டேக்வாண்டோ விளையாட்டில் ஒளிரும் குழந்தை நட்சத்திரம் தாஸ்வி!
By கே. ரவி | Published On : 14th November 2021 11:17 AM | Last Updated : 14th November 2021 11:17 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: டேக்வாண்டோ விளையாட்டில் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனைகளை நிகழ்த்தி வருகிறார் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தாஸ்வி.
டேக்வாண்டோ என்பது கொரிய நாட்டில் அறிமுகமான ஆயுதம் இல்லாத தற்காப்புக் கலை ஆகும். இந்தக் கலையானது உலகில் பல்வேறு நாடுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தென் கொரியா நாட்டின் தேசிய விளையாட்டான டேக்வாண்டோ, 2000 ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் இடம்பெற்று வருகிறது. உலகில் பெரும்பாலான ராணுவ வீரர்கள் இந்த கலையை கற்பதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். இந்த விளையாட்டில் கால்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்த விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், இங்கு செயல்படும் விடுதியில் தங்கி, இந்த விளையாட்டில் தனித்துவம் பெற்று வருகின்றனர். இங்கு பயின்ற மாணவர்கள், இந்திய ராணுவம், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர்.
இந்த விளையாட்டில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தாஸ்வி(11), தனது 5 வயதிலிருந்தே இந்த கலையை கற்று, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகிறார்.
இதுகுறித்து, பல் மருத்துவரான தாஸ்வியின் தந்தை சிவக்குமார் தெரிவித்தது: நாங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு தினமும் குடும்பத்துடன் நடைப்பயிற்சிக்காக செல்வது வழக்கம். அங்கு, அதிகாலை நேரத்தில் டேக்வாண்டோ பயிற்சியாளர் ராஜகோபால், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருப்பார். மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டதைப் பார்த்து என் மகளுக்கும் ஆர்வம் வந்தது.
டேக்வாண்டோ கலையைக் கற்பதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தை நாங்கள் கண்டறிந்தோம். இதையடுத்து, பயிற்றுநர் ராஜகோபாலை அணுகி எனது மகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். அவரும் பயிற்சி அளிக்க சம்மதித்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக எனது மகள் டேக்வாண்டோ பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். முதலில் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்ற தாஸ்வி, தற்போது மாநில அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். தாஸ்வி முதன்முதலாக பங்கேற்ற போட்டி சேலத்தில் நடைபெற்றது. இதில், தாஸ்வி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
போடிநாயக்கனூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெள்ளி பதக்கமும், தருமபுரியில் நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றார்.
கரோனா தொற்று பரவல் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறாத நிலையில், பள்ளிகளும் மூடப்பட்டன. இதனால், டேக்வாண்டோ பயிற்சியில் தீவிரமாக ஈடுபட இயலாத சூழலில், யோகா, பரதநாட்டியம் போன்ற கலைகளை கற்று வருகிறார். தற்போது, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால், தொடர்ந்து, டேக்வாண்டோ பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு இடையே தென்னிந்திய, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பது மட்டுமல்லாமல் தனித்திறன் மிக்க போட்டியான டேக்வாண்டோ போட்டியில் உலகில் சிறந்த வீராங்கனையாக திகழ வேண்டும். அதற்கான வாய்ப்புகளும், வசதிகளையும் அளித்து பெற்றோர் என்ற முறையில் மகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறோம் என்றார்.