மக்கள் மறக்க முடியாத உண்மை உழைப்பாளிகள்!

மே மாதம் முதல் நாளில் உழைப்பாளிகளை நினைவு கூர்ந்து உழைக்கும் உழைப்பாளிகளுக்கு மரியாதை செலுத்தப்படுவது ஆண்டுதோறும் வழக்கமானதாக இருந்து வருகிறது.
மக்கள் மறக்க முடியாத உண்மை உழைப்பாளிகள்!

ஒவ்வொரு மே மாதம் முதல் தினம் உலக உழைப்பாளிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் உழைப்பாளிகளை நினைவு கூர்ந்து உழைக்கும் உழைப்பாளிகளுக்கு மரியாதை செலுத்தப்படுவது ஆண்டுதோறும் வழக்கமானதாக இருந்து வருகிறது.

நிக்காத மழையில் உழைப்பவர்களோ, கடும் வெய்யிலில் உழைப்பவர்களோ, அலுவலகத்தில் நேரங்காலமின்றி உழைப்பவர்களோ, நாள்தோறும் குப்பைகளை அள்ளி வீதிகளை சுத்தமாக வைத்திருப்பவர்களோ, சாக்கடைகளில் அடைத்திருக்கும் அடைப்புக்களை பலரும் பார்க்கிறார்களே என்பதை கண்டுகொள்ளாமல் விருப்பமுடன் முழ்கி உடல் முழுவதும் கழிவுகளாக்கிக் கொள்வார்களோ அனைவருமே உழைப்பாளிகள்தான்.

மக்களுக்காக உழைப்பவர்கள் மட்டுமன்றி தங்களது பாடுகளுக்கு உழைத்து வருவாய் ஈட்டி குடும்பத்தை மகிழ்ச்சியுடன் நடத்தி வரும் அனைவருமே உழைப்பாளிகள்தான். ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே உழைப்பாளிகளே உருவகப்படுத்தப்பட்ட வந்த நிலையில் தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் வருகைக்குப்பிறகு அவர்களது தீவிரப் பிரசாரம், விழிப்புணர்வு காரணமாக பெண்கள் அனைத்துப் பணிகளையும் நிரப்பி தங்களையும் உழைப்பாளிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளும் நிலையேற்பட்டுள்ளது.

குடும்பத்தலைவர் என்பவர் உழைப்பவர் என்பதாகக் கருதப்பட்டதால் தற்போது பல வீடுகளில் பெண்களே குடும்பத்தலைவர்களாக அலங்கரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் பெண்கள், வெளியே ஆண்கள் என்கிற நிலை பல பகுதிகளிலும் மாறி வீடுகளுக்குள் ஆண்கள், வெளியே பெண்கள் என்கிற கட்டாய நிர்ப்பந்தமும் உருவாகியுள்ளது.

நம் வீட்டுப் பெண்களும், பக்கத்து வீட்டுப் பெண்களும் உழைப்பாளிகளாக வீதிகளிலும், அலுவலகங்களிலும் சம உரிமை பெறும் உழைப்பாளிகளாக வாகனங்களில் பறந்து வருகின்றனர். ஆனாலும் நாம் நாள்தோறும் கவனித்து வரும், நமது பார்வைக்குட்பட்ட  அந்த உழைப்பாளிகளை உழைப்பாளிகளாக கருத மறந்தவர்களாகவே கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம். அந்தக் காலத்தில் இவர்களது மிதிவண்டியின் சப்தத்திற்கும், மிதிவண்டியின் பெல் சப்தத்திற்கும் காத்திருந்த அம்மாக்களை, அக்காக்களை, அண்ணன்களை அப்பாக்களை நாம் நாள்தோறும் பார்த்துதான் கடந்துள்ளோம். ஒரு காலத்தில் அந்த உழைப்பாளிகளுக்காக நாமும் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது தற்போது மாறியுள்ளது.

இவ்வளவு அவதானிப்புடன் ஒருவித எதிர்ப்பார்ப்புடன் தெரிவிக்கப்படும் உழைப்பாளிகள் மழையென்றாலும், வெய்யிலென்றாலும் புயலென்றாலும் நம்மைத் தேடி நம் வீடு தேடி வரும் பால்காரரும், தபால்காரரும், பத்திரிக்கை விநியோகத் தம்பிகளும்தான். இவர்களின்றி நமது தினசரிகள் நகர மறுத்த காலமுண்டு. பால்காரர் வராமல் பலரது வீடுகளின் அன்றையக் காலை விடிந்ததில்லை. நமது வீட்டு வாசலின் கோலத்தைக் குலைத்து சப்தமிட்டு விழும் தினசரிகள் இல்லாத காலையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

பள்ளி, கல்லூரிகளின் இறுதியாண்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் அக்காக்கள், அண்ணன்களுக்கு தங்களது வீடுகளைத் தேடி வரவுள்ள அந்த வீதியின் தபால்காரர் மிதிவண்டி வருகை ரகசிய முடிவைத் தாங்கி வரும் கடவுள் தேராகவும், அவரது மிதிவண்டி பெல் கடவுளின் அழைப்புமாகவுமே இருக்கும். தபால் வந்ததற்குப் பிறகான நேரங்களை விடவும் தபாலுக்காக காத்திருக்கும் நிமிடங்களை அன்றைய நாள் முழுவதும் தபால்காரருக்காக காத்திருந்துக் கடந்தவர்கள் இன்றும் அந்த இக்கட்டான நேரங்களை அதே படபடப்பு நிமிடங்களை நினைவு கூர்ந்து கூற முடியும்.

அதேபோல் வேலைக்காகவும், பள்ளி, கல்லூரி அனுமதிக்காகவும் காத்திருக்கும் நிமிடங்களும் அதே படபடப்புடன் அமைந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அதேபோல் கடிதம் மூலமே வாழ்க்கை நடத்தி வந்த கணவன், மனைவிகள், காதலர்கள், நண்பர்கள், அம்மா,அப்பாக்களின் கடிதப் பரிமாற்றமே வாழ்க்கையின் அர்த்தம் பொதிந்தவையாக இருந்த காலம் அந்தக் காலம். வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து கணவர்கள், மகன்கள் அனுப்பும் மணியார்டர் வருகைக்காகவே காத்திருக்கும் வீடுகளும் திறந்தபடிதானிருந்தது. அன்று மணியார்டருக்காகக் காத்திருந்தவர்களின் பேரன்கள், பேத்திகள் நெட் பேங்கிங் வசதியில் திளைத்துக் கிடக்கிறார்கள்.

மிதிவண்டித் தபால்காரர்களைக் கடவுளர்களாகவே பாவித்த வந்த உலகம் இன்றைய வளர்ச்சிப் போக்கில் செல்போன் உலகில் அவர்களை புறந்தள்ளும் கட்டாயத்திற்கும், அவசியத்திற்கும் ஆளாகியுள்ளது என்பதுதான் உண்மை. ஆனாலும் எப்போதேனும் அந்த வீதியில் காத்திருப்பவர்கள் யாருமின்றி கடிதங்களை தபால்காரர்கள் இன்றும் விநியோகித்தபடிதான் இருக்கிறார்கள். அவர்களது முக்கியத்துவம் குறைந்துள்ள இந்தக் காலத்தில்தான் அவர்களுக்கு கூடுதலாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது என்பதுதான் ஆச்சரியம்.

இப்படித்தான் பால்காரர்களின் வருகைக்காகவே தேநீர் அடுப்புக்கள் கொதிக்கும் தண்ணீருடன் காத்திருக்கும். பண்டிகைக் காலம், மழைக்காலம், கடையடைப்புக் காலம் என எந்தக் காலமுமின்றி தனது வாடிக்கையாளர்கள் வீட்டைத் தேடி வந்து பால் தந்து போன பால்காரர்கள் வயதாகி, முடங்கிப் போயினர். அவர்களது மகனோ, பேரனோ இன்றும் தாத்தாவின் வாடிக்கையாளர்களுக்கு வீடு தேடி வந்து தண்ணீர் கலக்காத தரமான பாலைத் தந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இன்றைய நவீனக் காலத்தில் வீடு தேடி வந்து பாலை தந்து செல்லும் பால்காரர்களுக்கு வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்துள்ளனர். மிதிவண்டிகளும், மிதிவண்டிகளின் பூம்பூம் பெல்லும் மாறி தற்போது புகை கக்கும் வாகனங்கள் வந்த போதும் பால்காரர்கள் வராத வீதிகள் இன்றும் இருப்பதில்லையென்றே கூறி விட முடியும்.

இதேபோல்தான் அன்று முதல் இன்று வரை வீடுகளில் கொத்தாக விழுகும் தினசரிகள் அன்றைய காலையில் இன்றும் பலருக்கு விழிப்பை ஏற்படுத்தும் அலாரமாக இருந்து வருகிறது. பேப்பர் விழுகாத காலை பலருக்கும் அந்நியம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. வாசலில் விழுகும் தினசரிகளுக்கு அந்த நாளில் எடுத்துக்கொள்ள இருந்த போட்டிகள் குறைந்து பல மணி நேரம் வாசலிலேயே கிடப்பாகக் கிடக்கும் நிலையிருந்தாலும் தினசரி பேப்பர்காரர்களில்லாத தெருக்களை இன்றும் காண முடியாது.

தினசரிகளை வீடுதோறும் தேடிச் சென்று போட்டு வந்த  இளைஞர்கள் பலரும் இன்று மருத்துவர்களாக, பொறியாளர்களாக, கணினி பொறியாளர்களாக எனப் பல்வேறு பணிகளில் இருந்தபடி தங்களது வீடுகளுக்கு பேப்பர் போடும் இளைஞர்களிடம் கருணை காட்டுபவர்களாக இருக்கிறார்கள். பேப்பர் போடும் இளைஞர்கள் பலரும் தங்களது குடும்ப சூழ்நிலை கருதி தங்களது பள்ளி, கல்லூரி படிப்புச் செலவுக்காக, உயர்கல்விச் செலவுக்காக பகுதிநேர வேலைகளை செய்தவர்களாகவே இருந்தனர். இப்போதும் அதே நிலைதான் நீடிப்பதாகவும் உள்ளது.

மழைக்காலங்களிலும் நனையாத தினசரிகளை வீடு தேடி வந்து கொடுத்தவர்கள் பண்டிகைக் காலங்களில் பட்டாசு சப்தத்திற்கிடையே தினசரிகளை அதற்காகக் காத்திருந்தவர்களுக்கு வழங்கிச் சேர்த்தவர்கள், கடையடைப்பின்போதும் தவறாமல் காலதாமதமானாலும் தினசரிகளை கொண்டு வந்தவர்கள் இவர்களும் உழைப்பாளிகளே. எதைப் பற்றியும் கவலைகளின்றி அந்தக் காலையில் குளிர், பனி, மழை, வெய்யில் மறந்து சின்னவேலையென கருதாமல் செய்த வேலையைக் கடமையாகச் செய்த இந்த உழைப்பாளிகளை நாம் மறந்திருக்கிறோம். இந்த சமுதாயம் தினசரி நேரில் சந்தித்த இந்த மூன்று உழைப்பாளி சமூகமும் மக்களுக்கு முக்கியமானவர்களே என்ற போதிலும் இவர்கள் உழைப்பாளிகள் பட்டியலில் சேர்த்துவிட அனைவருக்கும் ஒருவித தயக்கமிருப்பதை வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது.

நம் வீட்டுக்கு பாலையும், தபால்களையும், தினசரிகளையும் கொண்டு வந்து சேர்த்து நமக்கானதை நமக்கானதாக்கிய பால்காரர், தபால்காரர், பேப்பர்காரர் ஆகியோரை நாம் என்றும் மறக்க முடியாது. நமது தாத்தாக்களுக்கும், அம்மாக்களுக்கும், அப்பாக்களுக்கும், அண்ணன்களுக்கும், அக்காக்களுக்கும் அவர்களது முக்கியத்துவம் தெரியும். அவர்களும் மே தின உழைப்பாளிகள்தான். அவர்களுக்கு உரிய மரியாதையையும், கெளரவத்தையும் இந்த சமூகம் வழங்க மறந்திடக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com