாடு தொடங்கி ரோஸ் மில்க் வரை நீடித்த அந்த ஆர்ப்பாட்டத்தில் செய்திகளுக்கு பஞ்சமில்லை.

“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக சோதனைகளை ஏவிவிடுகிறது. திமுக அரசின் சோதனைகளை மறைப்பதற்காகவே சோதனை நடைபெறுகிறது” என அறிக்கை வெளியிட்டு தங்களது பக்கம் விழுந்த கறையை அகற்ற முயற்சித்தது அதிமுக. அடுத்தடுத்த சோதனைகள் அதிமுகவில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அடுத்த குறி தன் மீதுதான் என்பதை எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்திருக்க மாட்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது கொடநாடு இல்லத்தில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவமும் அதனைத் தொடர்ந்த கொலைகளும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது. 

கொடநாடு வழக்கின் முக்கிய சாட்சியமான சயனின் வாக்குமூலத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமியை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. சட்டப்பேரவையில் இதுதொடர்பாக பேச எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்த நிலையில் பேரவைத் தலைவர் அனுமதி மறுக்க பேரவையின் வாயிலில் தர்னாவில் ஈடுபட்டது அதிமுக.

செய்தியாளர்கள் பேட்டியிலும்கூட எப்போதும் இல்லாத பதற்றத்திலேயே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகத் தோன்றியதாகப் பலரும் தெரிவிக்கின்றனர். அவசர அவசரமாக ஆளுநரிடம் முறையிடச் சென்றது அதிமுக அணி. மேலும் இந்த விவகாரத்தில் பாஜகவும் ஆர்வம் காட்டாமல் இருப்பது அதிமுகவை நிர்கதியாக்கியுள்ளது.

அதிமுக தொடங்கிவைத்த சதுரங்க ஆட்டத்தில் உள்ளே வெளியே ஆட்டத்தை ஆடிக்கொண்டிருப்பது என்னவோ திமுகதான். யாருக்கு இதில் வெற்றி என்பதைக் காலம்தான் தெரிவிக்கும். திமுக அரசின் 100 நாள்களில் முந்தைய அதிமுக அரசின் திட்டங்களை முடக்கியுள்ளதாகக் குறிப்பிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, திமுக கையிலெடுத்திருக்கும் அஸ்திரம் அதிமுகவையே முடக்கவல்லது என்பதை அறியாதவரல்ல.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதற்கு நாங்கள் தேர்தல் வாக்குறுதியைத்தான் நிறைவேற்றுகிறோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த பதில், அடுத்த சில மாதங்களின் அரசியல் தடங்களை எப்படி புரட்டிப் போடப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com