மாணவி அளித்த மனு: ஆற்றின் நடுவே பாலம் அமைப்பு

கடந்த பல ஆண்டுகளாக ஆற்றைக் கடக்க பாலம் இன்றி இருந்த கெங்குலிகண்டிகை குக்கிராமத்தில் மாணவியின் மனுவுக்கு அரசு நடவடிக்கை எடுத்து பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
மாணவி சாதனா
மாணவி சாதனா


திருவள்ளூர்: கடந்த பல ஆண்டுகளாக ஆற்றைக் கடக்க பாலம் இன்றி வயல் வெளியைச் சுற்றிச் சென்ற பொதுமக்களுக்காக கிராம சபைக் கூட்டத்தில் அளித்த கோரிக்கை மனு மீது எடுத்த நடவடிக்கையால் ரூ.47 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ள அனுமதி, இடை நிற்றல் மாணவர்களை 3 பேரை பள்ளியில் சேர்த்தல் மற்றும் சிறுமி திருமணங்களை தடுத்து நிறுத்தம் போன்றகளால் திருவள்ளூரைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

திருவள்ளூர் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியம், பிளேஸ்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்தது கெங்குலிகண்டிகை குக்கிராமம். மேலும், சரியான போக்குவரத்து வசதி இல்லாத பின்தங்கிய கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 150 பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகள் சாதனா(14). இவர் பிளேஸ்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவி. இங்கிருந்து கிராம பொதுமக்கள் மற்றும் மாணவிகள் ஆகியோர் பேருந்து ஏறுவதற்கு ஆற்றைக் கடந்து 3 கி.மீ தூரம் நடந்து நெடுஞ்சாலைக்கு வரவேண்டிய சூழல் உள்ளது.

கெங்குலி கண்டிகை கிராமத்தில் பாலம் அமைய உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு.
கெங்குலி கண்டிகை கிராமத்தில் பாலம் அமைய உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

அதிலும் மழைக்காலங்களில் ஓடையில் நீர்வரத்து அதிகமாகவே இருக்கும். இதுபோன்ற நேரங்களில் அவசரத்திற்கு வயல்வெளியில் 5 கி.மீ சுற்றித்தான் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே இருந்தது. அதனால் ஆற்றை எளிதில் கடந்து செல்வதற்கு பாலம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும். ஆனால், நிறைவேறாமல் கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.

கிராம சபையில் மாணவி அளித்த மனு: அதனால் குழந்தைகள் நேய சிறுவர் நலக்குழுவும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கவும் முடிவு செய்தனர். இதற்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் மாணவிக்கு ஊக்கம் அளித்தனர். கடந்த குடியரசு தினவிழாவின் போது அக்கிராம ஊராட்சி தலைவர் அருணா யுவராஜ் தலைமையில், செயலாளர் ஆல்பர்ட் சகாயம் முன்னிலையில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் குழந்தைகள் நேய சிறுவர் குழுவினருடன் தலைவி சாதனா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, பால வசதியின்றி அத்தியவாசியத் தேவைகளுக்கு தொலை தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதும், அது தொடர்பாக பாலம் அமைத்து தரக்கோரி கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை மனு மாணவி அளித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 

ரூ.47 லட்சத்தில் பாலம்: அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஊராட்சி செயலர் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும், அங்கிருந்து மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இக்கோரிக்கை மனு பரிசீலனை செய்து கிராமத்திற்கு நீண்ட நாள் கோரிக்கையான பாலம் அமைக்கவும் கடந்த 3 மாதங்களுக்கு அனுமதி அளித்ததோடு, அதற்காக ரூ.47 லட்சமும் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மணல், ஜல்லி கற்களுடன் பணிகள் தொடங்க தயாராக உள்ளது. 

இதற்கிடையே கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆற்றில் நீர் வடிந்ததும் பணிகள் மேற்கொள்ளப்படவும் உள்ளது. பள்ளி மாணவி அளித்த மனுவுக்கு பாலம் கட்ட அனுமதி அளித்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதோடு அப்பள்ளி மாணவி வகுப்புத்தலைவியாகவும், நன்றாகப் படிக்கும் மாணவியாகவும் இருந்து வருகிறார். அதோடு கிராமங்களில் தெருவிளக்குகள் எரியவும், குழந்தைகள் கல்வி கற்கவும், குழந்தைகள் திருமணத்தைத் தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட சமூக சேவை மனப்பான்மையால் அக்கிராம மக்களை ஆச்சரியப்பட வைக்கிறார்.

இதேபோல் கிராமங்களில் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவும், குழந்தைத் திருமணங்களையும் கட்டாயம் தடுத்த நிறுத்த பல்வேறு சாதனாக்கள் உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.      
பல்வேறு எதிர்ப்புகள்:

இது தொடர்பாக மாணவி சாதனா கூறியதாவது: திருவள்ளூரில் செயல்பட்டு வரும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் 'சில்ரன் பீலிவ்' அறக்கட்டளை ஆகியவை சார்பில் கிராமங்களில் குழந்தை நேய சிறுவர் குழு அமைத்து, குழந்தைகளை தலைமைப் பண்புக்கு தயார் செய்யும் வகையில் நிர்வாகிகளாகவும் செயல்படவும் வழிவகை செய்துள்ளனர். அதில் குழந்தைகள் கல்விச் சட்டம், குழந்தைகளுக்கு எதிரான செயல், அடிப்படை உரிமைகள், குழந்தைகள் உதவி அணுகும் 1098 இலவச தொலைபேசி எண் குறித்தும் தன்னார்வலர்கள் மூலம் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் இக்கிராமத்திலும் குழந்தைகள் நேய சிறுவர் குழு நிர்வாகியாக செயல்பட்டு வருவதால், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தினால் கல்வி கற்பதற்கான சூழல் உருவாகும் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

இதன் அடிப்படையிலேயே கிராமத்திற்கு ஆற்றின் மீது பாலம் இல்லாததால் பல்வேறு பள்ளிகளுக்குச் செல்லும் சிறுவர், சிறுமிகள் மிகவும் அவதியுற்றனர். இதையறிந்து கிராம சபைக் கூட்டத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்களின் ஊக்குவிப்போடு, பாலம் அமைக்கக்கோரியும், அதற்கான காரணத்தையும் விளக்கமாக எழுதி மனு அளித்தேன். அந்த மனு மீது பரிசீலனை செய்து பாலம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தெருவிளக்குகள் வசதி செய்து மனு அளித்ததால் செய்து கொடுத்துள்ளதோடு, இடை நிற்ற மாணவ, மாணவிகள் 4 பேரை பள்ளியில் சேர்த்தல், நடைபெற இருந்த 2 சிறுமிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தியதன் மூலம் பல்வேறு எதிர்ப்புகளையும் என் பெற்றோருடன் சந்தித்துள்ளேன். ஆனாலும், வருங்காலத்தில் ஆட்சியராக வேண்டும் என்பதே லட்சிம். அதற்குப்பின் கல்விக்கான அனைத்துத் தடைகளை அகற்றுதல், பாலின சமத்துவம் மற்றும் அனைத்துக் குழந்தைகளையும் உள்ளடக்கிய தரமான கல்வி கிடைக்க செய்வதே இலக்கு என அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com