முதல் பெண் ஆதினகர்த்தர் சாயிமாதா சிவபிருந்தா தேவி

ஏழு குழந்தைகளில் கடைசிப் பெண்ணாக 1927இல் பிறந்தார் சிவ பிருந்தா தேவி.
முதல் பெண் ஆதீனக் கர்த்தர் சாயிமாதா சிவ பிருந்தா தேவி!
முதல் பெண் ஆதீனக் கர்த்தர் சாயிமாதா சிவ பிருந்தா தேவி!


மன்னராட்சி நடைபெற்ற புதுக்கோட்டை சமஸ்தான பரதக் கலைஞராக விளங்கிய திருக்கோகர்ணம் சிவராம நட்டுவனார் -  நல்லம்மாள் தம்பதியின் ஏழு குழந்தைகளில் கடைசிப் பெண்ணாக 1927 இல் பிறந்தார் சிவபிருந்தா தேவி.

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று கேட்ட காலம் அது. இளைய பருவத்திலேயே சுட்டியான பெண்ணாக வளர்ந்தவர். திருக்கோகர்ணம் பள்ளியிலும், பின்னர் ராணியார் பள்ளியிலும் படித்தார். இளம் மங்கைப் பருவத்திலே இயல்பாக சமுதாயப் பார்வை அவருக்கு இருந்து வந்தது. ஆன்மீக நாட்டமும் அவருக்கு இருந்தது. பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டி பலவற்றில் சிவ பிருந்தா பல முதற்பரிசுகளைப் பெற்றவர். பேச்சுகளில் புராண நிகழ்ச்சிகளும், இலக்கியக் காட்சிகளும் கட்டாயமாக இடம் பெறும். கன்னி வயதிலேயே உரைத்திறம் பெற்றிருந்து . பிருந்தாதேவியின் பேச்சு வேகத்தைக் கண்டு பலரும் பிரமித்தனர்.

1944 ஆம் 'கலைமலர்' ஆசிரியர் கலைப்பித்தன், சிவபிருந்தாவின் வீடு தேடி வந்தார். சிறப்பு விருந்தினர் வருகை போன்று குடும்பத்தினர் அவரை வரவேற்றனர். கலைப்பித்தன் கண்களோ சிவபிருந்தாவைத் தேடியது. அவர் எங்கே என்று கேட்டார். அதற்கு அவளுக்கென்ன வேற வேலை, மாடியில் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பதுதானே அவளின் வேலை எனக் கூறினர்.

அப்படிப் படித்தால்தானே இந்தச் சின்ன வயதிலேயே பெரிய விஷயங்களை எழுதக் கூடிய திறம் அவருக்கு வந்திருக்கிறது என்று சான்று பகிர்ந்தார். அவரிடம் கட்டுரை வாங்கிடவே தான் வந்துள்ளதாகக் கூறுகிறார். அப்பொழுதே இதழ்களுக்கு கட்டுரைகளை எழுதும் அளவுக்கும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார்.

1946ஆம் ஆண்டு தமிழ்நாடு ஞாயிறு மலரில் 'கண்டவை காண்போம்' என்னும் தலைப்பில் வெளியாகியிருந்த பிருந்தாதேவியின் கவிதையை அறிஞர் பலரும் ஏற்றிப் போற்றினர்.

1947ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பு முடிந்ததும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஓஎல் (பிலாசபி ஆப் ஓரியண்டல் லிட்ரெச்சர்) என்ற படிப்பை முடித்தார். சைவப்பெரியார் எனப் போற்றப்பெறும் பல்கலைக்கழகப் பதிவாளர் பேரா. சச்சிதானந்தம் பிள்ளை அங்கு படிப்பதற்கு உறுதுணையாக இருந்தார். இசைப்பேரறிஞராக திகழ்ந்த சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை வீட்டிலிருந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தார் என்பது கூடுதல் செய்தியாகும்.

இமயஜோதி எனப் போற்றப்படும் சுவாமி சிவானந்தர் அவர்களின் திருக்கரங்களால் பட்டம் பெற்றார். இவரது பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும் கண்ட சச்சிதானந்தம் பிள்ளை அவர்கள், சிவபிருந்தா தேவியை சைவ சித்தாந்தம் பயிலக் கேட்டுகொண்டார்.

தருமபுரம் ஆதீனத்தில் சைவ சித்தாந்தம் பயிற்சி பெற தம்பிரான்களுடன் ஒரே பெண்மணியாக பயின்று அதிலும் சிறப்பு பெற்றார்கள்.

இசையறிஞர் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் இல்லத்தில் தங்கி பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது பல்கலைக்கழகப் பதிவாளர், சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை வீட்டுக்குச் சென்று உரையாடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.

உரையாடிக் கொண்டிருந்த நேரம் ஒரு முறை அங்கிருந்த பிருந்தாவைப் பார்த்து 'ஏம்மா பிருந்தா, அறுபது ஆண்கள் படித்துக் கொண்டிருக்கும் ஒரு வகுப்பில் தனி ஒருத்தியாக நீ சேர்ந்து படிக்கிறாயே, சங்கடமாக இல்லையா?' எனக் கேட்டார்.

'என்ன அப்பா இது, இப்படிக் கேட்கிறீர்கள்? ஆண், பெண் எல்லாம் உடலாலும் உடையாளும்தானே? ஆன்மா என எண்ணுகிறபோது அங்கே ஆணாவது பெண்ணாவது? படிப்பது தத்துவ ஞானமல்லவா? அறிவு பெறுவதற்கு மட்டும் கற்கின்ற படிப்பு இல்லையே இது? ஆன்ம ஞானம் பெறுவதற்குப் பயிலுகின்ற வேளையில் ஆண், பெண் வேறுபாடெல்லாம் வேரற்றுப் போகுமே? என புன்னகையுடன் கூறிய பிருந்தாவின் மறுமொழியை பின்னே பல்லாண்டுகள் பிருந்தாதேவியைப் பார்க்கும்போதெல்லாம் நினைவு கொண்டு நெஞ்சாரப் பாராட்டி மகிழ்வார் பெரியவர் சச்சிதானந்தம் பிள்ளை.

1948ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்று ஓராண்டு நிறைவு விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி திருக்கோகர்ணத்தில் உள்ள  இளைஞர்கள் சேர்ந்து நடத்தினர். அதில் சிவபிருந்தாதேவியை சிறப்புரையாற்ற அழைத்திருந்தனர். அக்கூட்டத்தில் புகழ்பெற்ற வார்த்தைச் சித்தர் வல்லத்தரசு அவர்களைத் தலைமையேற்கவும்  அழைத்திருந்தனர். அதுகான் முதல் மேடை கன்னிப்பேச்சாகும். அப்பேச்சினைக் கேட்ட வல்லத்தரசு மிகலவும் பாராட்டினார். சின்னப்பெண் என்னமாய்ப் பேசுகிறார் என அனவரும் மகிழ்ந்து வியந்தனர். அதனைத் தொடர்ந்து 'முருகனும் அருள் வள்ளலும்' என்னும் தலைப்பில் ஆகஸ்ட் 30இல் வயலூரில் பேசிய உரையும் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் செப். 1இல் 'தமிழின் சிறப்பு' என ஆற்றிய உரையும் முறையே இரண்டாவது, மூன்றாவது மேடைப்பேச்சாக அமைந்தன.

நாடு, சமயம், மொழி ஆகிய துறைகளில் பின்னே புகழார்ந்து ஒளிவீசிட இருக்கின்ற உள்ளீட்டை இவ்வுரைகள் அன்றே சுடர் காட்டி குறிப்பால் உணர்த்தின எனலாம்.

சிவ பிருந்தா தேவி அவர்களை அடையாளம் காட்டியது அவரது பேச்சாற்றல் என்பது உண்மையாகும். அவரது வெண்கலக்குரலால் எடுத்துச் சொல்லும் சொல் திறம், எதுகை, மோனை, சபையறிந்து பேசும் ஆற்றல் என அவரை சமூகத்துக்கு அடையாளம் காட்டியது. அவரது பேச்சில் இலக்கிய நயம் மிளிரும் அக்காலங்களில் அம்மாதிரிப் பேசும் பெண்கள் யாருமில்லை எனலாம். அத்தகைய திறமை அவருக்கு வாய்த்தாக அமைந்திருந்தது.

அதன்பின்னர் அவரது வாழ்க்கையில் ஏற்றம்தாம் நடந்தது.

பல்வேறு இடங்களில் இருந்து சொற்பொழிவுகளுக்காக அழைத்து சிறப்பிக்கப்பட்டார். செம்மொழியான செந்தமிழை அவரது நாநயத்தால் புகழ்மாலை சூட்டி சங்க இலக்கியங்களையும், பக்தி இலக்கியங்களையும் பரப்புரை செய்து மக்களை மகிழ்வித்து வந்தார். இவ்வாறு சில ஆண்டுகள் ஓடின. நாடெங்கும் சுற்றுவதால் சமுதாயத்தில் நடைபெறும் நிகழ்வுகள் அவரைப் பாதிக்கச் செய்தன. காலங்கள் உருண்டோடின. காட்சிகளும் மாறி வந்தன.

மகளிர் நலம் மேம்பட இச்சமுதாயத்தில் ஆணுக்கு பெண் சரிநிகர் சமமாக வாழ்ந்திடல் வேண்டும் என்ற மகாகவி பாரதியாரின் எண்ணத்தை உள்வாங்கி அன்னை அவர்கள், 1957ஆம் ஆண்டு பத்மபூஷண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பெயரால் மகளிர் இல்லம், படிப்பகம் அமைத்து, 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை, இடம் தந்து வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்.

கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு கலங்கரை விளக்கமாக விளங்கினார். தொடர்ந்து 45 ஆண்டுகளுக்கு மேலாக இத்திருப்பணியை செம்மையுடன் செய்து வந்தார். இத்திருப்பணியை சமுதாயத்தில் பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

தமிழக முதல்வர்கள், பெருந்தலைவர் காமராஜர், கனம் பக்தவத்சலம், டாக்டர் கலைஞர், புதுச்சேரி முதல்வர் வெங்கடசுப்பு ரெட்டியார் உள்பட பல அரசியல் தலைவர்கள், தமிழகத்தின் திருமடங்களின் தலைவர்கள், சமுதாயப் புரட்சியாளர் தந்தை பெரியார் உள்ளிட்ட சமூகத் தலைவர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், அமைச்சர்கள், ஆட்சியர்கள், அறிஞர்கள், பல்துறை சார்ந்த பெரியோர்களும் கண்டு மகிழ்ந்து போற்றினர்.

நாடறிந்த பேச்சாளராக வலம்வந்தார். பெருந்தலைவர் காமராஜர் அன்பிற்கிணங்க காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து மகளிர் பிரிவில் சிறந்த பேச்சாளராக விளங்கி இலக்கிய நயத்தோடு கட்சிக்காக பிரசாரம் செய்தார். முன்னாள் நிதியமைச்சர் டிடிகே ராஜாசர் முத்தையா செட்டியார், முன்னாள் அமைச்சர் கக்கன், காட்டுப்பட்டி ராமையா உள்பட பலரின் வெற்றிக்காக பிரசாரம் செய்ததுடன் அவர்களுடன் பணியாற்றி சிறப்பு பெற்றார்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸில் கட்சிப் பணியாற்றியவர்கள், நகர்மன்ற உறுப்பினர் உள்பட மாவட்ட அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து சிறப்பாக பணியாற்றினார். மாவட்ட சமுக நலக்குழுத் தலைவியாகவும் பொறுப்பேற்று சமூகப் பணியாற்றினார்.

அன்னிபெசன்ட் அம்மையாரால் தொடங்கப்பட்டு முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரைத் தலைவராகக் கொண்டு இயங்கி வந்த இந்திய மாதர் சங்கத்தில் சிவபிருந்தா தேவி அவர்களுக்கு பாராட்டு செய்யப்பட்டது. அவரோடு கொத்தமங்கலம் சுப்பு அவர்களும் அன்று பாராட்டப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐநா சபையால் 1975ஆம் ஆண்டு பெண்கள் ஆண்டாக அ றிவிக்கப்பட்டது. அதனையொட்டி சென்னையில் சீனிவாச காந்தி நிலையத்தில் அதன் தலைவி பத்மசிறீ அம்புஜம்மாள் தலைமையில் சிவபிருந்தாதேவிக்கு பாராட்டு மற்றும் பட்டங்கள் வழங்கப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இசைக்குடும்பத்தினைச் சேர்ந்தவர் என்பதால் வீணையை இனிமையாக இசைப்பார்கள். பேச்சாற்றலில் வல்லமை மிகுந்தவராகத் திகழ்தார். எழுத்திலும் சிறப்பான இடத்தைப் பெற்றார்.

'இது எங்கே' என்ற சிறுகதை நூல், 'மனிதன் எங்கேயோ போகிறான்', 'மனிதனும் தெய்வமாகலாம்', 'இந்து மதம்', 'ஷேத்திராடனம்' (வடயாத்திரைப் பயண நூல்) ஆகியவற்றை எழுதியுள்ளார். 'மனிதன் எங்கேயோ போகிறான்' என்ற நூல் ஆங்கில மொழி பெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டது.

புதுக்கோட்டையில் நூற்றாண்டை கண்ட பள்ளியான சிறீ சுப்புராமய்யர் பள்ளியின் செயலராக இருந்து சிறப்பான கல்விப்பணியையும் ஆற்றியுள்ளார். திருமணம் என்கிற பாசக்கட்டுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இறைவனின் அருளைப் பெற்றதால் 1972இல் துறவறம் பூண்டார்கள். துறவறம் பூண்டாலும் அவர்களின் சமய, சமூகப் பணி மேலும் சிறப்பாக அமைந்தது.

தான் பிறந்த மண்ணில்  பல அமைப்புகளை நிறுவி, சைவம் மற்றும் தமிழ் இலக்கியத்திலன் மேன்மையை மக்களுக்கு எடுத்துரைத்து வந்தார்கள்.

சமய, சமூக சேவைகளை சிறப்பாக செய்து வந்தார்கள். 1961ஆண் ஆண்டு முதல் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை, அமெரிக்கா, அன்றைய மேற்கு ஜெர்மனி போன்ற நாடுகளில் கால் பதித்து, சைவ சித்தாந்த நெறியை தமிழ்ப் பண்பாட்டு நெறியை கலாசாரத்தை பரப்பி வந்தார்கள்.

மலேசியா, சிங்கப்பூரில் திருவிளக்குப் பூஜையை முதன்முதலில் அறிமுகப்படுத்தி பெண்கள் அனைவருக்கும் அதன் மேன்மையை எடுத்துரைத்தார்.

உலக சமயங்களிலேயே சைவம் தொன்மையானது. சைவத்தின் சிறப்பை அதன் மேன்மையை உணர்த்திய பெருமை அப்பர் பெருமானைச் சேரும். மதமாற்றம் பெற்ற அப்பர் பெருமானை மீண்டும் சைவ சமயத்துக்கே அழைத்து வந்து சைவத்தை உயரச்செய்த பெருமை அப்பரின் தமக்கையரான திலகவதியாரையே சாரும்.

அத்தகையை சிறப்பு வாய்ந்த பெருமாட்டியின் திருப்பெயரால் ஒரு திருமடம் அமைந்து சைவத்தையும் தமிழ்த் தொண்டையும் அதுவும் ஒரு பெண்மணி செய்து வந்தது சைவப்பெருமக்களுக்கு பெருமகிழ்வைத் தருவதாகும்.

ஆம். சைவ சமய வரலாற்றிலே கடந்த 20ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியில் தமிழகத்தல், புதுக்கோட்டை மண்ணில் பல அருளாளர்களின் நல்லாசியுடனும் தமிழகத் திருமடங்களின் ஆதீனக்கர்த்தர்களின் முன்னிலையிலும் அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி அவர்கள் அருளாட்சியினை ஏற்று அருள்பாலித்தது ஓர் சாதனைதான்.

 எல்லாம் வல்ல சிவபரம்பொருளின் அருளினால் சைய சமய வரலாற்றில் புதிய அத்தியாயமாக ஒரு பெண் திருமடத்தின் தலைவியாக ஆதீனக்கர்த்தராக அருளாட்சி ஏற்று, அருள்பாலிக்கும் காட்சியைப் பெரும் வாய்ப்பு புதுக்கோட்டை மண்ணுக்கு வாய்த்தது.

ஆம், 1983ஆம் ஆண்டு ஜூன் 30ஆம்  நாள் வியாழக்கிழமை பன்னிரு திருமுறை வேள்வியுடன் திருமடங்களின் குருமகா சந்நிதானங்கள், தொண்டைமண்டல ஆதீனம் திருவருள் திரு ஞானப்பிரகாச தேசிய பரமாச்சார்ய சுவாமிகள், பேரூர் ஆதீனம் திருவருள் திரு கயிலை மாமுனிவர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், சிவரை ஆதீனம் திருவருள் திரு சுந்தரம் சுவாமிகள் ஆகியோர் முன்னிலையிலும் அருளாசியிலும் அன்னையார் அவர்கள் திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் முதல் பெண் ஆதீனக்கர்த்தராக அருளாட்சியை ஏற்றார்கள்.

அப்பர் பெருமானுக்கு திருநீறு அளித்து, மீண்டும் சைவசமயம் தழைத்தோங்கும் வகையில் அமைந்த திருவுருவப்படத்தின் காட்சியை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திறந்து வைத்து நல்லாசியை வழங்கிப் பேசினார்.

அப்போது, 'பெரிய புராணத்தில் திலகவதியாரைப் பற்றி கற வந்த சேக்கிழார் பெருமான் பாதியைத்தான் சொன்னார், மீதிப்பாதி இன்று அருளாட்சியை ஏற்றுள்ள அம்மையார் தொடருவார் என்ற எண்ணத்தில் விட்டுச் சென்றுள்ளார்' என முத்தாய்ப்பான சொற்றொடர்களை கூறியபோது சைவ அன்பர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

அனைத்துத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டு பணியாற்றி வருகின்ற மகளிரை கண்ணுற்ற அன்னையாருக்கு நம் நாட்டுப் பெண்கள் ஆகமங்கள் கற்றிடவும், பன்னிரு திருமுறைகளை ஓதி உணரவும், ஆலயம் அமைக்கவும், பல கலைகளைக் கற்றுணர்ந்து உயர வேண்டும் என்ற எண்ணப்பாங்கோடு, ஆதீன அருளாட்சி ஏற்றவுடன் உலக இந்து மகளிர் மாநாட்டை கோவையில் 1984ஆம் ஆண்டு பேரூர் ஆதீன குருமகாசந்நிதானம், சிரவை ஆதீன சந்நிதானம், அருட்செல்வர் பெருந்தகை டாக்டர் நா. மகாலிங்கம் உள்ளிட்ட பெரியவர்களையும் கோவை அன்பர்களையும் கொண்டு சிறப்பான முறையில் கூட்டினார்.

இம்மாநாட்டில் அன்னையார் அவர்கள், உலக  இந்து மகளிருக்கென பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மட்டுமின்றி பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள், சமூகப் பெருமக்கள் வரவேற்று மகிழ்ந்தனர்.

 இதையடுத்து, 1985ஆம் ஆண்டு மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இரண்டாவது உலக இந்து மகளிர் மாநாட்டை அன்னையார் அமைப்பாளராாக இருந்து சிறப்பான முறையில் கூட்டி உலக இந்து மகளிர் பல்கலைைக்கழகம் அமைய முயற்சி எடுத்தார்கள். இம்மாநாட்டில் சைவ சித்தாந்த கருத்தரங்குகள் சிறப்புடன் நடைபெற்றது. பெருமளவில் மகளிர் பேசினர். பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம், மலேசிய நாட்டின் அமைச்சர் டத்தோ சாமிவேலு, டத்தோ பத்மநாபன், அருள்மாமணி ஆறுமுகம் பிள்ளை, பிரமிளா கணேசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்திய நாட்டின் பெருமையை நிலைநாட்டிட சுவாமி விவேகானந்தருக்கு சிகாகோ மாநகரம் எப்படி அமைந்ததோ அவ்வாறே அம்மையாருக்கும் அமைந்தது. ஆம் 1985ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் நடைபெற்ற உலக சமய மாநாட்டினை மெழுகுவர்த்தி ஏற்றித் தொடங்கி வைத்து நமது சமயக் கருத்தின் உண்மையை உயர்வை எடுத்துரைத்து நாட்டுக்கே பெருமை சேர்த்தார். உலக நாடுகளிலிருந்து ஏனைய சமயத்தினர் 600 பிரதிநிதிகள் கலந்து கொண்டு அன்னையார் தொடங்கி வைத்தது நமது சமயத்துக்கு கிடைத்த வெற்றியல்லவா? அத்துடன் வெற்றி நின்றதா, இல்லை.

1986ஆம் ஆண்டு அன்றைய மேற்கு ஜெர்மனியில் ப்ராங்பிரட் அருகில் பேடுநாகிம் என்ற இடத்தில் நடைபெற்ற உலக சமய மாநாடட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் சிறப்பும் கிடைத்தது தமிழ் நாட்டிற்கும், நம் சமயத்துக்கும் கிடைத்த பெருமை தானே?

 சமூக சேவகராக, அரசியல்வாதியாக, கல்வியாளராாக, இசையைக் கற்றுணர்ந்தவராக, எழுத்தாளராக, ஆற்றல்மிகு பேச்சாளராக என பல்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்து சைவ சமயம் உயர்ந்தோங்க தொண்டாற்றி வந்தார்கள். அவர்களின் வாழ்வு, சமுதாய வாழ்வாக, சமய வாழ்வாக இருந்தது.

பெண்ணினத்துக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்திருந்தது. ஒரு வரலாறாக திகழ்ந்த அன்னையாரைப் பெற்றி பலதொகுதிகளாக எழுதலாம். அவர்களைப் பற்றி தனி நூலாக ஒரு பெண் துறவியின் சமய வாழ்வும்- சமுதாய வாழ்வும் எனத் தலைப்பிட்டு எழுதியுள்ளோம்.

72 ஆண்டுகள் இப்புவியில் வாழ்ந்து பெண்ணினத்தின் அடையாளங்களில் ஒன்றாக அருளாட்சி செய்து வந்த அன்னையார் நவம்பர் 27, 1998ஆம் நாள் இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாரினார்.

வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபு என்பதற்கிணங்க, திலகவதியார் திருவருள் ஆதீன குருமுதல்வர் அன்னையின் வழியொற்றி, சைவ சமயத்துக்கும் தமிழுக்கும் தொண்டாற்றி வருவதோடு, மக்களுக்காக சமூகப்பணிகளையும் ஆற்றி வருகிறோம். இத்திருமடம் வெள்ளிவிழா கண்ட மடமுமாகும்.


ஆதீனம் அமைந்துள்ள இடம்:
திலகவதியார் திருவருள் ஆதீனம்
1120, தஞ்சாவூர் சாலை, மச்சுவாடி, புதுக்கோட்டை- 622001.
செல்லிடப்பேசி- 97891 82825, 63809 28173.
மேலும் விவரங்களை அறிய: www.sivabrindadevi.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com