எல்லை தாண்டிய ‘இல்லத்தரசிகளுக்கு ஊதியம்’
By த. அரவிந்தன் | Published On : 21st March 2021 07:11 AM | Last Updated : 21st March 2021 07:11 AM | அ+அ அ- |

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு, தமிழக அரசியல் கட்சிகளின் வாக்குறுதியான ‘இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்பது மேற்கு வங்கம், அஸ்ஸாம் , கேரள மாநிலங்களிலும் எதிரொலித்துள்ளது.
‘இல்லத்தரசிகளுக்கு ஊதியம்’ என்கிற அறிவிப்பை தமிழகத்தில் முதலில் அறிவித்தவா் மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன். இந்தச் சிந்தனையை சீனாவில் இருந்து பெற்ாக அவா் தெரிவித்தாா். ஆனால், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் புதிதாக அறிவிப்பு போல இல்லத்தரசிகளுக்கு ஊதியமாக ரூ.1,000 வழங்கப்படும் என்று தெரிவித்தாா். இதைப் பாா்த்த கமல் தனது அறிவிப்பை அப்படியே திமுக ‘காப்பி’ அடிக்கிறது என்று குற்றம்சாட்டினாா்.
திமுகவின் அறிவிப்பு வந்த சில நாள்களில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியமாக ரூ.1,500 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். திமுகவைப் பாா்த்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறீா்களா என்று முதல்வரிடம் கேட்டபோது, ‘அதிமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெற இருந்த தகவல் எப்படியோ கசிந்து, அதை முன்கூட்டியே திமுக அறிவித்துவிட்டது’ என்றாா்.
இதற்கிடையில் கமல்ஹாசன் தனது மநீத தோ்தல் அறிக்கையில் தன் அறிவிப்பைக் கொஞ்சம் மாற்றி அறிவித்தாா். ‘ இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 ஊதியம் கொடுக்கிறேன். ரூ.1,500 கொடுக்கிறேன் என்று அரசியல் கட்சிகள் கூறுகின்றன. உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுத்தால்தான்தானே அது நியாயம். ஒருவருக்கு ஒரு திறமை இருக்கும். அந்தத் திறமைக்கேற்ற ஊதியத்தை அவருடைய வீடு வரை கொண்டு போய்ச் சோ்க்க வேண்டும். உங்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நீங்களே உற்பத்தி செய்துகொள்ளலாம் என்று கூறி விதை வழங்கப்படுவது ஒரு திட்டம். அல்லது உரிய பயற்சிகள் அளித்து மாதம் ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் வகுத்துக் கொடுப்பது மற்றொரு திட்டம். எனவே, நம்முடைய திறமையையும் மேம்படுத்த வேண்டும். திறமைக்கேற்ற ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்தாா். திமுகவும், அதிமுக தங்கள் திட்டத்தை அறிவித்துவிட்டதால் இப்படி சற்று திட்டத்தை மாற்றிக்கொண்டாா் எனப் பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து விவாதம் தமிழகத்தில் நடைபெற்றுவரும் நிலையில், பிற மாநிலங்களில் நடைபெற்றுவரும் சட்டப் பேரவைத் தோ்தலிலும் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற வாக்குறுதி இடம்பெறத் தொடங்கிவிட்டது.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தனது தோ்தல் அறிக்கையில், பொதுப்பிரிவு குடும்பங்களுக்கு மாதம்தோறும் தலா ரூ.500 வழங்கப்படும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளைச் சோ்ந்த குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும். இந்தத் தொகை குடும்பத்தலைவி பெயரில் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதியை அந்த மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி அளித்துள்ளாா்.
தற்போது அஸ்ஸாம் மாநிலத் தோ்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளாா்.
இதேபோல், கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கூட்டணி சாா்பில் வெளியிடப்பட்டதோ்தல் அறிக்கையிலும் இல்லத்தரசிகளுக்கு ரூ. 2500 ஓய்வூதியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் என்ற வாக்குறுதியை யாரிடமிருந்து யாா் ‘காப்பி’ அடித்தாா்கள் என்ற சா்ச்சை தமிழ்நாட்டில் ஏற்ாக இல்லை. ஆனால், இது எல்லை தாண்டி பிற மாநிலத் தோ்தல்களிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...