கிராமத்து சுவையில் மதுரை அயிரை மீன் குழம்பு!
By சிவ. மணிகண்டன் | Published On : 16th October 2021 03:41 PM | Last Updated : 16th October 2021 03:41 PM | அ+அ அ- |

மதுரை அயிரை மீன் குழம்பு
மதுரையின் சிறப்பு உணவுகளில் முக்கிய இடம் பிடிப்பது அயிரை மீன் குழம்பு.
பொதுவாக அசைவ உணவகங்களில் பெரும்பாலும் கடல் மீன் வகைகள்தான் இடம்பெறும். அதிலும் சற்று வித்தியாசமாக உணவைத் தருவது மதுரை உணவகங்களுக்கு உரிய சிறப்பாகும். அசைவ உணவகங்களில் மதிய நேரங்களில் மட்டுமே மீன் வகைகள் கிடைக்கும். ஆனால், மதுரை நகர பகுதிகளில் இருக்கும் சில உணவகங்களில் இரவு நேரங்களிலும் சுடச்சுட மீன் உணவுகளை ருசிக்கலாம். இது மதுரைக்கே உரிய சிறப்பாகும்.
எத்தனையோ வகை மீன்களை சாப்பிட்டாலும் மதுரையில் கிடைக்கக்கூடிய அயிரை மீன் குழம்பிற்கு ஈடாக முடியாது. அயிரை மீன் குழம்பு கிராமங்களில் வீடுகளில் மட்டுமே காண முடியும். அதிலும் மழை நேரங்களில் கிராமத்து வீடுகளில் அயிரை மீன் குழம்புதான்.
மிகவும் சிறிய வகை மீனான இந்த அயிரை மீனை கிராமங்களில் உழக்கு என்று சொல்லக்கூடிய எடை அளவில் அளந்து கொடுப்பது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.
தற்போது நகர வாழ்க்கைக்கு இடம் பெயர்ந்துவிட்ட பலருக்கும் கிராமங்களில் வாய்க்கால்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் துள்ளிக்குதிக்கும் அயிரை மீன்களை பானை வைத்துப் பிடிப்பதை பார்த்திருக்க மாட்டார்கள்.
மீன் பிடிப்பதைத்தான் பார்க்கவில்லை அயிரை மீன் குழம்பையாவது கிராமத்து சுவையில் கொடுப்போம் என்ற முயற்சியில் மதுரையின் உணவகங்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள். மதுரைக்கு வருபவர்கள் உணவகங்களில் தேர்வு செய்யும் உணவுகளில் இந்த அயிரை மீன் குழம்பு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது அயிரை மீன் உயிரோடு இந்த உணவகங்களுக்கு தினமும் கொண்டு வரப்படுகின்றன.
கிராமத்து ஸ்டைலில் புளி கரைத்து மிளகாய் அரைத்து இதர மசாலா பொருட்களையும் கை பக்குவத்தோடு தயார் செய்து மீன் குழம்பு வைக்கப்படுகிறது. மதிய உணவில் சாப்பாடு- அயிரை மீன் குழம்பு, இரவு நேரத்தில் இட்லி -அயிரை மீன் குழம்பு காம்போ உணவுப் பிரியர்களின் தேர்வாக இருக்கும்.
விலை சற்று அதிகமாக இருந்தாலும் இதைத் தேடி வருவார்கள் அதிகம். எங்களது உணவகத்தைப் பொருத்தவரை அயிரை மீன் குழம்பு இல்லாத நாள் மிகக் குறைவு என்கிறார் மதுரை குமார் மெஸ் உரிமையாளர் த. ராமச்சந்திர குமார்.