துப்பாக்கி ஏந்திய சுதந்திரப் போராளி கேப்டன் லட்சுமி சாகல்

‘சோசலிசம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சமத்துவம், மதச்சார்பின்மை, சமூக நீதி, பெண்களின் ஆளுமை ஆகிய கொள்கைகளில்  சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியுடன் போராடியவர் லட்சுமி சாகல்.
துப்பாக்கி ஏந்திய சுதந்திரப் போராளி கேப்டன் லட்சுமி சாகல்
துப்பாக்கி ஏந்திய சுதந்திரப் போராளி கேப்டன் லட்சுமி சாகல்

‘சோசலிசம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சமத்துவம், மதச்சார்பின்மை, சமூக நீதி, பெண்களின் ஆளுமை ஆகிய கொள்கைகளில்  சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியுடன் போராடியவர் லட்சுமி சாகல்.

யார் இந்த கேப்டன் லட்சுமி சேகல் ..?

கேப்டன் லக்ஷ்மி சேகல் ( 24 அக்டோபர் 1914 - 23 ஜூலை 2012 ) நாடே பெருமைப்படும்  இந்திய சுதந்திர இயக்கத்தின் தீவிர புரட்சியாளராக அறியப்பட்டவர்.  இரும்பு இதயம் கொண்ட சிங்கப் பெண். சுதந்திரப் போராட்ட காலத்தில் வடஇந்தியாவில் பெரிதும் பேசப்பட்ட பெயர் லட்சுமி சேகல்.

இந்திய தேசிய ராணுவத்தின் அதிகாரியான இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு (ஐ.என்.ஏ) துப்பாக்கி ஏந்தி இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கான ஒரு புலி போல செயல்பட்டார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஐஎன்ஏவின் அனைத்து பெண் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய லட்சுமி சாகல், 2002-இல் இடதுசாரிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராகவும் இருந்தார்.

பிறப்பு & முற்போக்கு கொள்கை  

அக்டோபர் 24, 1914 அன்று கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் சுவாமிநாதன், மற்றும் அம்மு குட்டியின் மகளாகப் பிறந்தவர் லட்சுமி சேகல். தந்தை சுவாமிநாதன், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டம் வல்லுநராகப் பணியாற்றியவர். சமூக சேவகராக தாயார் அம்முகுட்டி சுதந்திரப் போராட்ட ஆர்வலராக இருந்தார்.

லட்சுமி சுவாமிநாதன், சிறுவயதிலிருந்தே கேரளத்தில் சாதி நடைமுறைகளுக்கு எதிராகப் பேசும் சமூக மரபுகளையும், மூடநம்பிக்கைகளையும் எதிர்த்தார். தொடக்க காலத்தில் லட்சுமி தனது அன்னை ஏ.வி.யுடன் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தார்.

லட்சுமி சுவாமிநாதன் சென்னை குயின் மேரி கல்லூரியில் பயின்றார். படிக்கும்போதே பகத்சிங்கின் வழக்குக்காக நிதி திரட்டினார். பின்னர் 1938-இல் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார்.

உலகப் போர் வெடித்தவுடன், பெரும்பாலான மருத்துவர்கள் ஏகாதிபத்திய சக்திகளுக்கு சேவை செய்வதற்காக நியமிக்கப்பட்டனர். அந்த சமயத்தில் சாகல் சிங்கப்பூர் சென்று அங்கு தனது மருத்துவ பயிற்சியைத் தொடங்கினார், சிங்கப்பூரில் ஏழைப் பெண்களுக்கு மருத்தவ சேவை புரிந்தார்.

பணி & மணம்

மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் துறையில் டிப்ளோமா முடித்த லட்சுமி சேகல், சென்னை டிரிப்ளிகேனில் அமைந்துள்ள அரசு கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றினார்.

இந்நிலையில் அவர் பைலட் பி.கே.என்.ராவ் என்பவரை மணந்தார்.1940 ஆம் ஆண்டில், அவர் திருமண வாழ்வில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சிங்கப்பூர் திரும்பிச் சென்றார்.

இந்திய ராணுவத்தில் இணைப்பு

1940ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு மருத்துவப் பணிக்காக சென்ற லட்சுமி, 1943ஆம் ஆண்டு இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்தார். 1942 ஆம் ஆண்டில், சிங்கப்பூர் ஜப்பானியர்களிடம் சரணடைந்தபோது, ​​காயமடைந்த போர்க் கைதிகளுக்கு சாகல் உதவி புரிந்தார். காந்தி மற்றும் நேரு மீது கருத்து வேறுபாட்டில் இருந்த லட்சுமிக்கு நேதாஜியின் நேர்மையும் இரும்பு போன்ற உறுதியும் நம்பிக்கையைத் தோற்றுவித்தன.

1857 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடிய புகழ்பெற்ற 'ஜான்சியின் ராணி' பெயரிடப்பட்ட ஐஎன்ஏவின் அனைத்து பெண்கள் காலாட் படைப்பிரிவை உருவாக்குவதில் லட்சுமி முக்கியப்பங்காற்றினார்.

பின்னாளில் டாக்டர் லட்சுமி கேப்டன் லட்சுமி ஆனார். லட்சுமி சேகல் ஜான்சி ராணிப்படையின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதில் 15௦00 பெண்கள் இருந்தனர்.

உயிர் தப்பி கைதான கேப்டன் லட்சுமி

சிங்கப்பூரில் துவங்கப்பட்ட ஜான்சி ராணிப் படைதான் ஆசியாவில் துவங்கப்பட்ட முதல் பெண்கள் படை ஆகும். கேப்டன் லட்சுமியின் தலைமையில் பர்மாவிலிருந்து பெண்கள் படை டில்லியை நோக்கிப் புறப்பட்டது.

இதனால் பதற்றமான சூழல் உருவானதால் பர்மாவின் எல்லையில் போர் மூண்டது. இந்தப் போரில் விமான குண்டு வீச்சிலிருந்து தப்பித்த லட்சுமி சேகல் கைது செய்யபட்டார். பின்னர் கேப்டன் லட்சுமி, அடர்ந்த காட்டுப் பகுதியில் ஓர் ஆண்டு சிறை வைக்கப்பட்டார். 

பிரேம் குமார் சேகலுடன் திருமணம்

1945 இல் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். 1947 ஆம் ஆண்டில், அவர் ஐஎன்ஏவில் அவருடன் பணியாற்றிய கர்னல் பிரேம் குமார் சாகலை மணந்தார்.

சுதந்திரத்திற்குப் பின்...

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்தப் போராளிக்குத் திருப்தியளிக்கவில்லை. எனவே அரசியலில் இருந்து விலகி, இலவச மருத்துவ சேவை செய்து வாழ்ந்து கொண்டிருந்தார் கேப்டன் லட்சுமி சேகல்.

சுதந்திரத்திற்குப் பின் , சாகல் கான்பூரில் தனது மருத்துவ பயிற்சியை மீண்டும் தொடங்கினார். பின்னர் இந்தியாவில் இருந்த அகதிகளிடையே பணியாற்றினார். 1971 ஆம் ஆண்டு வங்கதேசப் போரின்போது கொல்கத்தாவுக்குச் சென்ற அவர் போங்கானின் எல்லைப் பகுதிகளில் பணியாற்றினார்.

1984 ஆம் ஆண்டில், போபால் எரிவாயு கசிவுக்குப் பிறகு மருத்துவ குழுவுடன் போபால் சென்றார். கான்பூர் தெருக்களில் 1984 ஆம் ஆண்டு சீக்கிய எதிர்ப்பு கலவரத்தின்போது வெறித்தனமான கும்பலை எதிர்கொண்டார், தனது மருத்துவமையத்திலும் அதைச் சுற்றியும் உள்ள  சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்தார்.

இறுதிவரை மக்களுக்காக...

அவர் 1971 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஜனநாயக மாதர் சங்கத்தில் இணைந்து தோழர் லட்சுமியாக, அடுத்த பரிமாணத்தில் தன் சமூக சேவையைத் தொடர்ந்தார். 1981 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினராக இருந்த சாகல் பெண்களின் பிரச்னைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் எழுப்பியதோடு பல பிரசாரங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

2002 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளராக ஏ.பி.ஜே.அப்துல்கலாமை எதிர்த்து களமிறங்கினார். அவர் தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் பயணித்து தனது பணிகளைத் தொடர்ந்தார்.

தனது 92 ஆவது வயது வரை கான்பூர் மருத்துவமனையில் மக்களுக்காக பணியாற்றிய லட்சுமி தனது 97ஆவது வயதில் ஜூலை 19, 2012 அன்று இருதய நோயால் பாதிக்கப்பட்டு மரணித்தார்.

கல்லூரி நாட்களில் தொடங்கி இறப்பு வரை, அரசியல், மருத்துவம், போராட்டம் வழியே சமூகப்பணியாற்றி மனித குலத்திற்கான சேவைக்காக தன் வாழ்நாளின் ஒவ்வொரு நிமிடங்களையும் செலவழித்துள்ளார்  

விருது

லட்சுமி சேகலின் சேவையைப் பாராட்டும் விதமாக 1998இல் இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி கெளரவித்தது.

சுயசரிதை

கேப்டன் லட்சுமி சேகல் ‘புரட்சியின் நாட்களில் ஓர் அரசியல் போராளியின் நினைவலைகள்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள சுய சரிதை,  இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களை நமக்கு காட்டுகிறது.

லட்சுமி என்ற இளம் பெண் மருத்துவராக, காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாக, பின்னர் கேப்டன் லட்சுமியாக ஆயுதமேந்தி போராடி,  இறுதி நாட்களில் தோழர் லட்சுமியாக மார்க்சிய பரிணாமம் அடைந்த பயணத்தை இந்த நூல் நமக்கு காட்டுகிறது. 

இந்திய தேசிய இராணுவத்தில் பங்குபெற்று போராடி இன்னுயிர் ஈந்தவர்களின் எலும்புக்கூடுகள் இப்பொழுதும் இந்தோ-பர்மா எல்லையில் எங்கோ புதைந்து கிடக்கின்றன. சுதந்திர இந்தியா அவர்களை எந்தவிதத்திலும் அங்கீகரிக்கவில்லை.

சினிமா

இந்திய தேசிய ராணுவத்தையும், அதில் பங்கேற்ற வீராங்கனைகளையும் கவுரவிக்கும் வகையில், ‘தி ஃபர்காட்டன் ஆர்மி’ (‘The forgotten Army’) என்ற படம் அமேசான் பிரைம் விடியோ வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com