காஞ்சியில் பட்டு மட்டுமல்ல, கோயில் இட்லியும் பிரபலம்தான்

காஞ்சிபுரம் என்றவுடன் பட்டென்று நினைவுக்கு வருவது பட்டுச்சேலைகளும், அன்னை காமாட்சியும் என்பது போல கோயில் இட்லியும் புகழ் பெற்ற ஒன்றாகும்.
காஞ்சிபுரம் கோயில் இட்லி
காஞ்சிபுரம் கோயில் இட்லி

திருநெல்வேலி அல்வா, பழனி பஞ்சாமிர்தம், மணப்பாறை முறுக்கு, கமுதி காராச்சேவு இப்படி பெயர் சொல்லும் உணவுகளின் பட்டியலில் காஞ்சிபுரம் கோயில் இட்லிக்கும் தனிச்சிறப்புண்டு.

காஞ்சிபுரம் என்றவுடன் பட்டென்று நினைவுக்கு வருவது பட்டுச்சேலைகளும், அன்னை காமாட்சியும் என்பது போல கோயில் இட்லியும் புகழ் பெற்ற ஒன்றாகும். இட்லியில் எத்தனையோ வகைகள் வந்துவிட்டாலும், பழமையும், சுவையும், சத்தும் நிறைந்ததுதான் கோயில் இட்லி என்றால் அது மிகையில்லை.

பெயர்க் காரணம்: 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் பெருவிழா காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும். பழமையும், வரலாற்றுச் சிறப்பும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான இத்திருக்கோயில் மூலவர் வரதராஜப் பெருமாளுக்கு தினசரி நைவேத்தியமாக படைக்கப்படுவதால் இதற்கு கோயில் இட்லி என்றும் பெயர் வந்தது.

கோயில் இட்லியின் சிறப்புகள்

சாதாரண இட்லியைப் போல ஒரே நாளில் கெட்டுப்போய் விடாது. இரண்டு நாள் வரை வைத்திருந்தும் சாப்பிடலாம். வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. விரைவாக செரிக்கும் தன்மையுடையது. இதன் செய்முறை கடினம் என்பதால் காஞ்சிபுரத்தில் ஒரு சில உணவகங்களில் மட்டும் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகள் முதல் முதியோர் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று கோயில் இட்லி.

காஞ்சிபுரம் சரவணபாலா உணவக மேலாளர் ரவி இது குறித்து கூறியது:

குடும்பத்துடன் உணவகத்துக்கு சாப்பிட வருபவர்கள் ஒரு கோயில் இட்லி வாங்கி 4 பேர் சாப்பிடும் வகையில் 4 பங்காக வைத்து சாப்பிடலாம். சித்த மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் அதிகம் விரும்பி வாங்கி சாப்பிடுவது கோயில் இட்லியாகத்தான் இருக்கும். இந்த கோயில் இட்லியுடன் தேங்காய் சட்னி, புதினா சட்னி, நல்லெண்ணெய் சேர்த்த மிளகாய்ப்பொடி இத்தனையும் இட்லி வாங்குபவர்களுக்கு சேர்த்துக் கொடுப்போம். இவற்றையும் சேர்த்து சாப்பிடும்போது இதன் சுவையோ தனிச்சுவையாகும். இது காஞ்சிபுரத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதன் செய்முறை கடினம் என்பதால் காஞ்சிபுரத்தில் உள்ள பல பிரபலமான உணவகங்கள் சிலவற்றில் மட்டுமே விற்பனையாகிறது. நடைபாதைக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதில்லை. தற்போது எல்லா ஊர்களிலும் இட்லி மாவு விற்பனையகங்கள் தெருவெங்கும் முளைத்து விட்டன. ஆனால் காஞ்சிபுரம் கோயில் இட்லி மாவு வேறு எங்கும் வாங்க முடியாது. சொந்தமாகத்தான் தயாரிக்க வேண்டும் என்றார். 

செய்முறை:

கோயில் இட்லி செய்முறை குறித்து காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பல ஆண்டுகளாக பிரசாதக்கடை நடத்தி வரும் எஸ்.பாலாஜி ஐயங்கார் கூறியது:

என்னுடைய அப்பா காலத்திலிருந்தே கோயில் இட்லி செய்கிறோம். நான் 25 ஆண்டுகளாக தயாரித்து விற்பனை செய்கிறேன்.

பச்சரிசி 2 கிலோ, உளுந்தம்பருப்பு 2 கிலோ, வெந்தயம் 25 கிராம் இந்த மூன்றையும் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்த பிறகு தான் மாவை அரைக்க வேண்டும். மாவு அரைக்கும்போது நைசாக அரைக்காமல் ரவை மாதிரி அரைக்க வேண்டும். உடனே உப்பு போட்டு விடக்கூடாது. அந்த மாவில் பச்சையாக மிளகு, சீரகம், சுக்கு இந்த மூன்றும் 50 கிராம், பெருங்காயத்தூள் 20 கிராம், நெய், உப்பு, கருவேப்பிலை இத்தனையும் சேர்த்து மாவோடு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதன் பின்னர் புட்டு அவிக்கிற குழல் போன்ற மூங்கில் குடலையில் மாவை ஊற்றி தண்ணீர் இருக்கிற இட்லி குண்டாவில் வைத்து 2 மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக வேக வைத்து ஆறிய பிறகுதான் வெளியில் எடுக்க வேண்டும்.

பெருமாளுக்கு படைப்பதற்காக ஏகாதசி, அமாவாசை போன்ற நாட்களில் பக்தர்கள் அதிகமான அளவில் ஆடர் கொடுக்கிறார்கள். ஒருமுறை இட்லி செய்ய குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது ஆகும். கோயில் இட்லியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. மிளகும், நெய்யும் சேர்த்து செய்யப்படுவதால் சுவையானதாகவும், நோயின்றி வாழ சிறந்த உணவாகவும், உலகப் பிரசித்தி பெற்றதாகவும் விளங்குகிறது காஞ்சிபுரம் கோயில் இட்லி என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com