கும்பகோணம் ரயில் நிலையம் 145!

கும்பகோணம் ரயில் நிலையம் திங்கள்கிழமை (15.2.2021) தனது 145 ஆவது தொடக்க நாளைக் கொண்டாடுகிறது.
கும்பகோணம் ரயில் நிலையம்
கும்பகோணம் ரயில் நிலையம்


கும்பகோணம் ரயில் நிலையம் திங்கள்கிழமை (15.2.2021) தனது 145 ஆவது தொடக்க நாளைக் கொண்டாடுகிறது.

தமிழகம் மற்றும் கேரளம் அடங்கிய பகுதிகளில் ரயில் இயக்கம் நடத்தி வரும் தெற்கு ரயில்வேயின் முக்கிய வழித்தடமாக தஞ்சை - விழுப்புரம் வழித்தடம் இருந்து வருகிறது. இந்த ரயில் தடத்தில் 1877 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி அப்போதைய தென்னிந்திய ரயில்வே நிர்வாகத்தால் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் முதன் முதலாக ரயில் வண்டிகள் இயக்கப்பட்டன.

இந்தத் தடம் அன்றைய காலகட்டத்தில் சென்னையையும் தென் மாவட்டங்களையும் இணைக்கும் ஒரே முக்கிய ரயில் பாதையாக இருந்ததால், இப்பாதை இன்றளவும் பெருமையுடன் "மெயின் லயன்" என அழைக்கப்பட்டு வருகிறது. இப்பாதையில் சென்னையிலிருந்து இலங்கை செல்ல இண்டோ - சிலோன் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து ரயில் வண்டியில் ராமேசுவரம் அருகில் உள்ள தனுஷ்கோடி வரை சென்று அங்கிருந்து இலங்கைக்கு படகில் பயணித்து வந்தனர். அதனால் இன்றும் சென்னை எழும்பூர் - ராமேசுவரம் இடையே இயக்கப்படும் ரயிலை "போட் மெயில்' என செல்லமாக அழைக்கிறோம்.

விருதாச்சலம் வழியான குறுக்கு ரயில் பாதை அமையும் வரை சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, ராமேசுவரம், தூத்துக்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு மெயின் லயன் வழியாகவே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இவ்வழியே இயக்கப்பட்ட பல ரயில்களில் சென்னை - தூத்துக்குடி ஜனதா எக்ஸ்பிரஸ், சென்னை - ராமேசுவரம் போட் மெயில், சென்னை - திருவனந்தபுரம் பாஸ்ட் பாசஞ்சர், சென்னை - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ், திருச்சி - திருப்பதி கிழக்கு எக்ஸ்பிரஸ் ஆகியவை பெருமை வாய்ந்தவை. நெருக்கமான ஊர்கள் நிரம்பப் பெற்றதால் மெயின் லயன் பாதையில் ரயில் நிலையங்கள் அதிகம். அதனால் இப்பாதையில் பயணிகள் பயன்பெற அதிகமான பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

1970-களில் கும்பகோணம் - திருச்சி இடையே இந்தியாவிலேயே முதன் முதலாக டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட பெட்டிகளைக் கொண்ட ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயிலை அக்காலத்தில் காண்பதற்காகக் கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்துக்கு வருவர். கோச் வண்டி என்று அழைக்கப்பட்ட அந்த ரயிலில் பயணம் செய்வது ஒரு தனி அந்தஸ்தை அப்போது பெற்றுத் தந்தது.  

1980-க்கு முன்பு வரை என்ஜின் திருப்பும் முனையம், நீராவி என்ஜினுக்கு தண்ணீர் நிரப்பும் வசதி உள்ளிட்ட பெரிய ஜங்ஷன்களில் இருக்கும் பல வசதிகள் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்தது. 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற மஹாமக திருவிழாவை ஒட்டி அப்போதைய தென்னக ரயில்வே பொது மேலாளர் கோபால தேசிகன் பெருமுயற்சியால் கும்பகோணம் ரயில் நிலையம் முகப்பு மறுசீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றது.

கும்பகோணம் ரயில் நிலையத்தின் முகப்பு
கும்பகோணம் ரயில் நிலையத்தின் முகப்பு

சென்னை எழும்பூரில் இரவு கடைசி ரயிலாக புறப்பட்டு மதுரைக்கு சென்று அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு அதிகாலையில் முதல் ரயிலாக வந்தடைந்த மதுரா பார்சல் பாசஞ்சர் சென்றதும் கும்பகோணம் ரயில் நிலையம் வழியாகத்தான்.  

கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு காந்தியடிகள், மூதறிஞர் ராஜாஜி, முன்னாள் தமிழக முதல்வர்கள் காமராஜர், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி மற்றும் ஜி.கே. மூப்பனார், கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் ரயில்களில் வந்து இறங்கியுள்ளனர்.

சுவாமி விவேகானந்தர் கும்பகோணம் ரயில் நிலையத்தில் வந்திறங்கித்தான் தன்னுடைய எழுச்சிமிகு அறைகூவலான "எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நிறுத்தாது  உழைமின்!" என்ற தாரக மந்திரத்தை முதன் முதலாக அறிவித்தார். அதன் நினைவாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் விவேகானந்தரின் திரு உருவப்படம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் மத்திய ரயில்வே அமைச்சரின் உத்தரவின்படி விவேகானந்தர் அருங்காட்சியகமும் இங்கே தொடங்கப்படவுள்ளது.

கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு சுவாமி விவேகானந்தர் வந்ததை நினைவுபடுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள தகவலுடன் கூடிய உருவப்படம்.
கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு சுவாமி விவேகானந்தர் வந்ததை நினைவுபடுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள தகவலுடன் கூடிய உருவப்படம்.

கும்பகோணம் ரயில் நிலையம் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 21 கோடிக்கும் மேலாக டிக்கெட் வருவாய் ஈட்டுகிறது. தினமும் சுமார் 5,000 பேர் இந்த சுறுசுறுப்பான ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். கும்பகோணம் ரயில் நிலையத்தில் முதல் முதலாக 2004 ஆம் ஆண்டில் தஞ்சைக்கு அகல ரயில் பாதை போடப்பட்டு ரயில் இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த ஆண்டு நடைபெற்ற புகழ்மிக்க மகாமக திருவிவிழாவுக்கு ரயில் மூலம் மிக அதிகமான பயணிகள் வந்து புனித நீராடிச் சென்றனர். பின்னர் கும்பகோணத்தில் இருந்து, மைசூரு, கோவை, நெல்லை, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி ரயில்கள் இயக்கம் அகல பாதையில் தொடங்கியது.

பின்னர் 2006 ஆம் ஆண்டு மயிலாடுதுறை வழித்தடத்தில் அகல ரயில் பாதை பணிகள் நிறைவுற்று ரயில்கள் இயக்கம் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டு மெயின் லயன் பாதை முழுவதுமாக அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு தற்போது கும்பகோணம் வழியாக ராமேசுவரம், திருச்செந்தூர், தஞ்சை, கோவை, நெல்லை, மைசூரு, காசி, அயோத்யா, புவனேசுவரம், ஹைதரபாத், திருப்பதி, கன்னியாகுமரி, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களுக்கு நேரடி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகள் நெருக்கடி மிகுந்த கும்பகோணம் ரயில் நிலையம் 1990-களிலேயே சுத்தமான ரயில் நிலயத்துக்கான விருதை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பெற்று வந்தது. 2016 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சுகாதாரமான ரயில் நிலைய அட்டவணையில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் முதல் இடத்தில் தொடர்ந்து  இடம் பிடித்தது. சிறந்த கணினி முன்பதிவு மைய விருதையும் கும்பகோணம் தன்னகத்தே வைத்துள்ளது. திருச்சி ரயில்வே கோட்டப் பகுதியில் ஒருங்கிணைந்த டிக்கெட் வழங்கும் வசதி பெற்ற ரயில் நிலையங்களில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் தற்போது 3 டிக்கெட் கவுண்டர்களின் முன்பதிவு மற்றும் சாதாரண டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் நெரிசல் இன்றி பயணசீட்டு  பெற முடிகிறது. மேலும் இங்கு தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரமும் நிறுவப்பட்டுள்ளது. தற்போது திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற ஒரு சில முக்கிய ரயில் நிலையங்களில் கும்பகோணமும் ஒன்று.

2013 ஆம் ஆண்டு கும்பகோணம் ரயில் நிலையத்தில்தான் நாட்டிலேயே முதன் முதலாக சோதனை முறையில் வண்டி எண், வழித்தடம் ஆகியவற்றுடன் ரயில் பெட்டி நிற்கும் இடத்தை காட்டும் வண்ணமிகு அறிவிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டது. அது சிறப்பாக அமைந்ததையடுத்து நாட்டின் பல ரயில் நிலையங்களில் இவ்வசதி செய்யப்பட்டு வருகிறது.

கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து எவர்சில்வர், பித்தளை சாமான்கள், அரிசி ஆகிய பொருள்கள் ரயில் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. அதேபோல், உரம், சிமெண்ட், கொட்டைப்பாக்கு, பூக்கள் உள்ளிட்ட பல பொருள்கள் கும்பகோணத்துக்கு ரயில் மூலம் வருகின்றன.

பயணிகள் பயன்பாடு  மற்றும் சரக்குப் போக்குவரத்து அதிகமாக  இருந்தும் கும்பகோணம் வழியான மெயின் லயன் பகுதியில்  ரயில்வே கட்டமைப்பு வசதிகள் பின் தங்கியே காணப்படுகின்றன. 144 ஆண்டுகள் பழைமையான தஞ்சை - விழுப்புரம் இடையே ஒரே வழி ரயில் பாதை இருப்பதால் ரயில் வண்டிகள் கிராஸிங் மேற்கொண்டு செல்ல பயண நேரம் கூடுதலாகிறது. மாறாக, மெயின் லயன் தொடங்கி பல ஆண்டுகளுக்கு பின்பு அமைக்கப்பட்ட விருதாச்சலம் வழியான குறுக்கு ரயில் பாதை, இரட்டை வழிப் பாதையாக மாற்றப்பட்டு முற்றிலும் மின்மயமாக்கப்பட்டு விட்டது.  

மெயின் லயன் பாதையில் தற்போது மின்மயமாக்கும் பணிகள்  நிறைவடைந்து ரயில் மின்சார இன்ஜின் மூலமே இயக்கப்படுகிறது. தஞ்சை - விழுப்புரம் இடையே இரட்டை வழி ரயில் பாதை அமைக்க ஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இதுவரை ஆய்வு ஏதும் மேற்கொள்ளப்படாத திண்டுக்கல் - கரூர் - சேலம், வாராந்திர ரயில்கள் மட்டுமே இயங்கி வரும் விழுப்புரம் - காட்பாடி போன்ற ரயில் பிரிவுகள் இரட்டை வழி ரயில் பாதையாக மாற்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் ஆய்வு முடிந்த தஞ்சை - விழுப்புரம் பிரிவு இடம் பெறவில்லையே என்பது ரயில் பயணிகளின் வருத்தம். பயணிகள் பயன்பாட்டுடன் நெருக்கமாக ரயில் நிலையங்கள் அமையப்பெற்றுள்ள இப்பாதையில் அனைத்து பாசஞ்சர் ரயில் வண்டிகளையும் மெயின் லயன் மின்சார தொடர் வண்டிகளாக மாற்றி இயக்க பயணிகள் கோரி வருகின்றனர். இதன் மூலம் மயிலாடுதுறை - திருச்சி இடையே அனைத்து ரயில் நிலையங்களுக்கும் விரைவாகவும், வசதியாகவும் பயணிக்க முடியும் என பயணிகள் கருதுகின்றனர்.  

கும்பகோணத்தை அடுத்த திருநாகேசுவரம் ரயில் நிலையம் அருகில் ரயில்வேக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் ரயில் பெட்டி பராமரிப்பு வசதி முனையமும், ரயில்வே உற்பத்தி தொழிற்சாலைகளில் ஏதேனும் ஒன்றையும் நிறுவினால் இப்பகுதியில் வேலைவாய்ப்பு பெருகி பொருளாதார வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து கடந்த ஆண்டு மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் செ. ராமலிங்கம் நாடாளுமன்றத்தில் வைத்த கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

கட்டுரையாளர்:

செயலர்,
தஞ்சாவூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம்,
கும்பகோணம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com