மருத்துவர் பிதான் சந்திர ராய்
மருத்துவர் பிதான் சந்திர ராய்

இந்திய மருத்துவர்களின் வழிகாட்டி பி.சி.ராய்!

நாட்டின் புகழ்மிக்க மருத்துவரான மருத்துவர் பிதான் சந்திர ராயின் நினைவாகவும், மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டவும்,  அவரது பிறந்த நாள் தேசிய மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

நாட்டின் புகழ்மிக்க மருத்துவரும், மேற்குவங்க மாநிலத்தின் இரண்டாவது முதல்வருமான மருத்துவர் பிதான் சந்திர ராயின் (1882  ஜூலை 1- 1962 ஜூலை 1) நினைவாகவும், மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டவும்,  அவரது பிறந்த நாள் இந்தியாவில் தேசிய மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  

பிகார் மாநிலத்தின் பாட்னா மாவட்டம், பங்கிப்பூரில், சுங்க வரி ஆய்வாலராகப் பணியாற்றிய பிரகாஷ் சந்திர ராய் - அகோர் காமினி தேவி தம்பதியின் ஐந்து மக்களில் இளைய மகனாகப் பிறந்தார் பிதான். இவர்களது குடும்பம், ஜெஸ்சூர் மன்னராக இருந்த பிரதாபதித்ய ராய் வம்சத்தைச் சார்ந்தது. இவர்களது குடும்பமே பிரம்ம சமாஜம் அமைப்பின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தது. இதன் காரணமாக, இளம் வயதிலேயே சமூக சிந்தனை மிக்கவராக பிதான் வளர்ந்தார்.

தனது கல்லூரி புதுமுகக் கல்வியை கொல்கத்தா மாநிலக் கல்லூரியிலும், பி.ஏ. (கணிதம்) படிப்பை பாட்னா கல்லூரியிலும் முடித்த பிதான், கொல்கத்தா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்பை முடித்தார். பிறகு மேற்படிப்புக்காக பிரிட்டன் சென்றார்.

அங்கு காலனி ஆதிக்க மனநிலையில் இருந்த புனித பர்தோலோமிஸ் மருத்துவமனை நிர்வாகம், பிதானைச் சேர்க்க மறுத்தது. ஆயினும், விடாமுயற்சியால் சுமார் 30 முறை விண்ணப்பித்து, அதே கல்லூரியில் சேர்ந்தார். அதுமட்டுமல்ல, ஒரேநேரத்தில் மருந்தியலில் முதுநிலை பட்டயம் (எம்.ஆர்.சி.பி), அறுவை மருத்துவ நிபுணர் (எஃப்.ஆர்.சி.எஸ்.) படிப்புகளை இரண்டாண்டுகள், மூன்று மாதங்களிலேயே படித்து முடித்தார். அது அக்காலத்தில் ஒரு சாதனையாகும். தவிர அந்நாட்டின் ராயல் மருத்துவக் கல்லூரியிலும் உறுப்பினரானார்.

படிப்பை முடித்த பிறகு 1911-இல் நாடு திரும்பிய ராய், மாகாண சுகாதாரத் துறையில் பணி புரிந்தார். பிறகு கொல்கத்தா மருத்துவக் கல்லூரியிலும், கர்மைக்கேல் மருத்துவக் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

“நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே சுயராஜ்ஜியக் கனவை நனவாக்க முடியும்” என்பதில் பி.சி.ராய் உறுதியாக இருந்தார். அதற்காக மருத்துவக் கல்வியை ஓர் அமைப்பாக வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டார். ஜாதவ்பூரில் உள்ள நெஞ்சக நோய் மருத்துவமனை, சித்தரஞ்சன் சேவா சதன், கமலா நேரு நினைவு மருத்துவமனை, விக்டோரியா கல்வி நிறுவனம், சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவுவதில் அவர் பெரும் பங்கு வகித்தார்.

1925-இல் தேசிய அரசியல் இயக்கத்தில் ஈடுபட்ட அவர், காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்களில் பங்கேற்றார். அக்கட்சி சார்பில் தேர்தல்களிலும் போட்டியிட்டு வென்றார்.  மகாத்மா காந்தியின் மருத்துவ ஆலோசகராகவும் பி.சி.ராய் இருந்திருக்கிறார்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, 1948 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டில் தமது இறப்பு வரை 14 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி சார்பில், மேற்கு வங்க மாநில முதல்வராக இருந்தார். அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிகோலிய ராய், முதன்மை நகரங்களாக விளங்கும் துர்காப்பூர், கல்யாணி, கொல்கத்தாவின் புறநகரான பிதான் நகர் ஆகியவை உருவாகக் காரணமாக இருந்தார்.

தான் முதல்வராக இருந்தபோதும் மருத்துவ சேவையை பி.சி.ராய் தொடர்ந்தார். நாட்டின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா' விருது 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பி. 4-இல் அவருக்கு வழங்கப்பட்டது. 

இறக்கும் நாளன்று காலையிலும்கூட, தன்னை நாடி வந்த நோயாளிகளைப்  பரிசோதித்து சிகிச்சை அளித்த பி.சி.ராய், தனது 80வது வயதில் காலமானார். முன்னதாக தனது இல்லத்தை மருத்துவமனை அமைக்க தானமாக வழங்கிவிட்டார் ராய்.

நாட்டிலுள்ள அலோபதி மருத்துவர்களின் வழிகாட்டியாக பிதான் சந்திர ராய் கருதப்படுகிறார். அவர் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை நன்றியுடன் நினைவுகூரும் வகையில், அவர் பிறந்த தினம் தேசிய மருத்துவர் தினமாக 1991 ஆம் ஆண்டு முதல்  கொண்டாடப்படுகிறது.

இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் 1962 ஆம் ஆண்டிலிருந்து, பி.சி.ராய் விருது பல்வேறு துறைகளில் சிறந்த சேவையாற்றுவோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com