பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் - ஒரு பார்வை
By எம். முத்துமாரி | Published On : 09th May 2021 06:51 PM | Last Updated : 10th May 2021 11:44 AM | அ+அ அ- |

தமிழகம் முழுவதும் மாநகர, நகரப் பேருந்துகளில் மகளிருக்கு பயணம் இலவசம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
முதல்வராகப் பதவியேற்ற பின்னர் முதல் கோப்பிலேயே கையெழுத்திட்டு, மறுநாளே தன்னுடைய அரசின் முதல் திட்டமாக நிறைவேற்றி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இரவோடு இரவாக பேருந்துகளில் 'மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மிகவேகமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது இந்த திட்டம்.
பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டவுடன் சமூக வலைத்தளங்களில், ஊடகங்களில் பல தரப்பட்ட கருத்துகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
'கரோனா பரவும் நேரத்தில் இந்த உத்தரவு தேவையா? பெண்கள் வெளியில் போயி என்ன செய்ய போகிறார்கள்? பேருந்தில் இனி ஆண்கள் செல்ல வழியே இல்லை, பேசாமல் ஒரு இருசக்கர வாகனம் வாங்க வேண்டியதுதான்...' என பல கேள்விகள், விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், அந்த பெண்களில் அவரவருடைய அம்மா, மனைவி, சகோதரிகள், தோழிகள், எதிர்கால பெண்களாகிய தங்களுடைய பெண் குழந்தைகள் இருப்பதை பலரும் மறந்துவிட்டிருக்கிறார்கள்..
உண்மையில் புதிய அரசின் இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.. ஆனால், பெரும்பாலான ஆண்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
அரசின் நலத்திட்டங்கள்
காமராஜர் காலத்தில் இருந்து குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்துத் தரப்பினருக்கும் அரசால் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. மக்களும் பயனடைந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
குறிப்பாக தமிழகத்தில் கல்வி, சுகாதாரம்(கரோனா பிரச்னை தவிர) மற்ற மாநிலங்களைவிட மேம்பாட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு அரசின் நலத்திட்டங்களே முக்கியக் காரணம்.
அதிலும், குறிப்பாக கல்விக்காக... அரசுப்பள்ளிகளில் கல்வி, இலவச சீருடை, பாடப்புத்தகங்கள், சத்தான உணவு, உதவித்தொகை, பஸ் பாஸ் உள்ளிட்டவை பயன்பாட்டில் உள்ளது. வீட்டில் உணவு கிடைக்காமல் சத்தான உணவுக்காக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர் ஏராளம். ஒரு குழந்தை பள்ளிக்கு வரத் தடையாக உணவு இருக்கிறது என்பதை அறிந்து காமராஜர் அந்த திட்டத்தை கொண்டு வந்து அந்த திட்டம் இன்று பன்மடங்கு மெருகேறியிருக்கிறது.
இதை ஒரு உதாரணமாக வைத்துக்கொள்ளலாம். இதுபோல தாழ்த்தப்பட்டவர்களுக்கு, பெண்களுக்கு என முந்தைய அரசுகள் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளன.
அதில், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு என்று பார்த்தால் சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு சமீபத்தில் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டம். ஆனால் அதற்கும் 1 லட்சம் ரூபாய் வரை ஸ்கூட்டருக்கு முதலீடு செய்த பின்னர்தான் மானியம் 25,000 கிடைக்கும். ஓரளவு வருமானம் ஈட்டும் பெண்கள் தவணை முறையில் வாங்கினார்கள். சொல்லப்போனால் நடுத்தர வர்க்கத்தினர்தான் இதனைப் பயன்படுத்த முடியும். எனவே, வேலைக்குச் செல்லும் பெண்களில் 50% கூட வாங்கியிருக்க வாய்ப்பில்லை. அப்படியெனில் மற்றவர்களின் நிலைமை...?
அதற்கு தீர்வு காணும்பொருட்டே, அனைத்து தரப்பு மகளிரும் பயன்பெறும் வகையில், பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதாக நினைக்கத் தோன்றுகிறது.
'பெண்கள் சும்மா பஸ்ஸில் ஏறி இறங்குவார்கள்.. காரணமின்றி வெளியில் சென்று வருவதால் என்ன நிகழ்ந்துவிடப்போகிறது' என்ற கருத்து உலவுகிறது.
மாணவர்கள் இலவச பாஸில் பேருந்தில் செல்வதில்லையா.. அது எப்படி சாத்தியம் ஆனதோ இதுவும் அப்படித்தான்..
யாருக்கெல்லாம் பலன்?
உண்மையில், படிக்கும் கல்லூரி மாணவிகள், படிக்க நினைக்கும் மகளிர், சமூக அறிவைப் பெற நினைக்கும் பெண்களுக்கு, வீட்டில் இருந்தபடியே சிறு குறு தொழில் செய்யும் இல்லத்தரசிகளுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்று.
♦ வீட்டில் பேருந்துக் கட்டணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கல்லூரி மாணவிகளுக்கு..
♦ சில கிமீ தூரம் உள்ள தன் அம்மா வீட்டிக்குச் செல்ல கணவனின் பையை எதிர்பார்க்கும் பெண்களுக்கு..
♦ சுய தொழில் செய்யும் பெண்களுக்கு..
♦ வீட்டிலேயே சிறு தொழில் தொடங்கலாம் என்று நினைப்பவர்களுக்கு..
♦ நேரம் கிடைக்கும்போது ஏதாவது கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து இலவச பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல திட்டமிடும் பெண்களுக்கு..
♦ ஆயிரம், இரண்டாயிரம் சம்பளத்துக்கு அரை மணி நேரம் பயணம் செய்து அடுத்தவர் வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு..
♦துணிக்கடைகளில் பணிபுரியும், நிறுவனங்களில் தூய்மைப் பணியாளர்களாக, கட்டட வேலையில் சித்தளாக பணிபுரியும் குறைந்த ஊதியம் வாங்கும் பெண்களுக்கு..
♦ வீட்டில் கணவரின் வருமானம் போதவில்லை, குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக்கொடுக்க உதவும் என யோசித்து வேலைக்குச் செல்ல தயாராகும் பெண்களுக்கு இந்த திட்டம் பேரானந்தம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஒரு நாட்டின் வளர்ச்சி, ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது பெண்களின் வளர்ச்சியையும் கொண்டே கணக்கிடப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் வரிசையில் இதுவும் அதில் ஒன்று என பார்க்கலாம்.
அரசுக்கு செலவா?
இதில் அரசுக்கு பெரிய செலவு என்று நினைக்க வேண்டாம். பெண்களுக்கு அனைத்துப் பேருந்துகளிலும் இலவசம் இல்லை. சாதாரண கட்டணம் கொண்ட அந்தந்த நகரப் பேருந்துகளில் மட்டுமே.
மற்றபடி, விரைவுப் பேருந்து, தொலைதூரப் பேருந்துகளில், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகளில் ஆண்களைப் போல பெண்களும் கட்டணம் செலுத்தி தான் பயணம் செய்ய வேண்டும்.
சென்னையில் ஒயிட் போர்டு அல்லது சாதாரண கட்டணம் என்று போட்டிருக்கக்கூடிய பேருந்துகளில் மட்டும் என்பதால் பெரிய பிரச்சனை இல்லை. அதைத்தாண்டி க்ரீன் போர்டு, ப்ளூ போர்டு, டீலக்ஸ், ஏசி பேருந்துகள் என கட்டுப்படி வரிசையாக இருக்கின்றன.
சென்னையில் வெள்ளை போர்டு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 5, அதிகபட்சம் ரூ. 15க்குள்ளாக இருக்கிறது. எனவே, பல நலத்திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுக்கும் அரசுக்கு இது பெரிய விஷயமில்லை.. மாறாக ஏழை எளிய பெண்கள் முழுவதுமாக பயன்பெறுகிறார்கள்.
ஒருவருக்கு இருவழி பயணத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ. 20 என வைத்துக்கொண்டால் தோராயமாக மாதத்துக்கு ரூ. 600 சேமிக்கப்படுகிறது. அவர்கள் சம்பாதிக்கும் ஓரிரு ஆயிரம் சம்பளத்தில் பேருந்துக்கே பாதி போய்விடுகிறது என்று உச்சுக்கொட்டும் பெண்கள் இன்று ஆசுவாசத்துடன் மூச்சு விடுகிறார்கள்.
தினமும் காலையில் 5, 10 ரூபாயை மட்டும் கையில் வைத்துக்கொண்டு கோயம்பேடு மார்க்கெட் சென்றுவர ஒயிட் போர்டு பேருந்துக்காக காத்திருக்கும் எத்தனையோ பெண்களை, வயசான மூதாட்டிகளை பார்த்திருப்போம். இதேபோல ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளனர்.
என்னதான் பெண்கள் வளர்ச்சி முன்னேற்றம் என்று ஆண்களே பேசினாலும் பல இடங்களில் ஆண்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள், வசதிகள், ஊதியங்கள் பெண்களுக்கு சரிசமமாக கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம்.
கூட்டம் கூடுமா?
மேலும் பேருந்துகளில் கூட்டம் கூடும் என்று சொல்கிறார்கள். சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் சாதாரண கட்டண பேருந்துகள் குறைவுதான். இதில் சாதாரண ஏழை, எளிய மக்களே பயன்பெறுகின்றனர். ஐடி துறையில் ரூ.50,000 ஊதியம் பெறும் பெண்ணோ அல்லது ஒரு நிறுவனத்தின் தலைமை ஏற்கும் பெண்ணோ கண்டிப்பாக இருசக்கர வாகனத்திலோ, காரிலோ,அதிகபட்சம் குளிர்சாதனப் பேருந்திலோ தான் பயணம் செய்வார்கள். எனவே, எல்லா பெண்களும் இதைப் பயன்படுத்துவதில்லை. அதுமட்டுமின்றி, தேவையில்லாமல் இல்லத்தரசி பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை, வர அவர்களுக்கு நேரம் இருப்பதும் இல்லை.
பெண்களின் பொருளாதாரம்
ஒருமுறை சும்மாவாவது பெண்கள் பேருந்தில் ஏறி இறங்கட்டுமே.. போகும்போது ஒரு கடையில், ஒரு நிறுவனத்தில் 'வேலைக்கு ஆள் தேவை' என்பதையோ 'இங்கு இலவசமாக கற்றுக்கொடுக்கப்படும்' என்றோ விளம்பரங்களை பார்க்கட்டும். இல்லையெனில் சாலையில் கார் ஓட்டிச் செல்லும் ஒரு சாதனைப் பெண்ணைப் பார்த்து நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்களின் மனதில் புதிய விடியல் பிறக்கட்டும்.
பெண்கள் இந்த இலவசத்தை பயன்படுத்துகிறார்கள் என்பது வேறு. இதனால் பெண்கள் வெளியில் வருவார்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக. என்ன காரணத்திற்காகவும் இருந்துவிட்டு போகட்டும்.
கண்டிப்பாக இதன் மூலமாக சமூகத்தில் பெண்கள் வளர்ச்சியில், அவர்களின் பொருளாதாரத்தில் ஒரு சிறிய மாற்றமாவது இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியும்.
பள்ளியில் பெண்களுக்கும் இலவச சீருடை, புத்தகங்கள் வழங்கப்படுகிறது. பெண்கள் மேலும் படிக்க வேண்டும் என்றுதான் 11 ஆம் வகுப்பில் சைக்கிள், பின்னர் பள்ளி இறுதியாண்டில் கணினி உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகமாகின.
எனவே, பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என்று கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலமாக பெண்களின் வளர்ச்சியும் இன்னும் ஒரு சில மாதங்களிலோ, ஓரிரு ஆண்டுகளிலோ தெரிய வரும்.
வீட்டுக் கூண்டில் அடைப்பட்டிருக்கும் கிளிகள் வெளியே பறக்கட்டும்.. உலகை ரசிக்கட்டும்..